கோரைக்கிழங்கு பயன்கள் (Korai Kilangu Benefits in Tamil)
விவசாய நிலங்களில் களைச்செடியாகக் கருதி அகற்றப்படும் கோரைக்கிழங்கின் மகத்துவத்தை உமையாள் பாட்டி விளக்குகிறார். மேனி அழகிற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் கோரைக்கிழங்கில் இருந்து கிடைக்கும் பலன்களைப் பற்றி விரிவாக அறியுங்கள்.
கொல்லைப்புற இரகசியம் தொடர்
அக்னி நட்சத்திரம் காலத்தில் கூட கோடை மழை பெய்து பூமி குளிர்ந்ததால், மனது குளிர்ந்துபோன நம் உமையாள் பாட்டி, தன் தோட்டத்தில் விருந்து கொடுப்பதாக பேரன்-பேத்திமார்களுக்கு அழைப்பு விடுத்திருந்தாள்.
சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி தோற்றுப்போன சோகத்தில் இருந்த எங்களுக்கு ஒரு உற்சாக செய்தியாக இருந்தது உமையாள் பாட்டியின் அழைப்பு. நாங்களும் பாட்டியுடன் நேரம் செலவழித்து, கோடை விடுமுறையை ஆர்ப்பரித்துக் கொண்டாடக் காத்திருந்தோம்.
தோட்டத்தில் மாலை விருந்துக்கு ஏற்பாடு செய்திருப்பதாக சொல்லிச் சென்ற உமையாள் பாட்டியிடம், விருந்து சைவமா அல்லது அசைவமா எனக் கேட்காமல் விட்டுவிட்டது மனதில் ஒரு உறுத்தலாகவே இருந்தது.
“இன்று பலவித டிஷ்களை தோட்டத்தில் ஒரு பிடி பிடித்துவிடலாம்!” என்று ஆர்வத்துடன் அங்கு சென்ற எனக்கு, கொஞ்சம் ஏமாற்றம் காத்திருந்தது.
அனைவரையும் பாட்டி அங்கிருந்த களைச் செடிகளை அகற்றச் சொல்லிவிட்டுச் செல்ல, அனைவரும் ஆர்வத்துடன் களை பறித்துக்கொண்டிருந்தனர். நானும் அந்த ஜோதியில் ஐக்கியமாகி சிறிது நேரம் களைபறிக்க, அனைவரையும் கூப்பிட்டு, பறித்த களைச்செடிகளை மொத்தமாக ஓரிடத்தில் போட்டுவிட்டு, பம்புசெட்டில் குளித்துவிட்டு விருந்துக்கு வருமாறு பாட்டி சொன்னாள். நாங்களும் அனைத்து செடிகளையும் ஓரிடத்தில் போட்டோம்.
நாங்கள் போட்ட களைச் செடிகளில் இருந்து சில செடிகளை மட்டும் தனியாக பிரித்து வைத்துக் கொண்டிருந்த உமையாள் பாட்டி, மீதச் செடிகளை மட்டும் அப்புறப்படுத்தினார். பம்பு செட்டில் குளிப்பதற்காக கட்டி வைத்திருந்த சிறிய தொட்டியில் இறங்கி குளித்துக்கொண்டே நான் அதை கவனித்தேன். குளித்து முடித்துவிட்டு அனைவரும் ஆவலுடன் விருந்துக்குத் தயாராக, நான் பாட்டியுடன் சேர்ந்து அனைவருக்கும் பரிமாறத் தயாரானேன்.
Subscribe
அப்படியே பாட்டி களைச் செடிகளிலிருந்து தனியாக எடுத்து வைத்த செடி பற்றியும் கேள்வி எழுப்ப, "அது களைச்செடி இல்லப்பா. பல மகத்துவ குணங்கள் நிறைஞ்ச கோரைக்கிழங்கு. அதைப் பத்தி சொல்றேன் கேட்குறியா?"
"கண்டிப்பா பாட்டி, செவிக்கு விருந்துதான் முதல்ல, அப்புறம் தான் வயிற்றுக்கு ஈயப்படும்!"
கோரைக்கிழங்கு பொடி பயன்கள் (Korai Kilangu Benefits in Tamil)
"அதாவது, கோரைக்கிழங்கு விவசாய நிலங்கள்ல களைப்புல் மாதிரி அங்கங்க முளைச்சுக் கிடக்கும். இதை நிறைய பேரு களைன்னு நினைச்சு பிடுங்கி போட்டுருவாங்க. ஆனா இது மருத்துவ குணங்கள் நிறைஞ்சதா இருக்குது."
கோரைக்கிழங்கு அழகு குறிப்புகள் (Korai Kilangu Benefits for Skin in Tamil)
"நம்ம உடலுக்கு இது குளிர்ச்சி தரக்கூடிய ஒரு கிழங்கு. இயற்கை குளியல் பொடி செய்றதுல இந்த கோரைக்கிழங்கு பொடிய சேர்த்துக்கிட்டா, அது உடலுக்கு குளிர்ச்சியையும் மேனிக்கு பளபளப்பையும் தர்றதா இருக்கும்.
குழந்தைகளுக்கு பயன்படுத்தும்போது, இந்த கோரைக்கிழங்கை அரைச்சு பொடியாக்கி, பசும்பால்ல கலந்து, உடல்ல பூசிக் குளிப்பாட்டினா, நல்ல நறுமணத்தையும் மேனிக்கு அழகையும் குடுக்கும்.
வயதுக்கு வந்த இளம்பெண்களுக்கு நலுங்கு மாவு செஞ்சு தேச்சுக் குளிக்கணும்ன்னு சொல்லுவாங்கல்ல, அந்த நலுங்கு மாவில் கோரைக்கிழங்கு பொடி முக்கிய இடம் பிடிக்குது. இதை பயன்படுத்தறதுனால வர்ற நறுமணம், நம்மகிட்ட வர்ற வியர்வை நாற்றத்தைப் போக்கும்."
ஆரோக்கியத்திற்கு கோரைக்கிழங்கு...
"கோரைக்கிழங்கு குளிர்ச்சி தரக்கூடியதா இருக்கறதால, அது கூட இஞ்சி, மிளகு மற்றும் தேன் சேர்த்து சுண்டைக்காய் அளவு குழந்தைகளுக்கு கொடுக்கும்போது, வயிற்றுப் புழுக்களை அது வெளியேற்றும். இதை பெரியவங்க எடுத்துக்கும்போது உடல் கழிவுகளை வெளியேற்றும்.
பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனைகள் வராம தடுப்பதோட, வெள்ளைப் படுதலையும் சரிபண்ண உதவும். பொதுவா, இது உடல்ல வாயுப் பிரச்சனையையும் வாதப் பிரச்சனையையும் சீர்செய்ய உதவுது."
நறுமணத்தால் கிடைக்கும் நன்மைகள்
"கோரைக்கிழங்கு பொடிய கொஞ்சமா எடுத்து ஒரு வெள்ளை கைக்குட்டையில முடிஞ்சு, நாம் பயணம் பண்ற கார்ல வச்சுக்கலாம். அந்த கார் நல்ல நறுமணமா இருக்கும். மழைக்காலத்துல நம்ம வீடுகள்ல ஈரப்பதத்தினால் வரும் துர்நாற்றத்தைப் போக்க, இந்த கோரைக்கிழங்கு பொடிய கைக்குட்டையில முடிஞ்சு வைக்கும்போது, வீடு நல்ல நறுமணமாகும். தூங்கும்போது நம்ம தலையணைக்கு அடியில கோரைக்கிழங்கு பொடிய கைக்குட்டையில முடிஞ்சு வச்சு தூங்கினா நல்ல தூக்கம் வரும்."
பாட்டி கோரைக்கிழங்கு பத்தி சொல்லி முடிக்க, எனக்கும் நல்ல பசியாகி, விருந்துக்கு தயாரானது வயிறு. விருந்து சைவமா அசைவமா என்று கேட்க நான் வாய்திறக்க, "வைகாசி விசாகத்துக்கு விரதமிருக்கறதால, நீ நினைக்கற மாதிரி அசைவ விருந்து இல்லப்பா! ஆனா நல்லா ருசியாதான் இருக்கும், சாப்பிடு!" என்று புன்னகையுடன் பரிமாறினாள் பாட்டி.
உமையாள் பாட்டியின் கைமணத்தில் சேப்பங்கிழங்கு ப்ரை, சிக்கன் 65க்கு ஈடாக இருந்தது.
மருத்துவக் குறிப்புகள்:
Dr.S.சுஜாதா MD(S)., ஆரோக்யா சித்தா மருத்துவமனை, சேலம்.