பொருளடக்கம்
பூதசுத்தி – அடிப்படை யோகப் பயிற்சி
பூதசுத்தி அல்லது பஞ்சபூதங்களைத் தூய்மைப்படுத்துவதன் முக்கியத்துவம்
பஞ்சபூதங்களுக்கு ஏன் சுத்திகரிப்பு தேவை?
பஞ்சபூதங்களும் கர்மாவும்
பூதசுத்தி - கர்ம பதிவுகளில் இருந்து விடுதலை பெறுதல்
ஈஷா பூதசுத்தி பயிற்சி செய்வதன் நன்மைகள்
அதிகபட்ச பலனுக்காக பூதசுத்தியை செய்யும் சரியான முறை
பூதசுத்தி பற்றிய ஆழ்ந்த ஆன்மீக நுண்ணறிவு

பூதசுத்தி - அடிப்படை யோகப் பயிற்சி

சத்குரு:

நீங்கள் "எனது உடல்" என்று அழைப்பது வெறும் பஞ்சபூதங்களின் வெளிப்பாடு தான் - நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம். உங்களுக்குள் இந்த பஞ்சபூதங்களை சரியாக ஒழுங்கமைக்கத் தெரிந்தால், வாழ்க்கையில் வேறு எதுவும் தேவையில்லை. இந்த பஞ்சபூதங்களை சரியாக வைத்திருக்கத் தெரிந்தால் உடல்நலம், நல்வாழ்வு, புரிதல், அறிதல் மற்றும் ஞானோதயம் ஆகிய அனைத்தும் கையாளப்படும்.

நமது எண்ணம், உணர்வு அல்லது சிந்தனை செயல்முறை மூலம் நாம் உண்ணும் உணவு, நீர் மற்றும் காற்றின் தன்மையை மாற்ற முடியும்.

யோக முறையில் மிக அடிப்படையான பயிற்சி, பூதசுத்தி என்று அழைக்கப்படுகிறது. இது நாம் செய்யும் மற்ற அனைத்திற்கும் அடிப்படையாக உள்ளது. "பூதம்" என்பது பஞ்சபூதங்கள் அல்லது ஐந்து கூறுகளைக் குறிக்கிறது. "சுத்தி" என்றால் அதைச் சுத்தப்படுத்துவது. உடலில் உள்ள பஞ்சபூதங்களை சுத்தப்படுத்த கற்றுக்கொண்டால், அதுவே போதுமானது. ஆன்மீகப் பயிற்சிகளைப் பொறுத்தவரை, நீங்கள் யமம், நியமம், பிராணாயாமம், ஆசனம், தாரணம், தியானம், சமாதி அல்லது சூன்யம் என்று எதைச் செய்தாலும், அனைத்தும் பூதசுத்தியின் அடிப்படையில் இருந்தே வருகின்றன. மற்ற அனைத்து யோகப் பயிற்சிகளும் பஞ்சபூத யோக முறையில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டவையே.

நீங்கள் பஞ்சபூதங்களை சுத்தப்படுத்தினால், நீங்கள் ஒரு அற்புதமான வாழ்க்கையை வாழலாம். ஆனால் நீங்கள் அதற்கு அப்பாற்பட்டவராக இருந்தால், அழகான வாழ்க்கையை வாழ்வதை மறந்துவிட்டு வெறுமனே வாழ்க்கைக்கு அப்பால் செல்வதே சிறந்தது. ஏனெனில் அழகான வாழ்க்கையை வாழ்வது என்பது வாழ்க்கைக்கு அப்பால் தாண்டிச் செல்வதை விட சிக்கலான சூழ்நிலை. அப்பால் செல்வது என்பது அதைத் தாண்டி செல்வதாகும். அதற்கு அப்பாற்பட்டது உடல்ரீதியான பல சிக்கல்களால் பாதிக்கப்படுவதில்லை. ஆனால் நீங்கள் உடல் தன்மையில் இருந்துகொண்டே அதைத் தாண்டி இருக்க விரும்பினால், அதற்கு உடல் மீது சற்று அதிக ஆளுமை தேவைப்படுகிறது. உடல் மீது உங்களுக்கு ஆளுமை இல்லையெனில், நீங்கள் உடலுக்கு அடிமையாகிவிடுவீர்கள்.

நீங்கள் பஞ்சபூதங்களை ஒரு குறிப்பிட்ட அளவு சுத்தப்படுத்தினால், பின்னர் நீங்கள் ‘பூதசித்தி' என்று அழைக்கப்படும் நிலையை அடைவீர்கள், இதன் பொருள் உங்களுக்கு பஞ்சபூதங்கள் மீது ஆளுமை கிடைக்கிறது என்பதாகும். ஒருமுறை நீங்கள் பஞ்சபூதங்கள் மீது ஆளுமை பெற்றுவிட்டால், உங்களுக்கு உடல் மற்றும் மனதின் மீது மட்டுமல்லாமல், படைப்பு முழுவதின் மீதும் ஆளுமை கிடைக்கிறது.

பூதசுத்தி அல்லது பஞ்சபூதங்களை சுத்தப்படுத்துவதன் முக்கியத்துவம்

ஒவ்வொருவருக்கும் பஞ்சபூதங்கள் மீது ஏதோ ஒருவிதமான ஆளுமை உள்ளது, இல்லையெனில் நீங்கள் சாதாரண வாழ்க்கையைக் கூட வாழமுடியாது. உங்கள் உடலமைப்பில் பஞ்சபூதங்கள் எவ்வளவு நன்கு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன என்பதைப் பொறுத்தே இந்த உடல் எவ்வளவு உறுதியாகவும், நிலையாகவும், இயற்கையாக வலிமையாகவும் இருக்கிறது என்பது தீர்மானிக்கப்படுகிறது. உங்களுக்குள் இருக்கும் பஞ்சபூதங்களைக் கட்டுப்படுத்த ஒரு முழு பயிற்சி முறை உள்ளது. அவற்றில் சில நேரடியானவை, மற்றவை மறைமுகமானவை. பூதசுத்தியை மிகவும் எளிமையான முறையிலோ அல்லது மிகவும் நுணுக்கமான முறையிலோ பயிற்சி செய்யலாம். அல்லது உங்களுக்கு எப்படி செய்வது என்று தெரியவில்லை என்றால், அனைவரும் பயனடையக்கூடிய ஒன்றை ஒருவர் செய்ய முடியும். தியானலிங்கத்தில் ஒவ்வொரு மாதமும் பஞ்சபூத கிரியா போன்ற பூதசுத்தி செயல்முறைகள் நடைபெறுகின்றன. உங்களுக்கு எப்படி செய்வது என்று தெரியவில்லை என்றால், வேறு யாரோ செய்வார்கள்; நீங்கள் அங்கே அமர்ந்து அதன் பயனைப் பெறமுடியும்.

இந்த பஞ்சபூதங்களே உங்கள் உருவாக்கத்தின் அடிப்படை. இவற்றின் மீது சிறிதளவு கட்டுப்பாடு உங்களுக்கு இருந்தால் கூட, மற்றவர்கள் மாயாஜாலம் என்று நினைக்கும் விதமாக நீங்கள் வாழத் தொடங்குவீர்கள். ஆனால் இதில் எந்த மாயாஜாலமும் இல்லை. இப்போது, நீங்கள் தண்ணீர் குடிக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த தண்ணீர் உங்களைப் போல தெரியவில்லை அல்லது உங்களை ஒத்திருக்கவில்லை, ஆனால் நீங்கள் இதைக் குடித்தால், அது நீங்களாக மாறுகிறது. இதுதானே ஒரு மாயாஜாலம். உங்கள் நோய் குணமடைந்தது அற்புதம் அல்ல. இந்த தண்ணீர் நீங்களாக மாறுவதுதான் அசாதாரணமான அற்புதம். இந்த அற்புதத்தை செய்யும் திறன் உங்களுக்கு இருக்கும்போது, நோயைக் குணப்படுத்துவது அல்லது நீங்கள் சேதப்படுத்திய எதையோ சரிசெய்வது போன்ற சிறிய விஷயங்களையும் செய்ய முடியும் - ஏனெனில் நான்கு பூதங்களைப் பயன்படுத்தி உடல் முழுவதையும் உள்ளிருந்து உருவாக்குகிறீர்கள். துரதிருஷ்டவசமாக, இது விழிப்புணர்வின்றி நடக்கிறது. இந்த நான்கு பூதங்கள் எவ்வாறு மனித உடலாக மாறுகின்றன என்பது பற்றி விழிப்புணர்வைக் கொண்டுவர முடியும்.

ஏன் பஞ்சபூதங்கள் தூய்மைப்படுத்தப்பட வேண்டும்?

கேள்வியாளர்: ஏன் பஞ்சபூதங்களைத் தூய்மைப்படுத்த வேண்டும்?

சத்குரு: சாக்கடையில் இருந்து நீரை எடுத்தால், அது அசுத்தமானது என்று நீங்கள் நினைக்கலாம், ஆனால் அது அப்படி அல்ல. பாட்டிலில் இருந்து நீங்கள் குடிக்கும் தண்ணீரை விட சாக்கடை நீரில் அதிக உயிர் உள்ளது. அது உங்களுக்கு ஏற்றதாக இல்லை என்பது மட்டும் தான். மனித புரிதலிலும் மொழியிலும், நமக்கு ஏற்றதாக இருந்தால் மட்டுமே நாம் நீரை தூய்மையானது என்று அழைக்கிறோம். ஆனால் பல உயிரினங்களுக்கு சாக்கடை நீர் மிகவும் தூய்மையானது. நாம் தூய்மையானது என்று கருதும் நீரில், அதிலிருந்த உயிர்கள் அனைத்தையும் கொன்றுவிட்டோம். உங்கள் பாட்டில் தண்ணீரை மற்ற உயிரினங்கள் உயிரற்ற நீர் என்று நினைக்கின்றன, தூய்மையான நீர் என்று அல்ல.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

தூய்மைப்படுத்துதல் என்பது அடிப்படையாக மனிதர்களின் நிலையில் இருக்கிறது, பூதங்களின் நிலையில் அல்ல. இதேபோல், மருந்துகளாகவும் பல்வேறு வகையான மருத்துவப் பொருட்களாகவும் பயன்படுத்தப்படும் பல ரசாயனங்களில், தொழில்துறை சார்ந்த வகைகள் மற்றும் மருத்துவம் சார்ந்த வகைகள் உள்ளன. ஏனெனில் மனிதர்கள் உட்கொள்வதற்காக பயன்படுத்தப்படுவதும், பிற நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதும் வேறுபட்டவை. இதன் பொருள் தொழில்துறை சார்ந்த வகைகள் தூய்மையற்றது என்பதல்ல. அது உங்களுக்கு சிறப்பாக வேலை செய்யும் நிலையில் இல்லை என்பதே ஆகும். பூதங்களைப் பற்றி நாம் பேசும்போது, நமக்கு மிகவும் உகந்ததாக இருப்பதைப் பற்றியே பேசுகிறோம். அந்த அடிப்படையிலேயே, நாம் பூதங்களைத் தூய்மைப்படுத்த வேண்டும்.

பஞ்சபூதங்களும் கர்மாவும்

உடல், உலகம் மற்றும் பிரபஞ்சம் ஆகிய அனைத்தும் பஞ்சபூதங்களின் ஒரு விளையாட்டே ஆகும். பூதங்கள் மற்ற பண்புகளையோ அல்லது சாத்தியங்களையோ பெற்றுக்கொள்ளாவிட்டால், பஞ்சபூதங்களால் இத்தனை கோடிக்கணக்கான வெளிப்பாடுகளை உருவாக்கியிருக்க முடியாது. அவை இயல்பாகவே கிரகிப்புத்தன்மை கொண்டவை. இன்று, அவற்றில் நம்மால் தாக்கம் ஏற்படுத்த முடியும் என்பதை நாம் அறிவோம். வெறுமனே நமது நோக்கம், உணர்வு அல்லது சிந்தனை செயல்முறை மூலமாக நாம் உட்கொள்ளும் நீர், காற்று மற்றும் உணவின் தரத்தை மாற்ற முடியும். உங்கள் உடலை உருவாக்கக்கூடிய உங்களுக்குள் இருக்கும் பஞ்சபூதங்கள், பொதுவாக கர்மா எனப்படும் ஒரு குறிப்பிட்ட சேகரிக்கப்பட்ட தகவல் அடுக்கால் ஆழமான தாக்கத்தைப் பெறுகின்றன. அது இல்லாமல், பூதங்கள் உங்களுக்குள் ஒரு குறிப்பிட்ட முறையில் நடந்துகொள்ளாது. குறிப்பிட்ட தகவல் இல்லையென்றால் ஒவ்வொரு மனிதனும் ஒரே மாதிரியாக இருந்திருப்பார்கள். உங்களது தனிப்பட்ட சுயமாக நீங்கள் கருதுவது, அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட அளவிலான தகவல்களே ஆகும். இந்த தகவல்கள் உங்களோடு ஒட்டிக்கொண்டிருப்பது பூதங்கள் மூலமாகத்தான், ஏனெனில் பூதங்களைத் தவிர வேறு எதுவும் இங்கு இல்லை.

இதனால்தான் யோகா எல்லாவற்றையும் உடல் என்று அழைக்கிறது - பௌதீக உடல், மன உடல், சக்தி உடல் - ஆனால் மனம் இல்லை, ஏனெனில் நீங்கள் மிகப் பெரிய முக்கியத்துவம் கொடுத்துள்ள உளவியல் செயல்பாடு எந்தவித முக்கியத்துவமோ அர்த்தமோ இல்லாதது.

பஞ்சபூதங்களை சுத்தம் செய்வது என்பது சேகரிக்கப்பட்ட தகவல்கள் அல்லது கர்மப்பதிவுகளில் இருந்து விடுபடுவது. இது செய்யப்படவில்லை என்றால், நீங்கள் ஒரு வலுவான தனிநபராக இருப்பீர்கள், ஆனால் நீங்கள் உங்களுக்காக அமைத்துக்கொண்ட இந்த எல்லையை எப்படி கடப்பது என்று உங்களுக்குத் தெரியாது. நீங்கள் அமைத்த எல்லையைக் கடக்க முடியாவிட்டால், அது முட்டாள்தனமான வாழ்க்கை முறை. ஏன் என்று தெரியாமலேயே நீங்கள் ஒரு எல்லையை அமைத்துக் கொண்டீர்கள், சிறிது காலத்திற்குப் பிறகு அதைக் கடக்க முடியாமல் போகிறது. பின்னர் நீங்கள், "நான் இப்படித்தான்!" என்று கூற ஆரம்பிக்கிறீர்கள். நீங்கள் இப்படி இல்லை. நீங்கள் உங்களை இப்படி ஆக்கிக்கொண்டீர்கள்.

சுதந்திரமும் விடுதலையும் உங்கள் வாழ்க்கையின் குறிக்கோளாக மாறும்போது மற்றும் இந்த எல்லைகளுக்கு அப்பால் உங்களை விரிவுபடுத்த விரும்பும்போது பஞ்சபூதங்களைத் தூய்மைப்படுத்துவது முக்கியத்துவம் பெறுகிறது. நீங்கள் ஒரு கான்கிரீட் பந்தாக இருக்க விரும்பினால், சுத்தப்படுத்துதல் தேவை இல்லை. கர்ம செயல்முறைகளின் திடப்படுத்தும் தன்மை உங்களை உறுதியாக்குவதோடு, இந்த உறுதித்தன்மை பெரும் அளவிலான துன்பத்தை ஏற்படுத்தும். உங்களுக்கு ஒரு பேரழிவு நிகழ வேண்டிய அவசியமே இல்லை; நீங்களே ஒரு பேரழிவாக இருப்பீர்கள். பதிவு மிக ஆழமாக இருப்பதால், நீங்கள் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட, நிர்பந்தமான வழிகளில் நடந்துகொள்கிறீர்கள். ஒரே சூழ்நிலை ஆயிரம் முறை நடந்திருக்கலாம், ஆனால் அடுத்த முறை அது நடக்கும்போது, நீங்கள் இன்னும் கிட்டத்தட்ட அதே வழியில் எதிர்வினையாற்றுகிறீர்கள். வேறுவிதமாக பதிலளிக்க ஒரு குறிப்பிட்ட அளவு விழிப்புணர்வு உங்களுக்கு தேவைப்படுகிறது. இதை மிக அடிப்படையான நிலையில் செய்வதற்கானது பூதசுத்தி.

பூதசுத்தி - கர்ம பதிவுகளில் இருந்து விடுதலை

காலையில் உங்கள் மனதை சுத்தம் செய்தால், மதியத்திற்குள் உங்களுக்கு முற்றிலும் புதிய உலகம் இருக்கும். இது உண்மையில் வீணானது. இதனால்தான் யோக முறையில் உங்கள் உளவியல் கட்டமைப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள், உணர்கிறீர்கள் என்பதைப் பற்றி அது கவலைப்படுவதில்லை, ஏனெனில் இன்று நீங்கள் அதை மாற்றினாலும், சில மணி நேரங்களில் மீண்டும் வேறு ஏதோ ஒன்றாக மாற்றிவிடுவீர்கள்.

நாம் உடலில் மட்டுமே கவனம் செலுத்துகிறோம். இதனால் தான் யோகா எல்லாவற்றையும் உடல் என்று அழைக்கிறது - பௌதீக உடல், மன உடல், சக்தி உடல் - ஆனால் மனம் இல்லை, ஏனெனில் நீங்கள் மிகப் பெரிய முக்கியத்துவம் கொடுத்துள்ள உளவியல் செயல்பாடு எந்தவித முக்கியத்துவமோ அர்த்தமோ இல்லாதது. உங்களுக்குள் பதிந்துள்ள தகவல்களின் விதத்தைப் பொறுத்து, உங்கள் கர்மா மற்றும் சம்ஸ்காரா எப்படி இருக்கிறதோ, அதன்படி நீங்கள் சிந்திக்கிறீர்கள் மற்றும் உணர்கிறீர்கள். எல்லாம் அப்படித்தான் நடக்கிறது. மரத்தை கத்தரித்தால், அது வேகமாக துளிர்விடும், ஆனால் வேரை வெட்டினால், அது போய்விடும். நாங்கள் வேரைக் கையாள்வதில் கவனம் செலுத்துகிறோம், கர்மப் பதிவுகளின் மிக அடிப்படையான வேர், பஞ்சபூதங்களில் தான் உள்ளது.

ஈஷா பூதசுத்தி பயிற்சியைச் செய்வதன் நன்மைகள்

பூதசுத்தி, Bhuta Shuddhi

பூதசுத்தி என்றால் நீங்கள் உங்களை இழக்க விரும்புகிறீர்கள் என்று பொருள். அது நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும், அசிங்கமாக இருந்தாலும் அல்லது அழகாக இருந்தாலும், நீங்கள் கட்டியெழுப்பிய அனைத்தையும் இழக்க விரும்புகிறீர்கள், இதனால் படைப்பாளரின் படைப்பு உங்களுக்குள் எழுந்து பிரகாசிக்கும். இதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு உழைப்பு தேவைப்படும். நாம் கற்பிக்கும் பூதசுத்தி மிகவும் அடிப்படையானது. நீங்கள் மேலும் தீவிரமான பூதசுத்தி வடிவங்களைச் செய்ய விரும்பினால், அது ஒரு சாதாரண செயலாக இருக்காது; அது உங்கள் முழு வாழ்க்கையாக மாறிவிடும். ஆனால் நீங்கள் மிகவும் சிறிய அளவிலான பூதசுத்தியைச் செய்தாலும் கூட, உங்களில் ஏற்படும் மாற்றம் நிரந்தரமானது என்பதைக் காண்பீர்கள். மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பும் போக்கு இருக்காது, அது முக்கியம். இல்லையெனில், அனைவரும் மூன்று நாட்களுக்கு மாறுவார்கள், பின் மீண்டும் அவர்கள் சாக்கடையில் விழுவார்கள். பூதசுத்தி பயிற்சியுடன் நீங்கள் செய்யும் மற்ற எதுவும் அப்படி நடக்காது. 

அது நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும், அசிங்கமாக இருந்தாலும் அல்லது அழகாக இருந்தாலும், நீங்கள் கட்டியெழுப்பிய அனைத்தையும் இழக்க விரும்புகிறீர்கள், இதனால் படைப்பாளரின் படைப்பு உங்களுக்குள் எழுந்து பிரகாசிக்கும்.

பூதசுத்தி பயிற்சியை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால், அது எவ்வளவு சிறிய பயிற்சியாக இருந்தாலும், காலப்போக்கில் அதன் தாக்கம் புறக்கணிக்க இயலாததாக இருப்பதை நீங்கள் காண்பீர்கள். உதாரணமாக, நீங்கள் ஆறு மாதங்கள் யோகாசனங்களைச் செய்துவிட்டு ஒரு வருடம் விட்டுவிட்டால், எல்லாம் முன்பு இருந்தது போலவே திரும்பிவிடும். நீங்கள் சக்தி சலன கிரியா போன்ற சக்திவாய்ந்த செயல்முறையைச் செய்தால், அதன் தாக்கம் இருக்கும், ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு அதைச் செய்யவில்லை என்றால், அது மீண்டும் திரும்பிவிடும். நீங்கள் சில காலம் சூன்ய தியானம் செய்து, ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு செய்யவில்லை என்றால், அது மெதுவாகத் திரும்பிவிடும். ஆனால் பூதசுத்தியின் இயல்பு அப்படி அல்ல. நீங்கள் பூதசுத்தி செய்தால், அது மிகவும் அடிப்படையானதாகவும் மெதுவானதாகவும் இருப்பதால் ஒன்றும் நடப்பதாகத் தெரியாது. ஆனால் நீங்கள் இந்த உடலை வைத்திருக்கும் வரை, அது உங்களுடன் இருக்கும். அது மிகவும் அடிப்படை நிலையில் இருப்பதால் அது போகாது. அதுதான் பூதசுத்தியின் முக்கியத்துவம். உங்களுக்கு தொழிலோ குடும்பமோ இல்லை என்றால், அப்போது நாம் மிகவும் தீவிரமான பூதசுத்தியை ஆரம்பிக்கலாம், ஏனெனில் அது நிறைய நேரத்தை எடுக்கும்.

அதிகபட்ச பலனடைய பூதசுத்தியைச் செய்யும் சரியான வழி

பெரும்பாலும், மனிதர்கள் தெரியாமலும், அறியாமலும், நோக்கமில்லாமலும் ஏதோ ஒரு வகையான பூதசுத்தியைச் செய்து கொண்டிருக்கிறார்கள். உதாரணமாக, தங்களது வெறும் இருப்பினாலேயே தங்களைச் சுற்றியுள்ள சூழலை மாற்றும் தலைவர்கள் உள்ளனர். பல மக்கள் - ஆன்மீகவாதிகள் மட்டுமல்ல - ஒரு அறைக்குள் நுழையும்போது, அங்குள்ள சூழலை உடனடியாக மாற்றுகிறார்கள். இது ஒரு குறிப்பிட்ட அளவு பூதசுத்தி, விழிப்புணர்வு இல்லாமலேயே செய்யப்படுகிறது. நீங்கள் இதை விழிப்புணர்வாகச் செய்ய முடிந்தால், அது மிகவும் பலன் தரக்கூடியதாக இருக்கும். ஒருவர் தாக்கம் செலுத்தக்கூடிய மற்றும் அதன் மூலம் சூழலை மாற்றக்கூடிய சக்தியின் பிற அம்சங்களும் உள்ளன. ஆனால் அவை, ஒரு குறிப்பிட்ட சக்தி மற்றும் நோக்கத்தின் இருப்பினால் பஞ்சபூதங்கள் தங்களை மறுசீரமைத்துக் கொள்ளும்போது ஏற்படும் தாக்கத்தைப்போல, மற்றவர்களை அவ்வளவு ஆழமாக பாதிக்காது.

பூதசுத்தி ஒரு பயிற்சியாக அல்லாமல், ஒரு காதல் உறவுபோல் - முழு ஈடுபாட்டுடன் நடக்க வேண்டும். இது பக்தியுடனும் அன்புடனும் நடக்க வேண்டும்.

பூதசுத்தியை பயிற்சி செய்வதன் நோக்கம் உங்களுக்குள் பஞ்சபூதங்கள் செயல்படும் விதத்தை மாற்றியமைப்பது. அவை உங்களுக்குள் செயல்படும் நோக்கத்தை மாற்ற விரும்புகிறீர்கள். உங்களுக்குள் உள்ள பஞ்சபூதங்கள் பூமியில் அல்லது மரத்தில் செயல்படும் அதேவிதமாக செயல்பட்டால், அது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்காது. மனித உடலமைப்பில், பஞ்சபூதங்கள் ஒரு குறிப்பிட்ட விதத்தில் செயல்படுகின்றன. அவை அந்த விதமாக செயல்பட்டு, உயர்ந்த சாத்தியக்கூறுகளாக தங்களை மாற்றியமைத்திட வேண்டும் என்றும் நாம் விரும்புகிறோம்.

உண்மையில், ஒவ்வொரு தனிநபரிலும், பஞ்சபூதங்கள் தனித்துவமான முறையில் செயல்படுகின்றன. கிழக்கத்திய பாரம்பரிய மருத்துவ முறைகள் எப்போதும் இந்த தனிமனித வேறுபாடுகளை அடையாளம் கண்டுள்ளன. அவர்களின் நோய் கண்டறிதல் என்பது, ஒருவருக்குள்ள நோய் அல்லது உடல்நலக் குறைபாட்டின் அடிப்படையில் அல்லாமல், ஒவ்வொரு தனிமனிதரின் உடலமைப்பும் எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதன் அடிப்படையிலேயே உள்ளது. அனைவருக்கும் பொதுவான மருந்து பரிந்துரை என்று எதுவும் இல்லை. மருத்துவர் ஒவ்வொரு தனிமனிதரையும் பார்த்து, அந்த குறிப்பிட்ட நபருக்கு என்ன தேவை என்பதை அடையாளம் காணாவிட்டால், சிகிச்சை அந்தளவுக்கு நன்றாக வேலை செய்யாது. இந்த குறிப்பிட்ட உடல் மற்றும் மனித இயந்திரம் எவ்வாறு செயல்படுகிறது, மற்றும் அதற்குள் எவ்வாறு ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது என்பதன் அடிப்படையில் சிகிச்சை அமைகிறது, ஒரு குறிப்பிட்ட நோயின் அறிகுறிகளின் அடிப்படையில் அல்ல. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், கிழக்கத்திய முறைகளில், சிகிச்சை ஒருபோதும் அறிகுறி சார்ந்ததாக இருக்காது, அதேசமயம் அலோபதி முறை 100% அறிகுறி சார்ந்த சிகிச்சை. ஐந்து பேருக்கு ஒரே மாதிரியான அறிகுறிகள் இருந்தால், ஐந்து பேருக்கும் ஒரே மருந்து கொடுக்கப்படும். ஆனால் சித்த மற்றும் ஆயுர்வேத முறைகளில், ஐந்து பேருக்கு ஒரே மாதிரியான அறிகுறிகள் இருந்தாலும், அவர்களுக்கு வெவ்வேறு வகையான மருந்துகள் கொடுக்கப்படும். ஏனெனில் மருந்து அந்த குறிப்பிட்ட உடலமைப்புக்கானது, நோய்க்கானது அல்ல.

இந்த பஞ்சபூதங்கள் ஒன்றிணைந்து இவ்வளவு நுட்பமான மற்றும் அற்புதமான ஒன்றை உருவாக்குவது என்பது, ஒரு மகத்தான காதல் செயல்முறையாகும். பூதசுத்தி என்பது ஒரு உடற்பயிற்சியாக அல்லாமல், காதல் செய்வது போல் - முழு ஈடுபாட்டுடன் நடைபெற வேண்டும். இது பக்தி மற்றும் அன்பு உணர்வுடன் நடைபெற வேண்டும். உங்கள் மனம், உணர்வுகள், சக்தி மற்றும் உடல் - அனைத்தும் இதில் ஈடுபட வேண்டும். இந்த ஈடுபாடு இல்லாமலும் கூட, நீங்கள் சில உடல் நன்மைகளைப் பெறலாம், ஆனால் இந்த செயல்முறையின் முழு ஆழத்தையும் பரிமாணத்தையும் நீங்கள் அறியமாட்டீர்கள். நீங்கள் உங்களை முழுமையாக இதற்கு அர்ப்பணித்தால், இந்த எளிய செயல்முறை உங்கள் வாழ்க்கையின் அடிப்படைகளை மாற்றக்கூடும்.

பூதசுத்தி பற்றிய ஆழமான மறைஞானப் பார்வை

உடல் என்பது பஞ்சபூதங்களின் ஒரு விளையாட்டு; அதுபோலதான் உலகமும்; பிரபஞ்சமும் அதுபோல தான். எல்லாமே பஞ்சபூதங்களின் விளையாட்டு தான். நீங்கள் மறைஞானப் பரிமாணங்களை அறிய விரும்பவில்லை என்றால், ஆகாஷைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. மற்ற நான்கில், உடலில் 72 சதவீதம் நீர், 12 சதவீதம் மண், ஆறு சதவீதம் காற்று, நான்கு சதவீதம் நெருப்பு உள்ளது; மீதமுள்ளவை ஆகாயம். நன்றாக வாழ்வதற்கு, நான்கு கூறுகள் போதுமானவை; ஐந்தாவது கூறு (ஆகாஷ்) நன்றாக வாழ்வதை மட்டுமே விரும்புபவர்களுக்கு பொருத்தமற்றது.

உடல் என்பது பஞ்சபூதங்களின் ஒரு விளையாட்டு; அதுபோல தான் உலகமும்; அதுபோல தான் பிரபஞ்சமும். எல்லாமே பஞ்சபூதங்களின் விளையாட்டு தான்.

உங்கள் உடலில் 72 சதவீதம் நீர் உள்ளது. இது பூமியுடன் ஒத்திருக்கிறது; ஏறக்குறைய 72 சதவீத பூமி நீர் தான். இவ்வாறுதான் உயிர் பரிணமித்துள்ளது. கிரகத்தின் இயல்பு உங்கள் உடலில் பல்வேறு வழிகளில் வெளிப்பட்டுள்ளது. நீங்கள் உணவு உண்ணும்போது, உணவில் நீரின் அளவு 70 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ள உணவை மட்டுமே உண்ண வேண்டும். இதுதான் மேற்கத்திய சமூகங்கள் புறக்கணித்துவிட்டு, பெரும் விலைகொடுத்துக் கொண்டிருக்கும் ஒரு விஷயம். காய்கறிகளில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக நீர் உள்ளது. பழங்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமாக நீர் உள்ளது. சுத்திகரிப்பு நடைபெற வேண்டும் என்றால், நீங்கள் பழங்களை சாப்பிட வேண்டும். இருப்பதைப் போல அப்படியே உடலை பராமரிக்க விரும்பினால், காய்கறி இதைச் செய்கிறது. கிழக்கத்திய பாரம்பரிய சமையல் முறைகள் அனைத்திலும் இயல்பாகவே 70 சதவீதத்திற்கும் அதிகமாக நீர் உள்ளது. ஏனெனில் அவர்களுக்கு இது பற்றி தெரிந்திருந்தது. நீங்கள் தண்ணீர் குடித்தால், அது அப்படி வேலை செய்வதில்லை; உணவில் 70 சதவீதத்திற்கும் அதிகமான நீர் இருக்க வேண்டும்.

இந்த நான்கு பூதங்களுக்கும் நினைவாற்றல் உண்டு. குறிப்பாக மண்ணும் நீரும் மிக வலுவான நினைவாற்றலைக் கொண்டுள்ளன. இன்றைய நவீன அறிவியல் இதை பெரிய அளவில் ஆராய்ந்துள்ளது. நீருக்கு அசாதாரண நினைவாற்றல் உள்ளது என்பதை உங்களுக்கு நிரூபணம் செய்கிறது. நீரைப் பற்றி நிறைய ஆராய்ச்சிகள் நடந்துள்ளன. அது கொண்டுள்ள பதிவுகளின் வகையைப் பொறுத்து நீர் ஒரு குறிப்பிட்ட விதத்தில் நடந்துகொள்கிறது. இதனால்தான் மக்கள் புனித இடங்களுக்கும் கோவில்களுக்கும் சென்று சில சொட்டு நீருக்காக ஏங்குகிறார்கள். ஏனெனில் அந்த நீர் தெய்வீக பதிவுகளைக் கொண்டுள்ளது. தீர்த்தம் என்பது தெய்வீக பதிவுகளைக் கொண்ட நீர். நல்ல பதிவுகளைக் கொண்ட நீர் உங்களுக்குள் செல்ல வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள்.

உங்களுக்குள் இருக்கும் நீரை மட்டும் இனிமையாக்கினால், நீங்கள் 72 சதவீதம் சரியாகிவிடுவீர்கள். மேலும் 12 சதவீத மண்ணை சரிசெய்தால், 84 சதவீதம் நீங்கள் நன்றாக இருப்பீர்கள். காற்றை சரிசெய்தால், நீங்கள் 90 சதவீதம் சிறப்பாக இருப்பீர்கள். நெருப்பை சுத்தப்படுத்த விரும்பினால், அது மேலும் கூடுதலான வேலை.

நெருப்பிற்கு ஐந்து பரிமாணங்கள் உள்ளன. இனப்பெருக்கத்திற்கான நெருப்பு, செரிமான நெருப்பு, மனதின் நெருப்பு, இதயத்தின் நெருப்பு மற்றும் உள்நிலை நெருப்பு. இந்த ஐந்தும் சாதாரண மக்களுக்கு வேலை செய்வது கடினம். இதற்கு அதிக ஒழுக்கம் தேவைப்படுகிறது, ஆனால் மூன்றை செயல்பட வைக்க முடியும். இனப்பெருக்க, செரிமான மற்றும் மனதின் நெருப்புகளை மிகவும் எளிதாக, சிறிய முயற்சியுடன் செயல்படுத்த முடியும். மற்ற இரண்டையும் செயல்படுத்த அதிக முயற்சி தேவைப்படும். நீங்கள் இந்த நெருப்புகளைத் தூய்மைப்படுத்தினால், நீங்கள் இனி சாதாரண நபர் அல்ல. நீங்கள் வெறும் ஆரோக்கியமான, மகிழ்ச்சியான நபர் மட்டுமல்ல; நீங்கள் அதைவிட மிகவும் மேலானவர். ஏனெனில், உங்களுக்குள் இருக்கும் நெருப்பு பூதத்தின் மீது தேர்ச்சி பெற்றதும், நீங்கள் ஆகாஷ் அம்சத்தை தொடுகிறீர்கள். நீங்கள் ஒரு படி மேலே இருக்கிறீர்கள். திடீரென்று நீங்கள் வெறும் சாதாரண மனிதராக இல்லை, உலகில் பெரும்பாலான மக்களுக்குத் தெரியாத வேறு ஏதோ உங்களுடன் எரிகிறது, அனைவரும் அதை அறிய வேண்டும் என்பதே நமது நோக்கம். உங்கள் அடிவயிற்றில் உள்ள நெருப்பு, உங்கள் வயிற்றில் உள்ள நெருப்பு மற்றும் உங்கள் மனதில் உள்ள நெருப்பை சரியாக கையாண்டால், இந்த உயிரின் மூலமாக பல அற்புதமான விஷயங்களைச் செய்ய முடியும். நீங்கள் கட்டாயத்தன்மைக்கு அடிமையாக இருப்பதற்குப் பதிலாக விழிப்புணர்வான தேர்வின் மூலம் வாழமுடியும். இது நீங்கள் இதையோ அல்லது அதையோ மறுப்பது பற்றியது அல்ல. இது அனைத்தும் கட்டாயத்தால் அல்லாமல், விழிப்புணர்வான தேர்வால் நடப்பது பற்றியது.

குறிப்பு:

ஈஷா பூதசுத்தி பயிற்சி

இந்த பயிற்சியை ஒரு ஈஷா ஹடயோகா ஆசிரியரிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு அருகிலுள்ள ஹடயோகா ஆசிரியரைக் கண்டறிய இங்கே க்ளிக் செய்யுங்கள்.