இதுவரை: பாண்டவர்களின் வம்சத்தை குறிவைத்து  பிரம்மாஸ்திரத்தை எய்கிறான் அஸ்வத்தாமன். பாண்டவர்களின் வாரிசு என எஞ்சியிருக்கும் அபிமன்யுவின் மனைவியான உத்தராவிற்கு பிறக்கும் சிசுவை காக்க கிருஷ்ணர் தலையிட நேர்கிறது. போர் முடிந்த பிறகு பாண்டவர்கள் அஸ்தினாபுரம் திரும்புகிறார்கள். ஆனால் அங்கே எந்த கொண்டாட்டமும் இல்லை. பல உயிர்கள் பலியாகி, நகரமெங்கும் மரணமும் அழிவும் நிரம்பியிருந்தது. அரண்மனையில்,  பீமனையும் யுதிஷ்டிரனையும் கொல்வதற்காக திருதராஷ்டிரனும் காந்தாரியும் கடைசியாக ஒரு முறை முயற்சித்து தோல்வியடைகிறார்கள். இப்போது பாண்டவ தேசத்தின் வளர்ச்சிக்கும் செழுமைக்குமான பாதை தெளிவடைகிறது.

வெற்றியாளர்கள் இல்லை விதவைகளே இருக்கிறார்கள்

சத்குரு: போர் முடிந்த பிறகு பாண்டவர்கள் அஸ்தினாபுரம் நோக்கி பயணமாகிறார்கள். ஒரு போர் முடிந்து  - அதை பெரும் போர் என அழைத்தாலும், வழக்கமாக அது கொடும் போர்தான்- அரசர்  நாடு திரும்புகையில் பெரும் கொண்டாட்டங்கள் நடக்கும். ஆனால் இங்கே அவர்கள் திரும்பி வந்ததும்  அவர்களுக்கு கேட்டதெல்லாம் விதவைகளின் கூக்குரலும், அனாதையாக்கப்பட்ட குழந்தைகளின் அழுகுரலும் தான். எங்கும் சோகமும், வலியும், வேதனையும் மண்டிக் கிடந்தது. அஸ்தினாபுரம் முழுவதும் ஒலித்த ஓலக்குரல்களை கேட்டதும் யுதிஷ்டிரனின் இதயம் நடுங்கியது. அங்கே உயிரோடு இருக்கும் ஆண் என்று எவருமே இல்லை; ஆண் உருவத்தில் யாருக்கெல்லாம் கைகளும் கால்களும் இருந்ததோ, அவர்கள் அனைவரும் போருக்குச் சென்றிருந்தார்கள், போரில் கொல்லப்பட்டிருந்தார்கள். பாண்டவர்கள் அஸ்தினாபுரத்திற்குள் நுழைந்ததும் ஓலக்குரல்களின் ஓலம் அதிகரித்தது - சில குரல்கள் வேதனையையும், சில குரல்கள் கோபத்தையும், சில குரல்கள் பாண்டவர்கள் மீது வெறுப்பையும் வெளிப்படுத்தியது. பாண்டவர்கள் இதற்கு முன் இப்படி ஒரு சூழ்நிலையை சந்தித்ததே இல்லை. அவர்கள் எப்போதுமே மக்களின் அன்பிற்குரியவர்களாக இருந்தார்கள். முதன்முறையாக, மக்களின் கண்கள் கூர்மையான கத்திகளை‌ போல் தங்கள் மீது  பாய்வதை பாண்டவர்கள் பார்த்தார்கள். ஏனென்றால் மக்களுக்கு இந்நிலை ஏற்பட அவர்களே காரணமாக இருந்தார்கள். யுதிஷ்டிரன், "எதற்காக இத்தனையும்? நான் எப்போதுமே அரசனாக விரும்பியதில்லையே. நான் ஏன் இதற்கு காரணமானேன்?" என்று தன்னைத்தானே கேட்டுக் கொண்டான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அரண்மனைக்கு வந்த பாண்டவர்கள் முதல் காரியமாக திருதராஷ்டிரனை சென்று சந்தித்தார்கள். அவர்களை சந்தித்ததும் திருதராஷ்டிரனமிடருந்து அமைதி ததும்பும் வார்த்தைகள் பொங்கியது,"பாண்டுவின் புதல்வர்களான நீங்கள் பல வழிகளிலும் உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்கிறீர்கள். ஆனால் எனது மகன், தன்னுடைய அகங்காரத்தால் தனக்கும் எங்கள் அனைவருக்கும் இப்படி ஒரு நிலையை ஏற்படுத்தி விட்டான். இந்த ராஜ்ஜியம் இப்போது உங்களுக்கு உரிமையானது - நீங்களே அரசாட்சி செலுத்துங்கள்" என்றபடியே, "நான் பீமனை சந்திக்க விரும்புகிறேன்" என்றான். திருதராஷ்டிரனின் முன்செல்ல பீமன் எத்தனிக்க, கிருஷ்ணர் தடுத்தார். பீமனுக்கு பதிலாக ஒரு மல்யுத்த வீரனின் உலோகச் சிலையை திருதராஷ்டிரனின் முன் வைக்குமாறு சமிக்ஞை செய்தார். எனவே பீமன் ஒரு உலோகச் சிலையை தூக்கிக் கொண்டு வந்து திருதராஷ்டிரனின் முன்‌ வைத்தான்.

தோல்வியை தழுவும் கயமை

தன் முன் உண்மையாகவே பீமன் நிற்பதாக நினைத்த திருதராஷ்டிரன் அந்த சிலையை கட்டியணைத்து இறுக்க, அந்த உலோகச் சிலை நொறுங்கி விழுந்தது.‌ திருதராஷ்டிரனை அளப்பரிய பலசாலி என கேள்விப்பட்டிருந்த பாண்டவர்கள் இன்று அதை நேரில் கண்ணுற்றனர்.‌ உண்மையில் திருதராஷ்டிரன் பீமனை கொல்லவே விரும்பினான், ஏனென்றால் தன் மகன் துரியோதனன் கொல்லப்பட்ட விதமும், துச்சாதனனின் இதயத்தை உண்டு, ரத்தத்தை குடித்து பீமன்‌ கொலை செய்ததையும் திருதராஷ்டிரனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. பீமனுக்கு முடிவு கட்ட திருதராஷ்டிரன் விரும்புவதை முன்னதாகவே உணர்ந்த கிருஷ்ணர், உலோகச் சிலையை வைக்குமாறு சைகை செய்ததால் அது இப்போது திருதராஷ்டிரனின் அணைப்பில் நொறுங்கியது. அமைதியை பற்றியும், சமரசம் பற்றியும் திருதராஷ்டிரன் பேசியிருந்தாலும், இந்த செயல் மூலம் உண்மையில் அவனது உள்ளத்தில் பொங்கிக் கொண்டிருப்பது என்ன என்பது வெளிப்பட்டது. நீங்கள் வலிமையானவராக, பெரும் காரியங்களை செய்யும் திறனுடன் இருக்கும் போது அமைதியை பயிற்சி பற்றி பேசினால், அதில் அர்த்தம் இருக்கிறது. ஆனால் நீங்கள் இயலாமையில் இருக்கும்போது அமைதியைப் பற்றி பேசுவது என்பது பிச்சைக்காரன் அனைத்தையும் துறப்பதாக அறிவிப்பதைப் போலாகும். உங்களிடம் எதுவுமே இல்லாத போது, நீங்கள் அனைத்தையும் துறப்பதாக அறிவிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

யுதிஷ்டிரன் அரசனாக முடிசூடப்பட்டான். திருதராஷ்டிரனிடமும் காந்தாரியிடமும் ஆசி பெற அவன் வந்த போது, அன்பு ததும்பும் முகத்துடன் காந்தாரி,‌ "தேசத்தின் புதிய அரசனாக முடிசூடியுள்ள யுதிஷ்டிரனை கண்குளிர நான் பார்க்க விரும்புகிறேன். என் கண்களைக் கட்டியுள்ள துணியை அவிழ்த்து ஒரேயொரு முறை யுதிஷ்டிரனை நான் காண வேண்டும்" என்றாள். இந்த விருப்பத்தின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை கிருஷ்ணர் உடனடியாக உணர்ந்து கொண்டார்.

காந்தாரியின் கோபம்

கௌரவ சகோதரர்கள் நூறுவரில் துர்தாசன் ஒருவன் மட்டுமே போரில் பிழைத்திருந்தான். ஏனென்றால்,‌ முன்பு யுதிஷ்டிரன் அமைதி வேண்டி, ஆயுதமின்றி அஸ்தினாபுரம் வந்தபோது அவனை அப்போதே அங்கேயே கைது செய்து சிறையிலடைக்க  துரியோதனனும் கர்ணனும் எண்ணினார்கள். அப்போது, கௌரவ சகோதரர்களில் ஒருவனான -திருதராஷ்டிரனுக்கும் காந்தாரியின் பணிப்பெண்ணுக்கும் பிறந்த - துர்தாசன் எழுந்து தன் வாளை உறுவிக்கொண்டு, "ஆயுதம் ஏந்தாமல் அமைதியை வேண்டி வந்த ஒருவரை யார் கைது செய்யவும் நான் அனுமதிக்க மாட்டேன்" என்றவாறு யுதிஷ்டிரனுக்கு முன் வந்து பாதுகாப்பாக நின்றான். அப்போது யுதிஷ்டிரன் துர்தாசனை பார்த்து, "எனக்கு முன் நீ இறக்காதபடி நான் உன்னை பார்த்துக் கொள்வேன்" என்றான். துர்தாசன் யுதிஷ்டிரனை பாதுகாத்ததால் பீமனும், "எனக்கு முன் நீ இறக்காதபடி நான் உன்னை பார்த்துக் கொள்வேன்" என்று உறுதி அளித்தான். எனவே போரில் துர்தாசன் கொல்லப்படவில்லை.

காந்தாரி புதிதாக முடிசூடப்பட்ட அரசனான யுதிஷ்டிரனை பார்க்க விரும்பினாள். கிருஷ்ணர் யுதிஷ்டிரனை விலகிச் செல்லுமாறு சைகை செய்தார். யுதிஷ்டிரனுக்கு பதிலாக,  காந்தாரியின் முன்பாக துர்தாசனை நிற்கச் செய்தார். காந்தாரி தன் கண்களை  திறந்து அவனைப் பார்த்ததும் துர்தாசன் நெருப்பில் எரிந்து சாம்பலானான்.  காந்தாரியின் நோக்கம் யுதிர்ஷ்டிரனை  எரித்து சாம்பலாக்குவதாக இருந்தாலும், தன் பணிப்பெண்ணுக்கும் தன் கணவன் திருதராஷ்டிரனுக்கும் பிறந்த மகனையே காந்தாரியால் எரிக்க நேர்ந்தது.

தொடரும்...

மஹாபாரதம் பிற பகுதி

ஆசிரியர் குறிப்பு: கோவை ஈஷா யோக மையத்தில் கடந்த 2012ம் ஆண்டு மஹாசிவராத்திரியின் போது, சத்குரு விவரிக்க, நடன நாட்டிய நிகழ்ச்சி வடிவில் நடைபெற்ற மஹாபாரதப் பெருங்கதையின் கட்டுரை வடிவமாக இந்த தொடர் மலர்கிறது. காலத்தை வென்ற இந்த பெருங்காவியத்தின் பல்வேறு கதாப்பாத்திரங்கள் மற்றும் கதைகளின் ஊடே நம்மை மறைஞான தேடலுக்கு அழைத்துச் செல்கிறார் சத்குரு.