ரகுராய் படம் பிடித்த சத்குரு!
சத்குருவின் அசைவுகளில் பொதிந்திருக்கும் ஒரு குறிப்பிட்ட வடிவியலை தன் புகைப்படங்களில் தனித்துவமாக பதிவு செய்துள்ளார் ரகுராய்.
குழந்தைப் பருவத்திலிருந்தே, ஒரு மரத்தை பார்த்தவுடன், முதலில் அதன் முழு வடிவியல்தான் என் மனதில் பதியும். அதன் வண்ணங்களோ, நிழலோ கவனத்தை ஈர்க்காது. முதலில் கண்ணில் தெரிவது, அது எப்படி நிற்கிறது எனும் வடிவியல் தான். எந்தவொரு வடிவமும் என்னை ஈர்க்கிறது என்றால், அதற்கு காரணம் அதன் வடிவியலில்தான் இருக்கிறது, அதன் நிறமோ மற்றும் மேற்பரப்பு அழகின் பிற அம்சங்களோ காரணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. எந்தவொரு பொருள் தன்மையான வடிவத்தின் உண்மையான அழகும் அதன் வடிவியலில்தான் உள்ளது. பொதுவாக மக்கள் உங்களையோ அல்லது பிற விஷயங்களையோ படம்பிடித்தபின் அதில் எந்த படம் நன்றாக, சரியாக, புன்னகையுடன் அழகாக, குறிப்பிட்ட கோணத்தில் பார்ப்பதுபோல வந்திருக்கிறது என்று மட்டும்தான் பார்ப்பார்கள். ஆனால் அவர்களையும் அறியாமல் சில அம்சங்கள் அவர்களின் விழிப்புணர்வு இல்லாமலே அந்த புகைப்படங்களில் இடம் பெற்றிருக்கும்.
Subscribe
யோகா எனும் வடிவியல்
ஒரு யோகி இயல்பாகவே வடிவியல் ரீதியாக விழிப்புணர்வுடன் இருக்கிறார். நாம் விழிப்புணர்வு என்று அழைப்பது நான் எப்படி நிற்கிறேன், அமர்கிறேன் என்பதைப் பற்றிய சுயநினைவு என்று அர்த்தமல்ல. உங்கள் உடல் அமைப்பில் நீங்கள் வேரூன்றி இருக்கும்போது இயற்கையாகவே ஒரு குறிப்பிட்ட வழியில் அது நிலைபெறும். இதை நீங்கள் புரிந்துகொள்ள விரும்பினால், வனவிலங்குகள் எப்படி அமர்ந்திருக்கின்றன என்பதை கவனித்து பாருங்கள். உதாரணத்திற்கு, ஒரு பாம்பு வெவ்வேறு நோக்கங்களுக்காக தன்னை எப்படி நிலைநிறுத்துகிறது என்பதை கவனித்திருக்கிறீர்களா? வடிவியல் ரீதியாக அதன் இயக்கம் மிகவும் சிக்கனமாக இருக்கும், குறைந்தபட்ச அசைவில் அதிகபட்ச தாக்கத்தை வெளிப்படுத்தும். தன்னை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவைகளுக்கு தெரியும். மனிதர்கள் மட்டுமே எல்லா வகையான வடிவியல் கோளாறுகளுக்கும் ஆட்படுகிறார்கள். பெரும்பாலான பிற உயிரினங்கள், குறிப்பாக மாமிச உண்ணி விலங்குகள் நிற்பது, பதுங்கி காரியங்களைச் செய்வது என அனைத்திலும் அவற்றின் வடிவியல் உணர்வு அபரிமிதமாக வெளிப்படும்.
ஒரு யோகியும் அப்படிப்பட்டவர்தான்: அவர் அமர்வது, நிற்பது, சுவாசிப்பது அனைத்துமே ஒரு குறிப்பிட்ட விதத்தில் இருக்கும், ஏனென்றால் வடிவியலிலிருந்து சற்று விலகினாலும் கூட நீங்கள் எதையோ இழக்க நேரிடும். வடிவியல் ரீதியாக தோராயமாக அல்லது கிட்டத்தட்ட சரியாக பொருந்தியிருந்தால், நீங்கள் குறைந்தபட்ச உராய்வுடன் செயல்பட முடியும். எந்த இயந்திரமாக இருந்தாலும் இது அப்படித்தான். ஒரு இயந்திரம் வடிவியல் ரீதியாக நன்கு உருவாக்கப்படும்போது நல்ல திறனுடன் செயல்படுகிறது. அதன் வடிவியல் சற்று தவறாகும்போது அங்கு உராய்வு ஏற்படத் துவங்குகிறது. இதேபோல் ஒரு மனிதருக்குள்ளும், நீங்கள் எப்படி அமர்ந்திருக்கிறீர்கள், நிற்கிறீர்கள், சுவாசிக்கிறீர்கள், நகர்கிறீர்கள் என்பது வாழ்க்கையின் எளிய செயல்களைச் செய்ய நீங்கள் எவ்வளவு ஆற்றலைச் செலவிடுகிறீர்கள் என்பதை தீர்மானிக்கிறது. வடிவியல் ரீதியாக பொருந்தாதவர்கள் தங்கள் ஆற்றலை மிக விரைவாக இழந்து விடுகிறார்கள். வடிவியல் ரீதியாக ஒத்திசைவுடன் இருப்பவர்களுக்கு, அவர்களின் ஆற்றல் நீண்ட காலம் நீடிக்கும்.
பதிவான மேன்மை
ஆரம்பத்தில், நம்மைப் பற்றி நாமே ஒரு புகைப்படப் புத்தகம் வெளியிடுவதை சங்கடமாகவே நினைத்தோம். ஆனால், இந்த புகைப்படங்களை மீண்டும் மீண்டும் பார்த்தோம். இது நமது வழக்கமில்லை, நான் எப்போதும் எனது புகைப்படங்களை பார்ப்பதில்லை, எனது சொந்தப் பேச்சுகளைக் கேட்க விரும்புவதும் இல்லை. ஆனால், இந்த குறிப்பிட்ட படங்களை நாம் மீண்டும் மீண்டும் பார்த்துக் கொண்டிருந்தோம். ஏனென்றால், இந்தப் புகைப்படங்களில் வடிவியலின் குறிப்பிட்ட அம்சங்களை அவர் பதிவு செய்திருந்தார். அந்தப் படங்களில், அசைவின் மொழி பேசுவதை நீங்கள் பார்க்கலாம்.
இவை அசைவற்ற புகைப்படங்கள்தான், இருந்தாலும் அவற்றுள் சிலதில் வீடியோவின் தன்மையில் புகைப்பட காட்சியமைப்பு அமைந்துள்ளது. போதுமான நேரம் நீங்கள் அதை தொடர்ந்து பார்த்தால், அதில் அசைவு இருப்பது தெரியும். ஏனென்றால், வடிவியல் ரீதியாக, நாம் ஒரு குறிப்பிட்ட விதமான நிலையில் இருந்த நேரத்தில் நீங்கள் புகைப்படமாக எடுத்துள்ளீர்கள். இது எப்போதுமே நமது விழிப்புணர்வில் இருந்து வந்திருக்கிறது. இந்த விழிப்புணர்வை, சுற்றியுள்ள அனைத்துடனும் ஒத்திசைவாக இருக்கும்படி நமது உடலியக்கத்தை தயார் செய்திட பல பிறவிகள் வேலை செய்ய வேண்டியிருக்கிறது. இல்லையெனில் நீங்கள் செயல்கள் செய்ய முடியாது.
அசைவற்றதில் ஒரு அசைவு
உடல் இருப்பின் தன்மை அதன் வடிவியலில் வேரூன்றியுள்ளது. இங்கே வடிவியல் என்பது ஒரு பொருளாக இல்லை - பொருள்தன்மையில் இருக்கும் வடிவங்களின் ஒழுங்குமுறையை பற்றியதாகும். இதில் சில புகைப்படங்களில் ஒரு குறிப்பிட்ட வடிவியல் அழகு இருக்கிறது. குறைந்தது பதினைந்து சதவிகித புகைப்படங்கள் பொருள் தன்மையில் உள்ளவற்றின் அசைவை பதிவு செய்துள்ளன. அவர் எடுத்த முதல் சில புகைபடங்களை பார்த்ததுமே நமக்கு உற்சாகமானது. ரகு இப்படி சொன்னார், “சத்குரு, நீங்கள் என்னை ஒரு புகைப்படக்காரரைப் போல நடத்த வேண்டாம் - நான் ஒரு புகைப்படக்காரர் அல்ல” என்றார். “அப்படியானால், நீங்கள் யார்?" என்றோம். பின்னர், அவரது சில புகைப்படங்களை நாம் பார்த்தோம், கண்டுகொண்டோம்.
நாம் இதுவரை செய்யாத ஒன்று, எந்த புகைப்படக்காரரையும் வீட்டிற்குள் நுழைந்து படங்களை எடுக்க ஒருபோதும் அனுமதித்ததில்லை. என் வீட்டிற்குள் நுழைந்து புகைப்படங்களை எடுத்த முதல் புகைப்படக்காரர் இவர்தான். இவரது புகைப்படங்களின் பின்னணியில் உள்ள கலையை நீங்கள் ரசிக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். உங்கள் சத்குருவை அங்கே பார்ப்பது மட்டுமல்லாமல், நீங்கள் இதை புரிந்துகொள்ளவும் வேண்டும் என்றும் விரும்புகிறோம், ஏனென்றால் இதை நீங்கள் உங்கள் வாழ்க்கையிலும் கொண்டுவர வேண்டும், உங்கள் வாழ்க்கையும் ஏதோவொரு வகையில் வடிவியல் ரீதியாக ஒத்திசைவாக இருக்க வேண்டும்; அப்போதுதான் உங்கள் வாழ்க்கையை மிக சுலபமாக வாழ்வீர்கள். இல்லையெனில், எப்படியாவது எங்காவது எல்லாமே உராய்வாகவே இருந்துகொண்டே இருக்கும்.
ஆசிரியர் குறிப்பு: 'Sadhguru' என்று பெயரிடப்பட்டுள்ள ரகு ராய் அவர்களின் புத்தகத்தை ஈஷா ஷாப்பியில் நீங்கள் பெறமுடியும்!