இந்தியாவின் வடகிழக்குப் பகுதிகள் அன்னியமாக தெரிவதேன்?
இந்தியாவின் பிற பகுதியிலிருந்து வடகிழக்கு மக்கள் அன்னியமாகிவிட்டனரா? அவ்விதமாக வடகிழக்கு மக்கள் ஏன் உணர்கின்றனர் என்ற கேள்விக்கு சத்குரு பதிலளிப்பதுடன் இந்தியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து இந்தப் பகுதியின் முன்னேற்றம் குறித்த ஒரு சுருக்கமான பின்னணியையும் தருகிறார்.
கேள்வி : இந்தியாவின் பிற பகுதியிலிருந்து வேறுபட்டுவிட்டதாக வடகிழக்கு இந்திய மக்கள் ஏன் உணர்கின்றனர்?
சத்குரு :
இது தொடர்பான விஷயங்களையும், வரலாற்றையும் நாம் சற்று புரிந்துகொள்ளவேண்டும். சுதந்திரத்திற்குப் பிறகு, வடகிழக்குப் பகுதிக்கான வரைவுகளும், திட்டங்களும் உருவாகிக்கொண்டிருந்தபோது, அந்த நிலப்பகுதியின் புராதன இயல்பு மற்றும் பழங்குடிக் கலாச்சாரத்தைத் தொடவேண்டாம் என்று ஜவஹர்லால் நேரு அறிவுறுத்தப்பட்டார்.
வடகிழக்குப் பகுதியைத் தொடவேண்டாம் என்பது ஆரம்பத்தில் உணர்வின் அடிப்படையில் எடுக்கப்பட்ட ஒரு முடிவாக இருந்தது, ஏனென்றால் அந்த மக்கள் தங்களுக்கே உரிய சூழலியல் தன்மையில் நல்லவிதமாக வாழ்ந்து கொண்டிருந்தனர். கார்கள், இரயில்கள் மற்றும் விமானங்கள் போன்றவற்றைப் புகுத்தி, உலகின் மற்ற பகுதியினரைப்போல் அவர்களை மாற்றுவதற்கான அவசியம் இல்லாமலிருந்தது. அவர்கள் தாங்களாகவே மிகச் சிறப்பாக வாழ்ந்திருந்தனர். இன்றைக்கு, பூட்டான் மட்டுமே இதைப்போன்றதொரு உணர்ந்த தன்மையில் தீர்மானம் உருவாக்கி, அதனை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியிருக்கும் ஒரே நாடாக இருக்கிறது.
Subscribe
பழங்குடி கலாச்சாரம் மற்றும் இயற்கைச் சூழலை குலைக்காதிருப்பதுதான் உண்மையான நோக்கம். ஆனால் 20 – வருடங்களுக்குப் பிறகு, அந்தப் பகுதியின் மக்கள் வேறொன்றை விரும்புகின்றனர் என்பதை அறிந்ததும், அவர்கள் திட்டத்தை மாற்றியிருக்கவேண்டும் – ஆனால் திட்டங்களை மாற்றம் செய்வதற்கு இந்தியாவில் நீண்ட காலமாகிறது. அந்தக் காரணத்தினால், முன்னேற்றமானது திட்டமிடப்படாத வழிகளில் நிகழத் தொடங்கியது.
மேலும் இன்றைய காலகட்டத்தில், தொடர்புச் சாதனங்களின் காரணத்தினால், நியூயார்க் மற்றும் லண்டன் போன்ற பெரு நகரங்களை அங்கு செல்லாமலேயே ஒவ்வொருவரும் தொலைக்காட்சி மற்றும் இணையதளத்தில் பார்க்கின்றனர். மேலை நாட்டு வாழ்க்கை வழிகளுக்கு ஒவ்வொருவரும் பலியாகி, தாங்களும் அதைப் போலாகிவிடவேண்டும் என்று நினைக்கின்றனர். அடுத்த 15 – 20 வருடங்களில் இருப்புப்பாதைகள், விமானத்தடங்கள், சாலைவழிகள் மற்றும் அனைத்தையும் வடகிழக்கில் கொண்டுவருவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அது நிகழ்ந்துவிட்டதென்றால், இந்தியாவின் மற்ற பகுதியினரும் வடகிழக்கு நிலப்பகுதி எங்கும் பயணம் செய்வார்கள்.
இந்த வருடம், சர்வதேச யோகா தினத்தை ஒட்டி நான் லடாக் மற்றும் சியாச்சினுக்குச் சென்றேன். எல்லா இடங்களிலும் ஆயிரக்கணக்கான மோட்டார் பைக்குகளைப் பார்த்தது நம்பமுடியாததாக இருந்தது. புராதனமாக இருந்த அந்த லடாக் இப்போது இல்லை. சாலைகள் சுற்றுலாப் பயணிகளால் நிறைந்திருந்ததுடன், சில வருடங்களுக்கு முன்பு வரை கேள்விப்பட்டிருக்காத வாகன நெரிசல்கள் மலைகளில் தென்பட்டன.
சூழல்கள் மாற்றமடைந்துகொண்டிருக்கின்றன, ஆகவே அடுத்து வரும் ஐந்து வருடங்களில் வடகிழக்குப் பகுதியினர் வேறுபடுத்தப்படுவதாக உணரமாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். மக்கள் பரவலாக எங்கும் நிறைந்திருப்பார்கள். இவர்கள் வன உயிர் ஆர்வலர்களாகளாகவோ அல்லது குறிப்பிட்ட நோக்கமுடனோ இருக்கப்போவதில்லை – எங்கெங்கும் சுற்றுலாவினர் காணப்படுவார்கள். மக்கள் முன்னேற்றத்தை விரும்பும் காரணத்தால், அது நிகழப்போவது உறுதி. அதை முன்னேற்றமென்று நாம் நினைத்துக்கொள்ளமுடியும், ஆனாலும் அது நாட்டிற்கு ஒரு வகையான இழப்பாகவும் இருக்கிறது.
ஆசிரியர் குறிப்பு : நமது வாழ்வில் நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை புதிய கோணத்தில் அணுக வழிசெய்யும், வாழ்வின் மறைஞான விஷயங்களை எல்லோரும் புரிந்துகொள்ளக் கூடிய வகையில் விளக்கும் சத்குருவின் கட்டுரைகள் மற்றும் வீடியோக்களை உடனுக்குடன் உங்கள் மொபைலில் பெற சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.