புராணங்களில் கிருஷ்ணன் கோபியர்களுடன் ஆனந்தமாக ஆடும் நடனம் அழியாப்புகழ் பெற்றதாய்த் திகழ்கிறது. ஆனால் அதன் முக்கியத்துவம் என்ன? ஏன் மஹாதேவனான சிவன் கூட அதன்பால் ஈர்க்கப்பட்டான்? சத்குருவின் விளக்கத்திலிருந்து அறிந்துகொள்வோம்.

சத்குரு:

கொண்டாட்டம் என்பது பெண்தன்மை ததும்புவதாய் இருக்கிறது. ஆண் கொண்டாடினாலும் சரி, பெண் கொண்டாடினாலும் சரி, கொண்டாட்டம் என்பது அடிப்படையில் பெண்தன்மை சார்ந்தது. பெண்தன்மையின் முக்கியத்துவத்தை விவரிக்கும் ஓர் அழகான கதை மகாபாரதத்தில் உண்டு. எட்டு வயதாக இருக்கும்போது கிருஷ்ணன் கோகுலத்திலிருந்து விருந்தாவனத்திற்கு இடம் பெயர்ந்தான். அப்போது கிராமத்தினரிடையே மிகவும் பிரபலமடைந்தான். அப்போது வசந்தகாலம் துவங்கி எல்லாம் பூத்துக்குலுங்கும் ஹோலி பண்டிகையின் நேரம். ஒரு மாலைப் பொழுதில், பௌர்ணமியன்று, கிராமத்திலுள்ள இளம் ஆண்களும் பெண்களும் யமுனையாற்றின் கரையில் கூடினர். அவர்கள் ஒருவர் மீது ஒருவர் தண்ணீரையும் மணலையும் வீசி விளையாடத் துவங்கினர். சிறிது நேரத்தில் இந்த விளையாட்டு மென்மையான நடனமாக மாறியது. அவர்கள் மகிழ்ச்சிபொங்க பரவசநிலையில் இருந்ததால் தொடர்ந்து நடனமாடிக் கொண்டே இருந்தனர். ஆனால் மெதுவாக, ஆடல்நயமின்றி வேடிக்கையாக ஆடியவர்கள் ஒவ்வொருவராக சோர்வடைந்து ஆட்டத்திலிருந்து விலகத் துவங்கினார்கள். இதைப் பார்த்த கண்ணன் குழலெடுத்து வாசிக்க ஆரம்பித்தான். அவர் இசைத்த இசை அவ்வளவு வசீகரிப்பதாக இருந்ததால், அனைவரும் மீண்டும் அவனைச் சுற்றி கூடி ஆடத் துவங்கினார்கள். இது கிட்டத்தட்ட பாதி இரவிற்கு நீண்டது.
கிருஷ்ணனின் ராச லீலா, Krishnanin rasa leela, Pichai pathiram yenthiya oru nirvagiyin kaigal

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இதுதான் முதன்முறையாக நடந்த ராசலீலா, இதில் மக்கள் ஆனந்தமாக ஒன்றுகலந்ததால் பரவசமான நிலையை அடைந்தனர். "ராச" என்ற சொல்லுக்கு "ரசம்" என்று பொருள், ஆனால் இது இச்சை அல்லது பேரார்வத்தையும் குறிக்கும். அதனால் இது பேரார்வத்தின் நடனமாக இருந்தது. இந்த நடனத்தின் நறுமணம் பரவியது. பௌர்ணமி தினங்களின்போது நள்ளிரவில் இந்த நடனம் நடந்தது என்று மக்கள் அறிந்துகொண்டனர், இதில் பங்குகொள்ள அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடினர்.

பௌர்ணமி இரவுகளில் இப்படியொரு அற்புதமான நடனம் யமுனை நதிக்கரையில் நிகழ்கிறது என்பது சிவனுக்குத் தெரியவந்தது. அவர் தியானத்தின் மூலம் அடைந்ததை நடனத்தின் மூலம் மக்கள் அடைந்தனர் என்று அவர் அறிந்துகொண்டார். சிவன் நடராஜர், அதாவது நடனத்தின் இராஜா அல்லது நடனத்தின் கடவுள். இந்தியாவில் இருக்கும் தனித்துவமான அம்சமிது, இந்தியக் கடவுள்கள் மட்டும்தான் நடனமாடுவார்கள். அவர்கள் காதலில் விழுந்தால் ஆடுவார்கள். அவர்கள் பேரானந்தமடைந்தால் ஆடுவார்கள். கோபமடைந்தால் ஆடுவார்கள். அதனால் நடனத்தின் கடவுளான சிவனுக்கு, அவனுடைய பக்தனான இந்த இளைஞன் குழலிசைத்து மக்களை ஆடவைத்து பரவச நிலைகளுக்கு எடுத்துச்சென்றது வேடிக்கையாகத் தெரிந்தது. இதைக் கண்ணால் காண விழைந்தார்.

பெண்தன்மை என்றால் பொங்கிவரும் உற்சாகம் என்று பொருள். நீங்கள் வாழும் ஒவ்வொரு க்ஷணமும் அப்படித்தான் இருக்கவேண்டும், மிகவும் துடிப்பாக உயிர்வாழ வேண்டும். பாதி உயிராக இருப்பதில் என்ன அர்த்தமிருக்கிறது?

அதனால் இமயமலையில் இருந்து யமுனையாற்றின் கரைக்கு நடந்துசென்று அங்கு இருந்த படகோட்டியிடம், "ஆற்றைக் கடந்து விருந்தாவனத்திற்கு என்னை அழைத்துச்செல், நான் கண்ணனின் ராசலீலையைக் காணவேண்டும்." என்றார். அதற்கு அந்த படகோட்டி, "நீங்கள் இப்படிப் போகமுடியாது. ராசலீலையில் கண்ணன் மட்டும்தான் ஆண், மற்ற அனைவரும் பெண்கள். நீங்கள் கலந்துகொள்ள விரும்பினால் பெண்ணாக மட்டும்தான் போகமுடியும்." என்றான்.

சிவன் ஆண்மையின் உச்சமாகக் கருதப்படுகிறான் - ஆண்மக்கள் அனைவரிலும் மேன்மையான ஆண்மகன் அவன். அதனால் சிவன் பெண்ணாக வேண்டும் என்பது விநோதமான கோரிக்கை. ஆனால் ராசலீலா முழுவீச்சில் நிகழ்ந்துகொண்டு இருந்தது, சிவனும் அங்கு செல்ல விரும்பினார். அதனால் படகோட்டி அவரிடம், "நீங்கள் பெண்ணின் உடைகளை அணிந்துகொண்டால் செல்லலாம்." என்றான்.

சிவன் சுற்றியும் பார்த்தார், எவரும் இல்லை, அதனால் "சரி, எனக்கு கோபியரின் உடைகளைக் கொடு." என்றார். அதனால் கோபியரின் உடைகளை அணிந்து ஆற்றைக் கடந்தார். அவர் அவ்வளவு முற்போக்கானவர்.

அடிப்படையாக, கொண்டாட்டத்தின் இயல்பே பெண்தன்மை என்பதை இது விளக்குகிறது. பெண்தன்மை என்றால் பொங்கிவரும் உற்சாகம் என்று பொருள். நீங்கள் வாழும் ஒவ்வொரு க்ஷணமும் அப்படித்தான் இருக்கவேண்டும், மிகவும் துடிப்பாக உயிர்வாழ வேண்டும். பாதி உயிராக இருப்பதில் என்ன அர்த்தமிருக்கிறது? நாம் இங்கே வாழ்க்கையைத் தப்பித்துக்கொள்ள வரவில்லை, நாம் வாழ்க்கையை அறிந்து அனுபவத்தில் உணரவே வந்துள்ளோம். உங்களை முடிந்த அளவு தீவிரமாகவும் துடிப்பாகவும் வைத்துக்கொள்ளாமல் வாழ்க்கையை உணரமுடியாது. உங்கள் வாழ்க்கை முழுவதும், உங்கள் இருப்பே கொண்டாட்டமாக மாறவேண்டும். உங்கள் வாழ்க்கை கொண்டாட்டமாக மாறவேண்டும் என்றால், உங்களுக்குள் நீங்கள் முற்றிலும் ஆனந்தமாக மாறவேண்டும். இது வெற்றுப் பேச்சில்லை - இது முற்றிலும் சாத்தியமானது. உங்கள் தன்மையாலேயே ஆனந்தமாக மாறுவதற்குத் தேவையான இரசாயனத்தை உங்களுக்குள் உருவாக்கிட ஒரு தனி அறிவியலே இருக்கிறது.