இந்த வார ஸ்பாட்டில், நம் வாழ்க்கையில் தேவையற்ற விஷயங்களில் துளியும் நம் சக்தியை வீணாக்காமல் எப்படி அற்புதமான வாழ்க்கையை வாழ்வது என்று சத்குரு வழிகாட்டியுள்ளார்.

நான் யோகா நிகழ்ச்சிகளுக்கும் பிற நிகழ்ச்சிகளுக்கும் எங்கு சென்றாலும், அங்கு பல விஷயங்களை நிகழச்செய்ய, மக்கள் தங்கள் எல்லைகளைக் கடந்து செயல்புரிவார்கள். அதைக் காணும்போது எனக்கு அவ்வளவு ஆனந்தமாக இருக்கும். தாங்கள் உருவாக்கும் எல்லைகளை உடைக்காத மனிதர்களோ, அதில் சிக்குண்டு கிடப்பார்கள். உங்கள் எல்லைகளை உடைப்பது உங்கள் ஆன்மீக வளர்ச்சியின் அத்தியாவசியமான அங்கமாய் இருக்கிறது. இந்த ஆன்மீக செயல்முறை, ஏதொவொரு மதநூலையோ, தத்துவத்தையோ, மரித்துப்போன பாரம்பரியத்தையோ சார்ந்ததல்ல, இது உயிரோட்டமானது. அப்படியே நீங்கள் தினமும் வாழவேண்டும். தினசரி செயல்களிலும் மற்றவர்களுடன் இருக்கும் பிரச்சனைகளிலும் சிக்கிக்கொண்டு, இந்த வாய்ப்பினை நீங்கள் தவறவிட்டுவிடக்கூடாது. வாழ்க்கையில் நீங்கள் முன்னேறிச் செல்லவேண்டும் என்றால், உங்கள் வளர்ச்சியை நீங்கள் கணக்குப் பார்த்துக்கொள்ள வேண்டும். தினமும் கணக்கெடுப்பது சிறந்தது, இல்லாவிட்டால் வாரத்தில் ஒருமுறை அல்லது மாதம் ஒருமுறையாவது கணக்கெடுக்க வேண்டும். உங்களுக்கு நீங்களே இந்த கேள்விகளைக் கேட்டுக்கொள்ளுங்கள், "நான் இன்னும் மேன்மையான மனிதராக மாறிவருகிறேனா? நான் இன்னும் ஆனந்தமான மனிதராக மாறுகிறேனா? நேற்று நான் இருந்த நிலையுடன் ஒப்பிடும்போது இன்று வளர்ந்துள்ளேனா?"

மக்கள் தாங்கள் வைத்திருக்கும் பணத்தை எப்போதுமே கணக்குப் பார்க்கிறார்கள். பணம் என்பது பரிவர்த்தனைக்கான கருவி மட்டுமே - நீங்கள் இறக்கும்போது அதை உடன் எடுத்துச்செல்ல இயலாது. உங்களிடம் தற்போது இருக்கும் மிக மதிப்பான விஷயம், நீங்கள் உயிருடன் இருப்பதுதான். அப்படி இருக்கும்போது, வாழ்க்கையில் நீங்கள் எங்கு சென்றுகொண்டு இருக்கிறீர்கள், உங்களை நீங்கள் மேம்படுத்திக் கொள்கிறீர்களா அல்லது பின்நோக்கிச் செல்கிறீர்களா என்பதை கணக்குப் பார்ப்பது முக்கியமல்லவா? நீங்கள் பின்நோக்கிச் செல்கிறீர்கள் என்றால், அது வேறு யாரோ உங்களுக்கு ஏதோவொன்றைச் செய்வதால் கிடையாது. வேறு யாரோ ஒருவர் உங்களுக்குள் எதுவும் செய்யமுடியாது. உங்கள் முதலாளியோ குடும்பத்தினரோ, உங்களுக்கு வெளியில் வாழ்க்கையை சற்று கடினமாக்கலாம். அப்படியானால் உங்களுக்கு அதிகம் பயிற்சி தருகிறார்கள், அவ்வளவுதான். அது உங்களை இன்னும் பலசாலியாக மாற்றவேண்டும். நான் உங்களுக்கு ஒரு கதை சொல்கிறேன், இந்த சாமர்த்தியமான கழுதை அளவிற்காவது நீங்கள் சாமர்த்தியமாக இருக்கவேண்டும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒருநாள் ஒரு கழுதை ஒரு கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டது. அந்த கிணறில் தண்ணீர் வற்றியிருந்தது. கிணறு ஆழம் அதிகமாக இல்லாதபோதும் அந்தக் கழுதையால் வெளியே வர முடியவில்லை. அது கிணற்றிலிருந்து பரிதாபமாகக் கனைத்தது. ஒருசில கிராமத்து மக்களும் கழுதையின் சொந்தக்காரனும் வந்து நடந்ததைப் பார்த்தார்கள். உயிருக்கு பயந்த கழுதையோ, வெளியே வருவதற்காக தொடர்ந்து உரக்கக் கனைத்தது. மக்கள் சொன்னார்கள், "இந்த முட்டாள் கழுதை இப்படித்தான் கனைத்துக்கொண்டே இருக்கும். ஏற்கனவே வயதாகி, எதற்கும் உதவாத நிலையில் இருக்கிறது - வேலைக்கும் பயன்படுத்த முடியாது, விற்கவும் முடியாது. எப்படியும் இந்த கிணற்றை மூடிவிட நினைத்திருந்தோம். இப்போது மூடிவிடலாம்." என்றார்கள். இப்படி உயிருடன் கழுதையைப் புதைத்து, கிணறை மூடிவிட முடிவுசெய்தார்கள். கிணற்றுக்குள் மண்ணைப் போட ஆரம்பித்தார்கள். ஒவ்வொரு முறை ஒரு கூடை மண் அதன் முதுகுமீது விழுந்தபோதும், அந்தக்கழுதை உடலை அசைத்து மண்ணைக் கீழே தள்ளி அதன் மேலே ஏறி நின்றது. மண் சேரச்சேர அது மேலே வர ஆரம்பித்தது. கிணற்றின் ஒரு பாதி நிரம்பியதும் அது வெளியே நடந்துவந்தது. கிராம மக்கள், "அடடே! இது மிகவும் சாமர்த்தியமான கழுதை!" என்றார்கள். அதன் சாமர்த்தியத்தைப் பாராட்ட கழுதையின் சொந்தக்காரன் அதன் அருகில் சென்று கட்டியணைக்க முற்பட்டான். கழுதையோ அவன் முகத்திலேயே உதைத்துவிட்டு சுதந்திரமாக ஓடியது.

உங்கள்மீது யார் எதை வீசினாலும் சரி, அதிலிருந்து மிகச் சிறந்த ஒன்றை நீங்கள் உருவாக்க வேண்டும், இது ஒரு ஆன்மீக செயல்முறை. உங்கள் அளவுக்கு மூளை இல்லாத ஒரு மாமரம், மண்ணை மாம்பழங்களாகவும் இனிப்பாகவும் மாற்றுகிறது. செடிகள், சகதியை மலர்களாகவும் நறுமணமாகவும் மாற்றுகின்றன. உங்கள் வழியில் என்ன வந்தாலும் அதனை அழகாக்கிட உங்களுக்குத் தெரியவேண்டும். உங்களால் அப்படி செய்யமுடிந்தால், அதுதான் நீங்கள் யாரென்று காட்டும். பூமியில் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால், சின்னச்சின்ன விஷயங்கள் தவறாகிப்போனால், அவர்களுக்குக் கீழே இருப்பவரை (வேறொருவரை) குறை சொல்வார்கள். அவர்கள் வாழ்வில் பெரிய விஷயங்கள் தவறாகிப் போனால், மேலே இருப்பவரை (கடவுளை) குறை சொல்வார்கள். அவர்கள் எதற்கும் பொறுப்பேற்காமல் இருக்கிறார்கள். மற்றவர்களைக் குறைகூறி சரிசெய்வதற்கு முயற்சி செய்வதை நிறுத்துங்கள். அதற்கு பதிலாக, நீங்கள் உங்கள் முழு ஆற்றலுக்கு வளருங்கள்.

உங்களுக்குள் மட்டுமே நடக்கக்கூடிய ஒன்றை வெளி உலகில் தேடுவது மிகவும் முட்டாள்தனமானது. அமைதி மற்றும் ஆனந்தம் தேடி மக்கள் மேலே பார்க்கிறார்கள். நல்வாழ்விற்கு மக்கள் உலகம் முழுவதும் தேடுகிறார்கள். நீங்கள் உள்முகமாகத் திரும்பினால்தான் அது நடக்கமுடியும். உங்கள் உடனடி நல்வாழ்விற்கும் சரி, உச்சபட்ச நல்வாழ்விற்கும் சரி, உங்கள் ஆன்மீக சாதனா ஒரு அறிவியல்பூர்வமான அணுகுமுறையைத் தருகிறது. உங்கள் சாதனா வெற்றிகரமாக இருக்கவேண்டும் என்றால், உங்கள் மனதைத் தேவையற்ற குப்பைகளிலிருந்து விடுவிக்க வேண்டும். ஷாம்பவி மஹாமுத்ரா மூலம் நீங்கள் சரியான விதையைப் பெற்றுள்ளீர்கள். மண்ணைத் தயார்செய்வது உங்கள் கைகளில் உள்ளது. மிக அற்புதமான விதையானாலும், பாறைமீது போட்டால் அது முளைக்காது. மற்றவர்களின் குப்பைகளைத் தொடர்ந்து சேகரித்துவந்தால் அது எதையும் முளைக்கவிடாது. இன்றைய காலத்தில், பெரும்பாலானவர்கள் அவர்களுக்கு வழங்கப்படுவதன் அபாரமான சாத்தியத்தை உணரக்கூட வழியில்லாத அளவு தலையில் குப்பை நிரம்பிவிட்டது. இந்த சாத்தியத்தை உணராமல் உங்கள் வாழ்க்கையை நீங்கள் வீணாக்கக்கூடாது என்பதே என் விருப்பம்.

மனம் சிதறுவதைக் குறைக்க ஒரு வழி, புரளி பேசுவதைக் கைவிடுவது. கன்னடத்தில் ஒரு பழமொழி உள்ளது, யாரோ ஒருவர் மோசமான கர்மவினை செய்தால், அதைப்பற்றி பேசிக்கொண்டே இருப்பவர்களை அது வந்தடைந்துவிடும். அதைச் செய்தவர் அதை மறந்திருக்கலாம், ஆனால் அதைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பவர்களுக்கு அந்த கர்மவினை சேர்ந்துவிடும், ஏனென்றால் அவர்கள் மனம் முழுவதும் அதுதான் நிரம்பியுள்ளது. பலபேருடன் சேர்ந்து வசித்து சேர்ந்து பணிபுரியும் போது, இதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும். சாக்ரடீஸ் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம், அவர் வாழ்ந்த காலத்திலேயே அவர் புத்திசாதுர்யம் மிக்கவராக கருதப்பட்டவர். ஒருநாள் யாரோ ஒருவர் அவரிடம் சென்று, "நான் டயோஜெனெஸ் பற்றி உங்களிடம் ஒன்று சொல்லவேண்டும்." என்றார். சாக்ரடீஸ் சொன்னார், "என்னிடம் ஒரு சிறு கொள்கை இருக்கிறது. நீங்கள் என்ன சொல்ல விரும்பினாலும் அது மூன்று சல்லடைகளைக் கடந்து வரவேண்டும்." "அதென்ன மூன்று சல்லடைகள்?" என்று கேட்டார். "முதலில் நீங்கள் சொல்வது உண்மைதானா என்று உறுதிபடுத்திவிட்டீர்களா?" என்று சாக்ரடீஸ் கேட்டார். அதற்கு அவர், "இல்லை, என்னிடம் இப்போதுதான் ஒருவர் சொன்னார்." என்றார். சாக்ரடீஸ், "அப்போது முதல் சல்லடையை இது தாண்டவில்லை. இரண்டாவது சல்லடை, இது ஏதாவது நல்ல விஷயமா?" என்று கேட்டார். "இல்லை, அதற்கு நேர்மாறானது, அதனால் தான் இதை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்." என்றார். "அப்படியானால் இது இரண்டாவது சல்லடையையும் தாண்டவில்லை. இது பயனுள்ள செய்தியா?" என்று சாக்ரடீஸ் கேட்டார். அதற்கு அவர், "இல்லை, இது பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றவில்லை. இதை உங்களிடம் சொல்ல விரும்புகிறேன், அவ்வளவுதான்." என்றார். சாக்ரடீஸ் "அப்படியானால் இது எந்த சல்லடையையும் தாண்டவில்லை." என்றார்.

உங்கள் மனதிற்கு நீங்கள் இந்த மூன்று சல்லடைகளைப் பொருத்துங்கள்: யாரோ ஒருவர் உங்களிடம் ஏதோ சொல்ல விரும்பினால், அது முற்றிலும் உண்மை என்று அவர்கள் உறுதிப்படுத்திவிட்டார்களா? அது யாரையாவது பற்றிய நற்செய்தியா? அது பயனுள்ளதா? மற்றவர்கள் உங்களிடம் சொல்ல விரும்புவதிலிருந்தும், நீங்கள் மற்றவர்களிடம் சொல்ல விரும்புவதிலிருந்தும் இந்த மூன்று நிபந்தனைகளுக்குப் பொருந்தாத விஷயங்களை சலித்து எடுத்துவிடுங்கள். அப்போது பயனுள்ள, அற்புதமான, ஆன்ம நலம் பயக்கும் விஷயங்களைச் செய்திட உங்கள் மனதில் நிறைய இடமிருக்கும். அது உங்களுடைய குப்பையாக இருந்தாலும் சரி, வேறொருவருடையதாக இருந்தாலும் சரி, சலிக்கப்படாத தகவல்களால் உங்களை நிரப்பிவிட்டால் எப்போதும் அதில் சிக்கியிருப்பீர்கள். பிறர் பிரச்சனைகளைப் பற்றி புரளி பேசுவதில் சந்தோஷம் தேடுபவராக நீங்கள் ஒருபோதும் இருக்கக்கூடாது. உங்கள் முகத்திற்கு முன்னால் இல்லாத எவரைப் பற்றியும் பேசாமல் இருப்பதை உங்களுக்கு நீங்களே ஒரு விதிமுறையாக்கிக் கொள்ளுங்கள்.

யாரோ ஒருவர் சொன்னது அல்லது செய்ததை எண்ணி எண்ணியே உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள். கண்களை மூடினால் உங்கள் அனுபவத்தில் வெளி உலகம் மறைந்துவிடுகிற நிலையில் உங்களில் பெரும்பாலானோர் இப்போது கிடையாது. இப்படிப்பட்ட நிலையில் இருக்கும்போது, உங்கள் நல்வாழ்விற்குக் உதவாத எதையும் செய்வதற்கு உங்களிடம் சக்தி மிஞ்சாத விதத்தில் உங்களை வேலையில் ஈடுபடுத்திக் கொள்வதே சிறந்தது. சலிப்பு, சோம்பேறித்தனம் அல்லது வேதனையால் இறப்பதைவிட, வேலை பார்ந்த அலுப்பில் இறப்பது எவ்வளவோ மேல். உங்களுக்கு வயதாகும்போது உங்கள் செயல்களைக் குறைக்க வேண்டிய அவசியமில்லை. மிகுந்த தீவிரத்துடனும் ஈடுபாட்டுடனும் நீங்கள் ஏதொவொன்றை தொடர்ந்து செய்துவந்தால் உங்கள் திறமை அதிகமாகுமே தவிர, குறைந்துபோகாது.

ஒருநாள் மாடு மேய்க்கும் சிறுவன் ஒருவன் மேய்ச்சலுக்கு மாடுகளை காட்டிற்குள் கொண்டுசென்றான். அங்கேயே ஒரு பசுமாடு கன்று ஒன்றை ஈன்றது. அந்த சிறுவன் முதல் முறையாக ஒரு கன்று பிறப்பதைக் கண்ணால் கண்டான். திடீரென ஒரு புதிய உயிர் வந்தது அவனுக்கு அதிசயமாகத் தெரிந்தது. அந்தக் கன்றின்மீது பொங்கி வந்த அன்பினால், அதை அள்ளியெடுத்து கட்டிப்பிடித்துக்கொண்டான். அதனால் நடக்க முடியாத காரணத்தால், வீட்டிற்குத் திரும்பும்போது கன்றை தோள்களில் சுமந்துசென்றான். அடுத்தநாள் அவன் மாடுகளுடன் காட்டிற்குள் சென்றபோது, மீண்டும் அந்தக் கன்றை தோள்களில் சுமந்துசென்றான். இப்படியே தினமும் செய்துவந்தான். காலப்போக்கில் அந்த கன்று பெரிய காளையாக வளர்ந்தது. அதன் எடை அதிகமாக அதிகமாக, அந்த இளைஞனின் பலமும் அதிகமாகியது. முழுவளர்ச்சியை அடைந்த காளைமாட்டைத் தோளில் சுமந்து நடந்துசென்ற அவனை ஊர்மக்கள் அதிசயப்பிறவி என்று நினைத்தார்கள். அப்படிப்பட்ட அதிசயமான மனிதர்களை நான் எல்லா இடங்களிலும் பார்க்க விரும்புகிறேன். இவ்வளவுதான் செய்யமுடியும் என்று உங்கள் திறன்மீது நீங்கள் எல்லைக்கோடு போடக்கூடாது. வாழ்க்கை என்ன எல்லை போடுகிறது என்று பார்ப்போம். தங்கள் மீது தாங்களே எல்லை போடும் மனிதர்களால் பெரிதாக எதையும் உருவாக்க முடியாது.

உங்கள் வாழ்க்கையை நீங்கள் எல்லாவிதங்களிலும் முழுவதுமாக பயன்படுத்துவது முக்கியமானது. இவ்வளவு குறுகிய வாழ்க்கையில், அர்த்தமற்ற விஷயங்களில் ஏன் நேரத்தை வீணாக்க வேண்டும்? நீங்கள் என்ன செய்தாலும் சரி, உங்கள் உள்நிலை நலனுக்காக செய்யவேண்டும், அல்லது உங்களைச் சுற்றியுள்ள மக்களுக்கு உபயோகமாக இருப்பதைச் செய்யவேண்டும். நாள் முழுக்க வேலை செய்து ஒய்ந்து, தலை தலையணையைத் தொட்டதும் தூங்கிவிடுகிற நிலையில் நீங்கள் இருந்தால், நீங்கள் செய்யும் ஆன்மீக சாதனை அனைத்தும் பன்மடங்கு அதிக பலனளிக்கும். எதைச் செய்வது எதைத் தவிர்ப்பது என்று உட்கார்ந்து சிந்திக்காதீர்கள். விருப்பமின்றி இருக்கும் நிலையிலிருந்து விருப்பமான நிலைக்கு மாறினால், மந்தமான நிலையிலிருந்து உற்சாகமான நிலைக்கு மாறினால், உங்கள் வாழ்க்கை ஆனந்தமயமாகும், உங்கள் பயணம் முயற்சியின்றி நடக்கும். இறக்கும் தருணம் வரும்போது நீங்கள் திரும்பிப் பார்த்தால், நீங்கள் அற்புதமான வாழ்க்கை வாழ்ந்திருப்பதை உணர்வீர்கள். இது உங்களுக்கு நிகழ்வது எனக்கு மிகவும் முக்கியம். அற்புதமான மனிதராகி உலகிற்கு ஒளி சேர்த்திடுங்கள், நானும் உங்களுடன் ஒளிர்கிறேன்.

Love & Grace