கருஞ்சீரகம் (Karunjeeragam) தரும் அளவில்லா நன்மைகள்!
பலவித நோய்களை குணமாக்கும் ஆற்றல் கொண்ட கருஞ்சீரகம் எனும் ஒரு அற்புத மருந்தை பற்றி உமையாள் பாட்டி சொல்ல கேட்டறியலாம் வாங்க!
கொல்லைப்புற இரகசியம் - பகுதி 35
பலவித நோய்களை குணமாக்கும் ஆற்றல் கொண்ட கருஞ்சீரகம் எனும் ஒரு அற்புத மருந்தை பற்றி உமையாள் பாட்டி சொல்ல கேட்டறியலாம் வாங்க!
உமையாள் பாட்டியின் வீட்டில் கோடை விடுமுறைக்கு வந்த பேரப்பிள்ளைகள் கூட்டம் கலகலக்க, அந்தவீடே ஒரு சித்திரை திருவிழா போல காட்சியளித்தது!
“இந்த வருஷம் மதுரையில அழகர் ஆத்துல இறங்குற வைபவம் நடந்ததுமே நம்மூர்ல மழை பெஞ்சத பாத்தியா?! சித்திரைமழை சிறப்பை கொடுக்கும்னு சொல்லுவாங்க, ஆமா... நீ சித்திரை திருவிழாவுக்கு இந்த தடவ ஏன் போகல?”
பாட்டி தனது பேரன் பேத்திமார்களுக்கு பலகாரம் செய்வதில் மும்முரமாய் இருந்தபடியே என்னிடம் கேட்டாள்.
“அதுவா பாட்டி... அன்னைக்குன்னு பாத்து ஐ.பி.எல் மேட்ச் விறுவிறுப்பா போயிட்டு இருந்தது, அதான்!”
“ஓஹோ... திருவிழாவ விட கிரிக்கெட் மேச்சு பெருசா போச்சோ... இந்த காலத்து இளவட்டங்கல்லாம் டிவியிலயே ஐக்கியமாகி அதுலயே வாழ ஆரம்பிச்சிடுறீங்க... என்னவோ போ!” பாட்டி அலுத்துக்கொண்டாள்.
அதன்பிறகு அதன் பிறகு நான் உண்மையான காரணத்தை கூறினேன்.
Subscribe
அன்றைய திடீர் மழையில் வெளியில் கிளம்பிய தேள் ஒன்று உமையாள் பாட்டியைப் போன்றே என்னை ஆசையுடன் கொட்டி விட்டதை பாட்டியிடம் தெரிவித்தேன்.
“ஓ... அதான் திருடனுக்கு தேள் கொட்டுன மாதிரி இங்கனயே சுத்திகிட்டு இருக்குறயா?!” பாட்டி வேடிக்கையாக பகடி செய்தாலும். நான் எடுத்துக்கொண்ட மருத்துவ முதலுதவிகள் குறித்து வாஞ்சையுடன் கேட்டறிந்தாள். பின்னர் எனக்காக ஒரு கைமருந்து ஒன்றையும் தந்தாள்.
அது கருஞ்சீரகப் பொடி!
கருஞ்சீரகம் பயன்கள் (Karunjeeragam Benefits / Kaurnjeeragam Uses)
விஷப்பூச்சிகடிக்கு கருஞ்சீரகம்:
“இந்த பொடிய 4 கிராம் எடுத்து நீராகாரத்தோட 3ல இருந்து 7 நாள்வரைக்கும் காலையிலயும் மாலையிலயும் சாப்பிட்டு வந்தா விஷப்பூச்சிகடியா இருந்தாலும், வேற நச்சு கடியா இருந்தாலும் நல்ல குணம் கிடைக்கும்ப்பா” பாட்டி பக்குவமாய் விளக்கியதும் எனக்கு கருஞ்சீரகம் குறித்து மேலும் தெரிந்துகொள்ள ஆர்வம் பிறந்தது!
பாட்டி கருஞ்சீரகத்தின் பிற மருத்துவ பலன்களையும் அடுக்கறையில் பலகாரங்களை சுட்டுக்கொண்டே கூறலானாள்.
தலைவலி, மூட்டு வீக்கம்:
“கருஞ்சீரகத்த வெந்நீர் விட்டு அரைச்சு தலைவலிக்கும் மூட்டு வீக்கத்துக்கும் மேல்பூச்சா பூசி வந்தா சரியாகும்.
கரப்பான், சிரங்கு:
இந்த பொடிய காடி (நீராகாரம்) விட்டு அரைச்சு படை இருக்குற இடத்துல பூசலாம். அதோட, கரப்பான், சிரங்கு மாதிரி பிரச்சன இருக்குறவங்களுக்கு நல்லெண்ணெயில கருஞ்சீரக பொடிய சேத்து குழச்சு பூச குணமாகும். பசுவோட கோமியம் விட்டு அரைச்சு வீக்கம் உள்ள இடத்துல பூசுனா வீக்கம் குறையும்.
குழந்தைப் பேறுக்கு பிறகு வரும் வலி:
இந்த பொடிய தேன் விட்டு அரைச்சு பூச, குழந்தை பேறுக்கு பிறகு பெண்களுக்கு வர்ற வலி குணமாகும். கருஞ்சீரகப் பொடிய 1 கிராம் எடுத்து தேன் கூட சேத்தோ இல்லேன்னா நீர் சேத்தோ கலந்து குடுத்தா மூச்சு முட்டல் பிரச்சன உள்ளவங்களுக்கு நல்லபலன் கிடைக்கும்.
விடாமல் வரும் விக்கல்:
அதுமாதிரியே கருஞ்சீரகப் பொடிய 1 கிராம் எடுத்து மோர் கூட கலந்து தொடர்ந்து குடிச்சு வந்தா விடாமல் வர்ற விக்கல் பிரச்சனை குணமாகும்.
குடலில் உள்ள புழுக்கள்:
அப்புறம்... 1 கிராம் பொடிய எடுத்து நீராகாரத்தோட குடிச்சு வந்தா குடல்ல உள்ள புழுக்கள்லாம் வெளியேறிடும்!”
பாட்டி கருஞ்சீரகத்தின் பெரும் நன்மைகளை அடுக்கடுக்காய் எடுத்து வைக்க, நானும் பாட்டியின் அடுக்கறை ஜாடியிலிருந்து சிறிதளவு கருஞ்சீரக பொடிய எடுத்து வச்சுகிட்டேன்.
அடுத்து நான் கேட்ட ஒரு கேள்விக்கு பாட்டியிடம் பதில் இல்லை!
“அதாவது... தென்னமரத்துல தேள் கொட்டுச்சுன்னா பனைமரத்துல நெறிகட்டும்னு சொல்றாங்களே அதுக்கு என்ன அர்த்தம் பாட்டி!”
“பழமொழி சொன்னா ஆராய்ச்சி பண்ணக் கூடாதுப்பா, அனுபவிக்கணும்!” பாட்டி தேளைப்போலவே என் தலையில் ஒரு கொட்டு வைத்து விட்டு பலகாரங்களை அனைவருக்கும் பரிமாறச் சென்றாள்.
பாட்டியிடம் அனுபவித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து பயணிப்போம்!