குழந்தைகளின் கல்வி சிறக்க 5 விஷயங்கள்
குழந்தைகள் தினத்தை முன்னிட்டு சத்குரு பேசிய இந்த உரை, நம் கல்விமுறையை முற்றிலும் மாற்ற வேண்டியதன் அவசியத்தையும், சிறப்பான இளைய தலைமுறையை உருவாக்கிட எவ்வாறு அதை மாற்ற வேண்டும் என்பதையும் எடுத்துரைக்கிறது.
மனப்பாடத்திலிருந்து உணர்தலுக்கு
கல்வி என்று வரும்போது நாம் ஒரு முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறோம். கல்வி என்றால் என்ன என்பது பற்றிய நமது அடிப்படை சிந்தனை ஒரு மாற்றத்திற்கு உள்ளாகத் தேவை என்பதல்ல, ஒரு முழுமையான மாற்றத்திற்கு உட்பட வேண்டிய நேரம் இது.
அறிவை சேகரிப்பதற்கு எந்த மதிப்பும் இல்லாத காலம் வரப்போகிறது. தகவல்கள் சேகரிப்பதை அறிவாற்றலாக காட்டுவது விரைவில் மறையப்போகிறது. நல்ல ஞாபக சக்தியை அறிவாற்றலாக காட்டுவது மறைந்து போகப்போகிறது - இதுதான் இன்றைய கல்வி முறையின் அடிப்படையாக இருக்கிறது. யாருக்கு நல்ல ஞாபக சக்தி இருக்கிறதோ, அவர்தான் மிகவும் அறிவாளி என்று மதிப்பிடப்படுகிறார். ஆனால் இன்று, உங்கள் கைபேசியில் உங்களை விட சிறந்த நினைவாற்றல் இருக்கிறது என்பது உங்களுக்குத் தெரியும். நம் சில கைபேசிகளில் 600 ஜிபி memory உள்ளது, நம்புங்கள், உங்களிடம் அந்த அளவு நினைவாற்றல் இல்லை.
உங்கள் புரிதல் மற்றும் நுண்ணறிவின் கூர்மை உங்கள் மனதில் நீங்கள் சுமக்கும் நினைவாற்றலின் மதிப்பைவிட முக்கியமானதாக இருக்கும். இது சரியான நேரம் - மனிதர்கள் விரிவடைவதற்கான சரியான நேரம், ஏனென்றால் அறிவு என்று சொல்லப்படும் இந்த சுமை மனிதர்களைக் கொன்று கொண்டிருக்கிறது. ஒரு குழந்தையின் மனதில் பல வழிகளில் தகவல்களை திணிப்பது, ஒவ்வொரு மனிதனும் தன்னுள் கொண்டிருக்கும் அடிப்படை புத்திசாலித்தனத்தை கொன்று கொண்டிருக்கிறது. மனித அறிவு வித்தியாசமான இயல்பு கொண்டது. நினைவாற்றலை அறிவாக நாம் ஒருபோதும் தவறாக புரிந்துகொள்ளக்கூடாது. ஒவ்வொரு மனிதனிடமும் ஒரு குறிப்பிட்ட அளவு புத்திசாலித்தனம் இருக்கிறது. ஒரே ஒரு கேள்விதான், "அந்த குறிப்பிட்ட புத்திசாலித்தனம் வெளிப்பட சரியான சூழலை நாம் வழங்கமுடியுமா?" இதுதான் சவால்.
Subscribe
கல்வியாளர்களாக நீங்கள் அனைவரும் இப்போது ஒரு முக்கியமான காலகட்டத்தில் இருக்கிறீர்கள். நம் கல்வி முறையை எவ்வளவு விரைவாக மாற்றுகிறோமோ, அவ்வளவு சிறப்பாக உலகில் நம் குழந்தைகளின் எதிர்காலம் அமையும்.
வெவ்வேறு தேவைகளுக்கான கல்வியை உருவாக்குங்கள்
இதை நாம் புரிந்துகொள்ள வேண்டும், இந்தியா ஒரே நாடாக இருந்தாலும், இந்தியாவுக்குள் குறைந்தது நான்கு முதல் ஐந்து நாடுகள் இருக்கின்றன. எல்லோரும் ஒரே மாதிரியான தேவைகளைக் கொண்டிருக்கவில்லை. நாட்டில் மிகவும் செல்வந்த வர்க்கம் உள்ளது. உயர் நடுத்தர வர்க்கம் என்று ஒரு பிரிவு உள்ளது, அவர்களின் கனவுகள் மிகவும் வித்தியாசமானவை.
நடுத்தர வர்க்கத்தில், எப்படி நமது குழந்தைகள் வேலை பெறுவார்கள் என்பது போன்ற விஷயங்களே முக்கியமானதாக உள்ளது. கிராமப்புற மற்றும் பிற வர்க்கங்களில், அவர்கள் இருக்கும் சமூக மற்றும் பொருளாதார குழியிலிருந்து எப்படியாவது வெளியே வரவேண்டும் என்பதே முக்கியமானதாக உள்ளது. இந்த அனைத்து பிரிவுகளையும் ஒரே மாதிரியாக அணுக முடியாது. அப்படி செய்வது தவறானது. ஒரே மாதிரியான கல்வி என்ற பெயரில் நாம் இதை செய்ய முயற்சிக்கிறோம். இதன் பின்னால் உள்ள சிந்தனையை நான் புரிந்துகொள்கிறேன், ஆனால் இது நடைமுறைக்கு சாத்தியமில்லை. இதன் காரணமாகவே 24 பில்லியன் டாலருக்கும் மேல் மதிப்பிலான கல்வி இந்தியாவிலிருந்து வெளிநாட்டு பல்கலைக்கழகங்களுக்கு செல்கிறது. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினருக்காகவும், நாம் வழங்க வேண்டியது மிக முக்கியமானது. நாம் இதை வழங்கவில்லை என்றால், இந்த நாட்டின் நல்வாழ்வுக்குத் தேவையான பல்வேறு வகையான மனிதர்களை உருவாக்க முடியாது. நமக்கு தலைவர்கள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், விவசாயிகள், கைவினைக் கலைஞர்கள் என அனைவரும் தேவை, ஒரு நாட்டை நடத்த பல்வேறு வகையான மக்கள் தேவை.
60களிலும் 70களிலும், நாம் இந்த நாட்டில் படிப்பறிவைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்த காலம் ஒன்று இருந்தது. ஏனெனில் ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டுச் சென்றபோது, நமது கல்வியறிவு மக்கள்தொகையில் ஏழு சதவீதம் மட்டுமே இருந்தது. மீதமுள்ளோர் படிப்பறிவற்றவர்களாக இருந்தனர். எனவே நமது முழு கவனமும், "எப்படி நம் நாட்டு மக்களை தங்கள் பெயரை காகிதத்தில் எழுத வைப்பது?" என்பதில் இருந்தது. இதுதான் நமது கவனமாக இருந்தது. நமது நாட்டில் கல்வி அதற்காகவே வடிவமைக்கப்பட்டது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
அலுவலக உதவியாளர்களை உருவாக்குவதற்காகவே இது இருந்தது. உலகம் முழுவதையும் அடிமைப்படுத்த திட்டமிட்டிருந்த அவர்கள், இந்தியர்கள் மிகச் சிறந்த அலுவலக உதவியாளர்களாக இருப்பதை கண்டறிந்தனர். இது பிரிட்டிஷ் அரசாங்கத்தால் வடிவமைக்கப்பட்ட கல்விமுறை. நாம் சில மாற்றங்களைச் செய்துள்ளோம், ஆனால் இன்னும் அதிக மாற்றங்கள் தேவை.
நான் சொல்வது உங்களுக்கு அசாதாரணமாக தோன்றலாம், ஆனால் நான் சொல்வது என்னவென்றால், மொழியைத் தவிர, ஆங்கிலேயர்கள் கல்வியில் விட்டுச் சென்ற அனைத்தும் போகவேண்டும். மொழி என்பது உலகிற்கான ஒரு கடவுச்சீட்டு. நாம் மொழியை வைத்துக்கொள்ள வேண்டும். மற்ற அனைத்தும் போகவேண்டும். ஏனெனில் அது ஒரு குறிப்பிட்ட நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டது. அங்கே நுண்ணறிவை விட கீழ்ப்படிதல் முக்கியமாக கருதப்பட்டது. அது நமது குழந்தைகளை வளர்க்கும் முறை அல்ல.
இது அடிமைப்படுத்தப்பட்ட மக்களை வளர்க்கும் முறை. ஆனால் இப்போது இதை மாற்றத் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாளை காலை உடனடியாக இதை மாற்றிவிட முடியாது. அப்படி செய்தால் அது நொறுங்கிவிடக்கூடும். நாம் இதை மெதுவாக மாற்றத் தொடங்க வேண்டும். நாம் எதிர்பார்க்கும் இலக்கு அல்லது மற்ற விஷயங்களை நோக்கி பணியாற்றத் தொடங்க வேண்டும்.
குழந்தைகளுக்கான தனித்திறமைகளைக் கண்டறிந்திடுங்கள்
விளையாட்டு, கலை, இசை, நாடகக்கலை மற்றும் வாழ்க்கையின் ஒவ்வொரு பரிமாணமும் இந்த நாட்டிற்கு ஒரு செல்வம்தானே? எனவே பெருந்திரளான... லட்சக்கணக்கான மக்களுக்கு ஒரே நிலையில் கல்வி வழங்குவது என்பது வேறு. திறமை கொண்ட குழந்தைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி கற்பிப்பது என்பது வேறு. நாம் இதைச் செய்யவில்லை என்றால், நமக்கு சிறந்த விஞ்ஞானிகள் கிடைக்கமாட்டார்கள், சிறந்த கணிதவியலாளர்கள் கிடைக்கமாட்டார்கள், நாட்டில் குறிப்பிடத்தக்க எதுவும் இருக்காது.
இப்படித்தான் இந்த கலாச்சாரம் எப்போதும் வளர்க்கப்பட்டு வந்திருக்கிறது. இந்த நாட்டின் மிகச்சிறந்த கணிதமேதைகள், மிகச்சிறந்த இசைக்கலைஞர்கள், மிகச்சிறந்த நடனக் கலைஞர்கள் ஆகியோரை நாம் உருவாக்கினோம். ஏனெனில் பாரம்பரிய இசைப் பள்ளிகளுக்கு சென்று இசையைக் கற்றவர்கள் இசையை மட்டுமே கற்றனர். நாம் இதைச் செய்யவில்லை என்றால், எந்தத் துறையிலும் எந்தவிதமான மேதைகளையும் உருவாக்க முடியாது. எல்லோருக்கும் எல்லாவற்றிலும் கொஞ்சம் தெரிந்திருக்கும், ஆனால் அவர்கள் எதிலும் சிறந்தவர்களாக இருக்கமாட்டார்கள்.
கேள்வி கேட்கும் பண்பை வளர்த்திடுங்கள்
நீங்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும், இது ஒரு நாடு, இங்கே யாராலும் நமக்கு கட்டளைகளை வழங்க முடியவில்லை. கடவுள் என்று சொல்லப்படும் ஜீவன்கள் வந்தபோதும் கூட, அவர்களால் நமக்கு கட்டளைகளை வழங்க முடியவில்லை. நாம் அவர்களிடம் கேள்விகளை மட்டுமே கேட்டோம். ஆதியோகி வந்தார், அவர் தனது அன்பு மனைவியிடம் பேச வாய் திறந்தார். அவள் அவரிடம் லட்சக்கணக்கான கேள்விகளைக் கேட்டு அவரை திகைக்க வைத்தாள். கிருஷ்ணர் தனது நெருங்கிய நண்பர் அர்ஜுனனிடம் பேச முயற்சிக்கிறார், அதுவும் போர்க்களத்தின் விளிம்பில்; அந்த நபர் நூற்றுக்கணக்கான கேள்விகளைக் கேட்டார்.
அவர்களால் வாயை மூடி கேட்க முடியாது, ஏனென்றால் அது இந்தியர்களின் பண்பல்ல. வேறு எந்த இடத்திலும் தன்னை கடவுள் அல்லது கடவுளின் தூதர் அல்லது கடவுளின் மகன் என்று சொல்பவர்கள், "இது கடவுளின் விருப்பம், வாயை மூடி கேளுங்கள்" என்று சொல்வார்கள், அனைவரும் கேட்பார்கள். ஆனால் இந்த நாட்டில் அப்படி இல்லை, ஏனெனில் நமக்குள் அறிவியல் மனப்பான்மை ஆழமாக வேரூன்றி இருக்கிறது. இன்றைய காலத்தைப் போல எல்லாவற்றையும் புறக்கணிக்கும் அறிவியல் மனப்பான்மை அல்ல. நமக்கு வேறுவிதமான அறிவியல் மனப்பான்மை உள்ளது; நாம் மரியாதையுடன் எல்லாவற்றையும் கேள்வி கேட்கிறோம். நாம் அவரை வணங்கி, "நீங்கள் என் கடவுள், ஆனால் எங்களுக்கு கேள்விகள் உள்ளன" என்கிறோம். ஹலோ? இதுதானே நம் வழி? எனவே, நாம் மத நம்பிக்கை உள்ளவர்கள் அல்ல. நமக்கு மிகவும் அறிவியல் மனப்பான்மை உள்ளது, எப்போதும் கேள்விகள் கேள்விகள் கேள்விகள் என்று கேட்டுக்கொண்டே இருப்போம்.
பள்ளிகளில் அந்த கேள்வி கேட்கும் பண்பை நீங்கள் அழித்துவிடக் கூடாது, அவர்கள் கண்டிப்பாக கேள்விகள் கேட்க வேண்டும். பாடப்புத்தகத்தில் எழுதப்பட்டிருப்பது முழுமையான உண்மை அல்ல. முன்பை விட இப்போது அதிகமான கேள்விகள் எழவேண்டும், ஏனெனில் நீங்கள் கேள்விகளை எழுப்பவில்லை என்றால், மனித நுண்ணறிவு மெதுவாக தூங்கிவிடும்.
நீங்கள் நிச்சயம் அந்த மாதிரியான நபராக மாறவேண்டும். நீங்கள் எதுவும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. நீங்கள் அப்படிப்பட்ட நபராக மாறும்போது, எல்லோரும் உங்களைப் போல இருக்க விரும்புவார்கள். எல்லா குழந்தைகளும் உங்களைப் போல இருக்க விரும்புவார்கள். எனவே, அதுவே உங்களுக்கு பெரிய பயிற்சி.
நீங்கள் அவர்களைப் போல நடனமாட கற்றுக்கொள்ள வேண்டும், அவர்களைப் போல பாட விரும்ப வேண்டும், அவர்களைப் போல பேசக் கற்றுக்கொள்ள வேண்டும், அப்போது அவர்கள், "வாவ், இப்படித்தான் நான் இருக்க விரும்புகிறேன்" என்பார்கள். அதனால், நீங்கள் எதையோ எதிர்பார்ப்பதற்கு பதிலாக, அவர்கள் உங்களை விரும்பும்படி செய்ய வேண்டும். யாராவது உங்களை விரும்ப வேண்டும் என்றால், நீங்கள் என்ன செய்ய வேண்டும், கொஞ்சம் ஜொலிக்க வேண்டும். ஹலோ, அப்படித்தானே? நீங்கள் கொஞ்சம் ஜொலிக்க வேண்டும். எப்படி ஜொலிப்பது என்று நான் சொல்லமாட்டேன், ஏனென்றால் வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு விதமாக ஜொலிக்க வேண்டும்.
மனிதநேயத்தை மட்டுமே மதிப்புமிக்கதாக நிறுவுங்கள்
எனக்கு தனிப்பட்ட முறையில், எனது நேர்மை என்பது எனது நன்னெறி காரணமாக அல்ல. என் நேர்மை எனது மனிதநேயத்தால் மட்டுமே. நாம் மனிதர்கள் என்பதுதான் நாம் கொண்டிருக்க வேண்டிய ஒரே மதிப்பு. மற்ற மதிப்புகள் அனைத்தும் நாம் உருவாக்கியவைதானே? முக்கியமான விஷயம் என்னவென்றால், நமது மனிதநேயம் எந்த நேரத்திலும் சமரசம் செய்யப்படக்கூடாது, ஏனெனில் பல சமயங்களில் நமது நன்னெறி, நமது மதிப்புகள், நமது நெறிமுறைகள் நமது சொந்த மனிதநேயத்திற்கு எதிராக இருக்கின்றன. நன்னெறி உள்ளவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் ஒருவருக்கொருவர் மனிதநேயமற்ற செயல்களைச் செய்கிறார்கள், இல்லையா? ஹலோ?
மதம், நன்னெறி, நெறிமுறைகள் மற்றும் மதிப்புகளின் பெயரில், மக்கள் ஒருவருக்கொருவர் கொடூரமான செயல்களைச் செய்திருக்கிறார்கள், அப்படித்தானே? அப்படியெனில், மனிதநேயம் என்றால் என்ன? இந்த பூமியில் உள்ள மற்ற உயிரினங்கள் அனைத்தும் அவற்றின் உள்ளுணர்வின்படி செயல்படுகின்றன. அவற்றிற்கு நெறிமுறைகள் இல்லை, மதிப்புகள் இல்லை, தத்துவம் இல்லை, மதம் இல்லை. அவை தங்கள் உள்ளுணர்வுகளால் செயல்படுகின்றன. அவை உள்ளுணர்வோடு எல்லாவற்றிற்கும் எதிர்வினையாற்றுகின்றன. இதனால்தான் நாம் புலியை புலி என்றும், வெட்டுக்கிளியை வெட்டுக்கிளி என்றும், யானையை யானை என்றும் அழைக்கிறோம். உங்களை மட்டுமே, உங்களை மட்டுமே நாம் "மனிதன்" என்று அழைக்கிறோம். இதன் அர்த்தம் எப்படி இருக்க வேண்டும் என்பதை நீங்கள் தெரிந்திருக்க வேண்டும். அதிலிருந்து நாம் எவ்வளவு தொலைவில் இருக்கிறோம். எப்படி இருக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரிந்திருந்தால், நீங்கள் அற்புதமாக இருப்பீர்களா அல்லது மோசமாக இருப்பீர்களா?
மனிதனாக இருப்பது என்றால், நீங்கள் எல்லா விலங்குகளையும் பார்க்கிறீர்கள்; இது எல்லா இடங்களிலும் நடக்கிறது, நீங்கள் காட்டு விலங்குகள் இதைச் செய்வதைப் பார்த்திருக்க மாட்டீர்கள், ஆனால் எல்லா இடங்களிலும் சிறுநீர் கழிக்கும் தெருவில் உள்ள நாய்களையாவது நீங்கள் பார்க்கிறீர்கள். அதற்கு சிறுநீர்ப்பாதை பிரச்சனை இருக்கிறது என்று நினைக்கிறீர்களா? இல்லை, அது ஒரு சிறுநீர் ராஜ்ஜியத்தை உருவாக்குகிறது. அது எப்போதும் தனது எல்லைகளை நிர்ணயித்துக்கொள்கிறது.
அதனால், மனிதனாக இருப்பதின் அடிப்படை விஷயம் என்னவென்றால், நமக்குள் எந்த எல்லையும் இல்லாமல் இங்கே வாழமுடியும். மற்ற உயிரினங்கள் எல்லாம் "இது எனது, அது உனது" என்ற அடிப்படையில்தான் செயல்படுகின்றன. "இது என் பகுதி, அது உன் பகுதி" என்று. ஆனால் மனிதனுக்கு அதற்கு அப்பாற்பட்டு செல்லும் திறன் உண்டு. நீங்கள் அந்த திறனைப் பயன்படுத்தவில்லை என்றால், உங்களை ஒரு மனித உயிரினம் (ஜீவன், பிராணி) என்றுதான் அழைக்க வேண்டும். மனிதன் என்று அல்ல. மனிதன் என்பவன் எல்லைகளைக் கடந்து செல்லும் திறன் கொண்டவன்.
இந்த ஒரு விஷயத்தை நாம் செய்தால், இதை நம் குழந்தைகளிடம் வளர்த்தால், அவர்களின் நன்னெறி பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லை. அவர்கள் அற்புதமான மனிதர்களாக இருக்கும் வரை, நமது மனிதநேயமே நம்முடைய அடையாளமாக இருக்கும் வகையில் நாம் அவர்களிடம் மனிதநேயத்தை தூண்டிவிட வேண்டும். மற்ற அனைத்தும் அதற்கு அடுத்து தான் இருக்க வேண்டும். எனது விருப்பு வெறுப்புகள், நன்னெறி, மதிப்புகள், நம்பிக்கைகள், கடவுள்கள், தேவதூதர்கள், சொர்க்கங்கள் அனைத்தும் நமது மனிதநேயத்தை பின்பற்ற வேண்டும். மனிதநேயமே நீங்கள் யார் என்பதன் அடையாளமாக இருக்க வேண்டும். நீங்கள் இதைத்தான் நம் குழந்தைகளிடம் கொண்டுவர வேண்டும்.