தண்ணீர் விட்டான் கிழங்கு தரும் ஆரோக்கிய நன்மைகள் (Thaneervittan Kilangu or Shatavari in Tamil)
அன்றாட நடைமுறையில் நாம் பெரிதும் அறிந்திடாத ஒரு மூலிகையான ‘தண்ணீர் விட்டான் கிழங்கு' பற்றி உமையாள் பாட்டி சொல்லி கேட்கும்போது அதன் அருமை புரிகிறது. தொடர்ந்து வாசித்து அறிந்து கொள்ளுங்கள்!
‘மண் காப்போம்' இயக்கத்திற்காக சத்குரு தனது பைக்கில் தனி ஆளாக 30,000 கிமீ பயணிக்கும் செய்தியை உமையாள் பாட்டி தொலைக்காட்சி செய்தியில் பார்த்துக் கொண்டிருந்த வேளையில் நான் மெல்ல வீட்டுக்குள் நுழைந்தேன்.
“மண்ணு வளமா இருந்தாதான் நம்ம அடுத்த தலைமுறையை வளமானதா உருவாக்க முடியும். அதுக்காகத்தான் சத்குரு இந்த முன்னெடுப்பை ஆரம்பிச்சிருக்காரு. இந்த வயசுல இந்த மனுசன் இப்படி பைக்கை எடுத்துக்கிட்டு சுத்தணும்னு என்ன கெடக்கு. எல்லாம் நம்ம மண்ணை காப்பாத்ததான்.”
உமையாள் பாட்டி தனக்குத்தானே பேசியபடி திரும்ப, பின்னால் இருந்து நான் “கரைக்ட் பாட்டி” என ஆமோதித்தேன்.
“வாப்பா வா….! கொரோனா ஊரடங்கெல்லாம் தளர்த்தியாச்சு, ஆனா நீ எங்க ஊர்ல ஆளக்காணோம்”
பாட்டி தன் கையிலிருந்த கிழங்குகளை சுத்தம் செய்தபடியே என்னிடம் கேட்டாள்.
“மஹாசிவராத்திரி கொண்டாட்டத்துக்காக ஈஷாவுக்கு போயிட்டு நேத்துதான் ஊருக்கு வந்தேன் பாட்டி” பாட்டியிடம் பதில் சொல்லிய வேளையில் பாட்டியின் கைகளில் இருந்த அந்த கிழங்குகள் வித்தியாசமாகவும் இதுவரை அறிந்திராத ஒன்றாகவும் எனக்குத் தெரிந்தது.
எனக்கு ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட்டால் நன்றாக இருக்குமெனத் தோன்ற, பாட்டி அந்த கிழங்குகளை சிப்ஸ் போட்டு கொடுக்க, நானும் ஹாயாக உட்கார்ந்து எஞ்சாய் செய்ய நினைத்திருந்தேன்.
ஆனால் பாட்டி அந்த கிழங்கின் மருத்துவ குணங்கள் மற்றும் தனித்தன்மைகள் குறித்து கூறியபோது எனது பசி பறந்துவிட்டது.
Subscribe
உடலில் வெப்பத்தைத் தணித்து தண்ணீரை சேர்க்கும் ஆற்றல் கொண்ட தண்ணீர் விட்டான் கிழங்கு பற்றி உமையாள் பாட்டி விரிவாக எடுத்துரைத்தாள்.
தண்ணீர் விட்டான் கிழங்கு பயன்கள் (Thaneervittan Kilangu Benefits in Tamil)
“தண்ணீர் விட்டான் கிழங்குல இனிப்பு சுவையும், குளிர்ச்சித் தன்மையும் இருக்கும். உடலை பலமாக்கும்; தாய்ப்பால் நல்லா சுரக்க உதவும்; ஆண்மையை அதிகரிக்கும்” தண்ணீர் விட்டான் கிழங்கின் முக்கியமான பலன்களை சொல்லிய உமையாள் பாட்டி, எந்த பிரச்சனைக்கு எப்படி சாப்பிட வேண்டும் என்பதையும் கூறினாள்.
மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கை கட்டுப்படுத்த:
“மாதவிடாய் காலத்துல அதிகமா ஏற்படுற உதிரப்போக்கை கட்டுப்படுத்த, 4 தேக்கரண்டி அளவு தண்ணீர் விட்டான் கிழங்கு சாறை எடுத்து, 2 தேக்கரண்டி அளவு சர்க்கரை கலந்து குடிக்கணும்.”
கால் எரிச்சல்:
"கால் எரிச்சல் இருந்தா தண்ணீர் விட்டான் கிழங்கு சாறெடுத்து, காலையில, இரவு தூங்கப்போகும் முன்ன, கால்லையும் பாதத்துலையும் பூசணும்"
தண்ணீர் விட்டான் கிழங்கு பொடி பயன்கள் (Thaneervittan Kilangu Powder Uses in Tamil)
நீரிழிவு:
“தண்ணீர் விட்டான் கிழங்கை பால் சேர்த்து அரைச்சு காயவச்சு பொடி செஞ்சு, தினமும் ரெண்டு வேளை சாப்பிட்டு வந்தா நீரிழிவு குணமாகும்.”
உடல் உஷ்ணம்:
”தண்ணீர் விட்டான் கிழங்குப் பொடியை பாலில் கலந்து குடிச்சிட்டு வந்தா உடல் உஷ்ணம் தணியும்.”
காய்ச்சல்:
“காய்ச்சல் இருக்கிறவங்க தண்ணீர் விட்டான் கிழங்கு, சுக்கு, மிளகு, திப்பிலி – தலா 50 கிராம் எடுத்துப் பொடி செஞ்சு, தினமும் ரெண்டு வேளை 2 கிராம் பொடியை தேன்ல குழைச்சு சாப்பிட்டா, நல்ல பலன் இருக்கும்.”
உடல் பலமாக:
“தண்ணீர் விட்டான் கிழங்கை நல்லா கழுவி, மேல்தோலை நீக்கி, காயவச்சு தூள் செஞ்சுட்டு, அந்த தூளை 2 கிராம் அளவு பசு நெய்யில கலந்து, தினமும் காலை, மாலை ரெண்டு வேளை சாப்பிட்டு வந்தா உடல் பலமாகும்.”
ஆண்மை பெருக:
“ஆண்மை பெருக விரும்புறவங்க தண்ணீர் விட்டான் கிழங்கை காயவச்சு தூள் செஞ்சிட்டு, வேளைக்கு ஒரு தேக்கரண்டி வீதம், தினமும் ரெண்டு வேளை, ஒரு மாதம் வரை தொடர்ந்து சாப்பிடலாம், கூட ஒரு டம்ளர் பால் குடிச்சிட்டு வரணும்.”
பாட்டி தண்ணீர் விட்டான் கிழங்கின் பலன்களை சொல்லிமுடிக்க, நான் இவ்வளவு அற்புத பலன்கள் தரும் கிழங்குகளை விளைவிக்கும் மண் வளத்தைக் காப்பது குறித்து சிந்திக்கத் தொடங்கினேன். மண் வளத்தைக் காப்பாற்றினால் மட்டுமே அடுத்த தலைமுறையை நாம் ஆரோக்கியமிக்கதாக்க உருவாக்கிட முடியும்.
எனது சிந்தனையில் குறுக்கீடு செய்யும்விதமாக பாட்டியின் மொபைல் ஃபோன் ஒலித்தது, “லலலேலலேலலே…” சேவ் சாயில் பாடல் ரிங்டோனாக!
நம் மண் காக்கப்பட வேண்டியதன் அவசியத்தைப் பாட்டி புரிந்துகொண்டிருந்தாள்.