கேள்வி:

சத்குரு, நான் எப்படி செயல் அல்லது கர்ம யோகத்தை கடந்து செல்வது? தனிப்பட்ட முறையில், எதையும் செய்யும் விருப்பம் எனக்கு இல்லை. செயலற்ற நிலைக்கு நான் மெதுவாக மிதந்து செல்வது போல் உணர்கிறேன்.

சத்குரு:

ஒருவர் தனது வாழ்க்கையில் உச்சபட்ச உண்மையை இலக்காக கொண்டிருக்கும்போது, செயல் அர்த்தமற்றதாகிவிடுகிறது. செயல் அர்த்தமற்றதான பிறகு, எந்த வகையான சுய-பிம்பமும் பெரிய முக்கியத்துவம் பெறுவதில்லை; ஆனால் தற்போது, நீங்கள் இருக்கும் நிலையில், இன்னும் செயலுக்கான தேவை இருக்கிறது. நீங்கள் இன்னும் செயலை கடந்த நிலையை அடையவில்லை. செயல் செய்யாமல் உங்களால் இருக்க முடியவில்லை. எனவே, இப்போது எந்த செயல் சிறந்தது என நீங்கள் நினைக்கிறீர்களோ அதை செய்யுங்கள், சூழ்நிலைக்கு என்ன தேவையோ அதை செய்யுங்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
உண்மையான, தீவிரமான செயல்பாட்டை அறியாத மனிதனால் ஒருபோதும் செயலற்ற நிலைக்குள் நகர முடியாது. நீங்கள் முயற்சி செய்தால், செயலற்ற நிலை வெறும் சோம்பலாக மாறிவிடும்.

உண்மையான, தீவிரமான செயல்பாட்டை அறியாத மனிதனால் ஒருபோதும் செயலற்ற நிலைக்குள் நகர முடியாது. நீங்கள் முயற்சி செய்தால், செயலற்ற நிலை வெறும் சோம்பலாக மாறிவிடும். வாழ்க்கையில் எப்போதும் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் மக்கள் ஓய்வைப் பற்றிய வல்லுநர்களாக இருந்திருக்க வேண்டும், ஆனால் அது உண்மையல்ல. ஒருபோதும் தீயின் தீவிரத்தை அறிந்திராத மக்களுக்கு நீரின் குளிர்ச்சி தெரியாது. தங்கள் வாழ்க்கையை அரை மனதுடன், அமைதியாக வாழ்ந்தவர்களால் ஒருபோதும் மற்றொரு வழியை அறிய முடியாது. எனவே, குறைந்தபட்சம் சிறிது காலமாவது தீவிர செயல்பாடு, உங்கள் சக்திகள் கொதிநிலையை அடைந்து நகரத் தொடங்க உதவக்கூடும். பின்னர், அவற்றை வேறு ஏதாவதாக மாற்றுவது மிகவும் எளிமையானது.

அதுதான் கர்மா அல்லது செயலின் முழு நோக்கம். ஒரு சாதகர் இதற்காகவே செயலைத் தேர்ந்தெடுக்கிறார். நாம் எப்படியும் செயல்களை செய்யத்தான் போகிறோம். ஆனால் அடால்ஃப் ஹிட்லரின் செயலை போன்றா அல்லது மகாத்மா காந்தியின் செயலை போன்றா என்ற தேர்வு நமக்கு உள்ளது. எப்படியும் நாம் செயல் செய்யத்தான் வேண்டும், எனவே அதை முழு மனதுடன் செய்வதோடு, எவ்விதமான செயல் என்பதையும் தேர்ந்தெடுப்போம்.

ஆட்சி செலுத்துவதா அல்லது சேவை செய்வதா - உங்கள் தேர்வு என்ன?

உலகை ஆள விரும்புகிறீர்களா அல்லது உலகிற்கு சேவை செய்ய விரும்புகிறீர்களா? இறுதியில், இதுதான் தேர்வு. பொதுவாக, எல்லோரும் உலகை ஆள விரும்புகிறார்கள். பெரும்பாலான மக்கள் அரை மனதுடன் இருப்பதால், அவர்களால் தங்கள் குடும்பத்தை மட்டுமே ஆள முடிகிறது! ஆனால் அவர்கள் உண்மையில் விரும்புவது உலகை ஆள்வதுதான். அதற்கான திறனோ அல்லது தீவிரமோ அவர்களிடம் இல்லை. இல்லையெனில், அவர்கள் ஹிட்லர்களாக இருப்பார்கள்.

எனவே, தேர்வு ஆள்வதா அல்லது சேவை செய்வதா என்பதுதான். தெய்வீகத்தன்மைக்கும் மெய்யுணர்தலுக்கும் மிக நெருக்கமானதாகவும், இணக்கமானதாகவும் நீங்கள் கருதும் செயல் வகையை தேர்ந்தெடுங்கள். ஒவ்வொரு க்ஷணமும், அதிதீவிர உணர்வோடு, ஒரு க்ஷணம் கூட இடைவெளி விடாமல் செய்யுங்கள். அப்போது இனி செயலே தேவைப்படாது என்ற நாள் வரும். இந்த "செயலற்ற நிலை" பற்றி உண்மையில் தெரிந்துகொள்ள விரும்பினால், முதலில் செயல் என்றால் என்ன என்பதை நீங்கள் கண்டறிய வேண்டும். நீங்கள் அதை இன்னும் செய்யவில்லை.

விழித்திருக்கும் ஒவ்வொரு க்ஷணத்திலும், என் தூக்கத்திலும் கூட, இடைவிடாமல் நான் என்னை உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் அர்ப்பணிக்கும் இந்த பணியைத் தொடர்கிறேன். இதன் விளைவாக தான் என் வாழ்க்கையில் இவை அனைத்தும் நடந்துள்ளன. இது மிகவும் சக்தி வாய்ந்ததாக ஆகியுள்ளது ஏனென்றால், எனக்கு இது அர்த்தம் இல்லாதது, ஆனால் நான் 24 மணி நேரமும் இதில் ஈடுபட்டுள்ளேன். இதற்கு ஒரு வித்தியாசமான ஆற்றல் உண்டு. இதுவே தியாகத்தின் முழு அர்த்தம். இதன் விளைவாக தான், வார்த்தைகளால் விவரிக்க முடியாத வேறு ஏதோ ஒன்று - உள்ளேயும் வெளியேயும் - நிகழ்கிறது.

இப்படித்தான் இந்த உலகில் உள்ள ஒவ்வொரு சக்திவாய்ந்த மனிதனும் உருவாக்கப்பட்டனர். இது உண்மையாகவே சக்திவாய்ந்த மனிதனை உருவாக்கும் விஞ்ஞானம். இது ஆள்வதற்கான ஆற்றல் அல்ல. இது எந்த நேரத்திலும் பறிக்கப்பட முடிந்த ஆற்றல் அல்ல. யாராலும் இதைப் பறிக்க முடியாது, ஏனெனில் நீங்கள் எங்கு அனுப்பப்பட்டாலும் இதையே தான் செய்வீர்கள். நீங்கள் ஆள விரும்பினால், அரியணையில் அமர வேண்டும். யாராவது உங்களை அரியணையில் இருந்து இழுத்துத் தள்ளினால், நீங்கள் துயரப்படுவீர்கள். இது அப்படிப்பட்டதல்ல. நீங்கள் எங்கே அனுப்பப்பட்டாலும் - சொர்க்கமோ நரகமோ - நீங்கள் உங்கள் வேலையை மட்டும் செய்கிறீர்கள். இது உங்களை கர்மபலனில் இருந்து விடுவிக்கிறது. நீங்கள் கர்மபலனில் இருந்து விடுவிக்கப்பட்டவுடன், செயல் தானாகவே நடக்கும். செயலில் இருந்து விடுபட நீங்கள் வேலையை நிறுத்த வேண்டியதில்லை. அது தானாகவே கரைந்து, உருகி மறைந்துவிடும். கர்மபலனின் எதிர்பார்ப்பு முழுவதுமாக உங்கள் வாழ்க்கையில் இருந்து நீக்கப்பட்டவுடன், செயல் தானாகவே நடக்கிறது. அதற்காக நீங்கள் எதுவும் செய்ய வேண்டியதில்லை.

வேலை செய்யவில்லை எனில், உணவு இல்லை

ஒரு ஜென் மடாலயத்தில், 80 வயதைக் கடந்த ஒரு முதிய குரு இருந்தார். தினமும், அவர் தோட்டங்களில் முழு மனதுடன் உழைத்தார். ஜென் மடாலயங்களில், தோட்டக்கலை என்பது சாதனாவின் மிக முக்கியமான பகுதிகளில் ஒன்று. நாள்தோறும், மக்கள் தோட்டத்தில் நேரத்தைச் செலவிடுவார்கள். இந்த குரு பல ஆண்டுகளாக இதைச் செய்து வந்தார். இப்போது, அவருக்கு 80 வயதைக் கடந்து பலவீனமாகி விட்டார், ஆனால் அவர் நிறுத்தவில்லை. நாள் முழுவதும், அவர் தோட்டத்தில் வேலை செய்தார். பலமுறை அவரது சீடர்கள் அவரைத் தடுக்க முயன்றனர், வேலை செய்வதை நிறுத்துங்கள், நாங்கள் எல்லோரும் இருக்கிறோம், நாங்கள் செய்கிறோம் என்றனர். ஆனால் அவர் தான் செய்யமுடிந்ததை தொடர்ந்து செய்தார். உடல்ரீதியாக வேலை செய்யும் திறன் குறைந்திருக்கலாம், ஆனால் அவரது தீவிரம் குறையவில்லை.

ஒவ்வொரு க்ஷணமும், அதிதீவிர உணர்வோடு, ஒரு க்ஷணம் கூட இடைவெளி விடாமல் செய்யுங்கள். அப்போது இனி செயலே தேவைப்படாது என்ற நாள் வரும்.

ஒரு நாள், சீடர்கள் அவரது கருவிகளை எடுத்து எங்கோ மறைத்து வைத்தனர், ஏனெனில் அவர் இந்த கருவிகளைக் கொண்டு மட்டுமே வேலை செய்வார். அந்த நாள், அவர் உணவு உண்ணவில்லை. அடுத்த நாளும், கருவிகள் இல்லை, அதனால் அவர் சாப்பிடவில்லை. மூன்றாவது நாளும், கருவிகள் இல்லை; அவர் சாப்பிடவில்லை. அப்போது அவர்கள், "ஓ! நாம் கருவிகளை மறைத்து வைத்ததால்தான் அவர் கோபமாக சாப்பிடாமல் இருக்கிறார் என்று பயந்தனர். மீண்டும், அவர்கள் கருவிகளை அவை வழக்கமாக வைக்கப்பட்டிருந்த இடத்தில் வைத்தனர். நான்காவது நாள், அவர் வேலை செய்துவிட்டு சாப்பிட்டார். பின்னர் மாலையில், அவர் தனது போதனையை வழங்கினார்: "வேலை இல்லையேல், உணவு இல்லை”, என்றார். அவர் திரும்பிச் சென்று இறந்துவிட்டார். அது அவரது கடைசி நாள். நான்கு நாட்கள் உண்ணாவிரதம் அவருக்கு மிக அதிகமாக இருந்தது; ஆனால் கடைசி நாள் அவர் வேலை செய்துவிட்டு சாப்பிட்டார், பின்னர் அவர் தனது உடலை விட்டார், மற்றும் அவர் இந்த போதனையை வழங்கினார்: "வேலை இல்லையேல், உணவு இல்லை." இதுபோன்ற மனிதருக்கு, செயல் இப்படித்தான். நரகம், சொர்க்கம் அல்லது பூமி என அவர் எங்கு அனுப்பப்பட்டாலும், அவர் ஒரே மாதிரியாகத்தான் இருப்பார். நீங்கள் இப்படி ஆனதும், நீங்கள் வெளிப்புற சூழ்நிலையில் இருந்து விடுவிக்கப்படுகிறீர்கள்.

கண்களை மூடிக்கொள்வதால் மட்டும் நீங்கள் விடுதலை பெற்றுவிட மாட்டீர்கள். நீங்கள் கண்களைத் திறக்கும் க்ஷணத்தில், எல்லாமே திரும்பி வந்து உங்களைப் பிடித்துக்கொள்ளும். நீங்கள் ஓடிப்போய் மலையில் அமர்ந்தாலும், விடுதலை பெறமாட்டீர்கள். இதை வேலை செய்து தீர்க்க வேண்டும். இதை வேலை செய்து தீர்ப்பதற்கான வழி இதுதான்.

பதிப்பாசிரியர் குறிப்பு:

இந்தப் பதிவு ஞானத்தின் பிரம்மாண்டம் புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்டது. மென்மையான இதயம் கொண்டவர்களுக்கு அல்ல, இந்த புத்தகம் நமது பயங்கள், கோபங்கள், நம்பிக்கைகள் மற்றும் போராட்டங்களைக் கடந்து செல்லும் யதார்த்தத்தைப் பற்றிய பதில்களுடன் நம்மை திறமையாக வழிநடத்துகிறது. வாழ்க்கை, மரணம், மறுபிறப்பு, துன்பம், கர்மா மற்றும் ஆன்மாவின் பயணம் தொடர்பான கேள்விகளுக்கான பதில்களால் சத்குரு நம்மை தர்க்கத்தின் விளிம்பில் நிறுத்தி வைத்து, நம்மை கவர்ந்திழுக்கிறார். இந்தப் புத்தகத்தை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்கள்.