ஒருபோதும் மறக்கக்கூடாத 7 முக்கியமான வாழ்க்கைப் பாடங்கள் (Life Lessons in Tamil)
உங்கள் வாழ்க்கையின் அனுபவத்தை இன்னும் ஆழமாகவும் அழகாகவும் மாற்ற நீங்கள் ஒருபோதும் மறக்கக்கூடாத ஏழு முக்கியமான வாழ்க்கைப் பாடங்களை சத்குரு வழங்குகிறார்
வாழ்க்கைப் பாடம் #1: பொய்மைகளை அழித்திடுங்கள்
சத்குரு:உங்கள் வாழ்க்கையில் தேவையற்ற, ஒரு விஷயத்தையாவது அடையாளம் காண ஒரு நிமிடத்தைச் செலவிடுங்கள், அதை இன்று அழித்துவிடுங்கள். நான் "அழித்துவிடுங்கள்" என்று கூறும்போது, உங்கள் முதலாளி, மாமியார் அல்லது பக்கத்து வீட்டுக்காரரைப் பற்றி சிந்திக்கத் துவங்க வேண்டாம். உங்கள் வாழ்க்கைக்குத் தேவையற்ற ஒன்றை நீங்கள் அழிக்க வேண்டும். "நான் என் கோபத்தை அழித்துவிடுவேன்" என்பது மிகவும் பொதுவானதாக இருக்கும், இது நீங்கள் எடுக்கும் உறுதிமொழியின் மூலம் மட்டுமே அடையக்கூடிய ஒன்றல்ல. இதற்கு விழிப்புணர்வு தேவைப்படுகிறது.
இன்று உங்களால் உறுதியான படி எடுக்க, எந்த ஒன்று உங்களிடம் இல்லாமல் போனால் நீங்கள் சிறந்தவராக இருப்பீர்கள் என்று அடையாளம் காணுங்கள். அது எவ்வளவு சிறிய விஷயமாக இருந்தாலும் பரவாயில்லை. என்ன ஆனாலும், நீங்கள் இனி செய்யப்போவதில்லை எனும் ஒரு குறிப்பிட்ட சிறிய விஷயத்தைத் தேர்ந்தெடுங்கள். "நான் கோபப்பட மாட்டேன்" என்பது ஒரு பொய்யாகவே இருக்கும், ஏனென்றால் இது இன்னும் உங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் அது, "நான் கோபமான வார்த்தைகளைப் பேசமாட்டேன்" போன்ற உறுதிமொழியாக இருக்கலாம்.
உங்களால் செய்ய முடிந்த ஒன்றை மற்றும் அதை நீங்கள் செய்வீர்கள் என்ற ஒன்றைப் பற்றி முடிவு செய்யுங்கள். இப்படித்தான், சிறிய படிகளை எடுப்பதன் மூலம் வாழ்க்கையை உங்களால் மாற்ற முடியும். ஆனால் நீங்கள் அதை உண்மையில் செய்ய வேண்டும். அது மீண்டும் வந்து போகக்கூடாது. நீங்கள் எதையாவது கொன்றால், அது இறந்திருக்க வேண்டும். நீங்கள் வாழ்க்கையின் உண்மையை நோக்கிச் செல்ல விரும்பினால், உண்மை இல்லாதவற்றில் நீங்கள் செய்யும் முதலீட்டைக் குறைக்க வேண்டும். அவை அனைத்தும் உடனடியாக மறைந்துவிடாமல் போகலாம், ஆனால் நீங்கள் அதைப் படிப்படியாகக் குறைக்க வேண்டும்.
வாழ்க்கைப் பாடம் #2: தற்போதைய சூழ்நிலையை மாற்றுங்கள்
உங்களால் எதை மாற்ற முடியும் என்ற கோணத்தில் வாழ்க்கையைப் பாருங்கள், அதுகுறித்து ஏதாவது செய்யுங்கள். உங்களால் மாற்ற முடியாத விஷயங்களுக்காக அழுவதென்பது, நிச்சயமாக, மாற்றத்தை எதிர்கொள்ளாமல் தப்பிப்பதற்கான ஒரு யுக்தி தான். குறைந்தபட்சம் ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது, ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும், இதை உணர்வுப்பூர்வமாக பார்த்து, உங்களைப் பற்றி நீங்கள் மாற்ற விரும்பும் ஒரு சிறிய விஷயத்தை அடையாளம் காணுங்கள். "ஒவ்வொரு முறையும் நான் சாப்பிடுவதற்கு முன், என் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறப்போகும் இந்த உணவுக்காக நான் பத்து விநாடிகள் நன்றியுடன் செலவிடுவேன்". அல்லது, "ஒவ்வொரு முறையும் நான் என் வாழ்க்கையின் இன்றியமையாத அங்கமான மண், நீர், காற்று மற்றும் என்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் பயன்படுத்தும்போது, அதில் ஒரு சதவீதத்தைச் சேமிப்பேன்", அல்லது, "என்னால் சாப்பிட முடிந்ததை மட்டுமே என் தட்டில் வைப்பேன்” போன்ற உறுதிகளை எடுக்கலாம். இந்த சிறிய மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்றி மற்றவர்களிடம் இருந்து உங்களை வேறுபடுத்தும்.
வாழ்க்கைப் பாடம் #3: நீங்கள் மரணமடையக் கூடியவர் என்பதை நினைவில் கொள்ளுங்கள்
ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், அவர்கள் வாழ்க்கையின் மிக அடிப்படை உண்மையான அவர்களின் மரணிக்கும் இயல்பைச் சுற்றி, தங்களின் உளவியல் மற்றும் உணர்ச்சி கட்டமைப்பைக் கட்டமைப்பதாகும். இப்போது, மக்களுக்கு தாங்கள் மரணமடையக் கூடியவர் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு வாழ்நாள் முழுவதும் எடுத்துக்கொள்கிறது; அவர்களுக்கு அதை நினைவூட்டுவதற்கு, மாரடைப்பு அல்லது எங்காவது ஒரு வீரியமிக்க கட்டியின் தோற்றம் தேவைப்படுகிறது.
Subscribe
உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடவும் அனுபவிக்கவும் வேண்டும், ஏனென்றால் வாழ்க்கை உங்களுக்காக ஒரு கணம் கூட காத்திருக்காது. நீங்கள் மரணமற்றவராக இருந்தால், மனச்சோர்வு, பதற்றம், துயரம் மற்றும் பைத்தியக்காரத்தனத்தை நூறு ஆண்டுகள் அனுபவிக்கலாம், பின்னர் 500வது ஆண்டு விழாவில், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும்.
ஆனால் நிலைமை அப்படி இல்லை. நீங்கள் மரணமடையப் போகிறீர்கள், நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது. எனவே இந்த வாழ்க்கையில் விரக்தி, மனச்சோர்வு, பதற்றம், கோபம் அல்லது எந்தவொரு விரும்பத்தகாத தன்மைக்கும் நேரம் இல்லை. ஆசிரமத்தில் நான் எப்போதும் மக்களுக்குச் சொல்வது, நீங்கள் என்ன வேலை செய்தாலும், ஒவ்வொரு நாளும் உங்கள் விரல்களைக் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்குப் பூமியில் படும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். இது ஒரு இயற்கையான உடல்சார்ந்த ஞாபகசக்தியை உருவாக்கும், நீங்கள் மரணமடையக்கூடியவர் என்பதை நினைவூட்டும் உடல்சார்ந்த ஞாபகசக்தி.
வாழ்க்கைப் பாடம் #4: புத்திசாலித்தனமான வாழ்க்கையைத் தேர்ந்தெடுங்கள்
அன்பாக இருப்பது அல்லது கோபமாக இருப்பது, வெறுக்கத்தக்க விதத்தில் மற்றும் பொறாமையுடன் இருப்பது, இதில் எது உங்களுக்குள் மிகவும் இனிமையானதாக இருக்கிறது? வாழ்வதற்கு மிகவும் புத்திசாலித்தனமான வழி எது? அன்பாக இருப்பது, இல்லையா? நான் சொல்வதெல்லாம் இதுதான், தயவுசெய்து புத்திசாலித்தனமாக வாழுங்கள். இது வேறொருவரின் நலனுக்காக அல்ல. இது உங்களுக்கு இனிமையாகவும் அழகாகவும் இருக்கும். அன்பான உலகத்தை உருவாக்குவது என்பது நீங்கள் வேறொருவருக்காகச் செய்யும் சேவை அல்ல. இது வாழ்வதற்கான ஒரு புத்திசாலித்தனமான வழி.
உங்கள் வாழ்க்கையில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலாலும் நீங்கள் ஒரு அன்பான உலகத்தை உருவாக்க முடியும். அன்பான உலகத்தை உருவாக்குவது என்பது ஏதாவது இன்னும் கொஞ்சம் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ செய்வது என்று அர்த்தமல்ல. தொடர்ந்து நீங்கள் விரும்புவதை மையமாகக் கொண்டு உங்கள் வாழ்க்கையை வாழ்ந்தால், அது சந்தேகத்திற்கு இடமின்றி நீங்கள் இருக்கும் சூழலிலும் நடக்கும், மேலும் அது சமூகத்திலும் நடக்கத் துவங்கும்.
வாழ்க்கைப் பாடம் #5: உங்கள் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானியுங்கள்
பல வழிகளில், பெரும்பாலான மக்களின் மகிழ்ச்சி, அமைதி மற்றும் அன்பு ஆகியவை வெளிப்புற சூழ்நிலைகளில் அடமானம் வைக்கப்படுகின்றன. எனவே, பங்குச் சந்தை மேலே சென்றால் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள், பங்குச் சந்தை சரிவைச் சந்தித்தால் நீங்கள் கவலையடைகிறீர்கள். ஆனால் வாழ்க்கையின் தரம் என்பது உங்களைச் சுற்றியுள்ளதைப் பற்றியது அல்ல. இங்கே மகிழ்ச்சியாக வாழ்வதற்கான நமது திறன் நாம் வசிக்கும் வீட்டின் அளவு அல்லது நாம் ஓட்டும் காரைப் பொறுத்தது அல்ல.
இந்த விஷயங்கள் உங்கள் வாழ்க்கையை வசதியாக்குகின்றன, ஆனால் உங்கள் வாழ்க்கையின் அத்தியாவசிய தரம் என்னவென்றால், நீங்கள் இப்போது உங்களுக்குள் எப்படி இருக்கிறீர்கள் என்பதுதான். மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் வாழ்வது உங்களுக்குப் புதிதல்ல. நீங்கள் குழந்தையாக இருந்தபோது அப்படித்தான் இருந்தீர்கள், இல்லையா? எனவே, நான் உங்களிடம் புதிதான ஒன்றைப் பற்றி பேசவில்லை. சிறு வயதில் உங்கள் வாழ்க்கையின் அங்கமாக இருந்ததை மீண்டும் துவங்குவதைப் பற்றி மட்டுமே பேசுகிறேன்.
வாழ்க்கைப் பாடம் #6: பணிவுடன் இருப்பதில் இருக்கும் புத்திசாலித்தனம்
ஒரு முட்டாளுக்கும் ஒரு புத்திசாலிக்கும் இடையிலான வேறுபாடு என்னவென்றால், புத்திசாலி தான் எவ்வளவு முட்டாள் என்பதை அறிவார்; ஆனால் ஒரு முட்டாள் அப்படி இல்லை. நீங்கள் யார் என்ற முட்டாள்தனத்தைக் கவனிப்பது பெரிய புத்திசாலித்தனம். இந்த இருப்பில் உள்ள ஒரு மரமோ ஒரு புல்லோ ஒரு மண்ணோ ஒரு அணுவோ இவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் முழுமையாகப் புரிந்துகொண்டுள்ளீர்களா? இல்லை.
உங்கள் புத்திசாலித்தனம் மற்றும் புலனுணர்வின் நிலை இப்படி இருக்கும்போது, நீங்கள் இந்த உலகில் எப்படி நடக்க வேண்டும்? மென்மையாக, கொஞ்சம் பணிவுடனும், உங்களைச் சுற்றியுள்ள அனைத்தின் மீதும் மரியாதையுடனும், அன்புடனும் இருக்க வேண்டும். அன்பு இல்லையென்றாலும், குறைந்தபட்சம் பிரமிப்புடன் உலகத்தைக் காணுங்கள், ஏனென்றால் இந்த உலகில் உள்ள எதைப் பற்றியும் உங்களுக்கு முழுமையாகப் புரியவில்லை.
நீங்கள் இப்படி நடக்கக் கற்றுக்கொண்டால், நீங்கள் ஒரு ஆன்மீக செயல்முறையிலிருந்து தப்பிக்க முடியாது. உங்களுக்கு எந்த போதனையும் தேவையில்லை. அது எப்படியும் உங்களுக்கு நடக்கும். இதனால் தான் கிழக்கத்தியக் கலாச்சாரங்களில், நீங்கள் எதைப் பார்த்தாலும், அது ஒரு பாறையாக இருந்தாலும் சரி, விலங்காக இருந்தாலும் சரி, மனிதனாக இருந்தாலும் சரி, அனைத்திற்கும் நீங்கள் தலைவணங்குகிறீர்கள். நீங்கள் நடந்து செல்லும் பூமி, சுவாசிக்கும் காற்று, குடிக்கும் நீர், உண்ணும் உணவு, தொடர்புகொள்ளும் நபர்கள் மற்றும் உங்கள் உடல், மனம் உட்பட நீங்கள் பயன்படுத்தும் எல்லாவற்றையும் பக்தியுடன் கையாள்வது, நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றியை உறுதி செய்வதற்கான ஒரு வழியாகும்.
வாழ்க்கைப் பாடம் #7: நல்லது கெட்டது என்று ஏதுமில்லை
உங்கள் உள்தன்மை உங்களைச் சுற்றியுள்ளவற்றின் பிரதிபலிப்பாக மட்டுமே இருக்க வேண்டும். வெளிப்புற சூழல் உள்தன்மையை நிர்ணயிக்கக்கூடாது, இல்லையெனில் உங்களைச் சுற்றியுள்ள அனைத்தும் உங்களைக் கெடுத்துவிடும் என்று கூறும் சில தார்மீக கோட்பாடுகளுக்கு இது முற்றிலும் நேர்மாறாக இருக்கலாம், இதில் உண்மை இல்லை. உங்களைச் சுற்றியுள்ள எல்லாவற்றைப் பற்றியும் உங்களுக்குக் கருத்துகளும் மதிப்பீடுகளும் இருக்கும்போது மட்டுமே நீங்கள் கெட்டுப்போக வாய்ப்புள்ளது.
நீங்கள் ஒரு விஷயத்தை நல்லதாகவும், மற்றொரு விஷயத்தைக் கெட்டதாகவும் பார்க்கிறீர்கள். நீங்கள் நல்லதாகக் கருதும் விஷயங்களுடன் ஆழமான பிணைப்புடன் இருக்கிறீர்கள். நீங்கள் மோசமாகக் கருதுவதைத் தவிர்க்கத் தீவிரமாக முயற்சி செய்கிறீர்கள், நிச்சயமாக அது உங்களை உள்ளிருந்து கட்டுப்படுத்தும். நாம் இருப்பதற்குச் சரியான வழி இதுவல்ல. எல்லாவற்றையும் அது இருக்கும் விதத்திலே பார்ப்பது தான் உள்தன்மையுடன் இருப்பதற்கான வழி. அங்கு இருப்பதைத் தவிர வேறு எதையாவது நீங்கள் கண்டால், உங்கள் கருத்துகளாலும் தவறான மதிப்பீட்டாலும் நீங்கள் உலகை மாசுபடுத்துகிறீர்கள் என்று அர்த்தம்.
நீங்கள் படைப்பினை அது எப்படி இருக்கிறதோ அப்படியே பார்க்க வேண்டும், நீங்கள் உருவாக்க விரும்பும்படி அல்ல. இது படைத்தவனின் படைப்புகள் மீது மனிதகுலம் செய்யும் அவமதிப்பு. இப்படி ஒரு மகத்தான படைப்பு - நீங்கள் செய்ய என்ன இருக்கிறது? உங்களால் முடிந்தால் அதை உள்வாங்கிக் கொள்ளுங்கள் - அதற்கு மேல் எதுவும் தேவையில்லை - அது கூட எளிதானது அல்ல. ஏனெனில் படைப்பு தனித்துவமான பல அடுக்குகளைக் கொண்டது. இங்கே பல தனித்துவமான நிகழ்வுகள் நடக்கின்றன - ஒன்று மற்றொன்றுக்குள்ளும், அனைத்தும் ஒரே இடத்திலும், ஒரே நேரத்திலும் நடக்கின்றன.
கடந்த காலம் என்று நீங்கள் நினைக்கும் அனைத்தும், எதிர்காலம் என்று நீங்கள் நினைக்கும் அனைத்தும் இங்கேயே உள்ளன. எல்லாவற்றையும் அது இருக்கும் விதத்திலேயே நீங்கள் பார்த்தால், முழு படைப்பும் உங்களுக்குள் பிரதிபலிக்கும். படைப்பு இருக்கும் விதத்திலேயே அதை உங்களுக்குள் வைத்திருக்க முடிந்தால், நீங்கள் படைப்பின் மூலமாகவே மாறுகிறீர்கள். நீங்கள் உள்ளேயும் வெளியேயும் இருக்க வேண்டிய விதம் இதுதான்.
குறிப்பு:
நம் திறன்களை மேம்படுத்துவதற்கும், உங்கள் வாழ்க்கையை மாற்றுவதற்கும், வெளிப்புற தாக்கங்களிலிருந்து நம்மை விடுவிக்கும் ஒரு புதிய பரிமாணத்தைத் திறப்பதற்கும் பயனுள்ள கருவிகளை “நிர்வாகம்” என்ற மின் புத்தகத்தில் சத்குரு வழங்குகிறார். இந்தப் புத்தகத்தைப் பதிவிறக்கம் செய்யுங்கள்.