சத்குரு: துரியோதனன் தன் தந்தை திருதராஷ்டிரனிடம் சென்று இப்படி முறையிட்டான், "நானும் பலவிதமாக முயற்சித்துப் பார்க்கிறேன், ஆனால் இந்த பீமனை மட்டும் கொல்ல முடியவில்லை, எப்படியாவது தப்பிவிடுகிறான்." திருதராஷ்டிரனுக்கு மூச்சடைத்தது - தனது சகோதரனின் பிள்ளையை, அதுவும் தன் அரண்மனைக்குள் இருக்கும்போதே கொல்ல முயற்சிக்கிறானே தன் மகன்‌. இருவருக்குமே பதினாறு வயதுதான் ஆகிறது. ஒருநாள், சகுனி துரியோதனனுக்கு அறிவுரை வழங்கத் துவங்கினான். "மருமகனே, இது இப்படி வேலை செய்யாது, கொலை திட்டத்தை நாம் வெளியே முயற்சி செய்து பார்ப்பது நல்லது. அரண்மனைக்கு வெளியே நமக்கு வேண்டியதை செய்யும் சுதந்திரம் இருக்கிறது, அரண்மனைக்குள் மிக அமைதியாக நாம் நடந்துகொள்ள வேண்டியிருக்கிறது, அதிலும் முரட்டு காளையைப் போன்ற உன் பங்காளி பீமனை சத்தமில்லாமல் கொல்வது அவ்வளவு சுலபமும் அல்ல." தொடர்ந்த சகுனி, "பேச்சு என்பது உன் இதயத்தை அப்படியே திறந்து காட்டுவதற்காக இல்லை - பேச்சு என்பது உன் மனதில் இருப்பதை வெளியே தெரியாமல் மறைப்பதற்கு. பீமனுடன் நட்பு கொள். அவனை நேசி. அவனுடன் மல்யுத்தம் செய்யாதே - அரவணைத்து செல். அவனை பார்த்து முறைக்காதே - புன்முறுவல் செய். பீமன் ஒரு முட்டாள் - இதிலேயே அவன் கவிழ்ந்துவிடுவான்.

சகாதேவன் மட்டும் இதில் மயங்காமல் துரியோதனனிடம் வழக்கமான தன் இடைவெளியை தொடர்ந்தான்.

இப்படித்தான் வீரமான, பயமறியாத, வெட்டு ஒன்று துண்டு இரண்டு எனும் வழி சென்று கொண்டிருந்த துரியோதனனுக்குள் வஞ்சகம் புகட்டப்பட்டது. எப்போதுமே பொறாமையும், வெறுப்பும், ஆத்திரமும் மண்டிக்கிடந்த துரியோதனின் நெஞ்சுக்குள் வஞ்சக நஞ்சையும் ஒரு கலையாக உட்புகட்டியது சகுனியேதான். எனவே துரியோதனன் பாண்டவர்களுடன்‌ நட்பு பாராட்ட துவங்கினான். குறிப்பாக பீமனுடன் இன்னும் அதிகமாகவே. சகோதரர்கள் ஐவருக்கும் துரியோதனன் மனம் மாறி தங்களை நேசிக்கத் துவங்கிவிட்டான் என்றே தோன்றியது. பஞ்ச பாண்டவர்களில் மிக புத்திசாலியாக இருந்த சகாதேவன் மட்டும் இதில் மயங்காமல் துரியோதனனிடம் வழக்கமான தன் இடைவெளியை தொடர்ந்தான்.

சகாதேவனுக்கு ஞானம் கிடைத்த விதம்: ஒருநாள்‌ கானகத்தில் தங்கள் தந்தை பாண்டுவுடன் பிள்ளைகள் ஐவரும் குளிருக்காக நெருப்பு மூட்டி அதைச்சுற்றி அமர்ந்து அளவளாவிக் கொண்டிருந்தனர். அப்போது பாண்டு அவர்களிடம், "இந்த பதினாறு ஆண்டுகள் நான் உங்கள் அன்னையரை மட்டும் விலகி இருக்கவில்லை, பிரம்மச்சரிய சாதனாவையும் மேற்கொண்டு வந்துள்ளேன். இது எனக்குள் அளப்பரிய உள்சக்தியையும், தீர்க்கமான உள்ளுணர்வையும், தெளிவையும் ஞானத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால் நான் ஒரு ஆசிரியன் இல்லை. இவை எல்லாவற்றையும் எப்படி உங்களுக்கு பரிமாறுவது என்றும் எனக்கு தெரியவில்லை. ஆனால், நான் இறக்கும் அந்த நாளில் நீங்கள் செய்ய வேண்டியது இது மட்டும்தான், எனது சதையை உங்கள் சதையுடன் ஒரு பாகமாக எடுத்துக் கொண்டால், நான் சேர்த்துள்ள ஞானம் முழுவதும் அதை அடைவதற்கான முயற்சி இல்லாமலேயே‌ முழுமையாக உங்களை சேரும்" என்றார்.

சகாதேவனின் ஞானம்

பாண்டு இறந்து, அவரது ஈமச்சடங்குகள் நடந்து கொண்டிருந்தபோது, உணர்ச்சிகளின் மேலீட்டால் கிட்டத்தட்ட அனைவருமே இதை முற்றிலும் மறந்திருந்தனர். பாண்டுவின் உடலில் இருந்து ஒரு சதை துணுக்கை எறும்பு ஒன்று சுமந்து செல்வதை பார்த்ததும் சகோதரர்களிலேயே இளையவனான சகாதேவனுக்கு மட்டும் தன் தந்தை சொன்னது நினைவுக்கு வந்தது. எறும்பிடமிருந்த அந்த சிறு சதை துணுக்கை பறித்து அப்படியே விழுங்கினான். அவனது ஞானமும் வலிமையும் வளர்ந்தது. அரசகுமாரனாக இருந்தாலும், ஒரு முனிவராகி இருக்க வேண்டிய சகாதேவனை தடம் மாற்றியது கிருஷ்ணன்தான். விதியின் தடம் சகாதேவனால் மாறிவிடக்கூடாது என்று குறுக்கிட்ட கிருஷ்ணன், "இது எனது கட்டளை. எப்போதுமே உன் ஞானத்தை நீ வெளிப்படுத்திக் கொள்ளக்கூடாது. யார் உன்னிடம் வந்து எந்த கேள்வி கேட்டாலும், அதற்கான பதிலை நீ கேள்வியாகவே‌ சொல்லவேண்டும்" என்றார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அப்போது துவங்கி, யார் தன்னிடம் கேள்வி கேட்டாலும், சகாதேவன் கேள்வியாகவே பதில் பேச துவங்கினான். அதைப் புரிந்துகொள்ளும் ஞானம் ஒரு சிலரிடம் மட்டுமே இருந்தது. புரிந்து கொண்டவர்களால் சகாதேவனின் ஞானத்தையும் புரிந்துகொள்ள முடிந்தது. புரிந்துகொள்ள முடியாதவர்கள் சகாதேவன் எல்லாவற்றையும், எல்லோரையும் குழப்ப முயல்கிறான் என்று புரிந்துகொண்டார்கள். அதிலிருந்து "சகாதேவனின் ஞானம்" என்றே ஒரு சாஸ்திரம் தொகுக்கப்படலானது. இன்றும்கூட, தென்னிந்தியாவில் யாராவது புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள முயற்சி செய்தால், "சகாதேவன் என்று அவனுக்கு நினைப்பு" என்ற சொல்லாடல் வழக்கத்தில் இருக்கிறது. தன்னைத்தானே மேதாவியாக காட்டிக்கொள்வதற்காகவே பதிலுக்கு‌ கேள்வி கேட்கிறான் என்று மக்கள் நினைத்துக்கொண்டார்கள். ஆனால் உண்மையில், கிருஷ்ணனின் கட்டளைப்படியே எப்போதும் தன் ஞானம் வெளிப்படாத வகையில் கேள்விக்கு பதிலாக கேள்வியையே கொடுத்தான் சகாதேவன். போதுமான ஞானம் இருந்தாலன்றி, தங்களின் கேள்விக்கான பதில் இதுதான் என்பதையே அவர்கள் புரிந்துகொள்ள முடியாதபடி இருந்தது சகாதேவனின் பதில் கேள்வி.

விஷமூட்டும் தவறு

துரியோதனின் உள்ளத்தை ஊடுருவி பார்க்க முடிந்த சகாதேவனால் மட்டுமே உள்ளே இருந்த பரிசுத்தமான விஷத்தையும் பார்க்க முடிந்தது. மற்ற நான்கு சகோதரர்களும் துரியோதனன் மீது மிகுந்த மயக்கத்தில் இருந்தார்கள். அதற்கேற்ப அவர்கள் மீது பரிசுகளை அள்ளி வீசிக்கொண்டிருந்தான் துரியோதனன். பீமனுக்கு மிகவும் பிடித்த ஒரு பரிசு, அவனுக்கு வழங்கப்பட்ட உணவு. பீமனுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தான் துரியோதனன். உணவின் மீது பேராவல் கொண்டிருந்த பீமன் முன் உணவை பரிமாறினால் போதும், மற்ற அனைத்தும் அவனுக்கு மறந்துவிடும். யார் உணவளித்தாலும் அவர்கள் பீமனுக்கு நண்பர்கள்தான். எப்போதுமே பசியுடன் இருந்ததால் சாப்பிட்டு சாப்பிட்டு, இன்னும் இன்னும் பெரிதாக வளர்ந்தான் பீமன்.

ஒருநாள் துரியோதனன் சுற்றுலா ஒன்றை பரிந்துரைத்தான். சகுனி கவனமாக திட்டம் வகுத்தான். பிரமன்கோடி எனும் இடத்தில் நதிக்கரை ஓரமாக கூடாரம் அமைத்தார்கள். எல்லோரும் அங்கே சென்றார்கள், போதும் போதும் எனுமளவு தாராளமாக உணவு பரிமாறப்பட்டது. விருந்து உபசரிப்பதில் சிகரம் தொட்டான் துரியோதனன். பாண்டவர்கள் ஒவ்வொருவரிடமும் வந்து தன் கையால் உணவை ஊட்டியும் விட்டான். மற்ற அனைவரும் சாப்பிட்ட மொத்த உணவின் அளவு அப்படியே பீமன் ஒருவனுக்கு மட்டும் பரிமாறப்பட்டது. எல்லோரும் ஆரவாரமிட்டார்கள். முட்டாள்கள் மதி மயங்கினார்கள் - ஒரு ஓரமாக அமர்ந்து சகாதேவன் மட்டும் நடப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.

நவபாஷாணம் தயார் செய்வதற்கு அசாதாரண கவனம் தேவை - எதாவது ஒன்று ஒரு துளி அதிகமானாலோ அல்லது ஒரு துளி குறைந்தாலோ ஆளையே கொன்றுவிடும்

நினைவாகவும் நிறைவாகவும் இனிப்பும் பழங்களும் வழங்கும் நேரமும் வந்தது. பீமனுக்கு மட்டும் ஒரு தட்டு நிறைய இனிப்பும் பழங்களும் பரிமாறினார்கள். அதில்தான் ஆளை மெல்லக் கொல்லும் விஷத்தை கலந்திருந்தார்கள். பீமன் தட்டை முழுமையாக காலி செய்தான். அப்படியே அனைவரும் நதியை நோக்கி சென்று நீந்தி விளையாட துவங்கினார்கள். சற்று நேரத்திற்கு பிறகு பீமன் தண்ணீரில் இருந்து வெளியே வந்து நதிக்கரையில் படுத்தான். மற்றவர்கள் கூடாரத்திற்கு திரும்பி கொண்டாட்டத்தையும், வேடிக்கை கதைகளையும் மீண்டும் துவங்கினார்கள். சிறிது நேரம் பொறுத்து நதிக்கரைக்கு சென்ற துரியோதனன் பீமன் அரை மயக்கத்தில் இருப்பதைப் பார்த்தான். பீமனின் கைகளையும் கால்களையும் நன்றாக கட்டி அப்படியே ஆற்றில் உருட்டிவிட்டான். நீருக்குள் மூழ்கிய பீமன் விஷம் நிறைந்த பாம்புகள் இருந்த பகுதியில் சென்று விழுந்தான்.

பல நூறு முறை பாம்புகளால் கொத்தப்பட்டான் பீமன். பீமன் உணவாக உட்கொண்டிருந்த விஷத்திற்கு முறிவாக பாம்புகளின் விஷம் செயல்படத் துவங்கியது. தென்னிந்திய சித்த வைத்தியத்தில் இது பொது அறிவாக இருப்பதுதான், விஷத்தை விஷத்தாலேயே முறிப்பது. இதே வழிமுறையில்தான் நவீன மருத்துவத்தில் தடுப்பூசிகள் செயல்படுகிறது. பாம்புகளின் விஷம் விஷமுறிவாக செயல்பட துவங்கி மெதுவாக பீமனுக்கு விழிப்புணர்வை கொண்டு வந்தது. அதைப்பார்த்த பாம்புகள், பீமனை தங்களில் ஒருவனாக ஏற்றுக்கொண்டன. நாகர்களின் அரசன் பீமனை தன்னருகே அழைத்து, "உனக்கு விஷம் கொடுக்கப்பட்டிருக்கிறது. நல்லவேளையாக உன்னை நதியில் உருட்டி விட்டார்கள். உன்னை அப்படியே நதிக்கரையிலேயே விட்டிருந்தால் இந்நேரம் நீ இறந்திருப்பாய்" என்றார்.

வஞ்சகத்திற்கு இப்படித்தான் செயல்படத் தெரியும் - ரொம்பவும் மெனக்கெடும். அப்படியே விட்டிருந்தாலே நதிக்கரையில் பீமன் இறந்திருப்பான். ஆனால் வாய்ப்பே கொடுக்கக்கூடாது என்று நினைத்த துரியோதனன், நதியில் பீமனை உருட்டிவிட்டு தான் நினைத்ததற்கு நேர்மாறான பலனை அடைந்தான். அங்கே நாகர்கள் பீமனிடம், "இந்த உலகில் எங்களைத் தவிர வேறு யாருக்கும் தெரியாத ஒரு அருமருந்தை உனக்குத் தருகிறோம்" என்றவாறு விதவிதமான விஷங்கள், பாதரசம் மற்றும் குறிப்பிட்ட மூலிகைகள் சேர்ந்த கலவையை தயார் செய்து கொடுத்தார்கள். இன்றும் இது மருந்தாக தென்னிந்தியாவில் பயன்படுத்தப்படுகிறது. ஒன்பது விதமான கடும் விஷங்களை கொண்ட நவபாஷாணம் என்று அழைக்கப்படும் மருந்து கலவைதான் அது.

நவபாஷாணம் தயார் செய்வதற்கு அசாதாரண கவனம் தேவை - எதாவது ஒன்று ஒரு துளி அதிகமானாலோ அல்லது ஒரு துளி குறைந்தாலோ ஆளையே கொன்றுவிடும். மிகுந்த கவனத்துடன் தயார் செய்த மருந்தை பீமனுக்கு கொடுத்தார்கள் நாகர்கள். நவபாஷாணம் உட்கொண்ட பீமனின் வலிமை அசாதாரணமாக பெருகியது. அதே வேளையில் அங்கே, தங்களுடன் பீமன் இல்லை என்பதை உணர்ந்த பாண்டவ சகோதரர்கள் கலங்கினார்கள். தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்கள், ஆனால் அதை வெளிப்படையாக சொல்லவும் முடியாமல் தவித்தார்கள், ஏனென்றால் துரியோதனன் மனம் உடைந்தவனாக தன்னை காட்டிக்கொண்டான். பீமனை தேடி அலைவது, அழுவது, "எங்கே என் சகோதரன், எனது ஒரே துணைவன்" என தன் பங்கை சிறப்பாகவே நடத்திக் கொண்டிருந்தான் துரியோதனன். "அவர்கள் பீமனை தீர்த்துவிட்டார்கள்" என்றான் சகாதேவன். பரிசு பொருட்களையும், உணவையும் பார்த்து தங்கள் சகோதரனை இழந்துவிட்டோம் என்ற விழிப்புணர்வு ஏற்பட, தாங்க முடியாத அவமானத்துடன் வீடு திரும்பினார்கள் சகோதரர்கள் நால்வரும். தங்கள் தாய் குந்தியிடம் நடந்ததை தெரிவித்தார்கள்.

மீண்டான் பீமன்

அமைதியாக அமர்ந்த குந்தி, தியானத்தில் மூழ்கினாள். மூன்று நாட்களுக்கு பிறகு கண்விழித்தாள். "என் மகன் பீமன் இறக்கவில்லை, அவனை தேடுங்கள்" என்றாள். சகோதரர்கள் நால்வரும் தங்கள் நண்பர்கள் துணையுடன் நதியில் மூழ்கி தேடினார்கள். காடு, மலை என எங்கு தேடியும் பீமனை கண்டுபிடிக்க முடியவில்லை. அலைந்து திரிந்தவர்கள் முடிவில் பீமனை தேடுவதை கைவிட்டார்கள். பீமன் உயிரோடு இருக்கிறான் என்ற தன் பார்வையே பொய்யா என்று குந்திக்கு சந்தேகமே வந்துவிட்டது. பீமனுக்கு பதினான்காம் நாள் இறுதி சடங்குகளை செய்ய ஏற்பாடுகள் செய்ய துவங்கினார்கள். பீமனின் காரியத்தை பெரும் நிகழ்வாக நடத்த துரியோதனன் முன்நின்றான். தங்களின் வழக்கப்படி, பதினான்காம் நாளுடன் சோகத்தை தீர்க்க, நாட்டின் சிறந்த சமையல்காரர்களை கொண்டு பெரும் விருந்து படைக்க உணவு தயாராகத் துவங்கியது. தன் உள்ளம் உற்சாகத்தில் மிதந்தபோதும், வெளியில், சோகத்தில் மூழ்கியிருப்பவனாக தன்னை காட்டிக்கொண்டு நின்றான் துரியோதனன்.

ஐந்து சகோதரர்களும் எப்போதுமே எச்சரிக்கையுடன் இருந்ததுடன், தங்களுக்கென தனியாக பாதுகாப்பையும் ஏற்படுத்திக்கொள்ள துவங்கினர்.

அப்போதுதான் அரண்மனைக்கு திரும்பினான் பீமன். சகோதரர்கள் நால்வரும், அன்னையும் பீமனின் வரவில் ஆனந்த பரவசமடைந்தார்கள். துரியோதனனாலும் அவனது சகோதரர்களாலும் தங்கள் கண்களையே நம்பமுடியவில்லை, மிரண்டு போயிருந்தான் சகுனி. பீமன் உயிரோடுதான் இருக்கிறானா அல்லது அது பீமனின் ஆவியோ என்று சந்தேகமே வந்துவிட்டது சகுனிக்கு. கௌரவர்களை துவம்சம் செய்துவிட கொந்தளித்துக் கொண்டிருந்தான் பீமன். அப்போது அங்கே வந்த விதுரர், "உங்களுக்குள் இருக்கும் பகையை அனைவரும் அறியும்படி வெளியே காட்ட இது சரியான நேரமல்ல. அவர்கள் ரகசியமாக செயல்படுவது உங்களுக்கு இங்கே இன்னும் பாதுகாப்பு இருப்பதையே காட்டுகிறது. பகையை நீங்கள் வெளிக்காட்டினால், இந்த அரண்மனையிலேயே உங்கள் அனைவரையும் கொன்றுவிடுவார்கள். நீங்கள் ஐவர். அவர்கள் நூறு பேருக்கு துணையாக பெரும் படையும் இருக்கிறது" என்று அறிவுறுத்தி அமைதிப்படுத்தினார்.

பீமனும் சகோதரர்களும் தங்கள் ஆத்திரத்தை கட்டுப்படுத்திக் கொண்டார்கள். பதினான்கு நாட்கள் நாகலோக வாசத்தில் உட்கொண்டிருந்த மருந்து உடலுக்கு மிகுந்த வலிமையை கொடுத்த அதே நேரத்தில், பீமனிடம் இன்னும் கடும் பசியையும் ஏற்படுத்தியிருந்தது. இறந்ததாக கருதப்பட்ட தனக்காக பெரும் விருந்து தயாராகத் துவங்கி, தான் மீண்டும் வந்ததால் பாதியில் நிறுத்தப்பட்ட சமையலை பார்த்தான் பீமன். அங்கே வெட்டி வைக்கப்பட்டிருந்த காய்கறிகள் அனைத்தையும் ஒரு கொப்பரையில் போட்டு உணவாக சமைத்தான். ஆரிய கலாச்சாரத்தில், குறிப்பிட்ட காய்கறிகளை மற்றவற்றுடன் கலந்து உணவு தயார் செய்வதில்லை என்பது வழக்கம். ஆனால் அங்கிருந்த காய்கறிகள் அனைத்தையும் ஒன்றாக போட்டு பீமன் தயார் செய்த உணவு வகை இன்றளவும் தென்னிந்தியாவின் ஒருசில பகுதிகளில் மிகவும் விரும்பப்படும் உணவாக இருக்கிறது. எல்லாம் சேர்ந்த கலவை என்ற பொருளில், அவியல் என்ற பெயரில் வழங்கப்படுகிறது.

இரு பிரிவினருக்குமிடையே பகை மேலும் வளர்ந்தது. ஐந்து சகோதரர்களும் எப்போதுமே எச்சரிக்கையுடன் இருந்ததுடன், தங்களுக்கென தனியாக பாதுகாப்பையும் ஏற்படுத்திக்கொள்ள துவங்கினர். தங்களின் நம்பிக்கைக்கு உரியவர்களை அரண்மனைக்குள் பணியிலும் அமர்த்தினார்கள். அதுவரையிலும் அரண்மனையின் புதிரான நடவடிக்கைகளை புரிந்து கொள்ளாமல் சிறுபிள்ளைகளாகவே இருந்தார்கள். ஆனால் இப்போது, ராஜ்ஜியத்திற்காக கடுமையான சண்டைக்கு தயாரானார்கள்.

தொடரும்...