வாழ்வின் உயர்ந்த பரிமாணம்
சத்குரு கிருஷ்ணரின் வாழ்க்கையில் இருந்து ஒரு சம்பவத்தை எடுத்துரைத்து, அருள், கர்மவினை மற்றும் ஆன்மீகப் பாதையில் ஒருவரின் வாழ்க்கையின் தன்மை பற்றியும் விளக்குகிறார்.

கேள்வி: சத்குரு, கிருஷ்ணரே கடவுள் என்று நாம் கருதினால், அவரது பக்தர்கள் ஏன் இத்தனை துன்பங்களைச் சந்தித்தனர்? என்னைப் பொறுத்தவரை, உங்களைக் காணும் வரை, என் வாழ்க்கை பலரும் பொறாமைப்படும் வகையில் இருந்தது. இப்போதும் மக்கள் என் வாழ்க்கையைக் கண்டு பொறாமைப்படுகிறார்கள், ஆனால் வேறுவிதமாக. உண்மையில், எனக்கு இது ஒரு ரோலர்கோஸ்டர் பயணம் போன்றே இருந்தது. அருள் என்பது வாழ்க்கையை சுமூகமாக்குவது பற்றியதல்ல என்றால், பின் எதைப் பற்றியது?
சத்குரு:உங்களுக்குத் தெரியுமா, மதுராவை விட்டு வெளியேறி, சரியான உணவோ ஓய்வோ இல்லாமல் காட்டின் வழியாக நடந்து செல்லும்போது பல்வேறு துன்பங்களை அனுபவித்த நேரத்தில், பலராமரும் இதேபோன்ற கேள்வியைத்தான் கேட்டார்: "நீங்கள் கூடவே இருக்கும்போதும் எங்களுக்கு ஏன் இதுபோன்ற விஷயங்கள் எல்லாம் நடக்கின்றன?" அதற்கு கிருஷ்ணரின் பதில், "வாழ்க்கை உங்களுக்கு பெரிய அளவில் நடக்கும்போது புகார் செய்யாதீர்கள்."
சில சூழ்நிலைகளை நல்லவை என்றும் மற்றவற்றை தீயவை என்றும், அல்லது சில சூழ்நிலைகளை விரும்பத்தக்கவை என்றும் மற்றவற்றை விரும்பத்தகாதவை என்றும் நீங்கள் பார்ப்பதால் தான், வாழ்க்கையை வெறும் வாழ்க்கையாகப் பார்க்காமல், இவை எல்லாம் ஏன் எனக்கு நடக்கின்றன என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்கிறீர்கள்.
நீங்கள் ஆன்மீகப் பாதையில் அடியெடுத்து வைக்கும் அந்த தருணத்தில், வாழ்க்கை உங்களை பெரும் அளவில் தொடுகிறது, எல்லாமே வேகமாக முன்னோக்கிச் செல்வது போன்றது. ஒன்றை நல்லது என்றும் மற்றொன்றை கெட்டது என்றும் நீங்கள் அடையாளப்படுத்தாவிட்டால், வாழ்க்கை மிகுந்த தீவிரத்துடன் நடக்கிறது என்பதை மட்டுமே நீங்கள் காண்பீர்கள், அவ்வளவுதான். நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை. வாழ்க்கை நடந்துகொண்டிருக்கிறது. சிலர் அதை அனுபவிக்கிறார்கள், சிலர் அதனால் துன்பப்படுகிறார்கள்.
அனைவரும் அதை அனுபவிப்பதை உறுதி செய்வது மட்டுமே நம்மால் செய்ய முடியும். அடிப்படையில், இந்த பூமியில் நடக்கும் நிகழ்வுகள் எந்த விளைவையும் ஏற்படுத்தாது. ஒருவேளை இடி மின்னல் தாக்கி நாம் அனைவரும் எரிந்து சாம்பலானாலும், அது ஒரு சோகம் என்று எனக்குத் தோன்றவில்லை - அது வெறும் ஒரு நிகழ்வு மட்டுமே. "அப்படியென்றால் ஈஷா அறக்கட்டளை என்னவாகும், என் குடும்பம் மற்றும் என் குழந்தைகள் என்னாவார்கள்?" நாம் திடீரென காணாமல் போனதால் அவர்கள் அனைவருக்கும், வாழ்க்கை பெரும் அளவில் நடக்கும். நல்லது கெட்டது என்ற அடையாளப்படுத்துதலுக்கு அப்பாற்பட்டு இதைப் பார்க்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். வாழ்க்கை பெரும் தீவிரத்துடன் நடக்கிறது, அவ்வளவுதான்.
Subscribe
நீங்கள் ஆன்மீகமாக மாற விரும்பினால், இயல்பாகவே வாழ்வின் உயர்ந்த பரிமாணத்தை நாடுகிறீர்கள். உண்மையில், வாழ்க்கையில் நீங்கள் எதை நோக்கிச் செல்கிறீர்களோ அது வாழ்வின் பெரிய பங்கைப் பெறுவதற்கான முயற்சிதான். நீங்கள் வாழ்க்கையின் மெல்லியத் துண்டை மட்டுமே உட்கொண்டால், ஒருவேளை அது முழுவதும் இனிப்பாக இருக்கலாம், ஆனால் அது ஒரு மெல்லியத் துண்டே. நீங்கள் ஒரு கேக்கை எடுத்து அதன் க்ரீமை மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்தால், சிறிது காலத்திற்குப் பிறகு, இனிப்பே விஷமாக மாறிவிடும்.
நீங்கள், "என் வாழ்க்கை பலர் பொறாமைப்படும் வகையில் இருந்தது" என்றீர்கள், ஆனால் அது எவ்வளவு வெறுமையாக இருந்தது என்பது உங்களுக்குத் தெரியும். கார் இல்லாதவர்கள், கார் வைத்திருப்பவர்கள் எல்லோரும் பெரும் அதிர்ஷ்டசாலிகள் என்று நினைக்கிறார்கள். அது நிச்சயமாக வசதியானது மற்றும் சௌகரியமானது, ஆனால் அது ஒரு பெரும் அதிர்ஷ்டம் அல்ல. கார்களே இல்லாவிட்டால், யாரும் அதில் ஒன்றை வைத்திருக்க விரும்பமாட்டார்கள். பிரச்சனை உங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவதில் தான் உள்ளது, "ஓ, அவளிடம் அது இருக்கிறது, என்னிடம் இல்லை" என்ற உணர்வில் தான் இருக்கிறது. கார் இல்லாதவர்கள் கார் உள்ளவர்களுடன் தங்களை ஒப்பிடாவிட்டால், நடப்பதோ அல்லது சைக்கிள் ஓட்டுவதோ முற்றிலும் நன்றாக இருக்கும். நீங்கள், "என் வாழ்க்கை அனைவருக்கும் பொறாமைக்குரியதாக இருந்தது" என்று சொன்னபோது, அது அடிப்படையில் வாழ்க்கை பற்றிய கூற்று அல்ல, அது உங்கள் சமூக நிலைமை பற்றிய கூற்று.
நான் இருத்தல், இருப்பு என்ற அர்த்தத்தில் வாழ்க்கையைப் பற்றி பேசுகிறேன். தற்போது, ஆழமான அர்த்தத்தில் வாழ்க்கையுடன் எந்தத் தொடர்பும் இல்லாத பல விஷயங்களை நீங்கள் வாழ்க்கையாகக் கருதுகிறீர்கள். இதற்கு யதார்த்தத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை. இது ஒரு மனநிலை. எல்லாத் துன்பங்களும் அந்த பைத்தியக்காரத்தனத்தில் இருந்தே வருகின்றன.
நீங்கள் ஆன்மீகப் பாதையில் நடக்கும்போது, உங்கள் உள்நிலை வேகமாக முன்னேறுகிறது. இதற்குப் பல காரணங்கள் உள்ளன. ஒரு அடிப்படைக் காரணம் உங்கள் பிராரப்த கர்மா அதாவது இந்த பிறவிக்கென்று ஒதுக்கப்பட்ட கர்மா. படைப்பு மிகவும் இரக்க குணம் கொண்டது. உங்கள் முழு கர்மாவையும், அதாவது சஞ்சித கர்மா முழுவதையும், இந்த பிறவியிலேயே கொடுத்திருந்தால், நீங்கள் இறந்திருப்பீர்கள். உங்களில் பலரால் இந்த பிறவியின் நினைவுகளைக்கூட உதறித் தள்ள முடியவில்லை. நான் உங்களுக்கு நூறு பிறவிகளின் நினைவுகளை மிகுந்த தீவிரத்துடன் நினைவூட்டினால், உங்களில் பெரும்பாலானோர் அந்த நினைவுகளின் சுமையைத் தாங்க முடியாமல் இங்கேயே இறந்து விழுவீர்கள். எனவே, இயற்கை நீங்கள் கையாள முடிந்த அளவு பிராரப்தத்தையே ஒதுக்குகிறது.
நீங்கள் இயற்கையின் ஒதுக்கீட்டின்படி சென்று, உண்மையல்ல என்றாலும் புதிய கர்மாவை உருவாக்க மாட்டீர்கள் என்றே வைத்துக்கொள்வோம். நூறு பிறவிகளின் கர்மாவைக் கரைக்க, குறைந்தபட்சம் நூறு பிறவிகள் எடுக்கலாம். ஆனால் இந்த நூறு பிறவிகளின் செயல்முறையில், மேலும் ஆயிரம் பிறவிகளுக்கு போதுமான கர்மாவை நீங்கள் சேகரிக்கலாம்.
நீங்கள் ஆன்மீகப் பாதையில் இருக்கும்போது, உங்கள் இறுதி இலக்கை அடைய அவசரப்படுகிறீர்கள். நீங்கள் அதற்கு நூறு அல்லது ஆயிரம் பிறவிகள் எடுக்க விரும்புவதில்லை - நீங்கள் அதை விரைவுபடுத்த விரும்புகிறீர்கள். ஆன்மீக செயல்முறையில் நுழைவது என்பது வாழ்க்கையை பெரும் அளவில் அனுபவிக்கத் தயாராக இருப்பதைக் குறிக்கிறது. நீங்கள் என்னுடன் வந்து அமர்ந்ததும், இதுதான் என் ஆசீர்வாதமும் - வாழ்க்கையான அனைத்தும் உங்களுக்கு நடக்கட்டும். "மரணம் நேர்ந்தால் என்ன?" அதுவும் அற்புதமானதே. அங்கு சேர 75 ஆண்டுகள் எடுப்பதற்குப் பதிலாக, 35 ஆண்டுகளில் சேர முடிந்தால், அது அற்புதமானது இல்லையா? இது வெறும் தர்க்கரீதியான கேள்வி அல்ல, இது வாழ்க்கையின் யதார்த்தம். கீதையில் கிருஷ்ணர் கூறும் கருத்து இதுதான்: நீங்கள் அவர்களுக்கு சரியான சூழ்நிலையை வழங்க முடிந்தால், அவர்கள் விரைவில் அங்கு சென்றடையட்டும்.
ஒரு பால யோகி அல்லது குழந்தை யோகி மற்றும் ஒரு சிறந்த பக்தையான பெண்ணின் திருமணத்தைப் பற்றிய அழகான தமிழ் கவிதை ஒன்று உள்ளது. 3000 விருந்தினர்களுக்காக ஒரு பெரிய திருமணத்தை ஏற்பாடு செய்தனர். அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். மேலும் சிறந்த கவிஞராகவும் இருந்த பால யோகி, அழகான பக்தி கவிதைகளை பாட ஆரம்பித்தார். அனைவரின் கவனமும் அவர் மீது இருந்தது, அதுதான் அவர் விரும்பியதும் கூட. அனைவரின் முழு கவனத்தையும் பெற்ற பால யோகி இந்த தருணத்தை அவர்கள் அனைவரையும் கரைத்துவிட பயன்படுத்தினார். அவர்கள் அனைவரும் திருமண மண்டபத்திலேயே தங்கள் உடல்களை விட்டு சென்றனர். பல நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, கவிஞர் ஒரு கவிதையில் அழகாக புலம்புகிறார்: "அவர்கள் என்னை அந்த திருமணத்திற்கு அழைத்திருந்தால், நான் இப்படி போராட வேண்டியிருக்காது. நானும் அதை அடைந்திருப்பேன். நான் சில நூறு ஆண்டுகள் தாமதமாக வந்தேன். ஓ, எனக்காக அப்படி மற்றொரு திருமணம் நடக்குமா?"
திருமண மண்டபத்தில் 3002 பேர் இறந்ததை ஒரு சோகமாக அவர் கருதவில்லை. பால யோகியின் இருப்பால், அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் முக்தி அடைந்ததை ஒரு பெரும் அதிர்ஷ்டமாகவே பார்த்தார். ஆன்மீகவாதி நிகழ்வுகளை நல்லது கெட்டது என்று பார்ப்பதில்லை - வாழ்க்கை உங்களை எவ்வளவு தீவிரமாகத் தொடுகிறது என்பதில் மட்டுமே நீங்கள் அக்கறை கொண்டுள்ளீர்கள். நல்லது கெட்டது என்பவை சமூக நிகழ்வுகள் - அவற்றிற்கு வாழ்க்கையுடன் எந்தத் தொடர்பும் இல்லை.
ஒருமுறை நீங்கள் ஒரு குறிப்பிட்ட வழியில் தீட்சை பெற்றுவிட்டால், நீங்கள் இனி உங்கள் பிராரப்தத்திற்கு மட்டும் கட்டுப்பட்டவர் அல்ல. நீங்கள் நூறு பிறவிகளின் கர்மாவை இப்போதே கையாள விரும்பினால், இயல்பாகவே உங்கள் வாழ்க்கை பெரும் தீவிரத்துடன் நடக்கும். நீங்கள் சமநிலையைப் பேணினால், உங்கள் வாழ்க்கையில் நடக்கும் ஒவ்வொரு நிகழ்வும் உங்களை ஒரு படி முன்னோக்கி கொண்டு செல்லும் என்பதைக் காண்பீர்கள். நீங்கள் இதைப் பார்க்காவிட்டால், உங்கள் சமூக சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டால், வாழ்க்கை நடக்கும் வேகத்தின் காரணமாக, உங்கள் வாழ்க்கையில் ஏதோ தவறு நடக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம், அது அப்படி அல்ல.
நேர்மறையான சொற்களை எப்போதும் பல்லாயிரம் வழிகளில் தவறாக புரிந்துகொள்ள முடியும், ஏனெனில் உங்கள் மனம் அதில் லயித்திருக்கிறது. நான் விழிப்பாகவே எதிர்மறையான சொற்களைப் பயன்படுத்துகிறேன், ஏனெனில் நீங்கள் அதை தவறாகப் புரிந்துகொள்ள மாட்டீர்கள். நீங்கள் ஆன்மீகமாக இருக்க விரும்பினால், அடிப்படையில் நீங்கள் தற்போது இருக்கும் விதத்தில் உங்களை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறீர்கள் என்று பொருள். இதை நேர்மறையாகக் கூறினால், நீங்கள் விடுதலையைத் தேடுகிறீர்கள். நீங்கள் உங்கள் உச்சபட்ச இயல்பைத் தேடுகிறீர்கள்; நீங்கள் கடவுளைத் தேடுகிறீர்கள்; நீங்கள் எல்லையற்றவராக மாற விரும்புகிறீர்கள். நீங்கள் எல்லையற்றவராக இருக்க விரும்பும்போது, நீங்கள் தற்போது இருக்கும் விதத்தில் இருப்பதை நிறுத்த விரும்புகிறீர்கள்.
நீங்கள் இந்த விருப்பத்தை வெளிப்படுத்தி, தேவையான சக்தியை உங்களில் முதலீடு செய்தவுடன், நீங்கள் தற்போது இருக்கும் விதத்தில் உங்களை முடிவுக்குக் கொண்டுவர விஷயங்கள் நடக்கும். இதன் பொருள், உங்களுக்கு எதிர்மறையான விஷயங்கள் நடக்கும் என்று அல்ல. வாழ்க்கை வேகமாக முன்னோக்கி, அதீத வேகத்தில் நகரும் என்பது மட்டுமே.
பின் அருள் என்றால் என்ன? இந்த பிரபஞ்சத்தில், சக்தி பல்வேறு வெளிப்பாடுகளில் செயல்படுகிறது. அது சூரிய ஒளியாக, காற்றாக, ஈர்ப்பு சக்தியாக செயல்படுகிறது - அதேபோல், அது அருளாகவும் செயல்படுகிறது. ஈர்ப்பு சக்தி உங்களை கீழே இழுக்க முயற்சிக்கிறது; காற்று உங்களை அடித்துச் செல்ல முயற்சிக்கிறது; சூரியன் உங்களை எரிக்க முயற்சிக்கிறது - அருள் உங்களை பூமியிலிருந்து பிடுங்கி எடுக்க முயற்சிக்கிறது. இது எதிர்மறையான சொற்களில் வெளிப்படுத்துவது. நீங்கள் இதையே நேர்மறையான சொற்களில் வெளிப்படுத்த விரும்பினால், பூமி உங்களை அணைக்க முயற்சிக்கிறது; காற்று உங்களைக் குளிர்விக்க முயற்சிக்கிறது; சூரியன் உங்களை சூடாக்க முயற்சிக்கிறது - அருள் உங்களை வளர்ச்சியடைய வைக்க முயற்சிக்கிறது. நாம் எதிர்மறையான சொற்களையே பயன்படுத்துவோம், ஏனெனில் நீங்கள் அதில் பற்று வைக்கமாட்டீர்கள்.
அருள் என்பது நீங்கள் தற்போது சிக்கியிருக்கும் வரம்புகளிலிருந்து உங்களை வெளியே எடுக்க முயற்சிக்கிறது. இந்த வரையறைகளில் பூமி, மக்கள், உடல், மனம், உணர்வுகள் என அனைத்தும் அடங்கும். நீங்கள் அருளை அழைத்து, அது தனது வேலையைச் செய்துகொண்டிருந்தால், அது உங்களை மேலே இழுத்துக் கொண்டிருக்கும்போது நீங்கள் உங்கள் நங்கூரத்தை கீழே போடுவீர்களானால், நீங்கள் தேவையற்ற துன்பத்தை உருவாக்குகிறீர்கள். ஆன்மீக செயல்முறையின் காரணமாக வாழ்க்கை நடந்தால், அது எனக்குப் பரவாயில்லை. துன்பம் நேர்ந்தால், வெறுமனே நீங்கள் அருளை உங்களை மேலே இழுக்க அழைத்திருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் உங்கள் நங்கூரத்தை கீழே போடுகிறீர்கள் என்பதால் தான் - இந்த வழியில், இயல்பாகவே நீங்கள் துன்புறுவீர்கள்.
குறிப்பு:
சத்குரு அவர்களின் ஆழமான புரிதலில் கர்மா செயல்படும் விதம் மற்றும் அதன் சூட்சுமங்களை விரிவாக விளக்கும் 'கர்மா - விதியை வெல்லும் சூத்திரங்கள்' என்ற புதிய புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது. இதனை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.