ஈஷாவின் முதல்நிலை வகுப்புகள் முதல் மேல்நிலை யோகப் பயிற்சிகள் வரை ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிலையில் ஒவ்வொரு தன்மையில் இருக்கும் படியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அந்தவகையில் சத்குரு வழங்கியுள்ள 21 நாள் பாரம்பரிய ஹடயோகப் பயிற்சியின் தனித்தன்மைகளும் முக்கியத்துவமும் என்ன என்பதை இங்கே பார்க்கலாம்!

ஈஷா யோக மையத்தில் அமைந்துள்ள ஆதியோகி ஆலயத்தில் 21 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் ஹடயோகா நிகழ்ச்சியில் உபயோகா, அங்கமர்தனா, சூரியகிரியா, யோகாசனங்கள், பூதசுத்தி ஆகிய 5 சக்திவாய்ந்த பயிற்சிகள் ஆழமாகவும் நுட்பமாகவும் கற்றுத்தரப்படுகின்றன.

உபயோகா என்பது 19 நிலைகள் கொண்ட பயிற்சி. இதைச் செய்வதன் மூலம் உடலிலுள்ள மூட்டுக்கள் மற்றும் தசைகளை இயக்குவதோடு சக்திநிலை மண்டலத்தை தூண்டுகிறது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அங்கமர்தனா என்பது 30 வகையான பயிற்சி முறைகளைக் கொண்டது. இதைச் செய்வதன் மூலம் உடல் மற்றும் மனநலனின் உச்சத்தை அடைய முடியும்.

சூரியகிரியா என்பது 21 படிகளைக் கொண்ட யோகப்பயிற்சி. மனிதனின் நன்மைக்காக, பழங்கால நடைமுறையில் வடிவமைக்கப்பட்ட ஒரு முழுமையான யோகமுறை.

யோகாசனங்கள் என்பது, ஒருவரின் விழிப்புணர்வு நிலையையும், சக்திநிலையயும் உச்சத்திற்கு கொண்டு செல்வதற்கான சக்திவாய்ந்த உடல்நிலைகள்.

பூதசுத்தி என்பது உடலில் உள்ள பஞ்சபூதங்களை சுத்தப்படுத்தும் செயல்முறையாகும்.

ஹடயோகா பற்றி சத்குரு...

ஹடயோகா என்றால், நீங்கள் இந்த உயிர் செயலுடன் இணங்கியிருக்க வேண்டும் என்று அர்த்தம். உங்கள் வாழ்க்கை முழுமையாக மலர வேண்டுமென்றால், அத்துடன் நீங்கள் இணங்கியிருக்க வேண்டும், வேறுவழியே இல்லை. ஹடயோகா என்பது இந்த பிரபஞ்சத்துடன் மனித உடலை இணங்கச் செய்யும் ஒரு அளப்பறிய நிகழ்வு.

நீங்கள் ஹடயோகா செய்யும் போது, உடலின் கட்டுப்பாடுகள் தான் மிகப் பெரிய தடையாக இருக்கும். எதைச் செய்ய நினைத்தாலும் மனிதர்களுக்கு தடையாக இருப்பது அவர்களின் உடலும் மனமும் மட்டும்தான். நாம் அவற்றிற்கு உரியகவனம் கொடுக்காததால் எது நமக்கு ஏணிப்படிகளாக இருக்க வேண்டுமோ அவைகளே நமக்கு தடைகளாக இருக்கின்றன. நம் யோகக் கலாச்சாரத்தில், மனித அமைப்பை முழுமையாகவும் ஆழமாகவும் ஆராய்ந்தபிறகு, அவைகளை எப்படி ஒரு பெரும் வாய்ப்புகளாக மாற்றுவது என்ற வழிமுறைகளை உருவாக்கியுள்ளோம். ஹடயோகா என்பது, உங்கள் உடலை ஒரு தடையாக அல்லாமல், ஒரு உட்சபட்ச வாய்ப்புக்கான ஒரு ஏணிப்படியாக மாற்றும் ஒரு வழிமுறை. அதன்பின் ஆரோக்கியம், ஆனந்தம், பேரானந்தம் அதைவிட மேலாக ஒரு சமநிலை உங்களுக்கு இயற்கையாகவே வந்துசேரும்.

ஆதியோகிஆலயத்தில்...

ஆதியோகி ஆலயம் உருவாக்கப்பட்டதன் நோக்கமே, பாரம்பரிய யோகாவை அதன் தூய்மையான வடிவில் திரும்ப கொண்டு வருவதற்காகத்தான். உலகில் இன்று பயிற்றுவிக்கப்படும் புத்தக யோகாவைப் போலவோ, ஸ்டுடியோ யோகாவைப் போலவோ அல்லாமல் ஒரு சக்திவாய்ந்த விஞ்ஞானமாகத் திகழும் முறையான பாரம்பரிய யோகாவை மக்களுக்கு வழங்குவதுதான் நம் நோக்கம்.

இது ஏதோ தலைகீழாக நின்று கொண்டு, தாங்கள் யோகா செய்கிறோம் என்று எண்ணிக்கொண்டிருக்கும் மக்களை நாம் உருவாக்கப் போவதில்லை, இந்த யோகாவில் தங்கள் வாழ்க்கையை ஆழமாக முதலீடு செய்ய விரும்புபவர்களையே நாம் உருவாக்க போகிறோம். இதை உருவாக்குவது என்பது, வெறும் குறிப்புகள் கொடுப்பதில் மட்டும் நடக்கப் போவதில்லை; இதற்கு ஒரு அளப்பறிய சக்தி தேவை, இல்லையென்றால் இதை பயிற்றுவிக்க முடியாது. ஒரு சக்தி கூடு உருவாக்காமல், யோகா கற்றுத் தந்தால், அது உண்மையில் யோகா இல்லை. அது வெறும் கேலிக்கூத்தாகிவிடும். அந்த கேலிக்கூத்துதான் தற்போது உலகில் நடந்துகொண்டிருக்கிறது.

ஆதியோகி ஆலயம், ஒரு சக்திவாய்ந்த ஸ்தானம் உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இது போன்ற ஒரு அதிர்வுமிக்க இடம் நமக்குத் தேவை, இங்கே வெறுமனே உட்கார்ந்து, இங்கே நடப்பவற்றுடன் நீங்கள் இணங்கியிருந்தால், அனைத்து யோக சூத்திரங்களும் உங்களுக்குத் தெரியவரும். ஒரு புத்தகத்தை திறந்தோ அல்லது யாரிடமாவது கேட்டோ அதை அறிய வேண்டும் என்பதில்லை, வெறுமனே இங்கே அமர்ந்தால், அது உங்களுக்கு இங்கேயே இருக்கும். யாராவது ஒருவர் உங்களுக்கு கொஞ்சம் உதவுவார்தான், ஆனால் நான் ஒரு வார்த்தை சொல்லும்போது, அதனுடன் சேர்ந்து உங்கள் சக்தி துடிக்கவில்லையென்றால், அதைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாமல் போய்விடும். வெறும் வார்த்தைகள் மட்டும்தான் உங்களுக்குப் புரியும், ஆனால் வார்த்தைகள் மட்டும் யோகா இல்லை. ஏதாவது ஒன்றை நீங்கள் கூர்ந்து கவனித்தால், அது உங்கள் உடலிலும் நடக்க வேண்டும், இல்லையென்றால் அது யோகா இல்லை. இது நடக்க வேண்டுமென்றால் அதற்கு ஒரு சக்திவாய்ந்தஇடம் தேவை.