குதிரைவாலி அரிசி பயன்கள் (Kuthiraivali Rice Benefits in Tamil) மற்றும் 2 எளிய ரெசிபிகள்
மலச்சிக்கல், உடல் எடை, நீரிழிவு, இதய ஆரோக்கியமின்மை என பல்வேறு பிரச்சனைகளிலிருந்து வெளிவர உதவும் சத்தான குதிரைவாலி அரிசியைப் பற்றி இந்தப் பதிவில் உமையாள் பாட்டி வாயிலாக அறிந்து கொள்வோம்!
கொல்லைப்புற இரகசியம் தொடர்
எங்கள் ஊர் பிள்ளையார் கோவிலில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் களைகட்டி இருந்தது. குழாய் ஒலிபெருக்கிகளில் விநாயகரைப் போற்றிப் பாடும் பாடல்களின் தொகுப்பு தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது.
அந்தவொரு பாடலைக் கேட்டபோது, "அதெப்படி பிள்ளையார்பட்டிக்குப் போனால் ஒன்பது கோளையும் ஒன்றாகப் பார்க்க முடியும்?" என்று லாஜிக்காக கேள்வி எழுந்தது. இதை யாரிடம் கேட்பது என்று யோசித்த எனக்கு, "இருக்கவே இருக்கிறார் நம் உமையாள் பாட்டி" என்று உடனே உமையாள் பாட்டியின் முகம் ஃப்ளாஷ் அடிக்க, பாட்டியின் குடிலுக்கு விரைந்தேன்.
பாட்டி, தான் அழகுடன் செய்திருந்த களிமண் விநாயகருக்கு காய்கறிகளில் இருந்தும் பழங்களில் இருந்தும் எடுக்கப்பட்ட இயற்கை வண்ணங்களைப் பூசி அழகூட்டிக் கொண்டிருந்தாள். பாட்டியின் கலைநயத்தைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்த எனக்கு, என்னிடம் இருந்த கேள்விகள் மறைந்துவிட்டன.
பாட்டி ஒரு குறிப்பிட்ட வண்ணத்தை விநாயகரின் தொப்பை வயிற்றில் பூசும்படி என்னிடம் கூறிவிட்டு, அடுக்கரைக்கு ஏதோ வேலையாக சென்றுவிட, நானும் பாட்டி சொன்னபடியே ஈடுபாட்டுடன் அந்த வண்ணத்தைப் பூசிக்கொண்டிருந்தேன். அடுக்கரையில் இருந்து வந்த பாட்டி, ஒரு கிண்ணத்தில் எனக்காக ஏதோ சாப்பிட கொடுத்தார்.
நீ இதை சாப்பிடு, நான் பிள்ளையார் துதிக்கைக்கு ஃபைனல் டச் கொடுக்க வேண்டி இருக்கு, நான் முடிச்சுட்டு வர்றேன்னு பாட்டி கூற நானும் அந்தக் கிண்ணத்தில் இருந்த கேசரியை ருசிபார்த்தேன்.
நாட்டுச் சர்க்கரையுடன் நெய் சேர்த்த, ஏலக்காய் மணத்துடன் என்னை ஆட்கொண்ட அந்த கேசரி, வழக்கமான ரவையால் செய்யப்படாமல் சிறுதானியத்தால் செய்யப்பட்டிருப்பதைக் கவனித்தேன்.
தும்பிக்கையை நிறைவு செய்துவிட்டு வந்த உமையாள் பாட்டியிடம், கேசரிக்கு நன்றி சொல்லிவிட்டு, அந்த சிறுதானியம் பற்றி நான் கேட்க, அது குதிரைவாலி அரிசி என்பதை பாட்டி தெரிவித்தார்.
"குதிரைவாலி மாதிரியான சிறுதானியங்களை உணவில் அடிக்கடி சேர்த்துக்கிட்டா நீயும் விநாயகர் மாதிரி நிறைய சாப்பிட்டு பெரிய வயிறு இருந்தாலும், வயிறு பிரச்சனை ஏதும் இல்லாமல் இருக்க முடியும்" என்று வேடிக்கையாகக் கூற, குதிரைவாலி பற்றி விவரமாகக் கூறும்படி கேட்டேன்.
பாட்டியும் விநாயகருக்கு கொழுக்கட்டை செய்துகொண்டே குதிரைவாலி அரிசி பற்றி விவரித்தார்.
குதிரைவாலி அரிசி பயன்கள் (Kuthiraivali Rice Benefits in Tamil)
மலச்சிக்கலைப் போக்கும்:
குதிரைவாலி அரிசியில அதிகளவுல நார்ச்சத்து இருக்கறதால, நம்ம குடலை ஆரோக்கியமாக்கி செரிமானத்தை மேம்படுத்துது. குறிப்பா, மலச்சிக்கல் இல்லாம கழிவுகளை வெளியேத்த இந்த உணவு துணைநிற்குது. வயிறு உப்புசம் மாதிரி வயிறு சம்பந்தமான பிரச்சனைகளைத் தடுக்க இது உதவுது.
உடல் எடை குறைய:
உடல் எடையைக் குறைக்க விரும்பினா குதிரைவாலி அரிசியை உணவில எடுத்துக்கலாம். குதிரைவாலி அரிசியில அதிகளவு நார்ச்சத்தும் குறைவான கலோரிகளும் இருக்கறதால, உடல் எடையைப் பராமரிக்க உதவியா இருக்குது.
Subscribe
நீரிழிவு இருக்குறவங்களுக்கு நல்லது:
குதிரைவாலி அரிசியில குறைவான கிளைசெமிக் இருக்கறதால, இதை சாப்பிட்டதும் உடனே சர்க்கரை அளவு அதிகரிக்காது. இதனால சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகச்சிறந்த உணவா இருக்கும்.
சிறுநீர் பெருக்கி:
குதிரைவாலி அரிசி சிறுநீர் பெருக்கியா இருக்கறதால, நம்ம உடம்புல இருக்குற தேவையில்லாத உப்புக்கள் சிறுநீர் வழியா வெளியேற உதவுது.
இதய ஆரோக்கியம்:
அடிக்கடி உணவில குதிரைவாலி அரிசியை எடுத்துக்கிட்டா இதயம் ஆரோக்கியமாகும். இதுல இருக்குற நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துறதுக்கும், கொலஸ்ட்ரால் அளவை குறைக்கறதுக்கும் உதவுறது மூலம், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
வைட்டமின், தாதுக்கள், நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட்டுன்னு பல்வேறு சத்துக்கள் குதிரைவாலி அரிசியில இருக்குது. இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் B இருக்குற குதிரைவாலி அரிசியை நாம அடிக்கடி உணவில சேர்த்துக்கணும்.
குதிரைவாலி அரிசியில இட்லி, தோசை செஞ்சு சாப்பிடலாம்; கஞ்சியாவும் செஞ்சு குடிக்கலாம்; புலாவ், கிச்சடி மாதிரியும் செஞ்சு சாப்பிட முடியும்.
பாட்டி குதிரைவாலி அரிசியின் பயன்களை சொல்லி முடிக்க, ஒலிப்பெருக்கியில அந்த பிள்ளையார் பாடல் மீண்டும் ஒலித்தது. பாட்டியிடம் என் சந்தேகத்தைக் கேட்டுவிட்டேன்.
"பக்தியில பாடுற பாட்டுக்கு லாஜிக் பார்க்கக்கூடாது. உண்மையான பக்தி இருந்தா, ஒன்பது கோள்கள் மட்டுமில்ல, பிரபஞ்சம் முழுசையும் ஒன்னா பார்க்கலாம்ப்பா" என்று பதிலளித்து, பாட்டி என் அறியாமையைப் போக்கிய அந்த வேளையில, மீதமிருக்கும் குதிரைவாலி கேசரியை பார்சல் கட்டிக்கொண்டு கிளம்பிவிட்டேன்.
மருத்துவக் குறிப்புகள்:
Dr.S.சுஜாதா MD(S).,
ஆரோக்யா சித்தா மருத்துவமனை,
சேலம்.
குதிரைவாலி ரெசிபிகள் (Kuthiraivali Recipes in Tamil)
சிறுதானிய இட்லி
தேவையான பொருட்கள்:
குதிரைவாலி - 2 கப்
புழுங்கல் அரிசி - 2 கப்
உளுந்து - 1 கப்
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
குதிரைவாலி அரிசியையும் புழுங்கல் அரிசியையும் சேர்த்து 2 மணிநேரம் ஊறவைக்க வேண்டும். உளுந்தை தனியாக 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும். இரண்டையும் தனித்தனியாக அரைத்து, அதில் உப்பு சேர்த்து கலந்து வைக்க வேண்டும். மாவு புளித்தவுடன் இட்லி ஊற்றலாம், சுவையாக இருக்கும்.
இந்த மாவில் தோசையும் செய்யலாம், குழிப்பணியாரமும் செய்யலாம். குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.
சிறுதானிய கீர்
தேவையான பொருட்கள்:
குதிரைவாலி - ½ கப்
பால் - 4 கப்
சர்க்கரை - ¾ கப்
பாதாம், முந்திரி - 10
சரோலி (அ) வெள்ளரி விதை - 1 ஸ்பூன்
ஏலக்காய் பொடி - சிறிதளவு
செய்முறை:
குதிரைவாலி அரிசியை வறுத்துக்கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் பாலை ஊற்றி காய்ந்ததும் அதில் வறுத்த குதிரைவாலி அரிசியை சேர்த்து நன்கு வேகவைக்க வேண்டும். அதில் சர்க்கரை சேர்த்து, பின் பாதாம், முந்திரி, சரோலி, ஏலக்காய் பொடி சேர்த்து கிளறி இறக்கவும். சூடாக வேண்டுமானால் உடனே பரிமாறலாம். அல்லது ப்ரீசரில் வைத்து குளிர்ச்சியாகவும் சாப்பிட சுவையாக இருக்கும்.
சிறுதானியங்கள் பற்றிய பிற பதிவுகள்:
1) ராகி வழங்கும் 7 ஆரோக்கிய நன்மைகள்! 4 எளிய ராகி ரெசிபிகளுடன்!
கேழ்வரகு அல்லது ராகி எனும் சிறுதானியத்தின் வரலாறு, 7 ஆரோக்கிய நன்மைகள் மற்றும் ராகி ரெசிபிகள் என ராகி பற்றிய முக்கியக் குறிப்புகள் இப்பதிவில்...
2) தினை அரிசி நன்மைகள் மற்றும் 6 சுவையான சமையல் குறிப்புகள்
எடை குறைதல், நீரிழிவு நோய் கட்டுப்படுவது மற்றும் கர்ப்பம் தரிப்பதற்குத் துணைநிற்பது உட்பட தினையின் ஆரோக்கிய நன்மைகள் பல உள்ளன. இதில் வைட்டமின்களும் தாதுப்பொருட்களும் அதிகமாக உள்ளன. இத்தகைய சிறப்பான தினை அரிசி பற்றிய பதிவு இது.
3) வியக்க வைக்கும் வரகு அரிசி பயன்கள்!
சிறுதானியங்களில் அதிக சத்தும் சுவையும்கொண்ட வரகு அரிசியின் ஆரோக்கிய பலன்கள் பற்றி உமையாள்பாட்டியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வாருங்கள்.
4) சத்துக்கள் நிறைந்த சாமை அரிசியின் பயன்கள்!
பழங்காலத்திலேயே தமிழர்களுடைய உணவாக இருந்த சாமை பல்வேறு சத்துக்கள் நிறைந்ததாக உள்ளது. இதனைப் பற்றி உமையாள் பாட்டி கூறக் கேட்போம்.
5) கம்பு சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கியம்!
நம் தென்பகுதிகளில் சிறுதானியங்களில் மிகவும் பிரசித்திபெற்ற கம்பு, அதிக சத்துடையதாக, ஆரோக்கிய பலன்களை வழங்கக்கூடியதாக உள்ளது. கம்பு தானியம் பற்றி உமையாள் பாட்டியிடம் கேட்டறிய வாருங்கள்.
6) சோளம் பயன்கள் மற்றும் 4 சுவையான சோளம் ரெசிபிகள்
கம்புக்கு அடுத்தபடியாக நம் முன்னோர்கள் சோளத்தை தங்கள் அன்றாட உணவுகளில் அதிகமாகப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். சோளத்தின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து உமையாள் பாட்டியிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். மேலும் நான்கு சுவையான சோளம் ரெசிபிகளையும் அறிந்து கொள்ளுங்கள்.