நோய்களுக்கு முடிவாகும் முடக்கத்தான் கீரை (Mudakathan Keerai Benefits in Tamil)
ஆரோக்கியம் தரும் பல்வேறு கீரை வகைகளுள் ‘முடக்கத்தான்' எனப்படும் இந்த கீரை வகை பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை நீக்கி, நன்மைகளைத் தருகிறது. இந்த அற்புத கீரை பற்றி உமையாள் பாட்டியிடம் கேட்டு அறியலாம் இங்கே!
கொல்லைப்புற இரகசியம் தொடர்
காலையில் தொடங்கிய மழை விடாமல் அடை மழையாக கொட்டித் தீர்த்து கொண்டிருக்க, குடையைப் பிடித்துக்கொண்டு உமையாள் பாட்டியின் வீட்டிற்குள் தஞ்சமடைந்தேன்.
சென்னையில் மழை வெள்ளம் வீடுகளில் புகுந்து மக்கள் அவதிப்படும் காட்சிகள் நியூஸ் சேனலில் ப்ரேக்கிங் நியூஸாக ஓடிக்கொண்டிருந்த வேளையில், பாட்டி அடுப்பங்கரையில் சூடான பானம் ஒன்றை தயாரித்துக் கொண்டிருந்தாள். அதிலிருந்து வந்த மணம் எனது ருசி பார்க்கும் ஆவலைத் தூண்ட, அடுப்பங்கரைக்குள் பிரவேசித்தேன்.
பாட்டி தயாரித்துக் கொண்டிருந்த ‘முடக்கத்தான் கீரை சூப்’ எனது கைகளுக்கு ஒரு குவளையில் வந்ததும், மழைக்கு இதமாக காரசாரமாக இருந்த அந்த முடக்கத்தான் சூப்பை ருசிக்கத் தொடங்கினேன்.
“இந்த பேர் வித்தியாசமா இருக்கே பாட்டி, இதுக்கு அர்த்தம் என்ன?!” பாட்டியிடம் முடக்கத்தான் கீரையின் பெயர்க் காரணத்தை முதலில் கேட்டேன்.
“முடக்கு வாதத்தை நீக்கும் சக்தி இந்த கீரைக்கு இருக்கறதால, முடக்கத்தை அறுப்பதுன்னு அர்த்தம் வர்ற வகையில இதுக்கு பேர் வச்சிருக்காங்க நம்ம முன்னோர்கள்” பாட்டி பெயர்க் காரணத்தை கூறியதும், அதன் மருத்துவ குணங்களை மேலும் அறிய நினைத்தேன். அப்படியே காலியான எனது சூப் டம்ளரில் இன்னும் கொஞ்சம் ஊற்றும்படி கேட்டு வாங்கிக்கொண்டேன்.
முடக்கத்தான் கீரை பயன்கள் (Mudakathan Keerai Benefits in Tamil)
வாத நோய்கள்:
பொதுவாக வாத நோய்கள் அதிகமா வரும் காலமா, குளிர் காலமான ஐப்பசி, கார்த்திகை, மார்கழி மாதங்கள் இருக்குன்னு சித்த மருத்துவத்துல சொல்றாங்க. இந்த முடக்கத்தான் கீரை, வாத நோய்களுக்கு நல்ல தீர்வா இருக்கு.
மலச்சிக்கல், கரப்பான், கிரந்தி:
முடக்கத்தான் கீரையில வைட்டமின்களும், தாது உப்புகளும் இருக்கு. இதை உணவுல தொடர்ந்து சேர்த்துட்டு வந்தா மலச்சிக்கல், மூல நோய்கள், கரப்பான், கிரந்தி, பாதவாதம் போன்ற நோய்களும் குணமாக உதவும்.
தோல் நோய்கள்:
முடக்கத்தான் கீரை தோல் நோய்களுக்கு சிறந்த நிவாரணமா இருக்கு. முடக்கத்தான் கீரையை நல்லா அரைச்சு சொறி, சிரங்கு மாதிரி தோல் நோய் இருக்கும் இடத்துல பற்று வச்சா நல்ல நிவாரணம் கிடைக்கும்.
மூல நோய்:
மலச்சிக்கல்னால மூல வியாதி வந்தவங்க தினமும் பச்சையா கொஞ்சம் முடக்கத்தான் கீரையை சாப்பிட்டு வந்தா, மூல நோய் விரைவில் குணமாகும்.
காது வலி:
Subscribe
காது வலி பிரச்சனைகளுக்கு முடக்கத்தான் கீரையை நல்லா அரைச்சு சாறெடுத்து, அதுல சில துளிகளை காதுகளுக்குள் விட காது வலி நீங்கும்.
மாதவிடாய் பிரச்சனைகள்:
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வா முடக்கத்தான் செயல்படுது.
குழந்தை பெற்ற பெண்களுக்கு…
இந்த முடக்கத்தான் கீரையை நல்லா அரைச்சு குழந்தை பெற்ற பெண்களுக்கு அடிவயித்துல பூசி வந்தா கருப்பையில உள்ள நச்சுக்கள் வெளியேறும்.
மூட்டு வலி:
முடக்கத்தான் கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தா, உடல்ல வாதத் தன்மை கட்டுப்பட்டு, மூட்டு வலியை போக்கும். முடக்கத்தான் இலைகளை ஆமணக்கு எண்ணையில நனைச்சு எல்லா மூட்டு பகுதிகளிலும் தேச்சு வந்தாலும் மூட்டு வலியிலிருந்து குணம் கிடைக்கும்.
தலைவலி:
ஜலதோஷத்தால வர்ற தலைவலிகளுக்கு முடக்கத்தான் இலைகளை நல்லா கசக்கி, வெந்நீர்ல போட்டு ஆவி பிடிச்சா தலைவலி சரியாகும்.
பொடுகு தொல்லை:
பொடுகுத் தொல்லை இருக்கறவங்க முடக்கத்தான் இலைகள் சேர்த்து செஞ்ச எண்ணெய்யை தலைக்கு தடவி வந்தா பொடுகு தொல்லை நீங்கும். பாட்டி முடக்கத்தானின் பயன்களைச் சொல்லி முடிக்க எனது சூப்பும் காலியானது.
முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கலந்து தோசையாகவும் துவையலாகவும் சாப்பிடலாம் என்று தெரிந்தபோது இன்னும் எனக்கு ருசிபார்க்கும் ஆவல் கூடியது.
இப்போது வெளியில் மழை கொஞ்சம் வெறித்தது போல இருந்தது. கிளம்பும் முன் உமையாள் பாட்டியிடம் இன்னொரு கேள்வியும் கேட்க நினைத்தேன்.
“சென்னையில கோடை காலத்துல தண்ணி இல்லன்னு சொல்றாங்க, மழைக்காலத்தில் வீடு நிறைய தண்ணி வந்துருதுன்னு, படகுல போறாங்க. இதுக்கெல்லாம் என்ன காரணம் பாட்டி?!” பாட்டியிடம் ஆதங்கத்துடன் கேட்க, “நல்ல ஏரியாவா பார்த்து வீடு கட்டணும்ப்பா, ஏரிகளா பார்த்து கட்டுனா இப்படித்தாம்ப்பா…!” பாட்டி சொல்லிவிட்டு, கொல்லைப்புறத்துல பிடித்து வைத்த மழைநீரை வடிகட்டி சேமிக்கும் வேலையைத் தொடங்கினாள்.
மருத்துவ குறிப்பு: டாக்டர். S.சுஜாதா MD (S)
ஆரோக்யா க்ளினிக், சேலம்.
முடக்கத்தான் கீரை சமையல் குறிப்புகள் (Mudakathan Keerai Recipes in Tamil)
முடக்கத்தான் கீரை தோசை (Mudakathan Keerai Dosai)
தேவையான பொருட்கள்:
முடக்கத்தான் கீரை - ஒரு கைப்பிடி
சீரகம் - அரை டீஸ்பூன்
வரமிளகாய் - 2
உப்பு - சுவைக்கேற்ப
அரிசி மாவு - 1 கப்
தோசை மாவு - தேவையான அளவு
செய்முறை:
முடக்கத்தான் கீரை, சீரகம், வர மிளகாய் மூன்றையும் ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த கலவையுடன் அரிசி மாவு, தோசை மாவு, சுவைக்கேற்ப உப்பையும் சேர்த்து கரைத்து அரைமணி நேரம் விட்டுவைக்கவும். தோசை மாவு பதத்திற்கு கரைத்துக் கொண்டு குறைந்த தீயில் தோசை வார்த்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தோசையை தக்காளி சட்னியுடன் பரிமாறலாம். இதேபோல் இட்லியும் செய்யலாம்.
முடக்கத்தான் பிடி கொழுக்கட்டை (Mudakathan Kolukkattai)
தேவையான பொருட்கள்:
முடக்கத்தான் இலை - 2 கைப்பிடி
பச்சரிசி - ¼ கிலோ
சிவப்பு மிளகாய் - 4
மிளகு - ¼ டீஸ்பூன்
தேங்காய் - ½ மூடி
நெய் - 50 மி.லி
பாசிப்பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
கடுகு, உளுந்தம்பருப்பு, சீரகம், கடலைப்பருப்பு - தலா 1 டீஸ்பூன்
செய்முறை:
முடக்கத்தான் இலையை நன்கு கழுவி, பொடியாய் நறுக்கிக் கொள்ளவும். பச்சரியை நன்கு ஊறவைத்து கழுவி, தேங்காயைத் துருவி, சிவப்பு மிளகாய், தேங்காய் பூ இரண்டையும் பச்சரிசியுடன் சேர்த்து கரகரப்பாய் அரைக்கவும். வாணலியில் சிறிதளவு நெய் விட்டு சூடானதும் முடக்கத்தான் இலையை துவரும்படி வதக்கவும். மிளகைப் பொடி செய்து, மிளகுப் பொடி, உப்பு, வதக்கிய முடக்கத்தான் இலை ஆகியவற்றை அரைத்த பச்சரிசி மாவில் சேர்த்துக் கலந்து வைக்கவும்.
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் தாளிக்க கொடுத்தவற்றை தாளித்து, கலந்து வைத்த மாவைப் போட்டு நிறம் மாறும்வரை வதக்கவும். பின் இறக்கி ஆற வைக்கவும். பின் நெய்யைத் தொட்டுக்கொண்டு பிடி கொழுக்கட்டைகளாய் பிடித்து ஆவியில் வேகவிடவும். இந்த கொழுக்கட்டை மூட்டு வலி, வாய்வு பிடிப்புக்கு மிகவும் நல்லது. ஆவியில் வேக வைப்பதால் இதன் மருத்துவத்தன்மை முழுமையாய் கிடைக்கும்.
முடக்கத்தான் குழம்பு (Mudakathan Kulambu)
தேவையான பொருட்கள்:
முடக்கத்தான் கீரை - 1 கப்
துவரம்பருப்பு - 25 கிராம்
மிளகாய் தூள் - 1½ ஸ்பூன்
தனியா - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - சுவைக்கேற்ப
தாளிக்க - கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை
செய்முறை:
வாணலியில் 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு துவரம்பருப்பை வறுத்துக்கொள்ளுங்கள். பின்னர் கீரையையும் எண்ணெயில் வதக்கவும். புளி, மிளகாய் தூள், தனியா தூள், மஞ்சள் தூள், உப்பு, வறுத்த துவரம்பருப்பு, கீரை அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நைசாக அரைத்துக்கொள்ளுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, சீரகம், கறிவேப்பிலை தாளித்து, அதில் அரைத்ததை கரைத்து ஊற்றி நன்றாக கொதிக்க வைத்து இறக்க வேண்டும். இறக்கும்போது சிறிதளவு வெல்லம் சேர்க்கலாம்.
பயன்கள்:
பெயரே முடக்கு அறுத்தான். கை, கால் முடக்குவாதத்தை போக்கும். இது மூட்டு வலிக்கு அரிய மருந்து. இரண்டு எலும்புகளுக்கு இடையில் இருக்கும் சவ்வு பகுதியை வளர வைக்கும். நரம்புகள் பலப்படும்.