இந்திய மண்வளம் காத்து இந்திய விவசாயிகளைக் காப்போம்
ஒருசில செயல்முறைகளைக் கடைபிடித்து சில விவசாயிகள் தங்கள் வாழ்வையே எப்படி மாறியமைத்துக் கொண்டார்கள் என்று பார்ப்போம். ஆரோக்கியமான விளைச்சலை உருவாக்கி, அதிகளவில் பணமும் சம்பாதித்து, அதேநேரத்தில் மண்வளத்தையும் அவர்கள் காக்கிறார்கள். இது எப்படி சாத்தியமாயிற்று? விபரங்கள் கீழே...
ஆரோக்கியம் குறைந்து குழந்தை நோய்வாய்ப்பட்டால், அக்குழந்தையின் பெற்றோருக்கு அது சொல்லமுடியாத வேதனையை ஏற்படுத்தும். விவசாயி பொன்முத்துவும் அதேநிலையில்தான் இருந்தார். அவரது குழந்தைகளுக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரும் அவரது மனைவியும் கவலையில் ஆழ்ந்தனர். அவரது குழந்தைகள் அனுபவித்த வலியும், பட்ட கஷ்டமும் ஒருபுறம் என்றால், அவர்களின் மருத்துவ செலவை ஈடுகட்ட முடியாமல் இவர் திண்டாடியது மறுபுறம். ஒரு சிறு காய்கறி விவசாயியாக இருந்த இவருக்கு, தினசரி செலவுகளுக்கு பணம் சம்பாதிப்பதே பெரும் விஷயமாக இருந்தது. இதில் இவரது குழந்தைகள் நோய்வாய்ப்பட்டால், அந்த செலவுக்கு பணம் ஈட்ட இவரும் இவரது மனைவியும் மிகவும் திண்டாடுவர்.
இவரது குழந்தைகள் அடிக்கடி நோய்வயப்பட்டதற்கான காரணம் வெகு அருகில்தான் இருந்தது. அது பொன்முத்துவின் கைகள்தான். "என் வயலில் பூச்சிகொல்லி மருந்தை நானே தெளிப்பேன். வீட்டிற்கு வந்ததும் என் கைகளை நன்கு கழுவிவிட்டுதான் என் குழந்தைகளுடன் விளையாடுவேன். என்றாலும் என் குழந்தைகளுடன் விளையாடும் போதும், அவர்களுக்கு உணவு ஊட்டும்போதும் என்னுள் ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருந்தது" என்கிறார் பொன்முத்து. பொன்முத்து சந்தேகித்ததுபோல் அவருடைய கைகள்தான் இப்பிரச்சினைக்குக் காரணம், ஆனால் அவருக்கு வேறு வழியும் இருக்கவில்லை. "இதற்கு என்னதான் தீர்வு என்று தேடிக் கொண்டிருந்தேன். ஆனால் ஒருவழியும் தென்படவில்லை"
கொல்லும் பூச்சிக்கொல்லி
இந்தியாவில் பெரும்பாலும் இரசாயனம் சார்ந்த விவசாயம்தான் கடைபிடிக்கப்படுகிறது. செயற்கை உரம் மிக அதிகளவில் மண்ணில் கலக்கப்படுகிறது. பூச்சிக்கொல்லி மருந்துகளும்கூட அவற்றின் தரம், பக்கவிளைவுகள் பற்றிய கவனமின்றி பயன்படுத்தப்படுகின்றன. விவசாயிகள் பெரும்பாலும் ஏழைகளாக இருப்பதால், செலவு குறைக்கும் முனைப்பில் அவர்களே செடிகளுக்கு பூச்சிக்கொல்லி தெளிக்கின்றனர். அதற்கான பாதுகாப்பு ஆடைகளோ, கையுறைகளோ அவர்கள் கவனத்தில் வர வாய்ப்பே இல்லாமல் இருக்கிறது.
இந்தளவிற்கு வயலை "பதப்படுத்தினால்" விவசாயத்தில் அமோக இலாபம் பெறலாம் என்று நாம் நினைக்கலாம். ஆனால், உண்மை நிலவரமோ இதற்கு நேர்மாறாக இருக்கிறது. செயற்கை உரங்களின் விலையும், பூச்சிக்கொல்லிகளின் விலையும் மிக அதிகமாக உள்ளது. முதல் சில வருடங்களில் மகசூல் அதிகமாக இருந்தாலும், நாள் ஆக ஆக மண்ணின் வளம் குன்றிவிடும். மண்ணின் வளம் குறையும்போது மகசூலும் பெருமளவில் குறைந்துவிடும். இந்நிலையில் எப்படியாவது மகசூலை அதிகரிக்க வேண்டும் என்ற நெருக்கடியில் செயல்படும் விவசாயி இன்னும் அதிகமாக செயற்கை உரத்தை பயன்படுத்துகிறார். இது செலவை இன்னும் அதிகரிக்கிறது.
அதுமட்டுமல்ல, மெதுவாக பூச்சிகளின் தடுப்பாற்றல் சக்தியும் அதிகரித்து, நாளடைவில் அவை அப்பூச்சிக்கொல்லி மருந்துகளுக்கு கட்டுப்படாமல் போகிறது. இதனால் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகளின் அளவை ஒன்று அதிகரிக்க வேண்டும் அல்லது இன்னும் தீவிரமான வேறு பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த வேண்டும் என்ற சூழ்நிலை வருகிறது. இப்படியே ஒவ்வொரு வருடமும் ஒருபுறம் மகசூல் குறைந்துகொண்டே போகிறது, மறுபுறம் செலவு அதிகரித்துக்கொண்டே போகிறது. வெகுவிரைவில் விவசாயியிடம் வறண்ட பூமியும், கடனும், இருண்ட எதிர்காலமும்தான் மீதமிருக்கும். இந்த சூழலில் 1995ல் இருந்து இதுவரை 3,00,000 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பது ஒன்றும் பெரிய ஆச்சரியமல்ல!
தேவையானது மாட்டு சாணம்தான்!
நம் நாட்டில் பல்லாயிரம் ஆண்டுகளாக விவசாயம் நடந்திருக்கிறது. ஆனால் பெரும் அளவில் விவசாயி தற்கொலை என்பதை சமீப காலத்தில்தான் நாம் பார்த்து வருகிறோம். அப்படியென்றால் "விவசாயம் ஒரு தொழில்துறையாக மாறுவதற்கு" முன்பெல்லாம் விவசாயிகள் எப்படி பிழைத்தார்கள்? அதற்கான விடை மாட்டு சாணத்தில் உள்ளது.
இக்கால மொழியில் சொல்வதென்றால், "இயற்கை வேளாண்மை" "ஆர்கானிக் கல்டிவேஷன்" என்று பகட்டாக சொல்லலாம் அல்லது மிக சாதாரணமாக நாட்டுரக மாட்டு சாணம் உபயோகிப்பது எனலாம். விலங்குகளின் கழிவுகள் - எருது சாணம், மாட்டு சாணம், ஆட்டு சாணம் ஆகியவற்றை சரியான வகையில் பயன்படுத்தினால், அது மண்ணை அதிகளவில் வளமாக்கும். அதேபோல் மரத்தின் இலை, கிளை ஆகியனவும் மண்வளத்தை அதிகரிக்கும். விலங்கு மற்றும் மரசெடிகளின் கழிவுகள் மண்ணிற்கு கரிம (carbon) சத்தும், தேவையான மற்ற பிறவற்றையும் அளிப்பதால் மண்வளம் அதிகரிப்பதோடு, மண்ணின் தண்ணீர் ஈர்க்கும் சக்தியையும் அதிகரிக்கிறது.
ஓஹியோ மாநில பல்கலைக்கழகத்தின் மண்-அறிவியல் துறையில் பணியாற்றும் பிரசித்தி பெற்ற பேராசிரியரும், ஐக்கிய நாடுகளின் ஒருங்கிணைந்த நிர்வாகக் கழக (UNU-FLORES) ஆலோசனைக் குழுவின் தலைவருமான திரு. ரதன் லால் அவர்கள், இந்திய விவசாயம் இன்று சந்தித்து வரும் பிரச்சனைக்கான காரணம் பற்றி விவரிக்கிறார். "மண்ணில் இருக்கும் சத்துக்கள் பயிராக வெளியெடுக்கப் படுகிறது, ஆனால் அதற்கு ஈடாக மீண்டும் மண்ணிற்கு எதுவும் கிடைப்பதில்லை. அதனால் மண்ணின் வளம் குறைகிறது" என்கிறார். விவசாயிகள் பயிர்களை அறுவடை செய்தபின், அவற்றின் வேர்களையும், தண்டையும் மீண்டும் மண்ணில் போடாமல் அதை எரித்துவிடும் பழக்கத்தை சுட்டிக்காட்டி அவர் இவ்வாறு சொல்கிறார். "மண்ணின் மேற்பரப்பில் 100 கிராம் மண்ணில் 2% கரிமச்சத்து இருந்தால்தான் அது வளமான பூமியாக இருக்கும். ஆனால் நாட்டின் உணவுக் களஞ்சியம், பயிர் கருவூலம் என்று கருதப்படும் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் மண்ணின் மேற்பரப்பில் இருக்கும் கரிமசத்து வெறும் 0.05% தான்" என்கிறார் திரு.லால் அவர்கள்.
செலவின்றி மாற்றம் ஏற்படுத்துதல்
ஆனால் இந்தளவிற்கு நுண்ணிய விவரங்கள் எல்லாம் (ஒரு விவசாயியிக்கு தெரிந்திருப்பதுதான் மிக முக்கியம் எனினும்) பொன்முத்து அறிந்திருக்கவில்லை. இந்தியாவில் பல விவசாய ஆராய்ச்சிக் கழகங்கள் இருப்பினும் அந்த விஞ்ஞானம் எப்படியோ வயலை வந்தடைவதில்லை. மொழிபெயர்ப்பிலோ வேறு விதங்களிலோ அதன் சாரம் வழியிலேயே தொலைந்து போகிறது.
Subscribe
இருப்பினும் ஈஷா பசுமைக்கரங்கள் போல் பல நிறுவனங்கள் நம் இந்திய வயல்களில் மீண்டும் இயற்கை வழி விவசாயம் கொண்டுவர செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. 2015ல் ஈஷா பசுமைக்கரங்கள் ஒருங்கிணைத்து நடத்திய சுபாஷ் பாலேக்கர் ஐயா அவர்களின் இயற்கை விவசாய கருத்தரங்கில் பொன்முத்து கலந்துகொண்டார். பாலேக்கர் ஐயாவின் விவசாய முறைகள், இரசாயனமற்ற இயற்கை வேளாண்மையை வலியுறுத்துகிறது. இதனால் விவசாயிகளுக்கு "செலவு" எதுவும் இருக்காது. தன் வயல், தன் பண்ணையைத் தாண்டி வேறெதிலும் ஒரு விவசாயி சார்ந்திருக்கத் தேவையில்லாத ஒரு முழுமையான, ஒருங்கிணைந்த விவசாயத் தொழில்நுட்பம் இது.
மண்வளத்தைக் காக்கவும் மேம்படுத்தவும், பூச்சி மற்றும் பிற பயிர் அழிக்கும் தொல்லைகளை கட்டுப்பாட்டில் வைக்கவும், மகசூலை அதிகரிக்கவும் இயற்கையான முறைகள் பின்பற்றப்படுகின்றன. தனக்குத் தேவையான விதைகளை விவசாயி தானே உருவாக்கிக்கொள்ள முடியும். அதுமட்டுமல்ல மாட்டு சாணம், மாட்டுக் கோமியம் மற்றும் பிற பொருட்கள் கொண்டு இயற்கை உரங்களை அவரே தயார்செய்ய முடியும். பாலேக்கர் ஐயாவின் கூற்றுப்படி 30 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்ய, ஒரு விவசாயியிடம் ஒரேவொரு நாட்டு மாடு இருந்தால் போதும்.
மாற்றம் பன்மடங்கு!
பாலேக்கர் ஐயாவின் விவசாய முறைகளைப் பின்பற்றி நாட்டின் பல பகுதிகளில் பலரும் பலன்பெற்று வருகிறார்கள். இதனால் பாலேக்கர் ஐயாவின் முயற்சிகளைப் பாராட்டி 2016ல் அவருக்கு பத்மஸ்ரீ பட்டம் வழங்கப்பட்டது. தனிப்பட்ட முறையில் பார்த்தால், தன் விவசாய முறைகளை மாற்றிக் கொண்டபின், இப்போது பொன்முத்து மிகவும் மகிழ்ச்சியான மனிதராகியிருக்கிறார்.
இயற்கை விவசாய முறையில் தான் பின்பற்றிய யுக்தி பற்றி பொன்முத்து விவரிக்கிறார். "நான் வெங்காயம் வளர்ப்பேன். பின் நடுவில் முள்ளங்கி, பீட்ரூட், மிளகாய் போன்றவை பயிரிடுவேன். சில சமயத்தில் தொடர்-பயிர் முறையும் பின்பற்றுவேன். இதனால் அறுவடைக்கு முள்ளங்கி தயாராக இருக்கும் நேரத்தில், தக்காளி அப்போதுதான் கனியத் துவங்கும். இதனால் வருடம் முழுவதும் எனக்கு வருவாய் இருந்துகொண்டே இருக்கும். இந்தத் தொடர்-பயிர் முறையைப் பின்பற்றும்போது, பூச்சி அரிப்பால் பயிர்கள் நாசமாவதும், பயிர்கள் நோய்வாய்ப்படுவதும்கூட குறைகிறது." இது மட்டுமல்ல, இயற்கை விவசாய பொருட்கள் விற்கும் கடைகளில் இவரது காய்களுக்கு நல்ல விலையும் கிடைக்கிறது.
ஆனால் இவற்றையெல்லாம் தாண்டி பொன்முத்துவின் நிறைவிற்கு முக்கிய காரணம், அவரது குழந்தைகளின் ஆரோக்கியம். "என் தோட்டத்தில் விளைந்த இரசாயனங்கள் பயன்படுத்தப்பட்ட காய்களை உண்டபோது, என் பிள்ளைகள் அடிக்கடி நோய்வாய்ப்பட்டனர். இப்போது இயற்கை விவசாய முறையில் விளைந்த காய்களை உண்ணும்போது என் குழந்தைகள் மிக ஆரோக்கியமாக இருக்கிறார்கள். முன்போல் அவர்கள் நோய்வயப்படுவதில்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், கடந்த 9 மாதங்களில் எங்களுக்கு மருத்துவ செலவு வரவேயில்லை.
ஒரு நம்பிக்கை ஒளிக்கீற்று
இதேபோன்ற அதிசயங்கள் மற்ற தோட்டங்களிலும் கூட நிகழ்கிறது. ஒரு சிறு வெங்காயத் தோட்டம் வைத்திருக்கும் தேவி சொல்கிறார், "இருண்ட என் வாழ்வில் பாலேக்கர் ஐயாவின் ரூபத்தில் புது நம்பிக்கை பிறந்தது. இரசாயனங்கள் பயன்படுத்தி விவசாயம் செய்தபோது, 70-நாள் பயிரான வெங்காயத்தை விளைவிக்க நான் 13 முறை இரசாயன உரம் பயன்படுத்த நேரும். இதனால் செலவு அதிகமானது. பலசமயங்களில் வெங்காயம் விற்று வரும் பணமும், அதற்கு நான் செய்த முதலீடும் கிட்டத்தட்ட ஒன்றாகவே இருக்கும். கையில் பணமே இருக்காது. இன்னும் சொல்லப்போனால், மற்ற வழிகளில் எனக்குக் கிடைக்கும் பணத்தையும் அவ்வப்போது நான் இதில் முதலீடு செய்ய நேரும்" இந்த சூழ்நிலையில் "விவசாயத்தை கைவிடுவதே சிறந்ததோ?" என்று தேவி அடிக்கடி தன்னைத்தானே கேட்டுக்கொண்டதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.
ஆனால், இயற்கை விவசாயம் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது. பொன்முத்துவைப் போல் இவரது வருமானமும் அதிகரித்திருக்கிறது. ஆனால் அது தவிர்த்து இவர் வேறு சில பலன்களையும் பகிர்கிறார். "இரசாயனம் பயன்படுத்தி பயிர் விளைவித்தபோது 15 நாட்களிலேயே வெங்காயம் அழுக ஆரம்பித்துவிடும். ஆனால், இயற்கை முறைகளைக் கையாளும்போது அது 40 நாட்கள் வரை தாக்குப்பிடிக்கிறது. தண்ணீர் தேவையும் செலவும் கூட குறைந்திருக்கிறது. செடிகளுக்கு தண்ணீர் ஊற்ற தாமதமானாலும் முன்போல் பயிர்கள் கருகுவதில்லை" என்கிறார் தேவி. தேவி வாழும் இடத்தில் அவரது தோட்டம் ஆர்வத்தையும் ஆரவாரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. "வாகன ஓட்டுநராக வேலை செய்யும் என் கணவர் தன் ஓய்வு நேரத்தில் என் தோட்டத்தில் வேலை செய்ய இப்போது மிக ஆர்வமாக இருக்கிறார். நாங்கள் பின்பற்றும் விவசாய முறைகளைப் பார்வையிட பலர் எங்கள் தோட்டத்திற்கு வருகிறார்கள்" என்கிறார்.
தொல்லைகளே தொலைந்துபோ!
இயற்கை விவசாய முறைகள் மண்வளத்தை அதிகரிப்பதோடு, பயிர்களை அழிக்கும் பூச்சிகள் மற்றும் பிற தொல்லைகளை கட்டுப்பாட்டில் வைக்கவும் வழிசெய்கின்றன. இயற்கை விவசாயத்தில் சமீபத்தில் காலடி எடுத்து வைத்திருக்கும் ஜகதீஷ் சொல்கிறார், "இரசாயன விவசாயத்தில் செடிகளின் மெல்லிய இலைகளையும் மொட்டுக்களையும் தின்று அழிக்கும் மில்லிமீட்டர் அளவிலான இலைப்பேன்களின் தொல்லை மிக அதிகமாக இருக்கும். பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாவிட்டால் இந்த இலைப்பேன்களிடம் இருந்து செடியைக் காப்பாற்ற முடியாது என்ற நம்பிக்கை நிலவுகிறது." ஆனால், இயற்கை வேளாண்மை யுக்தியில் பரிந்துரைக்கப்படும் வேப்பவிதை சாரைப் பயன்படுத்தி தன் வெங்காயச் செடிகளை இலைப்பேன்களிடம் இருந்து ஜகதீஷ் வெற்றிகரமாக மீட்டெடுத்திருக்கிறார்.
பயிர்களை அழிக்கும் தொல்லைகளை இயற்கை விவசாயம் கட்டுப்பாட்டில் வைப்பதற்கான இன்னொரு காரணத்தையும் தேவி விளக்குகிறார். இயற்கை விவசாயம் வயல்முழுவதும் ஒரே பயிரைப் பயிரிடாமல், ஒரே வயலில் பலவிதமான பயிர்களை ஒன்றாக பயிரிட பரிந்துரைக்கிறது. "என் வயலில் ராகி மற்றும் சிறுதானியங்களை வெங்காய செடிகளுடன் சேர்த்து வளர்க்கிறேன். இப்போது தானியங்களை உண்ண வரும் பறவைகள், பயிர்களை அளிக்கும் பல தொல்லைகளையும் சேர்த்தே உண்கின்றன" தொடர்-பயிர் விவசாய முறைகளும் கூட இதற்கு உதவுகின்றன.
ஆனால், இது எல்லாவற்றிற்கும் மேலாக, "விவசாயத்தை நாம் தொடர்ந்து செய்யலாம். அது இலாபகரமாகவும் இருக்கும்" என்ற நம்பிக்கையை இந்த இயற்கை விவசாயம் விவசாயிகளிடம் ஏற்படுத்தி உள்ளது. "இயற்கை விவசாய முறையில் விளைந்த காய்களை இப்போது என் குழந்தைகளுக்கும் மக்களுக்கும் என்னால் கொடுக்க முடிகிறது" என்று மகிழ்கிறார் பொன்முத்து. விவசாயம் பற்றிய தன் கண்ணோட்டத்தையே இயற்கை விவசாயம் முற்றிலும் மாற்றிவிட்டதாக சொல்கிறார் தேவி. "விவசாயம் செய்தே நான் நன்றாக சம்பாதித்து சௌகரியமாக வாழமுடியும் என்ற நம்பிக்கையை இயற்கை வேளாண்மை எனக்குக் கொடுத்திருக்கிறது".
நம் மண்ணைக் காப்போம்
"மண்தானே, என்ன பெரிதாக" என்று நாம் அசட்டையாக இருந்துவிட்டோம். ஆனால் உலகில் நம் அனைவரின் உணவிற்கும் மண்ணின் மேற்பரப்புதான் ஆதாரமாக இருக்கிறது. அதை வளித்து எடுத்துவிட்டால், நம் நிலை என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! இன்று அது மிகப்பெரும் அளவில் வளித்து எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. தவறான விவசாய முறைகளைப் பின்பற்றுவதால் மாபெரும் அளவில் மண்ணரிப்பு ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியா மட்டுமே ஒவ்வொரு ஆண்டும் 530 கோடி டன் (4,81,000 கோடி கிலோ) மண்ணை இழக்கிறது. மீதமிருப்பதையோ இரசாயனங்கள் விஷமாக மாற்றிக் கொண்டிருக்கிறது.
ஈஷாவின் "நதிகளை மீட்போம்" இயக்கத்தில் நம் மண்ணைக் காப்பதும்கூட ஒரு அங்கம். நம் விவசாயிகள் இயற்கை முறைகளைப் பின்பற்றி வேளாண்காடு வளர்ப்பு சார்ந்த விவசாயத்திற்கு மாற அவர்களுக்கு உதவவேண்டும் என்று நதிகளை மீட்போம் திட்டப்பரிந்துரை வலியுறுத்துகிறது. இதன்மூலம் விவசாயியின் வருமானம் அதிகரிப்பது மட்டுமல்லாமல், நம் மண்வளமும் பெருகும், நதிகளும் புத்துயிர் பெறும். மஹாராஷ்டிர மாநிலத்தின் யவ்வத்மால் மாவட்டத்தில் இத்திட்டப் பரிந்துரை மாபெரும் அளவில் ஒரு முன்மாதிரியாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு 5 மாநிலங்களில் இதை செயல்படுத்த அம்மாநிலங்களுடன் "நதிகளை மீட்போம்" இயக்கம் ஒரு உடன்படிக்கை ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டு உள்ளது.
இயற்கை வேளாண்மை பயிற்சி முகாம்
பசுமைக்கரங்களின் "இயற்கை வேளாண்மை இயக்கம்" விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்தில் பயிற்சி அளித்து வருகிறது. அடுத்த பயிற்சி வகுப்பு, ஆங்கிலம் மற்றும் தமிழில் பிப்ரவரி 2 - 9, 2019ல் திருச்சி மாநகரில் நடைபெற உள்ளது. சுபாஷ் பாலேக்கர் இயற்கை விவசாயம் (SPNF - Subhash Palekar Natural Farming) என்றழைக்கப்படும் இது 9-நாள் பயிற்சி முகாம். ஆங்கிலத்தில் நடைபெறும் இந்த பயிற்சி முகாம் உடனுக்குடன் தமிழிலும் மொழிபெயர்க்கப்படும். இதில் பங்கேற்கும் விவசாயிகள் பயிற்சியின் முடிவில் தாமாக, சுயமாக இந்த யுக்திகளை பின்பற்றி விவசாயம் செய்யமுடியும். மேலும் விபரங்களுக்கு "நிகழ்ச்சிப் படிவத்தை" பதிவிறக்கம் செய்யுங்கள்.
நீங்கள் ஒரு விவசாயி இல்லை, ஆனால் நம் மண்வளம்/ நதிகள்/ மரங்கள்/ நம் பூமியை காக்க விரும்பும் ஒரு தன்னார்வத் தொண்டர் எனில், RallyforRivers.org மற்றும் ProjectGreenHands.org இணையத்தளங்களைப் பாருங்கள். இதுபோன்ற பல முனைப்புகளில் ஒரு தன்னார்வத் தொண்டராக உங்களை ஈடுபடுத்திக்கொள்ள பல வாய்ப்புகளை அதில் நீங்கள் காணமுடியும்.
மண் பற்றி அறியுங்கள், உயிர் பற்றி அறியலாம்.
நீங்கள் பயன்படுத்தும் பூச்சிக்கொல்லிகள் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்!
இன்று பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தப்படும் "ஏஜன்ட் ஆரஞ்ச்", வியட்நாம் போரில் புதர்களை அழித்து எதிரிகள் ஒளிந்திருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்தப்பட்டது. இப்போது பல வளர்ந்துவரும் நாடுகளில் அதுவே களைக்கொல்லியாக பயன்படுத்தப்படுகிறது. இத்தனைக்கும் இதைப் பயன்படுத்தினால் புரோஸ்டேட் புற்றுநோய், சுவாச புற்றுநோய், பல்கிய எலும்பு மச்சைப் புற்றுநோய் (multiple myeloma), இரண்டாம் வகை சர்க்கரை வியாதி, நிணநீர் சுரப்பி புற்றுநோய் மற்றும் பிற நோய்கள் வரமுடியும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.
இன்று பயன்படுத்தப்படும் பல பூச்சிக்கொல்லிகள் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தயாரிக்கப்படுகின்றன. அந்நாடுகளில் வெடிபொருள் தயாரிக்கும் பனிமணைகளாக இருந்த இடங்கள் இன்று செயற்கை உரம் மற்றும் பூச்சிக்கொல்லிகள் தயாரிக்கும் இடமாக மாற்றப்பட்டுள்ளன.
ஜெர்மனியின் நாசி பாடைகள் உருவாக்கிய "பேரழிவு வாயு அறைகள்" - இல் "ஜைக்லான் பி" இரசாயனம்தான் பயன்படுத்தப்பட்டது.இந்த இரசாயனத்தை ஒரு பூச்சிக்கொல்லியாக பயன்படுத்தவே அவர்கள் உருவாக்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று இது உலகில் எங்கும் பயன்படுத்தப்படவில்லை.
1950ல் நம் நாட்டில் 2330 டன் (21,13,740 கிலோ) பூச்சிக்கொல்லி பயன்படுத்தப்பட்டது. இது படிப்படியாக உயர்ந்து 2010-11ல் 81,000 டன்னாக (7,34,81,964 கிலோ) ஆனது. இதனால் உணவுச் சங்கிலியில் இந்த இரசாயனங்களின் இருப்பு பன்மடங்காக ஆகிவிட்டது.
சுவீடன் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆராய்ச்சியில், இயற்கை விவசாய முறையில் விளைவித்த உணவை உண்டால், இது உடலில் தேங்கியிருக்கும் பூச்சிக்கொல்லிகளை தற்கால முறைகளில் விளைந்த உணவைவிட 6.7 மடங்கு அதிகமாகக் குறைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது.