கடந்த சில நாட்களாக, ஈஷா அறக்கட்டளைக்கு எதிராக தவறான தகவல்களையும் பொய்யான குற்றச்சாட்டுகளையும் பரப்பும் பல கிளிக்பெயிட் பதிவுகள் வெளியிடப்பட்டுள்ளது துரதிருஷ்டவசமானது.

மஞ்சள் பத்திரிகைப் பதிவுகள், போலியான டுவீட்கள் மற்றும் வஞ்சகமான அறிக்கைகள் மூலம், ஈஷா யோக மையத்தின் வளாகத்தில் பயங்கரமான தவறுகள் நடந்ததாக ஒரு கதையை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

உண்மையைத் தேடுபவர்களுக்கு துல்லியமான தகவல்களை வழங்க இந்த ஒவ்வொரு போலி செய்தியையும் நாங்கள் விவரிக்க விரும்புகிறோம்.

ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான குற்றச்சாட்டுகளை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது, குற்றச்சாட்டுகளுக்கு பின்னால் உள்ள நோக்கம் குறித்து கேள்வி எழுப்பியது.

குற்றச்சாட்டுகளுக்குச் செல்வதற்கு முன், முதலும் முதன்மையுமாக, உச்ச நீதிமன்றம் ஈஷா அறக்கட்டளைக்கு எதிரான குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்துள்ளதோடு, விசாரணையின் போது ஒரு கட்டத்தில் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னால் உள்ள நோக்கங்கள் சந்தேகத்திற்குரியதாக தெரிவதாகக் கூட குறிப்பிட்டது என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். இத்தகைய கேள்விக்குரிய சந்தேகத்தின் அடிப்படையில் ஈஷா யோக மையத்தில் காவல்துறை விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதற்கு உச்ச நீதிமன்றம் கடும் ஆட்சேபணை தெரிவித்தது, "சட்டத்தின் செயல்முறையை மக்களுக்கும் நிறுவனங்களுக்கும் அவதூறு ஏற்படுத்தும் விதமாக பயன்படுத்த முடியாது" என்று குறிப்பிட்டது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இரண்டு துறவிகளின் தந்தையும் தாயும் ஏற்கனவே 2016ல் இதேபோன்ற ஒரு வழக்கைத் தாக்கல் செய்திருந்தனர். இரண்டு துறவிகளும் ஈஷா யோக மையத்தில் "மூளைச்சலவை செய்யப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டுள்ளனர்" என்று கூறியிருந்தனர். உரிய விசாரணைக்குப் பிறகு இந்தக் குற்றச்சாட்டுகளை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தபோது, "குற்றச்சாட்டில் உண்மை இல்லை, மேலும் அவர்கள் தங்கள் சுய விருப்பத்தின் பேரில் ஈஷா யோக மையத்தில் தங்கியுள்ளனர்" என்று கூறியது.

கற்பனையில் புனையப்பட்ட போலி செய்திகளுக்கு செல்வோம்...

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

போலி தலைப்புச் செய்தி #1: மக்கள் மர்மமான முறையில் ஈஷா யோக மையத்தில் இருந்து காணாமல் போகிறார்கள்

இந்தக் கூற்றுகளுக்கு மாறாக, மக்கள் ஈஷா யோக மையத்தில் இருந்து தொடர்ந்து காணாமல் போவதில்லை. தமிழ்நாடு காவல்துறையே வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ஈஷா அறக்கட்டளை இயங்கி வரும் கடந்த 30 ஆண்டுகளில், ஈஷா யோக மையத்திற்கு வருகை தந்துள்ள 7.5 கோடிக்கும் மேற்பட்ட மக்களில், 6 பேர் காணாமல் போனதாக பதியப்பட்டுள்ளது. இந்த சம்பவங்கள் முக்கியமாக இங்கு வருகை தந்து விட்டு வீடு திரும்பும் வழியில் வழி தவறிச் செல்வதாலோ, அல்லது நண்பர்கள் அல்லது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கும்போது ஏற்படும் தவறான புரிதலாலோ, அல்லது தொலைபேசி அழைப்புகளை சரியாக பெறமுடியாமல் போகும் தொழில்நுட்ப கோளாறுகளாலோ ஏற்பட்டிருந்தன.

மேற்கூறிய நபர்கள் பாதுகாப்பாகவும் நலமாகவும் கண்டுபிடிக்கப்பட்டதால் ஆறு அறிக்கைகளில் ஐந்து, போலீசாரால் மூடப்பட்டன . ஒன்று மட்டும் திறந்த நிலையில் உள்ளது, அதுவும் உண்மையில் ஈஷா அறக்கட்டளையால் பதிவு செய்யப்பட்ட வழக்கு. ஈஷா யோக மையத்திற்கு வெளியே சென்ற அந்த நபரை, சில மணி நேரத்திற்குப் பிறகு தொடர்புகொள்ள முடியவில்லை. உடனே ஈஷா அறக்கட்டளை காவல்துறையை அணுகி குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்தது. ஈஷா அறக்கட்டளை தொடர்ந்து காவல்துறையுடன் தொடர்பில் இருக்கிறது, அவர்களோடு இணைந்து பணியாற்றி வருகிறது, மேலும் அந்த நபர் பாதுகாப்பாக திரும்பி வருவார் என்று நம்புகிறது.

போலி தலைப்புச் செய்தி #2: யோக மையத்தில் மயானங்கள் இயக்கப்படுகின்றன - அங்கு யாரை எரிக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா!

ஈஷா யோக மையத்தின் வளாகத்தில் எந்த மயானமும் செயல்படவில்லை. 2010ம் ஆண்டு முதல் தமிழக அரசால் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டு, தமிழகத்தின் பல்வேறு ஊர்கள் மற்றும் நகரங்களில் 14 அரசு மயானங்களை ஈஷா இயக்கி வருகிறது. இந்த மயானங்களில் நடைபெறும் அனைத்து தகனங்களும் சட்ட அமலாக்கம் மற்றும் அரசு அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்டுள்ள சட்டம் மற்றும் வழிமுறைகளைக் கடைபிடிக்கின்றன.

மீண்டும் வலியுறுத்துகிறோம், இந்த மயானங்கள் எதுவும் ஈஷா யோக மையத்தில் அமைந்திருக்கவில்லை. மேலும், ஈஷா யோக மையத்தில் உள்ள அனைத்து கட்டுமானங்களும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டவை, சட்டப்பூர்வமாக கட்டப்பட்டவை.

மேலும், 2020ல் கோவிட்-19 பெருந்தொற்று பரவிய காலத்தில், உரிய வசதிகளுடன் கூடிய மயானங்கள், சவப்பெட்டி சேவைகள் மற்றும் பிற வசதிகளுக்குக் கடும் பற்றாக்குறை ஏற்பட்டதால், நாடு முழுவதும் குடும்பங்கள் தங்கள் அன்புக்குரியவர்களுக்கு கண்ணியமான முறையில் விடைகொடுப்பதற்குத் தடங்கல் ஏற்பட்டது. மேலும் அரசு நிறுவனங்களுக்கும் இக்கட்டான ஒரு சவாலாக இது இருந்தது. இந்த சோதனையான நேரத்தில், ஈஷா "மரணத்தில் கண்ணியம்" எனும் முயற்சியைத் தொடங்கியது, அதன் மூலம் தகன சேவைகள் இலவசமாக வழங்கப்பட்டன.

அர்ப்பணிப்பு மிக்க தன்னார்வலர்கள் மற்றும் துறவிகளின் குழு மயானங்களை அவற்றின் முழுத்திறனுக்கு இயக்க முன்வந்தனர். அதன் பிறகு ஈஷாவின் தன்னார்வலர்களையும் சமூகத்தின் நல்வாழ்வுக்கு அவர்கள் காட்டும் அக்கறையையும் கண்டு மக்களின் மரியாதையும் பாராட்டும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.

போலி தலைப்புச் செய்தி #3: பெண்கள் துன்புறுத்தப்பட்டு எல்லாவிதமான விஷயங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறார்கள்!

உண்மை என்னவென்றால், கடந்த சில நூற்றாண்டுகளாக வெளி சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பாகுபாடு குறித்து நன்கு அறிந்திருப்பதால், அனைத்து பெண் தன்னார்வலர்கள், ஊழியர்கள், பார்வையாளர்கள் மற்றும் துறவிகளுக்கும் பாதுகாப்பான, வசதியான மற்றும் ஆரோக்கியமான சூழலை உறுதிசெய்வதற்கு ஈஷா அறக்கட்டளை மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.

சொல்லப்போனால், ஈஷா அறக்கட்டளை தனது கிராமப்புற கல்வி முயற்சியான ஈஷா வித்யா மூலம், கிராமப்புறங்களில் பெண்களின் கல்வி மற்றும் எழுத்தறிவுக்காக தீவிரமாக பணியாற்றி வருகிறது. ஈஷா வித்யாவின் ஆங்கில வழிக் கல்வி வழங்கும் பள்ளிகளில் படிக்கும் சுமார் 10,000 கிராமப்புற குழந்தைகளில், 48% பெண்களாக இருப்பதோடு, 5500 குழந்தைகள் முழு உதவித்தொகையில் படிக்கின்றனர்.

கூடுதலாக, அரசின் சமூக நலத் துறையின் வழிகாட்டுதலின்படி, ஈஷா யோக மையத்தில் உள் புகார்கள் விசாரணைக் குழு உள்ளது. மேலும் ஈஷா யோக மையம் பாலியல் துன்புறுத்தலைத் தடுக்கும் சட்டமான POSH சட்டத்திற்கு இணக்கமாக உள்ளது. மேலும் ஈஷா அறக்கட்டளையின் அங்கமாக உள்ள அனைவருக்கும் இதுகுறித்த விழிப்புணர்வையும் கல்வியையும் வழங்கும் நிகழ்ச்சிகளும் ஈஷாவில் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

"ஈஷா மையத்தில்" ஒரு பெண் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இது உண்மையல்ல. காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விவரங்களின்படி, இலவச மருத்துவ முகாமின் ஒரு பகுதியாக மருத்துவ பரிசோதனை நடத்த பணியமர்த்தப்பட்ட ஒரு மருத்துவர் இத்தகைய குற்றச்சாட்டிற்கு ஆளானார். அந்த மருத்துவ முகாம் ஈஷா யோக மையத்தில் நடத்தப்படவில்லை. அந்த வழக்கு தற்போது விசாரணையில் உள்ளது, மேலும் அதிகாரிகளுக்கு ஈஷா முழு ஒத்துழைப்பையும் வழங்கி வருகிறது.

போலி தலைப்புச் செய்தி #4: சிரிப்பு வாயு மற்றும் கோமா உண்டாக்கி சிறுநீரகங்களை அறுவடை செய்தல்!

ஈஷா யோக மையத்தில் உள்ள மக்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க சிரிப்பு வாயு பயன்படுத்தப்படுவதாகவும், மக்களின் சிறுநீரகங்களை அறுவடை செய்ய கோமாவில் வைக்கப்படுவதாகவும் கூறப்படும் சிரிப்பூட்டும் குற்றச்சாட்டுகள் இவை. இது குறித்த உண்மையை தெளிவுபடுத்திக் கொள்கிறோம், ஈஷா யோக மையத்தில் உள்ள மக்கள் அவர்களாகவே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், சிரிப்பு வாயு அல்லது அதுபோன்ற வேறெந்த அபத்தமான உதவியும் அவர்களுக்குத் தேவையில்லை. மேலும், அவர்களின் சிறுநீரகங்கள் (அவரவர் உடலிலேயே) இருக்கின்றன, மேலும் நன்றாக இயங்கவும் செய்கின்றன.

கடந்த கால குற்றச்சாட்டுகள்

கடந்த காலத்தில், ஈஷாவின் சமூக மற்றும் ஆன்மீகப் பணிகளின் காரணமாக, பல உள்நோக்கம் கொண்ட கூட்டங்கள் தாங்கள் முறைகேடாக சேர்த்துள்ள நிதி மற்றும் பிற ஆதாயங்களை இழக்கும் நிலையில் இருப்பதால், அவர்கள் ஈஷா அறக்கட்டளைக்கு அவப்பெயர் உண்டாக்க முயன்று வருகிறார்கள். இவர்கள் பரப்பும் அவதூறுகளுக்கு மீண்டும் மீண்டும் விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன, அவர்கள் தொடுக்கும் வழக்குகள் நீதிமன்றங்களால் மீண்டும் மீண்டும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன, சில சமயங்களில் மனுதாரர்களின் நோக்கங்கள் குறித்து நீதிமன்றங்கள் கடுமையான கேள்விகள் எழுப்பியுள்ளன. பல அரசு துறைகள் மற்றும் அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட நிபுணர் குழுக்களும் இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளன, மேலும் ஈஷா அறக்கட்டளையின் நடவடிக்கைகள் நேர்மையானவை மற்றும் முற்றிலும் சட்டப்பூர்வமானவை என்று சந்தேகத்திற்கு இடமின்றி உறுதிப்படுத்தியுள்ளன.