போதை பொருட்களுக்கு ஆன்மீக செயல்முறையில் இடம் இருக்கிறதா..?
ஆன்மீகப் பாதையில் பயணிக்க போதைப் பொருட்கள் உதவுமா? கஞ்சா, மாரிஜுவானா போன்ற செடிகளை அடிப்படையாக கொண்ட பொருட்களை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஆன்மீகத் தேடலில் இருப்பவர்கள் அவற்றை பயன்படுத்துவது நியாயமா?
ஒரு அமெரிக்க அபாயம்
சத்குரு: நியூயார்க் நகரின் மக்கள் தொகையில், 70 சதவீதத்தினர் குடிப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார்கள் என்றும், மேலும் 20% மக்கள் அளவுக்கதிகமாக குடிப்பவர்களாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. நியூயார்க் நகரில் வாழ்பவர்களின் நிலை இப்படி இருந்தாலும், எல்லோரும் அங்கு செல்லவே விரும்புகிறார்கள்.ஒரு தனிநபர் அல்லது ஒரு சமூகம் அல்லது ஒரு தேசம் செல்வச்செழிப்பை நாடிச் செல்ல காரணம், முதல் கட்டமாக சத்தான ஊட்டச்சத்து வகைகளை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை அது தருகிறது. இரண்டாவது கட்டத்தில், செழுமை என்பது மக்களின் வாழ்க்கைமுறை சார்ந்த அம்சங்களில் பிரதிபலிக்கிறது. அமெரிக்கா போன்ற ஒரு வசதியான தேசம், மகத்தான ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கைமுறையை அடைந்துள்ள நிலையில், மக்கள் தொகையில் எழுபது சதவீதம் பேர் மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களாக உள்ளனர். மற்றொரு முப்பது சதவிகிதம் பின்வாசல் வழியாக வாங்குகிறார்கள். முப்பது கோடி மக்கள் தொகைக்கு, மூன்று லட்சம் கோடி டாலர்களுக்கும் அதிகமாக மருத்துவ செலவு செய்யும் நாடாக அமெரிக்கா இருக்கிறது.
ஊட்டச்சத்து மற்றும் வாழ்க்கைமுறை குறித்து எண்ணற்ற தேர்வுகள் அவர்கள் கையில் இருக்கும்போது, ஆரோக்கியம் என்பது ஒரு இயற்கையான விளைவாகத்தானே இருக்க வேண்டும். அது அவ்வாறு நடக்கவில்லை என்றால், அதை நாம் சற்று கவனிக்க வேண்டும். ஏனெனில் இது அமெரிக்காவைப் பற்றியது மட்டுமல்ல; இந்த உலகம் முழுவதுமே நாளை அதே நிலைக்குத்தான் சென்று நிற்கும். அமெரிக்கா என்பது கனவுதேசமாக, ஒரு இலக்காக இருக்கையில், எல்லோரும் மிக வேகமாக அதே நிலைக்கு நகர்ந்து, நோயிலும் அகப்படப் போகிறார்கள்!
உதாரணமாக, இந்தியாவில், நாற்பது ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, மக்கள் தங்கள் மகள்களை திருமணம் செய்து வைக்கும்போது, “ஓ, அந்த வீட்டில் மது அருந்துபவர்கள் இருக்கிறார்கள். எங்கள் பெண்களுக்கு அந்த குடும்பத்தில் திருமணம் செய்யமாட்டோம்” என்பார்கள். ஆனால் இன்று, நீங்கள் பானங்கள் பரிமாறவில்லை என்றால், உங்கள் திருமணத்திற்கு யாரும் வரமாட்டார்கள்! கடந்த ஐம்பது ஆண்டுகளில் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள மாற்றம் இதுதான்.
பிரம்மாண்டமாக வளர்ந்ததைப் போன்ற ஒரு போலியான உணர்வு
அடிப்படையில், நாம் ஆரோக்கியமாக இருக்க ஒரு ரசாயனம் தேவை, அமைதியாக இருக்க ஒரு ரசாயனம் தேவை, மகிழ்ச்சியாக இருக்க ஒரு ரசாயனம் தேவை என்ற நிலையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம். பரவசம் தேவையா, அதற்கும் "Ecstasy” என்ற பெயருடனேயே ஒரு ரசாயனம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
Subscribe
தங்களுக்குள் ஒரு உள் அனுபவத்தை உருவாக்க, மக்கள் ஏன் ஏதாவது ஒரு ரசாயனப்பொருளை பயன்படுத்த முயல்கிறார்கள்? அது கஞ்சா, அபின், ஒயின், விஸ்கி, கோகோயின், எல்.எஸ்.டி அல்லது எதுவாக இருந்தாலும், அது உங்களிடம் இருக்கும் எதிர்ப்புணர்வை முறித்து சிறிது நேரம் உங்களை சுதந்திரமாக உணர வைக்கிறது. இப்போது யாரோ ஒருவர் நரம்பு மண்டலத்தை தூண்டும் பொருட்களை எடுத்துக் கொள்கிறார் என்றால், அவருக்கு ஏற்படும் அற்புதமான அனுபவங்கள் அவரால் அதை விட்டு விலக முடியாத அளவுக்கு இருக்கிறது.
பல பிரச்சனைகளையும் தங்கள் தலையில் சுமந்து கொண்டு அதிலிருந்து விடுபடமுடியாமல் மலச்சிக்கல் போன்ற மனநிலையுடன் மக்கள் இருப்பதால், அவர்களை சிறிது தளர்ந்த நிலைக்கு கொண்டுவர ஒருவித ரசாயனம் தேவைப்படுகிறது. நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், இது உங்களது திறன்களை விலையாக எடுத்துக்கொள்கிறது. உங்கள் திறன்களைக் குறைப்பதன் மூலம் உங்கள் வாழ்க்கையை உயர்த்த முடியும் என்று நீங்கள் நம்புகிறீர்களா?
ரசாயனம் உங்களுக்குள் விஸ்வரூபமாக வளர்ந்த ஒரு உணர்வைத் தரக்கூடும், ஆனால் அது போலியான விஸ்வரூப உணர்வு. “அதுசரி, ஆனால் நான் விஸ்வரூபமாக வளர வாய்ப்பு இருக்கிறது என்பதை உணர்ந்தேனே” என்று நீங்கள் நினைத்தால், அது அந்த நோக்கத்திற்கு உதவும். ஆனால் நீங்கள் அதையே தொடர்ந்தால், ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் உங்கள் திறமைகளை சிறிது சிறிதாக இழக்கத் துவங்குவீர்கள். சிறிது காலம் கழிந்து வெறும் மருந்து மட்டுமே மிஞ்சும்.
ஏதாவது ஒன்று வேலை செய்கிறது என்றால், அது எல்லா நாளும் வேலை செய்ய வேண்டும். தினமும் கஞ்சா என்கிற தாவர போதை தன்மையை ஏற்றி என்ன நடக்கிறது என்று பாருங்கள். அந்த நேரத்தில் அது உங்கள் வரம்புகளையும் உங்கள் எதிர்ப்புத் திறனையும் முறித்திருக்கலாம், நீங்கள் ஏதோ ஒன்றை உணர்ந்திருக்கலாம், உங்களுக்கு அனுபவபூர்வமாக ஏதோ ஒன்று நிகழ்ந்திருக்கலாம். ஆனால் அது உங்களுக்கு எல்லா நேரத்திலும் கைகூடச் செய்யுமா? இல்லை. நீங்கள் ஒரு மாத்திரையை விழுங்கினால் மட்டுமே இதுபோல் உணர்கிறீர்கள், அது இல்லையென்றால், எதுவும் இல்லை. நீங்கள் ஒரேயொரு வித்தை மட்டும் தெரிந்த குதிரை ஆகிவிடுவீர்கள்.
ரசாயனத்தை பயன்படுத்துவதால் உங்கள் உடலுக்கு பாதிப்பு ஏற்படும் என்பதோ, உங்களையே அது கொன்றுவிடலாம் என்பதோ மட்டும் பிரச்சனை இல்லை; உண்மையான பிரச்சனை, அது உங்களுக்கு போலியான ஒரு சுதந்திர உணர்வை தருகிறது - உண்மையில் உங்களை கட்டாய உணர்வில் சிக்க வைத்து அடிமையாக்குவது மட்டுமே நடக்கிறது.
நீங்கள் ஒரு மலை மீது ஏறத் துவங்கி, சிகரத்தை அடைந்து நின்றால், ஒரு ஷணம் திடீரென்று அற்புதமான ஏதோ ஒரு உணர்வு நிகழக்கூடும், ஆனால் அது நீடிக்காது. ஒரு மலையாக இருந்தாலும் சரி, மருந்தாக இருந்தாலும் சரி, அது எப்போதும் தொடர்ந்து நீடிக்காது. உங்கள் அனுபவம் எவ்வளவு பெரியது என்பதைப் பற்றி கேள்வி இல்லை; அந்த அனுபவம் உங்களிடம் என்ன மாற்றத்தை ஏற்படுத்திச் செல்கிறது என்பதுதான் கேள்வி. அப்படியே, இரசாயனங்களை பயன்படுத்தியவர்களை தயவுசெய்து கவனியுங்கள் - அவர்களிடம் உண்மையில் மாற்றம் நிகழ்ந்திருக்கிறதா? வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் நீங்கள் அணுகக்கூடிய வகையில் உங்கள் பார்வையை இது மேம்படுத்தி இருக்கிறதா? இல்லை. பொதுவாக, எல்லோரிடமும் தற்பெருமை பேசும்படியான ஒரு பெரிய அனுபவம் மட்டுமே அவர்களிடம் இருக்கும்.
வேறுவிதமான ஒரு இனிமை
போதைப்பொருள் அல்லது பானத்தில் இனிமையுணர்வு இல்லாதிருந்தால், மக்கள் அந்த வழியில் சென்றிருக்க மாட்டார்கள். ஆனால் அதனுடன் இணைந்திருக்கும் சுகம் எப்படியென்றால், “சிகரெட் புகைத்தல் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும்” என்ற எச்சரிக்கை வாசகம் மேல் அட்டையிலேயே இருந்தபோதிலும், அதன் விளைவு என்னவாக இருந்தாலும் மக்கள் தொடர்ந்து புகைபிடிக்கவே செய்கின்றனர்.
இந்த உலகிலேயே மிகவும் அதிநவீனமான மற்றும் நுட்பமான இரசாயன தொழிற்சாலை இந்த உடல்தான். இதுபோன்ற ஒரு நுட்பமான இயந்திரத்தை யாராவது உங்களுக்கு வழங்கினால், உங்களுக்கு விருப்பமானதை நீங்களே தயாரித்துக்கொள்ள மாட்டீர்களா? இந்த மனித உடல் எனும் இயந்திரத்தை பராமரிப்பது எப்படி என்பது உங்களுக்குத் தெரியாததால், இப்போது நீங்கள் இனிமையற்ற உணர்வை உற்பத்தி செய்துகொள்வதில் பரபரப்பாக இருக்கிறீர்கள். இந்த இயந்திரத்தை நீங்கள் நன்றாக பராமரித்தால், வேறு எதையும் தொடவும் நாட்டம் கொள்ளாத அளவுக்கான இனிமையை உங்களுக்குள்ளேயே உருவாக்கிக்கொள்வீர்கள். ஏனென்றால், உயிருடன் இருப்பது என்பதே அத்தகைய ஒரு அற்புதம். துரதிர்ஷ்டவசமாக, இனிமையை அறிய வேறு எந்த வழியையும் நாம் மக்களுக்கு கற்பிக்கவில்லை, எனவே அவர்கள் போதை பொருட்களை நோக்கி சென்று அடிமையாகின்றனர்.
பலவந்தமாக மக்களை அந்த இனிமையை தரும் பொருட்களிலிருந்து விடுவிக்க எடுத்த முயற்சிகள் வேலை செய்யவில்லை. அவர்கள் இதுவரை உணர்ந்துள்ளதற்கு மேலான ஒரு ஆனந்தத்தை உணரும் ஒரு வாய்ப்பை நீங்கள் அவர்களுக்கு வழங்கவேண்டும். மனித விழிப்புணர்வு என்பது இவை எல்லாவற்றையும் கடந்த ஒன்று. இந்த பிரபஞ்சத்தில் அதி ஆற்றல் வாய்ந்தது என்றால் அது விழிப்புணர்வு நிலைதான். ஏதோ ஒருவகை இலையோ, ஒரு பழமோ, ஒரு ரசாயனமோ அல்லது ஒரு பானமோ அதை விட சிறந்ததாக இருக்கும் என்று நீங்கள் நம்ப முயற்சி செய்கிறீர்கள். நீங்கள் வெறுமனே இங்கே உட்கார்ந்து முற்றிலும் ஆனந்தமாக இருக்க முடிந்தால், நீங்கள் எதையும் புகைக்கவோ, குடிக்கவோ அல்லது விழுங்கவோ மாட்டீர்கள், ஏனென்றால் இவற்றிலிருந்து நீங்கள் பெறக்கூடியதை விட அதிகமான வேதியியல் தன்மையை உருவாக்கும் அமைப்பு இந்த உடல் அமைப்பிலேயே உள்ளது.
மனித உடலமைப்பு எப்படி இயங்குகிறது என்பது உங்கள் விழிப்புணர்வுக்குள் இருந்தால், அதிகபட்ச இனிமையை இயல்பாகவே உங்களுக்காக நீங்களே உருவாக்கிக்கொள்வீர்கள். இங்கே கேள்வி என்னவென்றால்: இந்த சாத்தியம் இருப்பதை நீங்கள் ஆராய்ந்து பார்த்திருக்கிறீர்களா?
எதிர்கால தலைமுறைகளை பாதுகாத்தல்
வெளியிலிருந்து உதவி எடுத்துக்கொண்டு ஒரு உள் அனுபவத்தை உருவாக்க முயற்சிக்கும் இந்த விதமான செயல்களால் - அடுத்த பதினைந்து முதல் முப்பது ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க எதையும் நாம் செய்யாவிட்டால், தோராயமாக தொண்ணூறு சதவீத மக்கள் போதைப்பொருட்களின் பிடியில் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். நாம் அனைவருமே நமக்கான அனுபவங்களை உருவாக்க வேதிப்பொருட்களைப் பயன்படுத்தினால், நாம் உருவாக்கும் அடுத்த தலைமுறை நம்மைவிட சிறுமையாக இருக்கும். இது மனித குலத்திற்கே எதிரான குற்றம். நமக்கு அடுத்த தலைமுறை என்பது எப்போதுமே நம்மை விட ஒரு படி மேலாக இருக்க வேண்டும்.
மேலும், மனித மனம் எப்படிப்பட்டது என்பதைப் பார்த்தால், இந்த ரசாயனங்களின் பயன்பாடு கட்டுப்பாட்டை இழந்து செல்லும்போது, இன்னும் அறுபது முதல் எழுபத்தைந்து ஆண்டுகளில் மக்கள்தொகையில் பெரும் சதவீதம் தற்கொலை செய்துகொள்ளத் துவங்கினால் அதற்காக நீங்கள் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஏனென்றால், ஒரு மனிதனுக்கு வெறும் இன்பம் மட்டும் முக்கியம் இல்லை; வாழ்க்கையில் ஒரு நோக்கமும் தேவை. ரசாயன உபயோகத்தின் மூலம் உங்களுக்கு இன்பம் கிடைக்கிறது, ஆனால் நீங்கள் நோக்கம் பற்றிய ஒரு உணர்வை இழக்கிறீர்கள். இது நிகழும்போது, உலகில் தற்கொலை விகிதம் பெருமளவிற்கு அதிகரிப்பதை நீங்கள் காண்பீர்கள்.
நாம் அப்படி நடந்துவிட அனுமதிக்கக்கூடாது. ஒவ்வொரு மனிதரையும் விழிப்புணர்வுடன் இருப்பவராக உருவாக்குவதுதான் இதற்கான ஒரே தீர்வு. மனித விழிப்புணர்வை உயர்த்துவது என்பது மிக முக்கியமானது.