பாலியல் கல்வி அவசியமா? (Sex Education in Tamil)
பாலியல் அத்துமீறல்களில் இருந்து நம் குழந்தைகளைக் காப்பது எப்படி? இதற்காக பள்ளிகளில் பாலியல் கல்வியைக் கற்றுக் கொடுப்பது அவசியமா? சத்குரு பதிலளிக்கிறார்.
கேள்வியாளர்:
உங்களைப் பற்றி, சத்குரு உலகத்தில் எந்த விஷயத்தைப் பற்றியுமே பேசமுடியும் என்கிறார்கள்.
சமீபத்தில் நீங்கள் பாலியல் கல்வி பற்றி பேசினீர்கள்.
அது எப்படி?
சத்குரு:
நான் பேசவில்லை, யாரோ ஒரு படம் எடுத்தார்கள்.
கேள்வியாளர்:
ஆமாம், சரி, அது.. ஓ மை காட்-2 படம்.
அதைப்பற்றி எங்களுக்கு கொஞ்சம் உங்களால் சொல்லமுடியுமா சத்குரு? அது எந்த அளவிற்கு அவசியமானது, முக்கியமானது?
சத்குரு:
இந்த கலாச்சாரத்தில் குடும்பங்கள் என்றால்… என்னுடைய குடும்பம் அப்படி இல்லை. ஆனால் நான் சில குடும்பங்களை பார்த்திருக்கிறேன். நான் அங்கே போனபோது ஒரே குடும்பத்தில் 430 க்கும் மேலானவர்கள் ஒரு பெரிய வீட்டில், கர்நாடகத்தில் உள்ள கோகர்ணாவில் இருந்தார்கள்.
நான் அவர்களோடு மூன்று நாட்கள் இருந்தேன். வேலை எப்படி பிரிக்கப்படுகிறது? எல்லாம் எப்படி நடக்கிறது? ஒரே ஒரு ஆள் என்ன சொன்னாலும் எப்படி எல்லோரும் செய்கிறார்கள்? இதையெல்லாம் பார்ப்பது வியப்பான அனுபவமாக இருந்தது. இன்றைக்கு தனிக்குடும்ப உலகத்தில், அப்படி வாழ்வதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அவர்கள் எல்லோரும் அப்படி வாழ்ந்தார்கள்.
Subscribe
குழந்தைகளுக்கு 12 - 15 வயது ஆகும் வரைக்கும், அவர்களைப் பெற்ற அப்பா-அம்மா யார் என்றே அவர்களுக்கு தெரியாது, அவர்கள் எல்லாப்பக்கமும் ஓடி திரிவார்கள். அவர்கள் இப்படி வளர்ந்தபோது, பையன்களுக்கு பல ஆண்களும், பெண்களுக்கு பல பெண்களும் வழிகாட்டுவார்கள்.
கூட்டுக்குடும்பங்களில் பாலியல் கல்வி
அவர்கள் அதை பாலியல் கல்வி ஆக்காமல், அவர்கள் உடல் இயக்கம் பற்றி அவர்களுக்கு கற்றுக்கொடுப்பார்கள், சாதாரணமாக வாழ்க்கை செயல்முறையாகவே!
குடும்பத்தில் நிறைய பேர் இருப்பதால், பெண் பிள்ளைகளை பாதுகாக்க வேண்டியிருக்கும். இப்போது துரதிருஷ்டவசமாக, ஆண் பிள்ளைகளையும் பாதுகாக்க வேண்டியிருக்கிறது. ஆனால் அப்போது பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு தேவை. அதனால் அவர்களுக்கு கற்றுக்கொடுப்பார்கள்.
“அவர்கள் உடல் எப்படிப்பட்டது? அவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்ன செய்ய வேண்டும்? யாரையும் இப்படி செய்ய விடக்கூடாது,” இது எல்லாவற்றையும் இயல்பாக பாட்டிமார்களும் மற்றவர்களும் பேசுவார்கள்.
அம்மாவிற்கு தன் பெண்ணிடம் பேச கொஞ்சம் சங்கடமாக இருந்தால் அத்தைகளும் பாட்டிகளும், பெரிய அத்தைகளும் எல்லாவிதமானவர்களும் சாதாரணமாக அவர்களிடம் பேசுவார்கள். இது இயல்பாகவே நடந்து கொண்டிருந்தது.
எப்படியும் அவர்கள் 14 - 15 வயதில் அல்லது 16 வயதிற்குள் திருமணம் செய்துகொண்டார்கள். அதனால் அவர்கள் தெரிந்துகொள்ளத் தேவையான எல்லாவற்றையும் தெரிந்துகொண்டார்கள். அதனால் வாழ்க்கை அப்படி நடந்தது.
ஆனால் இன்றைக்கு நாம் எதுபோன்ற இடத்திற்கு வந்துவிட்டோம் என்றால், எல்லோரும் கல்வி கற்க தேவையாக இருக்கிறது. அதற்கு குறைந்தது 23 - 24 வயது ஆகிறது. அவர்கள் 12 - 13 வயதில் பூப்படைந்து இருப்பார்கள். ஆனால் 10 - 12 வருட இடைவெளியில் நிறைய பேர் அவர்களாகவே இதைத் தெரிந்துகொள்ளாமல் இருப்பார்கள்.
அதனால் யாரோ அவர்களுக்கு சொல்ல வேண்டும்.
யார் சொல்வார்கள்?
தனிக்குடும்பங்களில் உள்ள சங்கடம்
தனிக் குடும்பம்... அப்பாவும் அம்மாவும் மட்டும்தான் இருக்கிறார்கள், வேறு யாரும் இல்லை. ஆனால் அவரவர் வேலையில் பிஸியாக இருக்கிறார்கள். எல்லாவற்றிற்கும் மேல், இதை தெளிவாக அவர்களால் சொல்லமுடியாமல் இருக்கலாம். அவர்களுக்கு மிகவும் சங்கடமாக இருக்கும், பிள்ளைகளுக்கும் சங்கடமாக ஆகிவிடலாம். அவர்கள் இதையெல்லாம் பேசினால் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள முடியாமல் போகலாம். பாரதக் கலாச்சாரத்தில் இன்னும் அப்படித்தான் இருக்கிறது.
எல்லாவற்றிற்கும் மேல், திருமணங்கள் நடந்தது என்றால், அது பெரியவர்கள் நிச்சயம் செய்த திருமணமாக இருக்கும். பெற்றோர்கள், அவர்கள் யார் என்னவென்று பார்த்து நிச்சயம் செய்வார்கள். பையன்கள், பெண்கள் இருவரும் அவர்களை நம்பி அதை ஏற்றுக்கொண்டார்கள். பெண்ணைப் பார்க்கவே பார்க்காமல், என்னுடைய நிறைய மாமன்கள் பெண்ணைப் பார்க்காமலேயே திருமணம் செய்துகொண்டார்கள்.
ஏனென்றால் அவர்கள் நம்பினார்கள். அவர்கள், "இல்லை. அந்தப் பெண் அழகாக இருக்கிறாள்" என்றால் “சரி”.
“அவர்கள் நல்ல பெண்” என்றால் நல்ல பெண், அவ்வளவுதான்! ஏனென்றால், அவர்கள் எப்போதும் தங்களுடைய முடிவைவிட பெரியவர்கள் முடிவு நன்றாக இருக்கும் என்று நினைத்தார்கள். ஆனால் நாம் வாழும் காலம் அப்படி இல்லை.
பரிட்சயமில்லா உலகிற்குள்
இன்றைக்கு அவர்களுக்கு 12 - 13 வயது ஆவதற்குள் அவர்கள் ஆன்லைனில் இருக்கிறார்கள், அவர்களுக்கு சமூக ஊடக நண்பர்கள் இருக்கிறார்கள், எல்லாமே இருக்கிறது. பல நிலைகளில் தவறாக பயன்படுத்தப்படுகிறார்கள், ஏமாற்றப்படுகிறார்கள். இப்போதுதான் ஒரு சட்டம் கொண்டுவந்தார்கள். நீங்கள் ஏமாற்றினால் பத்து வருடம் சிறை தண்டனை. ஆக நாம் வாழும் காலம் இப்படி இருக்கிறது.
இன்னும் 50 வருடங்களில் நமக்கு இதெல்லாம் தேவைப்படாமல் போகலாம். ஆனால் இப்போது நம் சமூகத்திற்கு இது தேவை. ஏனென்றால் இதுதான் முதல் தலைமுறையாக தங்களுக்கு பரிட்சயமில்லாத ஒரு உலகத்திற்குள் விவரம் தெரியாமல் அடியெடுத்து வைக்கிறார்கள். ஒருங்கிணைக்கப்பட்ட குடும்ப கட்டமைப்பில் இருந்து திறந்த ஒரு கட்டமைப்பிற்குள் நுழைகிறார்கள். நிறையவே தவறாகப் பயன்படுத்தப்படுகிறார்கள்.
கற்றுக்கொடுப்பதன் அவசியம்
இதை கவனத்தில் வைத்து ஒருவருக்கு அவர்களது உடல் இயக்கத்தைப் பற்றி கற்றுக்கொடுப்பது, உங்கள் உடல் இயக்கத்துடைய தன்மை என்ன, நீங்கள் ஏன் இதுபோல உணர்கிறீர்கள், அதை எப்படி உங்களுக்கும் சுற்றி இருப்பவர்களுக்கும் கண்ணியமான முறையில் நடத்திக்கொள்வது? அதை அவர்களுக்கு சொல்ல வேண்டும். இல்லையென்றால், அவர்கள் காட்டுத்தனமாக நடந்துகொள்வார்கள். எல்லாவற்றிற்கும் மேல், அவர்கள் தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்வார்கள், குற்ற உணர்வு வரும், போராடுவார்கள், இது எல்லாமே நடக்கும். எந்த கல்வியும் நல்ல கல்விதான் என்று நான் நினைக்கிறேன். என்ன தேவையோ அதை கற்றுக்கொடுக்க வேண்டும், இல்லையென்றால் அது எப்படி நடக்கும்?
எந்தமாதிரி கல்வி முறை என்பது அவ்வப்போது மாறும். இப்போது அந்த பொறுப்பு பள்ளிக் கூடங்கள் மீது விழுந்திருக்கிறது. ஏனென்றால் குடும்ப கட்டமைப்பு முன்பு இருந்தது போல ஒருங்கிணைக்கப்படாமல் இருக்கிறது. குடும்பத்தில் வெறும் இரண்டு, மூன்று, இல்லை நான்கு பேர்தான் இருக்கிறார்கள். அதனால் அவர்கள் அதற்கேற்ற ஒரு உறவை உருவாக்கவில்லை என்றால், அங்கே இதுபோன்ற விஷயங்களை பேசுவது கஷ்டமாக இருக்கிறது.
கல்விமுறையிடம் உள்ள பொறுப்பு
பல பெற்றோர்கள் இதை பேசுவார்கள், ஆனால் எல்லோராலும் இது முடியாது. அதனால் இந்த பொறுப்பு கட்டாயம் கல்விமுறை மீதுதான் விழுகிறது. ஆனால் அதே சமயத்தில் இந்த விஷயங்கள் எல்லாம் குழந்தைக்கு யார் மீது ஒரு நம்பிக்கை இருக்கிறதோ அவர்கள்தான் சொல்ல வேண்டும்.
உங்களுக்கு யார் மீது அக்கறை இல்லையோ, அவர்கள் வந்து இந்த விஷயங்களை எல்லாம் சொன்னால், அது வேலை செய்யும் என்று எனக்கு தோன்றவில்லை. அதனால் பள்ளிக்கூடத்தில் அவர்களுக்கு நம்பிக்கைக்குரிய மக்களை உருவாக்க வேண்டும், அப்போதுதான் அவர்கள் இந்த விஷயங்களை பேசமுடியும்.
குழந்தைகளும் சரியான கேள்விகளை கேட்க, திறந்த மனதோடு இருப்பார்கள்.
ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை உருவாக்க இது மிகவும் தேவை என்று நான் நினைக்கிறேன். குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு அவர்களது பதின் பருவத்தில் பாதுகாப்பை உருவாக்கவும், பரவக்கூடிய பல்வேறு நோய்களிலிருந்தும், மற்ற விஷயங்களில் இருந்தும் அவர்களை பாதுகாப்பதற்கு இது அவசியமானது.
ஆன்லைனில் இருக்கும் அபாயம்
இல்லையென்றால், ஆன்லைனில் காட்டுத்தனமான தகவல்களைப் பார்க்கிறார்கள். எல்லாவற்றையும் ஆராய்ச்சி செய்து, யார் அவர்களுக்கு வழிகாட்டினாலும் அப்படியே போகிறார்கள். அதனால் பொறுப்பானவர்கள் இதை சொல்வது நல்லது. அவர் தவறு செய்தால் அவர் அதற்கு பொறுப்பேற்பது போலவாவது இருக்க வேண்டும். ஆன்லைனில் யாரையும் பொறுப்பேற்க வைக்க முடியாது. ஆனால் சமூகத்தில் இது தேவை. ஏனென்றால் நாம் ஒரு திருப்புமுனையில் இருக்கிறோம். வேலை செய்ய வீட்டை விட்டு வெளியே அடியெடுத்து வைக்கும் பெண்களுடைய முதல் தலைமுறை இது.
அவர்களுக்கு இந்த கல்வி அவசியம். அவர்கள் பெரியவர்களாக இருக்கலாம், ஆனாலும் நிறைய பேருக்கு உலகம் எப்படி வேலை செய்யும் என்று தெரியாது. அவர்களை மிக சுலபமாக தவறாக பயன்படுத்த முடியும், அது தினசரி அளவில் நடந்து கொண்டிருக்கிறது. கொஞ்சம் வயதில் பெரிய பெண் குழந்தைகளை விட சிறிய வயது பெண் குழந்தைகள் இதை நன்றாக தெரிந்து கொள்கிறார்கள். ஏனென்றால் இப்போது தகவல் சுலபமாக கிடைக்கக்கூடியதாக இருக்கிறது. பெண்கள் பாதுகாப்பிற்கு இது மிகவும் தேவை என்று நான் நினைக்கிறேன். இளம் ஆண்கள் பொறுப்போடு நடந்துகொள்ள வேண்டும்.
இது எல்லாமே, எல்லாவற்றையும் சரிசெய்துவிட முடியும் என்றில்லை. ஆனால் இதை அவர்கள் ‘ஒழிந்து விளையாடும் விளையாட்டு’ போல நடத்திக்கொண்டு, ஒதுக்குப்புறமான வீதியில் கற்றுக்கொள்வதற்குப் பதிலாக, அவர்கள் இதைப் பற்றி முறையாக கற்றுக்கொள்வது நிச்சயமாக மேலானது.