நோய்த்தொற்றுக்குப் பின்னர் உள்ள காலத்தில் இந்தியாவின் செழுமைக்கு சத்குருவின் புதுமையான யோசனைகள்
நிச்சயமற்ற காலகட்டம் புதுமையான தீர்வுகளை எதிர்பார்க்கிறது. மேலும், வழக்கத்திற்கு மாறான யோசனைகள் உருவாகும் வண்ணம் கற்பனை செய்ய முடியாத அளவு வாய்ப்புகளையும் வழங்குகிறது. நம் தேசம் முன்பு எப்போதும் இல்லாத வகையில் இந்த சூழலில் இருந்து மீண்டு வர சத்குரு சில புதுமையான யோசனைகளை நமக்கு வழங்குகிறார்.
ஊரடங்குக்குப் பின்னர் இந்தியாவின் பொருளாதாரம்
சத்குரு: இந்த சவாலான காலகட்டத்தில் தனிமனிதர், நிறுவனங்கள் மற்றும் சிறு, பெரு வணிகங்கள் என அனைவரும் ஒரு குறிப்பிட்ட அளவு பொருளாதார பாதிப்பை எதிர்கொள்வர் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இது உலகின் முடிவு அல்ல! பல ஆண்டுகால உழைப்பினால் உருவான வணிகங்கள் சில வாரங்களில் உடைந்து சரிந்து காணாமல் போகப் போவதில்லை.வரும் காலங்களில் ஏற்படவிருக்கும் கணிசமான பொருளாதார பின்னடைவை நாம் அனைவரும் தாங்கிக்கொள்ள வேண்டும். ஆனால் இது பதட்டத்திற்கோ பயத்துக்கோ உரிய நேரம் அல்ல. உங்கள் உள்சூழல் இனிமையானதாக இருந்தால்தான் உங்களுடைய உடலும் மனமும் சிறந்த முறையில் செயல்படும் என்பதற்கு போதுமான அளவு விஞ்ஞான மற்றும் மருத்துவபூர்வமான சான்றுகள் பல உள்ளன. பயத்திலும் பதட்டத்திலும் இருந்தால் நீங்கள் சிறந்த முறையில் செயல்பட மாட்டீர்கள்; முடங்கிப் போய்விடுவீர்கள். எனவே முக்கியமாக இந்த சோதனை காலத்தில் நீங்கள் ஆனந்தமாக இருப்பது மிக முக்கியமான ஒன்று. இதை நீங்கள் பெறுவதற்கு உங்களுக்கு உதவும் வகையில் பல கருவிகளை நாங்கள் இணைய வழி மூலமாக வழங்குகிறோம். தயவுசெய்து இவற்றை உபயோகப்படுத்துங்கள். ஏனெனில் உங்கள் உடல் மற்றும் மூளையை நீங்கள் எவ்வாறு கட்டுப்படுத்தி பயன்படுத்துகிறீர்களோ அதை பொருத்தே உலகில் உங்கள் வெற்றி அமையும்.
இந்தியப் பொருளாதாரத்தை புதுப்பிக்க புதுமையான யோசனைகள்
#1 வணிகங்களை இந்தியாவிற்குள் ஈர்ப்பது
சத்குரு: இந்தியாவின் சந்தைகளையும் தொழில்களையும் சீரமைப்பு செய்ய வெளிநாடுகளில் இருந்து நமக்கு வலுவான முதலீடுகள் தேவை. இப்போது அதற்கான வாய்ப்பு உள்ளது. ஏனெனில் வணிகங்கள் நமது சில அண்டை நாடுகளில் இருந்து வெளியேறுவதைப் பற்றி சிந்தித்து வருகின்றன. ஏனெனில், அந்த அண்டை நாடுகளில் அவர்கள் வைத்திருந்த நம்பிக்கை இப்போது தீவிரமாக அரிக்கப்பட்டு வருகிறது. இந்த இடங்களில் இருந்து வெளியேற தம் நிறுவனங்களுக்கு ஜப்பான் ஏற்கனவே கோடிக்கணக்கான டாலர்களை வழங்கியுள்ளது. மேலும் அமெரிக்கா இதுபோல் இன்னும் ஒரு வலுவான முடிவை எடுக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்.
300க்கும் மேலான உலகின் முதன்மையான நிறுவனங்கள் தங்களுக்கான புதிய புகலிடங்களை தேடி வருகிறார்கள் - முழுமையாக இல்லாவிட்டாலும் பகுதியாகவாவது மாற்றம் செய்ய விரும்புகிறார்கள். இது ஒரு மிகப்பெரிய வாய்ப்பு. மேலும் இந்த வாய்ப்புகளை ஒரு சிறப்பான நிலையில் நின்று சாதகமாக பயன்படுத்தும் நிலையில் இந்தியா உள்ளது. இதற்கு உறுதியான முயற்சி நம் தொழில்துறை பரப்புரையாளர்களிடமிருந்து, வணிகங்களிடமிருந்து, முக்கியமாக நம் அரசிடமிருந்து தேவைப்படுகிறது. அரசும் இதைப் பற்றி விழிப்புணர்வோடு இருக்கிறது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். ஆனால் நாம் எவ்வளவு திறமையாக செயல்படுகிறோம், எவ்வளவு ஆர்வத்தோடு இந்த வாய்ப்புகளை பற்றிக் கொள்கிறோம் என்பதே நம்முடைய வெற்றியைத் தீர்மானிக்கும். இந்த முன்னூறு நிறுவனங்களும் இந்தியாவுக்கு வந்தால் - பகுதியளவு உற்பத்திக்கு வந்தாலும் சரி - இதை நம் 28 மாநிலங்களுக்கும் ஓரளவு பரப்பி நாம் செயல்படுத்தினால், நம்முடைய பொருளாதாரத்தை ஓங்கி ஒலிக்கச் செய்ய முடியும்.
#2 நூதனத்துக்கான நம் மரபணுவை தட்டியெழுப்ப வேண்டும்
சத்குரு: இந்திய மக்களாகிய நாம் மிகப் புதுமையான, புதியதை உருவாக்கும் ஆற்றலுடைய சமுதாயம் என்று நம்மை நாமே முதுகில் தட்டிக்கொண்டு பாராட்டிக் கொண்டிருக்கிறோம். நாம் எவ்வளவு புதுமையானவர் என்பதை நிரூபிப்பதற்கு இதுவே தக்க தருணம். இந்த நோய்த்தொற்று, நம் தலைமுறை சந்தித்த மிகப்பெரிய சவால் ஆகும். ஆனால் இதிலிருந்து மீண்டு வரும் திறன் நமக்கு உள்ளது. ஒரு தேசமாக நமக்கு ஒரு குறிப்பிட்ட அனுகூலம் உள்ளது. மேலும் புவிசார் அரசியலில் நாம் ஒரு குறிப்பிட்ட வகையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளோம்.
துரதிருஷ்டவசமாக கடந்த 10 வருடங்களில் உலகின் பொருளாதார முன்னேற்றத்தில் இருந்து நாம் வெளியேற்றப்பட்டோம் - முக்கியமாக ஆசியாவில். பல ஆசிய நாடுகள் நம்மைவிட குறைந்தது 25 முதல் 30 வருடங்கள் முன்னேறி உள்ளார்கள். அடுத்த மூன்று முதல் ஐந்து வருடங்களில் இந்த நிலையை சரிசெய்வதற்கு நமக்கு கிடைத்த சிறந்த வாய்ப்பு இது என்று நான் நினைக்கிறேன்.
நாம் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த சவாலை சரிசெய்ய எந்த மந்திரக்கோலும் இல்லை. நாம் அனைவரும் அடிப்படையில் நாம் செய்து கொண்டிருக்கும் செயல்களைப் பற்றி மறுஆலோசனை செய்ய வேண்டும். மிகப்பெரிய புதுமைகளை நூதனங்களை உருவாக்க நாம் தயாராக இருக்க வேண்டும். நாம் வசதியாக அமர்ந்து கொண்டிருக்கும் கோபுரங்களை விட்டு இறங்கி தரைக்கு வந்து நடைமுறையில் உள்ள பலவற்றை மறுகண்டுபிடிப்பு செய்து புதுமைகளை உருவாக்க தயாராக இருக்க வேண்டும்.
Subscribe
#3 கிராமப்புற இந்தியாவின் மறுமலர்ச்சி
சத்குரு: புள்ளிவிபரங்களின்படி உலகில் 72 சதவிகித முதலீடு வெறும் 32 நகரங்களில்தான் உள்ளது. இவ்வாறு இருக்கையில் மற்ற பகுதிகளில் வாழும் மக்கள் நகரங்களுக்கு இடம் பெயர்வது என்பது இயற்கையான ஒன்றாக உள்ளது. இந்தியாவில் 22 கோடி மக்கள் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களுக்கு இடம்பெயர்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நிகழ்ந்தால் நகரங்களில் ஏற்படும் அவலநிலை பற்றி நீங்கள் கற்பனை செய்துகொள்ள முடியும்.
இதை நாம் தடுக்க வேண்டுமெனில் முதலீடுகள் பரவலாக இருக்கவேண்டும். ‘மான்செஸ்டர்-ஸ்டைலில்’ தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதை நிறுத்தவேண்டும். அங்குதான் பெருமளவு உற்பத்தி முறை துவங்கப்பட்டு அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் தயாரிக்கப்படும் வகையில் அனைவரும் ஒரே இடத்திற்கு சென்று வேலை செய்யும் நிலை ஏற்பட்டது. ஆனால் எல்லா தொழில்களும் சில நகரங்களில் மட்டும் குவிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. அவை பரவியிருக்க வேண்டும். நாட்டிலுள்ள 700க்கும் மேலான மாவட்டங்களில் தொழில்களை பரப்புவதற்கான முயற்சிகளை நாம் மேற்கொள்ளாவிட்டால், இடம் பெயர்வது என்பது சமாளிக்க முடியாத ஒன்றாக மாறிவிடும்.
தற்போது இந்திய பொருளாதாரம் மிகக்குறுகிய ஒரு இடத்தில் அமைந்துள்ளது. ஒரு பொருளாதாரத்தை உருவாக்குவதற்கு அது பாதுகாப்பான முறை அல்ல. பொருளாதாரம் பரவியிருக்க வேண்டும். மேலும் அதைப் பரவச் செய்வதற்கு கிராமப்புற இந்தியாவிற்கு தொழில்களை எடுத்துச் செல்வதுதான் ஒரே வழி. இது மிகக்கடினமான ஒன்று என்று எனக்கு புரிகிறது. ஏனெனில் கிராமப்புற இந்தியாவில் தகுதியானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சி அளிப்பது என்பது மிக அதிகமான முயற்சி. ஆனால் இதை நீங்கள் இப்போது செய்தால் மிக அதிகமான விரிவாற்றால் உடையதாய் எளிதில் கையாளத்தக்கதாக அமையும். அடுத்த 10 வருடங்கள் கழித்து வைரஸையோ, அதுபோன்ற ஏதோ ஒன்றையோ நாம் சந்திக்க நேர்ந்தால், மிகச் சிறப்பாக அதை கடந்துபோக நம்மால் முடியும்.
விவசாயம் மற்றும் அதை சார்ந்த தொழில்கள் மிக முக்கிய சாத்தியங்களாக அமைந்துள்ளன. வழக்கத்தில் உள்ள பயிர்களுக்கு நடுவே மரங்களை வளர்க்கும் திட்டமான வேளாண்காடு வளர்ப்பு கிராமப்புற பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவர வல்லது. 69,760 விவசாயிகள் வேளாண்காடு வளர்ப்புக்கு மாற நாம் உதவியுள்ளோம். அதன்மூலம் அவர்களின் வருமானம் 5 முதல் 7 வருடங்களில் 300-லிருந்து 800 சதவிகிதம் உயர்ந்துள்ளது. பொருளாதார வாய்ப்புகள் நாடு முழுமைக்கும் பரவ வேண்டும். அதை நோக்கிய முக்கியமான படி வேளாண்காடு வளர்ப்பு ஆகும்.
#4 விவசாயத்தில் உள்ள வணிக வாய்ப்புகள்
சத்குரு: தற்போது உலகிலுள்ள நாடுகளில் 60 சதவிகித மக்கள் விவசாயத்தில் ஈடுபட்டுள்ள ஒரே நாடு இந்தியாதான். அவர்களுக்கு மண்ணை உணவாக்கும் மந்திரம் தெரிந்திருக்கிறது. வருடத்தில் 12 மாதங்களும் உணவு உற்பத்தி செய்யும் திறன் நமக்கு உள்ளது. மேலும், பலவகையான மண் வகைகள், தட்பவெப்ப நிலைகள் மற்றும் அட்சரேகை வரம்பு என அனைத்தும் சாதகமாக கொண்டுள்ள நாம் உலகின் எந்தப் பயிரையும் விளைவிக்கும் ஆற்றலை பெற்றுள்ளோம். அடுத்த 5 முதல் 10 வருடங்களில் நாம் சரியான செயல்களை செய்தால் இந்தியாவை உலகின் உணவுக் களஞ்சியமாக நம்மால் மாற்ற முடியும். நாம் இதில் கவனம் செலுத்த வேண்டும். அதில்தான் மக்கள் உள்ளனர்; அதில்தான் நிலமும் உள்ளது; மேலும், அதில்தான் இந்தியாவின் செல்வமும் உள்ளது.
#5 கல்வியை மறுஆய்வு செய்தல்
சத்குரு: கல்வியில் கொண்டுவர வேண்டிய கடலளவு மாற்றங்கள் நீண்ட நாட்களாக தாமதமாகி வருகின்றன. செயற்கை நுண்ணறிவு மற்றும் வைரஸின் உதவியினால் நமக்கு இதுவரை தெரிந்த பள்ளிகள் ஒரு முடிவுக்கு வரலாம்.
தற்போது பள்ளிக்கல்வி அமைப்புகள் மாணவர்களுக்கு தகவல்களைத்தான் வழங்கி வருகின்றன. இந்த தகவல் தொழில்நுட்ப காலத்தில் இது தேவையற்ற ஒன்று. ஏனெனில், தகவல்கள் எல்லா இடங்களிலும் கிடைக்கின்றன. அதை அறிந்து கொள்வதற்கு உங்களுக்கு பள்ளிப் புத்தகங்கள் தேவையில்லை. ஆசிரியர்கள் அந்த தகவல்களை தர வேண்டியது இல்லை. அவர்கள் உத்வேகத்தையும், கவனத்தையும், பரிசோதனைகளையும் மற்றும் வேறு பல விஷயங்களையும் மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
தற்போது நமக்கு இருக்கும் மிகப்பெரிய ஆபத்து யாதெனில், நம்மிடம் படித்தவர் போல பாவனை காட்டும் பல இளைஞர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு இரண்டையும் இரண்டையும் கூட்டத் தெரியாது. உதாரணமாக, தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாணவரும் எட்டாம் வகுப்பு வரை - பரிட்சை சரியாக எழுதாவிட்டாலும் - கட்டாயத் தேர்ச்சி பெற வேண்டும் என்பது ஒரு விதியாக உள்ளது. இது ஒரு தவறான தயை. இதனால் தன் வயல்களுக்கு திரும்ப சென்று உழைக்க முடியாததன் தந்தையர் செய்யும் தொழில்களில் ஈடுபட முடியாத பல இளைய தலைமுறையினரை நாம் வளர்த்துள்ளோம். ஏனெனில் அவர்கள் உடலளவில் தகுதியானவராகவோ, மனநிலையில் அந்த தொழிலை செய்யக் கூடியவராகவோ இல்லை. நம் நாட்டில் இதுபோல பல லட்சக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். குற்றம், பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்துக்கு இது அனுகூலமான சூழலை உருவாக்குகிறது. ஏனெனில், இளைஞர்கள் எந்த திறமையும் இல்லாமல் வெறுமனே தெருக்களில் திரிந்துகொண்டு இருக்கிறார்கள்.
நீங்கள் 18 வயதை அடையும்போது பல்கலைக்கழகம் செல்பவராகவோ அல்லது வாழ்வாதாரத்தை அமைத்துக்கொள்ளும் திறனை கொண்டவராகவோ இருக்கும் வகையில் நாம் கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இது இரண்டும் உங்களிடம் இல்லாவிட்டால் நீங்கள் ராணுவம் அல்லது துணை ராணுவம் அல்லது திறன் மேம்பாட்டு நிறுவனத்தில் ஒரு வருட கல்வி என கட்டாயப்பணியில் ஈடுபட வேண்டும். அவர்கள் உடலளவில் தகுதி வாய்ந்தவர்களாக, மனதளவில் தகுதி வாய்ந்தவர்களாக, ஒரு திறனை வளர்த்துக்கொள்ளும் தகுதி வாய்ந்தவர்களாக, அதை செயல்படுத்தும் ஒழுக்கம் நிறைந்தவராக உருவாக்கப்பட வேண்டும்.
இதன்மூலம் மகத்தான அளவு திறமைகளை நம் நாட்டில் உருவாக்க முடியும். அனைவருக்கும் பள்ளிக்கல்வி சார்ந்த மனநிலை இருக்க வேண்டிய அவசியமில்லை. அவர்கள் பல்கலைக்கழகங்கள் செல்லும் தேவையும் இல்லை. அவர்கள் மற்ற திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும் - புதியதாக பொருட்களை உருவாக்குவது மற்றும் பல்வேறு திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
தொழில்துறைக்கு திறமையானவர்கள் தேவை. அவர்கள் ஒரு நீண்ட கால முதலீடாக பத்தாம் வகுப்பு தேறிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து தங்கள் தொழிலுக்குத் தேவையான திறன்களில் அவர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட அளவிலான இடையூறு ஏற்படத்தான் செய்யும். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். அவ்வாறு செய்தால்தான் நம் இளைய தலைமுறையினரின் ஆற்றலை நம்மால் கட்டவிழ்த்து விட முடியும்.
#6 கழிவுகளை செல்வமாக மாற்ற வேண்டும்
சத்குரு: இந்தியாவில் வெகு சில நகரங்களைத் தவிர மற்ற நகரங்கள் அனைத்தும் சரியான திட்டமிடலுடன் அமைக்கப்படவில்லை. அத்தகைய நகரங்கள் கடந்த நூறு வருடங்களில் தாறுமாறாக வளர்ந்துள்ளன. இதனால் அங்கு சுகாதாரம் என்பது மிகப்பெரிய சவாலாக உள்ளது. இதை நாம் கையாளத் தேவையான முக்கியமான விஷயம் யாதெனில் தொழில்துறை மற்றும் இல்லக்கழிவுகள் சரியான முறையில் பிரிக்கப்பட வேண்டும்.
தற்போது பல மாசுபடுத்தும் தொழில்களுக்கு அவர்களே தங்களுக்குரிய சுத்திகரிப்பு நிலையங்களை அமைக்க வேண்டும் என்ற சட்டம் நம் நாட்டில் உள்ளது. இது ஒரு மிகப்பெரிய தவறாகும். ஏனெனில் அந்த சுத்திகரிப்பு நிலையங்கள் ஆய்வு செய்யும் நாட்களில் மட்டும்தான் இயங்கும்! நீ வெளியேற்றும் கழிவு எனக்குத் தொழில் மற்றும் எனது மூலப்பொருள் என்று மாறும் வண்ணம் சுத்திகரிப்பு தொழில்கள் உருவாவது மிக அவசியம். அவ்வாறு நிகழ்ந்தால் என் மூலப்பொருள்கள் எப்போதும் என் தொழிலில் சுத்திகரிப்பு செய்யப்படுவதை நான் உறுதி செய்வேன். நீங்கள் சுத்திகரிப்புத் தொழிலை மிக லாபகரமானதாக செய்ய முடியும்.
இல்லங்களுக்கு தண்ணீர் மற்றும் மின்சார உபயோகத்திற்கான கட்டணம் உள்ளது போல இல்லக் கழிவுகளை வெளியேற்றுவதற்கான கட்டணங்கள் உருவாக வேண்டும். இது கட்டாயம் நிகழ வேண்டும். இல்லையெனில் இவற்றை சுத்திகரிப்பதற்கு பணம் கிடைக்காது. இன்று கழிவுகளை செல்வமாக மாற்றும் பல தொழில்நுட்பங்கள் உருவாகிவிட்டன. கழிவுகளுக்கு பொருளாதார மதிப்பு இருந்தால் மக்கள் அவற்றை கழிவுகளாக வெளியேற்ற விடமாட்டார்கள். இதுவே கழிவிலிருந்து செல்வத்திற்கு மாறுவதற்கான பயணம்.
ஆசிரியர் குறிப்பு: எந்த சவாலையும் எதிர்கொள்ளும் வகையில் உங்களைத் தயார்படுத்திக்கொள்ள ஈஷா யோகா ஆன்லைன் கற்றுக்கொள்ளுங்கள். கோவிட் செயல் வீரர்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு பாதி கட்டணத்திலும் வழங்கப்படுகிறது.