மாதுளை தரும் மகத்தான பலன்கள் (Mathulai Benefits in Tamil)
நமது பகுதிகளில் இயல்பாக விளையக்கூடிய மாதுளையின் ஆரோக்கிய நன்மைகள் பற்றி உமையாள் பாட்டியிடம் கேட்டு தெரிந்துகொள்ள வாருங்கள்.
கொல்லைப்புற இரகசியம் தொடர்
மதுரையின் சித்திரைத் திருவிழா கோலாகலமாக முடிந்து மீனாட்சி திருக்கல்யாணத்திற்காக புறப்பட்டு சென்றிருந்த அழகர், மீண்டும் கோவிலை வந்தடைந்தார். உமையாள் பாட்டியுடன் அழகரை தரிசித்த தருணங்கள் எங்களுக்கு மறக்காத நினைவுகளின் வரிசையில் இடம்பிடித்தன.
வீதியெங்கும் நீர்மோர் பந்தல்கள், அழகரை குளிர்விப்பதற்காக பாரம்பரிய மாட்டுத்தோல் பைகளிலிருந்து பீச்சி அடிக்கப்படும் தண்ணீர் நம் மீதும் விழுந்து நம் சட்டையை நனைக்கும் அனுபவம், தெருவுக்குத் தெரு வழங்கப்படும் அன்னதானப் பிரசாதங்கள், மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழியும் சாலைகள் என சித்திரைத் திருவிழா விமரிசையாக நடந்தது. திருவிழாவில் உமையாள் பாட்டியின் வழிகாட்டுதலில் அழகரை ஒவ்வொரு மண்டகப்படியாக தரிசித்தபோது, கோடைவெயிலின் தாக்கத்தை சரிக்கட்டுவதற்காக பாட்டி மாதுளையைத் தோலுடன் அரைத்து வடிகட்டி நாட்டுச்சர்க்கரையிட்டு கொண்டுவந்திருந்த மாதுளை பானம் எங்களைக் களைப்பு தெரியாமல் உற்சாகமாக வைத்திருந்தது.
"இந்த மாதுளை பானத்தை குடிச்சதும் உடனே ஒரு புத்துணர்ச்சி வருதே, அது எப்படி பாட்டி?" அழகர் ஆற்றில் இறங்கிய வைபவத்தை கண்டுவிட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தபோது பாட்டியிடம் கேட்டேன்.
பாட்டி தூக்குச் சட்டியில் கொண்டு வந்திருந்த மாதுளை பானத்தை எங்களுக்கு பகிர்ந்துகொடுத்தவாறே, அங்கிருந்த ஒரு வேப்பமர நிழலில் எங்களிடம் மாதுளையின் பயன்கள் பற்றி பகிர்ந்துகொண்டார்.
மாதுளை பயன்கள் (Mathulai Benefits in Tamil)
Subscribe
"மாதுளம்பழம், பூ, பட்டைனு எல்லாமே மருத்துவ குணங்கள் நிறைஞ்சதுதான். மாதுளையில இனிப்பு, புளிப்பு, துவர்ப்புனு மூனுவகை சுவைகளும் இருக்கு. செரிமானப் பிரச்சனைகளைச் சீராக்கி, உடல் எடை குறைக்க மாதுளை உதவுது. சர்க்கரைநோயை கட்டுப்படுத்துறதுக்கு துணைபுரியுது.
வெறும் வயிற்றில் மாதுளை சாப்பிடலாமா?
மாதுளையை காலையில வெறும் வயித்துல சாப்பிட்டா, வயிற்றுப்புண் ஆறும், உடலுக்கு நல்ல ஆரோக்கியம் தரும்.
திருமணமான பெண்களுக்கு கருவுறுவதில் பிரச்சனை இருந்தா, தினமும் காலையில வெறும் வயித்துல மாதுளம்பழம் சாப்பிட்டுவரலாம். இதனால ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை ஆரோக்கியமா இருக்கும்.
தினமும் மாதுளை சாப்பிட்டால்…
மாதுளை ஜூஸ் பயன்கள்
மாதுளை ஜூஸை தொடர்ந்து 30 நாட்கள் குடிச்சி வந்தா, மாதவிடாய் பிரச்சனை சரியாகும். இரத்தத்தில ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கறதுக்கு மாதுளை உதவுது.
மாதுளை விதையின் நன்மைகள்
மாதுளையை விதையோட சாப்பிடும் போது நல்ல ஆரோக்கிய பலன்கள் இருக்குது. மாதுளை விதையில் உள்ள நார்ச்சத்து மலச்சிக்கல் பிரச்சனை வராமல் தடுக்குது. மாதுளை விதையிலிருந்து வயது முதிர்வை தடுக்கக்கூடிய சீரம் தயாரிக்கப்படுவதா சொல்றாங்க. அதனால மாதுளையை விதையோட சாப்பிடும் போது இளமை நீடித்திருக்க நமக்கு அது உதவும்.
மாதுளை தோலின் பயன்கள்
"சரி பாட்டி, மாதுளையில நம்ம அழகை அதிகப்படுத்துவதற்கான தன்மைகள் இருக்கா? கொஞ்சம் சொல்லுங்க!" மாதுளையின் பயன்களை முழுமூச்சாகச் சொல்லிக்கொண்டிருந்த பாட்டியிடம் இடைமறித்துக் கேட்டேன்.
உன்னோட பியூட்டி கான்ஷியஸ்னசுக்கு ஒரு அளவே இல்லாம போச்சு! ஆனாலும் மாதுளையில நம்ம சரும அழகை மேம்படுத்தக்கூடிய கூறுகள் இருக்கறது உண்மைதான், சொல்றேன் கேட்டுக்கோப்பா..!
மாதுளை பழத்தோல்ல அதிக ஆன்டிஆக்ஸிடண்டும் ஊட்டச்சத்துகளும் இருக்கிறதுனு ஆய்வுகள் சொல்லுது. சருமத்தை பொலிவா பராமரிக்க மாதுளம்பழத் தோல் உதவும். இனி நீ மாதுளம்பழத் தோலை தூக்கிப் போடமாட்டேன்னு நினைக்கிறேன்.
மாதுளம்பழத்தை சாப்பிட்டுட்டு அதோட தோலை நல்லா கழுவி, வெயில்ல காய வச்சு, பொடிசெஞ்சு வச்சிக்கோங்க.
நிறைய சருமப் பிரச்சனைகளுக்கு மாதுளம்பொடியைப் பயன்படுத்தலாம். ஒரு ஸ்பூன் மாதுளம்பொடியோட கொஞ்சம் தேன் கலந்து குழைச்சு முகத்துல தடவி, 15 நிமிடங்கள் கழிச்சு கழுவிவந்தால் முகம் பொலிவு பெறும்.
வழக்கமா குடிக்கிற டீக்குப் பதிலா இந்த பொடியைச் சேர்த்து டீ போட்டுக் குடிக்கலாம். இதனால வயித்துல உள்ள புழுக்கள் அழியறதோட, பல பிரச்சனைகளைத் தீர்க்க உதவுது. ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, கொலஸ்ட்ராலை குறைக்க மாதுளை தோல் உதவுகிறது.
பாட்டி மாதுளையின் பலன்களைச் சொல்லி முடிக்கும் வேளையில், மதுரை சித்திரை திருவிழா பற்றிய நெடுநாள் சந்தேகம் ஒன்று இருந்ததையும் பாட்டியிடம் எனக்குக் கேட்கத் தோன்றியது.
ஆமா பாட்டி, மீனாட்சி திருக்கல்யாணத்தை பார்க்கறதுக்காக புறப்பட்ட கள்ளழகர் கரெக்ட்டான நேரத்துக்கு கல்யாணத்துக்கு போகலன்னு சொல்றாங்களே, அது உண்மைதானா பாட்டி?" பாட்டியிடம் உண்மையிலேயே பதில்பெறும் ஆர்வத்தில் கேட்டேன்.
"உன்னை மாதிரி அசமந்தமா இருந்ததால அவர் கல்யாணத்துக்கு லேட்டா போனாருன்னு நினைச்சிக்காதப்பா, அவர் புறப்பட்டது என்னவோ மீனாட்சி திருக்கல்யாணத்துக்குத்தான், ஆனா நோக்கம் மக்களுக்கு அருள்செய்யறதுதான்ப்பா. அது நிறைவேறுச்சில்ல!"
பாட்டியின் பதிலில் எனக்கு பல்பு கொடுத்திருந்தாலும், ஆன்மீகக் கண்ணோட்டத்தில் வெளிப்பட்ட பாட்டியின் அந்த ஆழமிக்க பதில் என் நெடுநாள் ஐயத்தைப் போக்கியது.