டார்வினும் ஆதியோகியும் ஒன்றாகும் புள்ளி

சத்குரு:

சார்லஸ் டார்வின், 152 ஆண்டுகளுக்கு முன்பு, அவருக்கு ஐம்பத்திரண்டு வயதாக இருந்தபோது, அவர் தனது பரிணாமக் கோட்பாட்டை முன்வைத்தார். இதை 15000 ஆண்டுகளுக்கு முன்பே ஆதியோகி கூறிவிட்டார். நீங்கள் இதை கவனமாகப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன், டார்வினின் பரிணாமக் கோட்பாடு பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?

சூரியக் குடும்பத்தில் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டாலொழிய, உங்களால் உடல் ரீதியாகப் பரிணமிக்க இயலாது.

பங்கேற்பாளர்கள்: தெரியும்

சத்குரு: இல்லை, நீங்கள் குரங்காக இருந்தீர்கள் என்ற உண்மையைப் பற்றி மட்டுமல்ல. (சிரிக்கிறார்கள்)

"இந்த கிரகத்தில் உயிரின் முதல் வடிவம் தண்ணீரில் தான் இருந்தது" என்று ஆதியோகி கூறினார். சரி, இதைப் பற்றி நீங்கள் பல வழிகளில் கேள்விப்பட்டிருப்பீர்கள், "ஒன்பது அவதாரங்கள் உள்ளன" என்று உங்களுக்கு சொல்லியிருக்கிறார்கள் தானே?

மச்ச அவதாரம், Matsya Avatharam

ஒன்பது அவதாரங்கள் என்னென்னவென்று நீங்கள் எனக்கு சொல்ல முடியுமா?

பங்கேற்பாளர்கள்: மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வராக அவதாரம், நரசிம்ம அவதாரம், வாமன அவதாரம், பரசுராமர் அவதாரம், ராமர் அவதாரம், கிருஷ்ணர் அவதாரம், புத்தர் அவதாரம்.

அவதாரங்கள் குறிக்கும் தன்மைகள்

கூர்ம அவதாரம், Koorma Avatharam

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

சத்குரு: இப்போது, நீங்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும், இப்போது, மக்கள் இந்தப் பெயர்களை மனிதர்களாகப் பார்க்கத் துவங்கிவிட்டனர். அவர்களை குணங்களாகப் பாருங்கள். உயிரின் முதல் வடிவம் மீனாகத் தான் இருந்தது. முதல் உயிர் தண்ணீரில் தான் இருந்தது என்பதை டார்வினும் ஒப்புக்கொள்கிறார். பூமியில் நிகழ்ந்த இரண்டாம் உயிர் வளர்ச்சி நீர்நில வாழ் உயிரினம் - கூர்ம அவதாரம் - நீரில் வாழ்ந்ததில் பாதி நிலத்தில் வலம் வரத் துவங்கியது. இதனைத் தொடர்ந்து, இடையில் பல உயிரினங்கள். ஆனால், குறிப்பிடத்தக்க அடுத்த உயிரினம் பாலூட்டிகள். பாலூட்டிகளில், முதலாவதாக வராகம்.

முதல் பாலூட்டி வராகம்

வராக அவதாரம், Varaha Avatharam

நீங்கள் பார்க்கக் கூடிய எல்லா விலங்குகளிலும் காட்டுப்பன்றி அல்லது பன்றி மிகவும் உடல் சார்ந்த விலங்கு. அதாவது, அது தன் உடலில் மிகவும் வலுவாக வேரூன்றியுள்ளது, எந்த அளவுக்கென்றால், யாரேனும் ஒரு காட்டுப்பன்றியை வேட்டையாடச் சென்றால், நீங்கள் அதை அவ்வளவு எளிதில் கொல்ல முடியாது. நாம் இருக்கும் இடம், மழைக்காடுகளுக்கு அடுத்து உள்ளது. இங்கு சில பழங்குடி கிராமங்கள் உள்ளன. பள்ளிக்குச் செல்லும் பழங்குடி சிறுவர்கள் - பத்து-பன்னிரண்டு வயது சிறுவர்கள் - திரும்பி வரும்போது, ஒரு மானைக் கண்டால், அவர்கள் எங்கிருந்தாவது குச்சிகளை எடுத்து, மானைத் தாக்கி அதைக் கொன்றுவிடுவார்கள். சிறுவர்கள் வெறும் குச்சியை வைத்து இப்படி செய்துவிட முடியும். அப்படித்தான் மற்ற பாலூட்டி விலங்குகள் எல்லாம் படைக்கப்பட்டுள்ளன. உங்களைக் கூட, தலையில் ஒரு தட்டு தட்டினால் போதும், நீங்கள் இறந்துவிடுவீர்கள் (சிலர் சிரிக்கிறார்கள்). ஆனால் காட்டுப்பன்றி அப்படியல்ல. அது தன் உடலில் மிகவும் வேரூன்றியிருப்பதால் அது அவ்வளவு சுலபமாக செத்துவிடாது. இன்றும் கூட, யாராவது அளவுக்கு மீறி உடல் பருத்திருந்தால், "பன்றியைப் போல் இருக்கிறான்" என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஏனெனில் பன்றி மிதமிஞ்சிய உடல் தன்மையைக் குறிக்கிறது.

எனவே, அவர் விவரிக்கும் முதல் பாலூட்டி ஒரு காட்டுப் பன்றி அல்லது பன்றி. அடுத்து என்ன? நரசிம்மர் -பாதி மனிதன், பாதி விலங்கு. அடுத்து வாமன அவதாரம், ஒரு குள்ள மனிதர். அடுத்து பரசுராமர், ஓர் முழு வளர்ச்சியடைந்த மனிதர். ஆனால் உணர்ச்சி ரீதியாகக் கொந்தளிக்கிறவர். அவர் தனது சொந்தத் தாயின் தலையையே வெட்டிவிட்டார். அடுத்து ராமர், அமைதியான மனிதர். அடுத்தவர் கிருஷ்ணர், அன்பான மனிதர். அடுத்தவர் புத்தர், அவர் ஒரு தியானி. அடுத்து வர இருப்பதாக நம்பப்படுபவர் ஒரு ஆன்மீகவாதி. எல்லோரும், "அது நான் தான், நான் தான்" என்று உரிமை கோருகிறார்கள்.

பரிணாம நினைவாற்றலின் முக்கியத்துவம்

நரசிம்ம அவதாரம், Narasimha Avatharam

நீங்கள் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால், இவர்கள் மனிதர்கள் அல்ல. அந்த மனிதர்கள் நாம் பார்த்த அந்த குணங்களின் பிரதிநிதிகள். எனவே, இப்படித்தான் உயிர் பரிணமித்தது. நம்புங்கள், இது முற்றிலும் டார்வினின் பரிணாமக் கோட்பாட்டை ஒத்துள்ளது. இது 15000 ஆண்டுகளுக்கு முந்தையது. இதற்கு, அவர் Galapagos தீவுகளுக்குச் சென்று நுண்ணோக்கியின் கீழ் எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கவில்லை. கண்களை மூடி அங்கேயே அமர்ந்து அதனைப் பார்த்தார், நீங்கள் இதற்குள் இன்னும் ஆழமாகப் போனால், இதில் ஓர் பரிணாம நினைவாற்றல் உள்ளது. நீங்கள் ஒரு ஆணாக இருந்து ஒரு தர்பூசணி சாப்பிடுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அது சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு ஆணாக மாறுகிறது. அப்படித்தானே? இப்போது நீங்கள் ஒரு பெண், நீங்கள் ஒரு தர்பூசணி சாப்பிட்டால், அது ஒரு பெண்ணாக மாறும். ஒரு பசு ஒரு தர்பூசணி சாப்பிட்டால், அது பசுவாக மாறுகிறது. இது ஏன் நிகழ்கிறது என்றால், இங்கே பரிணாம நினைவாற்றல் மற்றும் மரபணு நினைவாற்றல் என்று அழைக்கப்படும் ஒன்று உள்ளது.

பரிணாம நினைவாற்றல் தான் நீங்கள் மனித வடிவத்தை மட்டுமே எடுக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிறது. நீங்கள் ஏதோ திடீரென்று ஒரு புத்திசாலி தர்பூசணியை சாப்பிட்டு அதனால் குழப்பமடைந்து பசுவாக மாறிவிட்டீர்கள் என்றெல்லாம் இல்லை. அப்படியெல்லாம் ஒருபோதும் நடக்காது. சரியா?

மரபணு நினைவாற்றலின் முக்கியத்துவம்

வாமன அவதாரம், Vamana Avatharam

அது மட்டுமன்றி நமக்குள்ள மரபணு நினைவாற்றல் தெளிவாகக் கூறுகிறது, "இது ஒரு பெண்ணின் உடல், நீங்கள் விரும்பியதைச் சாப்பிடுங்கள், இது ஒரு பெண்ணாக மட்டுமே மாறும், ஒரு ஆணாக அல்ல". ஏனென்றால் மரபணு நினைவாற்றல் மிகவும் கட்டுக்கோப்பாக உள்ளது. மரபணு பொறியியலுக்கு (Genetic Engineering) எதிராக மக்கள் ஏன் போராடுகிறார்கள் என்பதற்கான காரணம் இதுதான்.

அடிப்படைக்குள் தலையிடத்துவங்கி விட்டால், முதலில் தாவரங்கள் பின்னர் விலங்குகள் அதன்பின் அது உங்களிடம் வரும். உங்களுக்குத் தெரியாது, அவர்கள் ஏதேனும் தவறு செய்துவிட்டால், நீங்கள் மீண்டும் பாதி மனிதனாக, பாதி விலங்காக மாறிவிடுவீர்கள் (சிரிப்பலை). என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியாது. அதனால்தான் மரபணு பொறியியலுக்கு இந்த எதிர்ப்பு. ஏனென்றால் நீங்கள் அடிப்படைத் தன்மைகளுக்குள் தலையிடத் தொடங்கிவிட்டால், நாம் இன்னும் அதை முழுமையாகப் புரிந்துகொள்ளாத நிலையில், என்ன நடக்கும் என்று உங்களுக்குத் தெரியாது.

ஆதியோகி பரிணாமத்தை அறிந்தது எப்படி?

எனவே, ஆதியோகி தனது பரிணாம நினைவாற்றலுக்குள் உற்று நோக்கி, "முதலில் நாம் மீன்களாக இருந்தோம், பின்னர் நாம் இது, இது, இதுவாக அந்த ஒன்பது பரிணாமங்களில் இருந்து இப்போது இங்கே இருக்கிறீர்கள். இப்போது நீங்கள் இங்கே இருக்கிறீர்கள், இந்த மனித வடிவத்தை எடுத்துள்ளீர்கள். நீங்கள் இங்கிருந்து வளர்ச்சியடைய விரும்பினால், நீங்கள் விழிப்புணர்வில் மட்டுமே வளர்ச்சியடைய முடியும். உடல்நிலையில் உங்களின் பரிணாம வளர்ச்சி முடிந்துவிட்டது" என்கிறார். உடல்நிலையில் உங்கள் பரிணாம வளர்ச்சி ஏன் முடிந்துவிட்டது என்பதற்கு ஒரு முழு கணிதமே உள்ளது. அதில் பற்பல அம்சங்கள் உள்ளன, நான் கணிதத்திற்குள் செல்ல மாட்டேன். ஏன் என்றால், சில பெண்கள் தங்கள் தலையை அசைத்து, "இல்லை, எங்களுக்குக் கணக்கு வேண்டாம்" என்கின்றனர் (சிரிப்பலை). ஆனால் கணிதம் இல்லாமல் மறைஞானம் இல்லை.

மிக எளிமையாகச் சொல்வதானால், நீங்கள் இப்போது யாராக இருக்கிறீர்கள் என்பதன் இயல்பே ஒரு விளைவுதான். உங்களுக்குள் பல்வேறு விதமாக உள்ள நினைவாற்றலின் சிக்கலான ஒரு கலவை - உங்களுக்கு இந்த விதமான உடல் இருப்பதே உங்களின் பரிணாம மற்றும் மரபணு நினைவாற்றலால் தான். நீங்கள் இதை விரும்புகிறீர்கள், அதை வெறுக்கிறீர்கள் என்பதெல்லாம், உங்களின் பல்வேறு நிலையிலான ஆழ்மனம், உள்மனம், கர்மா மற்றும் பிற வகையான நினைவாற்றல்களின் காரணமாகத் தான். பெரும்பாலான நேரங்களில் நீங்கள் எதை விரும்புகிறீர்கள், எதை விரும்பவில்லை என்பது உங்களின் கட்டுப்பாட்டில் இல்லை.  அதைத் தாண்டி மேலே செல்ல நீங்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும், ஏனென்றால் உங்களைப் பற்றிய எல்லாவற்றையும் உங்களின் ஞாபகங்கள் தான் தீர்மானிக்கின்றன.

இனிமேலும் மனிதன் பரிணாம வளர்ச்சி அடைய முடியுமா?

ராமர் அவதாரம், Ramar Avatharam

எனவே, நாம் பரிணாமம் என்று சொல்லும்போது, ஒரு வகையில், நினைவுகளின் விளையாட்டைப் பற்றியும், அனுபவங்களின் கட்டமைப்பைப் பற்றியும் மற்றும் பல்வேறு நிலைகளுக்கு வளர்வதைப் பற்றியும் பேசுகிறோம். ஆகவே அவர் சொல்கிறார், "நீங்கள் முயற்சிக்கத் தயாராக இருந்தால், உங்களைக் கட்டுக்குள் வைத்திருக்கும் அனைத்தையும் உங்களால் கடந்து செல்ல முடியும்." ஒரே விஷயம் என்னவென்றால், உங்கள் உடல் இதற்குமேல் மாற்றங்களுக்குத் தகுந்ததாக வடிவமைக்கப்படவில்லை; ஏனெனில் இந்த சூரியக் குடும்பத்தைப் பொறுத்தவரை - அவர் இதையும் குறிப்பிடுகிறார் - "சூரியக் குடும்பத்தில் ஏதேனும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டாலொழிய, உங்களால் உடல் ரீதியாகப் பரிணமிக்க இயலாது."

இப்போது இயற்கையாகவே இந்தக் கேள்வி அவர்களுக்கு வந்தது, "நீங்கள் இவ்வளவு புரிந்து கொண்டிருக்கிறீர்கள், ஆனால் எங்கள் மூளைகள் போராடிக் கொண்டிருக்கின்றன, இதை நாங்கள் கொஞ்சம் வளர்த்துக்கொள்ள முடியுமா?" அதற்கு அவர் "இயலாது" என்பதை வேறு விதமாக சொன்னார். ஆனால் இன்று, நவீன நரம்பியல் விஞ்ஞானிகள் இதைச் சொல்கிறார்கள், உங்கள் மூளை இந்த உடலில் உற்பத்தியாகும் ஆற்றலில் இருபது சதவீதத்தை உட்கொள்கிறது; இதன் அளவு இவ்வளவு தான் என்றாலும் (சைகை காட்டுகிறார்), இது உங்கள் உடலில் உற்பத்தியாகும் ஆற்றலில் இருபது சதவீதத்தை உட்கொள்கிறது. மீதமுள்ள இவ்வளவு பெரிய உடல், மீதமுள்ள எண்பது சதவீதத்தை உட்கொள்கிறது.

எனவே, நீங்கள் உங்கள் நுண்ணறிவை அதிகரிக்க விரும்பி, அதற்கு மூளையின் அளவை அதிகரித்தால், அதற்குத் தேவையான அளவு ஆற்றலை உடலால் வழங்க முடியாது. எனவே, மூளையின் அளவை அதிகரிப்பது சாத்தியம் இல்லை. இதை நிகழ்த்துவதற்கான மற்றொரு வழி என்னவென்றால், அதே அளவு மூளைக்குள் அதிக நியூரான்களை உள்ளடக்கலாம். அப்படிச் செய்தால், உங்களுக்கு ஓர் மிளிரும் நுண்ணறிவு ஏற்படலாம், ஆனால் பெரும் அளவில் இடைத்தொடர்புகளும் குழப்பங்களும் நேரிட்டு, நீங்கள் மிகவும் அமைதியற்ற மனிதராகி விடுவீர்கள்.

அதீத செயல்பாடுகொண்ட குழந்தைகளை கையாள்வதற்கு...

உங்களில் சிலருக்கு வீட்டில் இது போன்ற குழந்தைகள் இருக்கலாம். அவர்கள் மிகவும் அமைதியற்று இருப்பார்கள். நுண்ணறிவு மிக்கவர்கள்! ஆனால் ஒயாது அங்குமிங்கும் அலைபாய்ந்து கொண்டிருப்பார்கள். ஏனெனில் அவர்களின் மூளையில் அளவுக்கதிகமாக நியூரான்கள் அடைக்கப்பட்டுவிட்டன. இப்போது, உடனே நீங்கள் அவர்களை மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறீர்கள். அவர்கள் மூன்று எழுத்துக்களில் ஒன்றை கொடுப்பார்கள், ADD, ADY, XYZ, ஏதோவொன்று, ஏதோ – MNOP (சிரிக்கிறார்).

நீங்கள் மருந்து கொடுக்கத் தொடங்கக்கூடாது. நீங்கள் செய்யவேண்டியது என்னவென்றால், அப்படி ஒரு குழந்தை உங்களிடம் இருந்தால், நீங்கள் அவர்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டும். அவர்களை இயற்கையில் நடக்க வைக்க வேண்டும். பாலைவனத்தில் 3 நாள் நடைப்பயணத்திற்கு அழைத்துச் செல்ல வேண்டும்; எங்காவது அழைத்துச் சென்று நீந்த வைக்க வேண்டும். அவர்களை இயற்கைக்கு வெளிப்படுத்த வேண்டும். நிறைய உடல் செயல்பாடுகளைச் செய்ய வைக்க வேண்டும். அப்படிச் செய்தால் உடல் தானாகவே சமாளித்துக் கொள்ளும். அது அதிகப்படியான நியூரான்களை அகற்றி, தனது சொந்த சமநிலைக்கு வரும். நீங்கள் மருந்து கொடுத்தால், நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், நீங்கள் எடுக்கும் எந்த மருந்துக்கும், ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு மட்டும் செல்லும் நுண்ணறிவு கிடையாது. அது எல்லா இடங்களுக்கும் செல்கிறது. அவற்றால் மூளையின் ஒரு பகுதியை மட்டும் மந்தமாக்க முடியாது. அவை முழு மூளையையும், முழு உடலையும் மந்தமாக்கும். யாரோ ஒருவர் மருந்துகளைக் கொடுக்க ஆர்வமாக இருக்கிறார் என்பதற்காக, நீங்கள் ஒரு குழந்தையின் வாழ்க்கையை அதன் துவக்கத்திலேயே அழித்துவிடுவீர்கள்.

வெற்றிக்கு வழிவக்கும் முயற்சி

புத்தர் அவதாரம், Buddha Avatharam

எனவே, நீங்கள் முயற்சிக்கத் தயாராக இருந்தால், நீங்கள் அனைத்து எல்லைகளையும் கடக்க முடியும் எனும் இந்த பரிமாணத்தை அவர் வழங்கினார். இயற்கை நமக்கு எந்த எல்லைகளை விதித்திருந்தாலும், நீங்கள் முயற்சிக்கத் தயாராக இருந்தால் மட்டுமே அவை ஒவ்வொன்றையும் கடக்க முடியும். இதைத் தான் ஆதியோகி அவர்களுக்குத் தெரிவித்தார். பின்னர் அவர்களின் தற்போதைய எல்லைகளை எவ்வாறு கடப்பது என்பதற்கான வழிமுறைகளையும் வழங்கத் தொடங்கினார்.

மக்கள் இப்போதும் கூட, "நாம் இப்படித்தான் இருக்கிறோம்", என்று நம்புகிறார்கள். இல்லை இல்லை, நீங்கள் இப்படித்தான் என்று இல்லை. துரதிர்ஷ்டவசமாக, நீங்கள் உங்களை இப்படிப்பட்டவராக ஆக்கிக் கொண்டுவிட்டீர்கள். ஆனால் நீங்கள் பல்வேறு வழிகளில் உங்களை மென்மேலும் மேம்படுத்திக் கொள்ளவும் முடியும். நீங்கள் பார்த்திருக்கிறீர்களா, ஒரே நாளில், சில நேரங்கள் நீங்கள் அற்புதமானவராக இருக்கிறீர்கள், சில நேரங்களில் நீங்கள் கொடூரமானவராக இருக்கிறீர்கள்.

அதனால் நான் சொல்வது, நீங்கள் எப்போதும் இது உங்களுக்கு நடந்துவிட்டது என்று நினைக்கிறீர்கள். இல்லை, இல்லை. நீங்கள் உங்களை அற்புதமானவராக ஆக்கிக் கொள்ளலாம், இல்லையென்றால் கொடூரமானவராக ஆக்கிக்கொள்ளலாம். இல்லையா?

எனவே, நீங்கள் எல்லைகளுக்கு உட்பட்டு இருக்கலாம், எல்லைகளைக் கடந்தவராகவும் இருக்க இயலும். எனவே, முதன்முறையாக, அவர் இதை மனிதக்குலத்திற்குக் கொண்டு வந்தார். பின்னர், இந்த பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் காலப்போக்கில், அவற்றின் தீவிர முயற்சியால் தன் சுய எல்லைகளைத் தாண்டி எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளன என்பதைப் பற்றிப் பேசினார், அல்லது வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அவர் 15000 ஆண்டுகளுக்கு முன்பே பரிணாமக் கோட்பாட்டை முன்வைத்தார்.

Photo credit: Dasavatharam image from Wikimedia, Matsya avatharam image from Wikimedia, Koorma avataram image from Wikimedia, Varaha avataram image from Wikimedia, Narasimha image from Wikimedia, Vamana image from Wikimedia, Parasurama image from Wikimedia, Rama image from Wikimedia, Krishna image from Wikimedia, Buddha image from Wikimedia