திரிபலா சூரணம் பயன்கள் (Triphala Churna Benefits in Tamil)
திரிபலா சூரணத்தால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள் என்னென்ன என்பதை உமையாள் பாட்டி மற்றும் சத்குருவிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள, தொடர்ந்து படியுங்கள்!
கொல்லைப்புற இரகசியம் தொடர்
தைப்பூசத் திருவிழாவிற்கு பாதயாத்திரையாக பழனிக்கு செல்வதற்கு தயாராகிக் கொண்டிருந்த உமையாள் பாட்டியிடம், ஆசிபெற்று அவளை வழியனுப்ப பாட்டி வீட்டிற்கு சென்றிருந்தேன்.
பாட்டி நான் வருவதற்கு முன்பே இரட்டைப் பிள்ளையார் கோவிலில் சிதறு தேங்காயைப் போட்டுவிட்டு, ஊர் எல்லையைத் தாண்டி நடை பயணத்தைத் தொடங்கிவிட்டதாக அக்கம்பக்கத்தினர் சொல்ல, பைக்கில் சென்று பாட்டியை இடைமறித்தேன்.
"வாப்பா வா, என்ன இதான் பாட்டிய வழி அனுப்புற லட்சணமா, நீ வர்றவரைக்கும் வெயிட் பண்ணிட்டு இருந்தா, தைப்பூசம் முடிஞ்சு மஹாசிவராத்திரி வந்துடும்"
பாட்டி நடந்துகொண்டே என்னை கலாய்க்க, அதிகாலைக் குளிரால் தாமதமாக எழுந்தது பற்றிக் கூறினேன்.
"இளவட்ட பிள்ளை நீ... குளிருக்கு எந்திரிக்க முடியாம போர்வைக்குள்ள முடங்கி இருந்தா, எங்களை மாதிரி கிழவிகள் எல்லாம் என்ன சொல்ல முடியும் சொல்லு!" அலுத்துக்கொண்டபடி பாட்டி கூறினாள்.
"என்னபாட்டி பண்றது குளிர்காலம்னாலே என்னோட உடல் செல்கள் மந்தமாயிடுது. உங்களை மாதிரி அந்த காலத்துல கேழ்வரகு, கம்பு, தினைன்னு சிறுதானியங்களை சாப்பிட்டு, வயல்ல வேலை செஞ்சிருந்தா நானும் இந்நேரம் சுறுசுறுப்பா இருந்திருக்கலாம்" ஒரு ஃப்லோவில் சொன்னாலும் உண்மையைத்தான் சொன்னேன்.
"ஏன் இப்போ என்ன கெட்டுப் போச்சு? இப்போ இருந்து நீ சிறுதானிய உணவுகளை சாப்பிட ஆரம்பிக்கலாம். அதோட குளிர் காலத்துல நமக்கு உதவியா இருக்குற மாதிரி திரிபலா சூரணமும் எடுத்துக்கோ. நம்ம முன்னோர்கள் திரிபலா சூரணம் மாதிரி நிறைய சித்த மருந்துகளை அன்றாட வாழ்க்கையில பயன்படுத்தி வந்திருக்காங்க."
திரிபலா சூரணம் என்பது என்ன?
"திரிபலா சூரணமா...? நான் இதுவரைக்கும் கேள்விப்பட்டதில்ல பாட்டி. அது எதுக்காக சாப்பிடுறது? எப்படி சாப்பிடுறது? அதைப் பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன். நீங்க சொல்றதை கேட்டுட்டே நானும் உங்கக்கூட பாதயாத்திரை வர்றேன் கொஞ்ச தூரம்"
"நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய்ங்கற மூனு காய்களையும் சேர்த்து தயாரிக்கப்படுற பொடிதான் திரிபலா சூரணம்ன்னு சொல்றோம். இதை ஒரு குறிப்பிட்ட முறையில தயாரிக்கணும்.
இந்த மூனு காய்களையும் நிழல்ல காயவைச்சு, அரைச்சு பொடியாக்குவாங்க. கடுக்காய், தான்றிக்காய் நாட்டு மருந்து கடைகள்ல கிடைக்கும். இருந்தாலும் தயாரிக்க சிரமமா இருக்கும்ங்கறதால நாட்டு மருந்து கடைகள்ல வாங்கி பயன்படுத்தலாம். நம்ம ஈஷா லைஃப் ஷாப்ல கூட திரிபலா சூரணம் கிடைக்குது."
"அப்படியா பாட்டி?! அப்படின்னா நான் ஆன்லைன்ல ஆர்டர் செய்றேன். சரி... இதை எப்படி சாப்பிடணும், எவ்வளவு சாப்பிடணும். இதோட பயன்கள் என்னென்ன? கொஞ்சம் சொல்லுங்க." பாட்டியின் நடையின் வேகத்திற்கு சற்று சிரமப்பட்டு ஈடுகொடுத்து நடந்தபடி பாட்டியிடம் தொடர்ந்து கேட்டேன்.
திரிபலா சூரணம் பயன்கள்
வாதம் பித்தம் சமன் செய்ய:
"துவர்ப்பு சுவைகொண்ட இந்த சூரணம் நம்ம உடல்ல வாதம், கபம், பித்தம் ஆகிய மூனும் சமனில்லாததால வரும் பிரச்சனைகளை சரிசெய்ய உதவுது.”
ஆன்டி ஆக்ஸிடன்ட்:
“இதில இருக்குற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சாதாரண கிருமித்தொற்று முதல் புற்றுநோய் செல்கள் வரை எதிர்த்து போராடக்கூடிய அளவுக்கு எதிர்ப்புசக்தியை தருது. ஒரு ஆய்வுல திரிபலா சூரணம் புற்றுநோயை கட்டுப்படுத்தும் திறன்மிக்கதுன்னும், புற்றுசெல்கள் வளரும் அபாயத்தை குறைக்க உதவுவதாவும் கண்டறியப்பட்டிருக்குது.”
செரிமானக் கோளாறுகள் நீங்க:
“செரிமானக் கோளாறுகளால அவதிப்படுறவங்களுக்கு உணவுப்பாதை, குடல் இயக்கம் சீரா செயல்பட இந்த சூரணம் உதவுது.”
Subscribe
மலச்சிக்கல் நீங்க:
“குடலுக்குப் போற உணவுப்பாதையில இருக்குற நச்சுக்களை நீக்கி மலச்சிக்கல் இல்லாம காக்குது. குடல் நச்சுக்களை வெளியேத்தும்போது குடல்ல இருக்குற நாடாப்புழுக்கள், ஒட்டுண்ணிகள், கிருமித் தொற்றுகள் போன்றவற்றையும் வெளியேற்ற உதவுது. குடல் சுத்தமே உடல் சுத்தம்ன்னு நம்ம முன்னோர்கள் சொல்லியிருக்காங்க.”
ரத்த சோகை நீங்க:
“ரத்தத்தில் சிவப்பு அணுக்களோட எண்ணிக்கையை அதிகரிக்கவும் இது உதவுது. இதனால ரத்த சோகை வராம தடுக்கப்படுது.”
சருமம் பொலிவடைய:
“ரத்தத்தை சுத்தம் செய்றதால சரும பிரச்சனைகள் வராம தடுக்குது. சருமம் இயற்கையாவே பொலிவடைய இந்த சூரணம் உதவுது.”
சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்க:
“நீரிழிவு பிரச்சனையான ஹைப்பர் கிளைசீமியானு சொல்ற சர்க்கரை நோயாளிகளுக்கு திரிபலா சிறந்த மருந்தா இருக்கும். உடல்ல குளுக்கோஸ் அளவை சமநிலையில வைக்க இது உதவுது.”
கெட்ட கொழுப்புகளைக் கரைக்கும் தன்மை:
“உடல்ல இருக்குற கெட்ட கொழுப்புகளை கரைக்குற தன்மை இருக்கறதால இதை தினமும் எடுத்துக்கலாம்."
உமையாள் பாட்டி திரிபலா சூரணம் பற்றி கூறிக்கொண்டே ஐந்தாறு கிலோமீட்டர் வரை பாதயாத்திரையில் கடந்துவிட, அவருடன் சேர்ந்து நடந்த எனக்கும் முருகனின் அருள் திரிபலா சூரணம் வழியா கிடைத்ததா உணர்ந்தேன்.
"என்னப்பா அப்படியே பழனி வரைக்கும் வர்றியா? 90'ஸ் கிட்ஸ்கெல்லாம் அடுத்த தைப்பூசத்துக்குள்ள கல்யாணம் ஆகிடணும்னு வேண்டிகிட்டு நடந்து வாப்பா!" பாட்டி என்னை பகடிசெய்து பதம் பார்க்க,
"நானெல்லாம் முரட்டு சிங்கிள் பாட்டி!" என்று சொல்லி பாட்டிக்கு விடைகொடுத்து திரும்பினேன்.
குறிப்பு: ஈஷா லைஃபில் திரிபலா சூரணம் கேப்சூல் வடிவில் கிடைக்கிறது. எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்ற குறிப்பு அதிலேயே இருக்கும். வெளியில் சூரணமாக வாங்கிப் பயன்படுத்துபவர்கள், சித்த மருத்துவரின் ஆலோசனையின் படி எடுத்துக்கொள்ளவும்.
மருத்துவக் குறிப்புகள்:
Dr.S.சுஜாதா,
ஆரோக்யா சித்தா மருத்துவமனை,
சேலம்.
நிணநீர் மண்டலம் மற்றும் திரிபலா சூரணம் பற்றி சத்குரு கூறுவது என்ன? தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!
சத்குரு:
நிணநீர் மண்டலத்தின் முக்கியத்துவம்
நிணநீர் மண்டலம்தான், நம் உடலில் இருக்கிற திரவங்களின் மேலாண்மையை கவனிப்பதுடன், உங்கள் உடலை வெளியில் இருந்து தாக்குகின்ற கிருமிகளை எதிர்க்கிறது. உடலில் ஏற்படுகின்ற காயங்களையும் வீக்கங்களையும் கவனித்துக் கொள்கிறது. காயங்கள் என்றால், வெளியில் ஏற்படுகிற காயங்கள் மட்டும் இல்லை. செல்களின் அளவில் வீக்கங்கள் ஏற்படும். அதற்கு எல்லா நேரமும் உரிய கவனமும் மேலாண்மையும் அவசியம். மேலும் அது எல்லா கழிவுகளையும் கையாள்கிறது.
உடலின் செல்களின் அளவுகளில் கழிவுகள் இருக்கிறது, அது வெளியேற்றப்பட வேண்டும். இல்லையென்றால் அது சேர்ந்துகொண்டே போகும், நச்சுப்பொருளாக மாறிவிடும்.
நிணநீர் மண்டலம் புற்றுநோய் செல்களையும் கையாள்கிறது. அதனால் நிணநீர் அமைப்பு நம் ஆரோக்கியத்தை பராமரிக்க மிகவும் முக்கியமானது. அதுமட்டுமல்லாமல், உடலை உயிரோட்டத்தோடு வைத்துக்கொள்ளவும், நிணநீர் மண்டலம் உயிர்ப்பாக இருக்க வேண்டும்.
நிணநீர் உறுப்புகளின் அவசியம்
நிணநீர் உறுப்புகளில் மிகவும் முக்கியமானது, மண்ணீரல். அதனுடைய அங்கமான மற்ற சில உறுப்புகள் உங்கள் உடலில் இருந்து எடுக்கப்பட்டிருக்கலாம். உங்களுக்கு டான்சில்ஸ் இருக்கிறதா? இன்னும் இருக்கிறதா, எடுத்தாகிவிட்டதா? அப்பண்டிக்ஸ் இருக்கிறதா? அல்லது எடுத்தாகிவிட்டதா?
ஏனென்றால்...
இப்போதெல்லாம் டாக்டர்கள் அப்படி எடுப்பதில்லை. இல்லையென்றால், நாங்கள் வளர்ந்து கொண்டிருந்த காலங்களில், அதுதான் முறை என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். உங்களுக்கு 13, 14 வயது என்றால், உங்கள் டான்சில்சை எடுத்துவிட வேண்டும். என் உடன் பிறந்தவர்களில், எனக்கு மட்டும்தான் அது நீக்கப்படவில்லை. சும்மா டான்சில்ஸ்சை எடுத்துவிடுவது, அப்பண்டிக்ஸ்சை எடுத்துவிடுவது, அவர்கள் வேறு ஏதோ அறுவை சிகிச்சைக்காக அவர்களின் உடலைத் திறந்தால், அப்பண்டிக்சை எடுத்துவிடுவார்கள். அப்போது இதுதான் வழக்கமாக இருந்தது.
அதிர்ஷ்டவசமாக இப்போது அப்படி இல்லை. இந்த உறுப்புகள் எல்லாம்தான் நிணநீர் மண்டலத்தைப் பராமரிக்கிறது, பார்த்துக்கொள்கிறது. இதை நல்ல நிலையில் வைத்துக்கொள்வது, உடல் உயிரோட்டமாக இருப்பதற்கு மிகவும் முக்கியம். இல்லையென்றால், என்ன நடக்கிறது என்று உங்களுக்கு தெரியாமலேயே உடல் இப்படி போய்விடும் - சீக்கு வந்த கோழி மாதிரி ஆகிவிடுவீர்கள்.
அப்போது நான் உங்களை தியானம் செய்ய சொன்னால்… (தூங்கிவிழுவது போல் செய்து காண்பிக்கிறார்)
உயிரோட்டமாக தியானத்தில் ஈடுபட
ஏனென்றால், உடல் ஒரு குறிப்பிட்ட அளவு உயிரோட்டத்தோடும், சுத்திகரிப்பு அமைப்பை நன்றாக வேலை செய்யும் நிலையில் வைத்துக்கொள்வது, ஒருவர் கண்மூடி விழிப்பாக இருக்க வேண்டும் என்றால், மிகவும் முக்கியம்.
ஏனென்றால், தியானம் செய்பவருக்கு மிகப்பெரிய எதிரி தூக்கம்தான். யாரோ இப்படி சொல்கிறார்கள்,
"இல்லை சத்குரு, செல்போன் தான். நான் தியானம் செய்ய நினைக்கிறேன், ஆனால்...”
அது வேறு பிரச்சனை. ஆனால் நீண்ட நேரம் தியானம் செய்ய விரும்புபவர்களுக்கு, உடலில் உள்ள பெரிய எதிரி என்றால் தூக்கம்தான். நீங்கள் கண்மூடி இருக்கும்போது, உயிரோட்டத்துடனும் விழிப்பாகவும் இருக்க வேண்டும் என்றால், உங்கள் நிணநீர் மண்டலம் துடிப்பாக செயல்படுவது மிக அத்தியாவசியமானது.
காலை சாதனாவின் முக்கியத்துவம்
போதுமான அளவு சுத்திகரிப்பு உடலில் நடக்க வேண்டும். அதனால்தான் காலையில் நீங்கள் செய்கிற சாதனா மிக முக்கியமானது. குறிப்பாக, நீங்கள் ஹடயோகா, சூரிய கிரியா, சக்தி சலன கிரியா எல்லாம் செய்கிறீர்கள் என்றால், உங்கள் நிணநீர் அமைப்பு உயிர்ப்பாக இருக்கிறது என்று நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். கண்டிப்பாக சாதனா அதை பார்த்துக்கொள்ளும். நீங்கள் 45 - 50 வயதுக்குள் இருந்தீர்கள் என்றால், சாதனாவே போதுமானது. அதுவே பெரும்பாலான வேலைகளை செய்துவிடும்.
ஆனால் நீங்கள் தாமதமாக சாதனா செய்ய ஆரம்பித்திருந்தால், உங்களுடைய retirement காலத்தில் நீங்கள் சாதனாவை செய்ய ஆரம்பித்திருந்தால், உங்களுக்கு இன்னும் கொஞ்சம் உதவி தேவைப்படலாம்.
போதுமான தண்ணீர் குடிப்பதன் அவசியம்
உங்கள் தாகத்திற்கு மட்டுமல்லாமல், இன்னும் அதிகமாக தண்ணீர் குடிப்பது, தோராயமாக 20 - 25% அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். நான் போதுமான தண்ணீர் குடிக்கிறேனா என்று எப்படி தெரிந்துகொள்வது? நீங்கள் எந்த மருந்தும் எதுவும் எடுத்துக் கொள்ளவில்லை என்றால், நீங்கள் போதுமான தண்ணீர் குடித்தீர்கள் என்றால், உங்கள் சிறுநீர் தண்ணீர் போல தோற்றமளிக்கும், அதில் எந்த நிறமும் இருக்காது. நீங்கள் ஏதோ மருந்து எடுத்தாலே தவிர, வேறு எந்த நிறமும் இருக்கக்கூடாது, அது சும்மா தண்ணீர் போல தெரிய வேண்டும். உங்கள் சிறுநீர் அப்படி இல்லை என்றால், நீங்கள் போதுமான அளவு தண்ணீரை குடிக்கவில்லை என்று அர்த்தம்.
இது முக்கியமானது. இது மிக முக்கியமானது.
உங்கள் உடலுக்குள் இருக்கிற திரவங்கள் சரியாக பராமரிக்கப்பட வேண்டும். ஏனென்றால் இந்த திரவங்களுடைய ஓட்டம் உங்கள் உடலில் நல்லபடியாக நடக்க வேண்டும். கழிவுகள் எல்லாவற்றையும் அப்புறப்படுத்த வேண்டும். தினமும் உடலில் நடக்கிற செயல்பாடுகளிலேயே நிறைய கழிவுகள், நிறைய அசுத்தங்கள் உருவாகிறது. அது எல்லாம் திறம்பட வெளியேற்றப்பட வேண்டும். அப்படி அது நடக்கவில்லை என்றால்... உங்களில் பல பேருக்கு அப்படி இருக்கிறது, நான் அதை பார்க்கிறேன். சிலரிடமாவது பார்க்கிறேன்.
திரிபலா செய்யும் அற்புதம்
நீங்கள் 35 - 40 வயதிற்குள் இருந்தால் இந்த சுத்திகரிப்பு நடக்க வேண்டும். நீங்கள் காலையில் கொஞ்சம் சீக்கிரமாக எழுந்து கொஞ்சம் அதிகமாக சாதனா செய்ய வேண்டும்.
இல்லையென்றால், திரிபலா என்று ஒன்று இருக்கிறது, இது வெப்ப மண்டலத்தில் கிடைக்கின்ற மூன்று அதிசயமான பழங்களின் கலவை. அது முறையாக கலக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த திரிபலாவை கொஞ்சம் தண்ணீரோடு, அல்லது ஒரு ஸ்பூன் பாலோடு, அல்லது நீங்கள் தேனோடு கலந்துகூட இதை எடுத்துக்கொண்டால், உங்கள் உடலமைப்பில் சுத்திகரிப்பு நடக்கும். இது நிஜமாகவே அற்புதமான ஒன்று. நான் இப்படி எதையும் எடுத்துக் கொள்வதில்லை.
ஆனால் என்னிடம் என்ன சொல்கிறார்கள் என்றால், இங்கே நம் கடையில் கிடைக்கிற திரிபலா மிக மிக நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.
அப்படித்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். எனக்கு தெரியவில்லை, நீங்கள் அதை பயன்படுத்திப் பார்க்கவேண்டும். அல்லது, வேறு எங்கே வாங்கினாலும், இந்த திரிபலா பல அற்புதங்களை செய்யும். உங்கள் நிணநீர் அமைப்பிற்கு புத்துணர்வு ஊட்டும்.