தும்பை இருந்தால் நோய்கள் தூரப் போகும்! (Thumbai Poo Benefits in Tamil)
கிராமப் பகுதிகளில் 90’s கிட்ஸ்களின் பள்ளிப் பருவ நினைவுகளில் தும்பைப் பூவுக்கும் (Thumbai Poo) நிச்சயம் இடமுண்டு. தும்பைப் பூவைப் பறித்து விளையாடிய நம்மில் பலருக்கும், அதிலுள்ள மருத்துவ குணங்களை அறிந்திருக்க வாய்ப்பில்லை. இன்று உமையாள் பாட்டியிடம் கேட்டு தும்பையின் மருத்துவ குணங்களை அறிந்துகொள்ள வாருங்கள்!
கொல்லைப்புற இரகசியம் தொடர்
நீண்ட நாளாக இருந்த வேட்டி-சட்டை உடுத்த வேண்டுமென்ற ஆசையை நிறைவேற்றிக்கொண்டு, வெள்ளை வேட்டி சகிதமாக உமையாள் பாட்டியிடம் ஆசி பெற்று வரலாம் என கிளம்பினேன்.
“அடடே… வாப்பா, என்ன இன்னைக்கு தும்பைப் பூ மாதிரி வெள்ளை வேட்டி-சட்டை எல்லாம் பிரமாதமா இருக்கு! என்ன விசேஷம்ப்பா… பொண்ணு கிண்ணு பார்க்க போறியா?!” என்றபடி பாட்டி வழக்கம்போல நையாண்டியுடன் வரவேற்க,
“அது ஒன்னுமில்ல பாட்டி, செப்டம்பர் மாசம் கதர் வேட்டிக்கு சிறப்பு தள்ளுபடின்னு விளம்பரம் பார்த்தேன் பாட்டி, அதான்!” என்றேன்.
“செப்டம்பர் மாசம் கதர் வேட்டிக்கு தள்ளுபடி ஏன் தந்தாங்க தெரியுமா?” என்று பாட்டி அதிரடியாய் ஒரு கேள்வியை வைக்க,
சின்னக்கவுண்டர் அல்லது நாட்டாமை படம் ரிலீஸ் ஆன நாளைக் கொண்டாடுவதற்காக இருக்குமோ என என் கற்பனை ஓட…
“அது வந்து பாட்டி…!” என்று பாட்டியிடம் எதையோ சொல்வதற்கு வந்தேன், அதற்குள் பாட்டி இடைமறித்து உண்மையான வரலாற்று காரணத்தைக் கூறினாள். நல்ல வேளை நான் தப்பித்துக்கொண்டேன்.
Subscribe
மஹாத்மா காந்தி மதுரைக்கு வந்திருந்த போது, அங்கு மேலாடையின்றி வேட்டியை மட்டும் கோவணமாகக் கட்டிக்கொண்டு வேலை செய்யும் மனிதர்களைக் கண்டு, தானும் இனிமேல் மேலாடை அணிவதில்லை என்ற முடிவை இந்த செப்டம்பர் மாதத்தில்தான் எடுத்தார் காந்தியடிகள்.
வெள்ளை வேட்டிக்கு உவமையாக பாட்டி தும்பைப்பூவைச் சொன்னதும், பள்ளிப்பருவத்தில் வயல்களில் பறித்து விளையாடிய தும்பைப்பூக்கள் என் நினைவுக்கு வந்தன.
“அதென்ன பாட்டி, வெள்ளை வேட்டிக்கு தும்பைப்பூவை உதாரணமா சொல்றாங்க, இட்லிக்கு மல்லிகைப்பூவை உதாரணமா சொல்றாங்க! இதுக்கு ஏதாவது காரணம் இருக்கா” மனதில் எழுந்த சந்தேகத்தை பட்டென கேட்டுவிட்டேன்.
“அதெல்லாம் ஒரு உவமைக்காக சொல்றதுதாம்ப்பா, ஆனா தும்பைப்பூ வெள்ளை நிறத்துக்கு மட்டும் பெயர் போனது இல்ல, மகத்தான மருத்துவ குணங்களும் அதுல இருக்கு!” என்று பாட்டி தனது மருத்துவப் பார்வையை முன்வைத்தாள். நானும் தும்பைப்பூ பற்றி மேலும் கேட்டறிய ஆவலானேன்.
தும்பையின் பொதுவான பலன்கள்
“தும்பை செடியில பெருந்தும்பை, சிறுதும்பை, கருந்தும்பை, மலைத்தும்பை, கவிழ்தும்பை, காசித்தும்பை என பல வகைகள் இருக்கு. தும்பைச் செடியில இலையும் பூவும் இரண்டுமே மருத்துவ குணம் கொண்டிருக்கு. பொதுவா தும்பை உடல் உஷ்ணம் உண்டாக்குவதாகவும், சளி அகற்றுவதற்காகவும், மலமிளக்கியாகவும் பயன்படுது. ஒற்றைத் தலைவலி, தலைபாரம் நீர்க்கோர்வை, இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு தும்பை நல்ல தீர்வா இருக்கு.
தும்பை இலையின் பயன்கள் (Thumbai Leaf Benefits in Tamil)
குறிப்பா தும்பை இலையோட மருத்துவ குணத்தைப் பற்றி சொல்லணும்ன்னா ஐயம்(சளி), முப்பிணி (வாதம்-பித்தம்-கபம்), தலைவலி, மூக்கில் உண்டாகும் நோய்கள், நீர்வேட்கை, இருமல் ஆகிய நீர் சம்பந்தமான நோய்களுக்கு தீர்வா இருக்கு. இந்த பசுமையான இலைகளை புளி சேர்த்து கடைஞ்சு உணவுல சேர்த்து சாப்பிட்டா கண் புகைச்சல், கை-கால் அசதி, அதிக தாகம், சோம்பல் இவையெல்லாம் குணமாகும்.
தும்பை இலைகளை அவ்வப்போது உணவுல சேர்த்துவர, சளி, இருமல், காய்ச்சல் மாதிரி தொந்தரவுகள் அடிக்கடி வராது. இதன் இலைகளையும் பூக்களையும் உலர வச்சு, தேன்ல குழைச்சு அப்பப்போ சாப்பிட, நாட்பட்ட இரைப்பு நோயோட தீவிரம் குறையும்.
தும்பைப்பூவின் பயன்கள் (Thumbai Poo Benefits in Tamil)
தும்பைப்பூ நீர்வேட்கை, முப்பிணி ஜுரம் மற்றும் கண் நோய்களை குணப்படுத்தும்.
குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்றுப்போக்கு நீங்க:
சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் வயிற்றுப்போக்குக்கு தும்பைப்பூ சாறின் ஆறு துளிகளை கர்ச்சூரக்காய் பொடியோடு சேர்த்து கலந்து, தினமும் இரண்டு வேளை கொடுத்து வந்தா வயிற்றுப்போக்கு குணமாகும். பேரீச்சங்காயை கர்ச்சூரக்காய்ன்னு கடைகள்ல விப்பாங்க.
தலைவலி நீங்க:
தீராத தலைவலிக்கு, இரண்டு துளிகள் தும்பைப்பூ சாற்றை மூக்கில் விட்டா தலைவலி குணமாகும்.
தும்பைப்பூவை எண்ணெயில போட்டு காய்ச்சி, தலையில தேய்ச்சு தலை முழுகி வந்தா தலைபாரம், ஒற்றைத் தலைவலி, நீரேற்றம், மூக்கடைப்பு நீங்கும்.
நாவறட்சி நீங்க:
நாவறட்சி ஏற்பட்டு அதிக தாகம் இருக்கும்போது, தும்பைப்பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வச்சு, கொஞ்சம் தேன் கலந்து பானமா பருகி வந்தா, நாவறட்சி சரியாகும்.
உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்க:
பூச்சாறு ஐந்து துளியை உலர்ந்த பேரீச்சம்பழத்துடன் கலந்து சுவைச்சு சாப்பிட்டா, உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைக்கும், நுரையீரல் பாதையில அடைச்சிட்டு இருக்குற கோழையும் வெளியேறும்.”
தும்பைப்பூ மற்றும் இலைகளின் மருத்துவ குணங்களை சொல்லி முடித்துவிட்டு, சூடாக கொதிக்க வைத்த தும்பைப்பூ, தேன் கலந்த பானம் ஒன்றை என்னிடம் கொடுத்து, தும்பைப்பூ போன்ற வெள்ளை மனதின் வெளிப்பாடாக மலர்ந்த புன்னகையுடன் பாட்டி என்னை வழியனுப்பினார்.
மருத்துவ குறிப்பு: டாக்டர். S.சுஜாதா MD (S)
ஆரோக்யா க்ளினிக், சேலம்.