பைரவா - சத்குருவின் கலைப்படைப்பு
சத்குருவின் இந்த தனித்துவமான கலைப்படைப்பு ஈஷா யோகா மையத்தின் மகிமை வாய்ந்த பைரவா என்னும் காளையின் நினைவாக உருவாக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களாக உலகமெங்கிலும் அனைவரது கவனமும் கொரோனா வைரஸை நோக்கியே இருக்கிறது. இதனால் பல்வேறு நோய் கொண்ட மக்கள், துரதிர்ஷ்டவசமாக அதற்கு தேவைப்படும் கவனத்தைப் பெறாமல் இருக்கின்றனர். டயாலிசிஸ் செய்ய வேண்டிய தேவை இருப்பவர், புற்றுநோயினால் பாதிக்கப்பட்டுள்ளவர், இருதய நோய் உடையவர்கள், சிறுநீரகக் கோளாறு உடையவர்கள் மற்றும் பல்வேறு அறுவை சிகிச்சைகள் தேவைப்படும் அனைவருக்கும், தேவைப்படும் கவனம் கிடைப்பதில்லை. ஏனெனில் கவனம் அனைத்தும் தற்போது வைரஸை நோக்கியே செலுத்தப்பட்டு இருக்கிறது. எனவே இதனால் ஒரு குறிப்பிட்ட அளவு, எதிர்பாராத சேதம் ஏற்பட்டிருக்கிறது.
Subscribe
பைரவாவும் இந்த எதிர்பாராத சேதத்தில் ஒரு பங்கு ஆகும் . அதன் கணுக்காலில் ஒரு சிறு எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. இந்த நேரத்தில் கால்நடை மருத்துவமனைகள் திறக்கப்படவில்லை; மருத்துவர்கள் வருகை புரிய விருப்பப்படவில்லை. இதனால் நிலைமை மோசமடைந்து அந்தக் காளை தவறிவிட்டது.
நீங்கள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத மிக அழகான காளை பைரவா. மிக அற்புதமான, அமைதியான காளையாக இருந்த அவனை அனைவரும் விரும்பினர். அவன் ஒரு மாபெரும் உயிர்! எனவே அவனுக்கு மரியாதை செய்யும் வண்ணம் ஒரு கலைப்படைப்பை உருவாக்க நான் நினைத்தேன்.
கிராமிய இல்லங்களில் மாட்டுச்சாணம் வீடுகளில் கிருமிநாசினியாகவும், உரமாகவும், எரிபொருளாகவும் மற்றும் மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டது. ஒரு காலத்தில், மாடும் கால்நடைகளும், இந்த கலாசாரம் மற்றும் அதன் செல்வத்திலும், முற்றிலும் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தன. அப்போது செல்வம் ஒருவர் கொண்டுள்ள நிலத்தின் அளவை வைத்து மதிப்பிடப்படவில்லை; ஏனெனில் நிலங்கள் நிறைய இருந்தன. உங்களிடம் எத்தனை கால்நடைகள் இருந்தன என்பது தான் உங்களின் செல்வத்தை தீர்மானித்தது.
எனவே இந்த ஓவியத்தின் பின்னணி வண்ணத்தை மாட்டுச் சாணத்தைக் கொண்டும், மற்றவற்றை மரக்கரி கொண்டும் உருவாக்கியுள்ளேன். மேலும், சிறிது மஞ்சளும் சுண்ணாம்பும் உபயோகித்துள்ளேன். இது ஒரு கரிம இயற்கை ஓவியம். அக்ரலிக் ஓவியத்தை விட நீண்ட நாட்கள் நீடித்திருக்கும்.
“வைரஸை வெல்வோம்” என்ற பிரச்சாரத்தின் மூலம் இந்த நோய்த்தொற்றை எதிர்கொள்ள கிராமப்புற தமிழகத்தில் நாம் மேற்கொண்டு வரும் சேவைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. மேலும், உணவு வழங்குவதோடு மட்டுமல்லாமல் வேறு பல செயல்களாகவும் இந்த பணி தொடர்ந்து வருகிறது. உதாரணத்திற்கு, கிராமப்புற தமிழகத்தில் இந்த வருடம் கல்வியை மீண்டும் துவக்குவது என்பது பெரிய சவாலாக இருக்கும். அதை கருத்தில் கொண்டு “வைரஸை வெல்வோம்” என்ற பிரச்சாரத்துக்கு நிதி திரட்டும் வகையில் "பைரவா" என்று நாங்கள் பெயர் சூட்டியுள்ள இந்த ஓவியம் ஏலத்துக்கு விடப்படுகிறது.
ஜூலை, 5, 2020 அன்று பைரவாவுக்கு மரியாதையை செய்யும் வண்ணம் சத்குருவால் உருவாக்கப்பட்ட இந்த ஓவியம் 5.1 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டது.
'பைரவா' ஓவியத்திற்கு ஒரு வீடு கிடைத்துள்ளது. மென்மையான நம் காளை வாழ்விலும் அதற்குப் பிறகும் நமக்கு சேவை செய்துள்ளது. நிதியுதவி செய்தவரின் கருணையும் தாராளமும், நோய்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் கிராம சமூகங்களுக்கு நம் தன்னார்வலர்கள் தொடர்ந்து சேவைசெய்ய உதவும். -Sg #BeatTheVirus https://t.co/9fxO6CwXbv
— IshaFoundation Tamil (@IshaTamil) July 7, 2020
ஆசிரியர் குறிப்பு: பாதிக்கப்படக்கூடிய கிராமப்புற சமூகங்களை கொரோனா வைரஸிடமிருந்து பாதுகாக்கும் பணியில் ஈஷா அவுட்ரீச் களமிறங்கியுள்ளது. இப்போது நன்கொடை செய்யுங்கள்!