சத்குரு: இந்த உலகம் முழுவதுமே ஒரே விதமான நரம்பியல் நோயில், ஒரு விதமான மனநோயில், ஆழ்ந்து கிடக்கிறது. கடந்த காலத்தில் அப்படி இல்லை. அதற்குக் காரணம், நவீன மனிதன் தனது உடலை பயன்படுத்துவதை அதிகமாக நிறுத்திவிட்டான். கடந்த காலத்தில், நீங்கள் உடல் செயல்களில் தீவிரமாக ஈடுபட்டபோது, உங்களின் அனேக மனக் கோளாறுகள் நீங்கின. உங்கள் நரம்பு மண்டல ஆற்றல் செலவானது. உளவியல் சிக்கல்களைக் கொண்டிருந்த பலரை, குறிப்பாக இளைஞர்களை, நான் அறிவேன். அவர்கள் தினமும் நீச்சல் அல்லது சில விளையாட்டுகளை விளையாடத் தொடங்கினர், பின்னர் எல்லாம் சரியாகிவிட்டது. போதுமான செயல்பாடு மூலமாக ஆற்றல் செலவிடப்பட்டது.

இன்று, மனிதன் இதற்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு உடல் செயல்கள் இல்லாதவனாக ஆகிவிட்டான். முன்பெல்லாம் அவன் இந்த அளவிற்கு உடல்செயல் இல்லாமல் இருக்கவே முடியாது. வெறுமனே உயிர் வாழ்வதற்கே கூட அவன் உடலளவில் நிறைய செயல் செய்ய வேண்டியிருந்தது. கடந்த காலங்களை விட அவன் தற்போது அதிக அளவில் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான். முன்பும் கூட இத்தகைய மனிதர்கள் இருந்திருக்கின்றனர். ஆனால் இந்த எண்ணிக்கையில் இல்லை.

இன்று, எல்லோரும் ஏதோ ஒரு அளவில் ஒருவித மனநோய் தன்மையில் இருப்பது பொதுவான நிகழ்வாகிவிட்டது. இதற்குக் காரணம், உங்கள் ஆற்றல் போதிய அளவு செலவிடப்படாததுதான். ஆற்றல் வெளியேறாதபடி சிறைப்படுத்தியிருக்கிறீர்கள். நீங்கள் உங்கள் பைத்தியக்காரத்தனத்தை இன்னும் கடக்கவில்லை, அதேநேரத்தில், அதிலிருந்து வெளிவருவதற்கும் எதையும் நீங்கள் செய்யவில்லை. அதற்குரிய சிகிச்சையும் இல்லை. நீங்கள் வெளியே சென்று நாள் முழுவதும் விறகு வெட்டினால் - உதாரணத்திற்கு நீங்கள் ஒரு நாளைக்கு நூறு கட்டைகளை வெட்டினால் - உங்கள் ஆற்றல் நிறைய செலவிடப்படும், பிறகு வாழ்க்கையும் அமைதியானதாக இருக்கும்..

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அன்று நம் முன்னோர்கள் அவர்களின் உடலைப் பயன்படுத்திய வழியில் இன்று நீங்கள் அதை பயன்படுத்தவில்லை, எனவே நீங்கள் முன்பை விட எல்லா வகையான நோய்களையும் உருவாக்குகிறீர்கள்

ஆனால் இன்று அப்படி இல்லை. அன்று நம் முன்னோர்கள் அவர்களின் உடலைப் பயன்படுத்திய வழியில் இன்று நீங்கள் அதை பயன்படுத்தவில்லை, எனவே நீங்கள் முன்பை விட எல்லா வகையான நோய்களையும் உருவாக்குகிறீர்கள். இது ஒரு காலகட்டத்தில் உங்கள் கட்டமைப்பில் நெருக்கடியை உருவாக்கிவிடுகிறது. எனவே உங்கள் உடல் ஆற்றல் மற்றும் உணர்ச்சி ஆற்றலுக்கு சில வடிகால் தேவைப்படுகிறது. பார்கள், கிளப்புகள் மற்றும் டிஸ்கோத்தேக்கள் அதற்குத்தான் ஏற்பட்டன. மக்கள் தங்கள் மனநோயை எங்காவது, எப்படியாவது சரிசெய்ய வேண்டும். இந்த டிஸ்கோ கிளப்கள் பித்தர்கள் கூடம் போலத் தோன்றும். நீங்கள் உள்ளே சுவாசிக்கக்கூட முடியாது. அங்கே புகை மற்றும் வியர்வை நிறைந்திருக்கும், ஆனால் மக்கள் அங்கு வெறித்தனமாக ஆடுவார்கள். நீங்கள் அங்கு சரியாக நடனம் கூட ஆட முடியாது. எல்லோரும் எல்லோர் மேலும் மோதிக்கொண்டுதான் இருப்பார்கள், ஆனால் அது ஒரு பொருட்டல்ல. அவர்கள் அதை செய்தே ஆக வேண்டும், தங்கள் ஆற்றலை செலவிட்டே தீரவேண்டும். இல்லையென்றால் அவர்களுக்கு பைத்தியம் பிடித்துவிடும்.

எனவே சனிக்கிழமை தோறும், ஒரு வாரத்திற்கு நீங்கள் சேர்த்து வைத்திருந்த உங்கள் மனநோயை இவ்விதமாய் வெளியேற்றுவீர்கள். பின்னர் அது மீண்டும் குவியலாகும், அடுத்த சனிக்கிழமை இரவு மீண்டும் அதையே செய்வீர்கள். பைத்தியத் தன்மையிலிருந்து தியானத் தன்மை நோக்கிய பயணத்திற்கு இன்னொரு வழி இருக்கிறது. பைத்தியத் தன்மையை முழுவதுமாகக் கடந்து முன்னேறுவது, இப்போது நீங்கள் அந்த பைத்தியத் தன்மையின் சாயலும் இன்றி கடந்து செல்வது. தியானம் என்பது இதுதான். நீங்கள் சாதாரணமாக நடனமாடினால், அதில் உள்ள மகிழ்ச்சிக்காக மட்டுமே நடனமாடுகிறீர்கள், ஏதோ பிரச்சனையை சரிசெய்துகொள்வதற்காக அல்ல. நீங்கள் எதையோ சரிசெய்துகொள்ள நடனமாடுகிறீர்கள் என்றால், அது ஒரு சிகிச்சையாக இருக்கலாம். அது ஒரு நல்ல சிகிச்சைதான். ஆனால் அதைப் பற்றி ஒரு குறிப்பிட்ட அசிங்கம் உள்ளது. அது காமம் சார்ந்தது. அன்பு மேலீட்டால் நீங்கள் இப்போது நடனமாடவில்லை. வெறும் இச்சையின் பேரில் மட்டுமே நடனமாடுகிறீர்கள்.

காதலுக்கும் காமத்திற்கும் அதாவது தீவிர இச்சைக்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்குத் தெரியுமா? இச்சை என்பது ஒரு வலுவான தேவை கொண்டது. காதல் என்பது தேவை சார்ந்தது அல்ல. நீங்கள் நேசிக்கும்போது, அதிலே லயித்து விடுகிறீர்கள், அதற்குமேல் எதுவும் அங்கு தேவையிருக்காது. காலத்திற்கும் நீங்கள் அப்படியே இருக்க முடியும். ஆனால் காமம் சார்ந்து இருக்கும்போது, உங்களால் ஓரிடத்தில் நிலையாய் இருக்க முடியாது. ஒன்று உங்கள் செயல் வெறித்தனமாய் இருக்கும், அல்லது நீங்கள் பைத்தியம் பிடிக்கும் நிலையில் இருப்பீர்கள்.

ஒரு குறிப்பிட்ட நரம்பியல் நோய் இருக்கும்போது, உங்களுக்குள் ஒரு குறிப்பிட்ட பைத்திய நிலை இருக்கும்போது, நீங்கள் காமம் அல்லது தீவிர இச்சையில் மட்டுமே இருக்க முடியும். உங்கள் இச்சை பாலியலுக்காகவோ அல்லது உணவு மற்றும் சில குறிப்பிட்ட செயல்பாடுகளுக்காகவோ அல்லது சில பொழுதுபோக்குகளுக்காகவோ இருக்கலாம். அது என்ன என்பது ஒரு பொருட்டல்ல. ஆனால் நீங்கள் எதன் மீதாவது இச்சையை வளர்த்துக்கொள்கிறீர்கள். அந்த இச்சை இல்லாமல் உங்களால் வாழ முடியாது.

உங்கள் வேலைகூட உங்கள் இச்சையை வெளியேற்றுவதற்கான ஒரு சிறந்த வழியாகும். இது உலகில் மிகவும் பிரபலமான மற்றும் ஏற்றுக்கொள்ளப்பட்ட வழியாகும். இன்று மக்கள் வேலை, வேலை, வேலை என்று அதிலேயே மூழ்குகிறார்கள். அவர்கள் எதோ அருமையான ஒன்றை உருவாக்கப் போகிறார்கள் என்பதல்ல, மாறாக அவர்கள் வேலை செய்தே ஆகவேண்டும் என்பதை கட்டாயமாக்கிக் கொண்டுள்ளார்கள். இல்லையெனில் தங்களுக்கு என்ன செய்வது என்று அவர்களுக்குத் தெரியாது. அந்த பைத்தியக்காரத்தனத்தை நீங்கள் எச்சரிக்கையுடன் கையாள வேண்டும்.

இதை உங்களுக்குள் வைத்திருப்பது யாருக்கும் தெரியாது, அதை நீங்களே மறக்க விரும்புகிறீர்கள். அதை மறக்க, முடிந்த அனைத்தையும் செய்கிறீர்கள். உங்கள் பைத்தியத்தனத்தை மறைக்கவே உலகில் உள்ள அனைத்து பொழுதுபோக்குகளும் ஏற்பட்டுள்ளன. உங்கள் பொழுதுபோக்கை யாராவது தடுத்தார்கள் என்றால் நீங்கள் பைத்தியம் ஆகிவிடுவீர்கள். நீங்கள் முற்றிலும் புத்திசாலியாக இருந்தால், உங்களுக்கு பொழுதுபோக்கே தேவையில்லை. நீங்கள் உட்கார்ந்து ஒரு மூங்கில் வளர்வதைப் பார்த்துக் கொண்டிருக்க முடியும். ஆமாம், மனிதனுக்கு உண்மையில் பொழுதுபோக்குகளே தேவையில்லை.