ஈர்ப்பு விதி எவ்வாறு வேலை செய்கிறது? (Law of Attraction in Tamil)
திரைப்பட நடிகை ரகுல் ப்ரீத் சிங் சத்குருவுடன் கலந்துரையாடியபோது, ஈர்ப்பு விதி உண்மையா என்ற கேள்வியை முன்வைக்க, சத்குரு அளித்த ஆழமிக்க பார்வைகளைப் படித்தறியுங்கள்.
ஈர்ப்பு விதி உண்மையா?
ரகுல் ப்ரீத் சிங்: என்னுடைய கேள்வி என்னவென்றால், உங்களது வாழ்க்கை குறிப்பிட்ட விதமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள், அதனால் நேர்மறையான சமிக்ஞைகளை நீங்கள் வெளியிடுகிறீர்கள்..
சத்குரு: யாரிடம்?
ரகுல் ப்ரீத் சிங்: பிரபஞ்சத்திடம்.
சத்குரு: எந்த திசையில், மேல்நோக்கியா அல்லது கீழ்நோக்கியா?
ரகுல் ப்ரீத் சிங்: அதைத்தான் நான் கேட்கிறேன், ஈர்ப்பு விதி எவ்வாறு செயல்படுகிறது? அது உண்மையிலேயே செயல்படுகிறதா?
சத்குரு: ஈர்ப்பு விதி என்பது இரு எதிர் தன்மைகளுக்கு இடையே நிகழ்வது. அப்படித்தானே? அவை இரண்டு காந்தங்களோ அல்லது வேறு ஏதேனும் இரு எதிர் தன்மைகள், ஆண் மற்றும் பெண் அல்லது வேறு எந்த விதமாயினும் ஈர்ப்பு விதி என்பது எப்போதும் இரு எதிர் தன்மைகளுக்கு இடையேயானது, இல்லையா? வடதுருவத்திற்கும் தென்துருவத்திற்கும், இதற்கும் அதற்கும், இப்படித்தான் அது வேலை செய்கிறது.
இப்போது நீங்கள் பிரபஞ்சத்தைப் பற்றி பேசுகிறீர்கள். அப்படியானால் நீங்கள் இந்த பிரபஞ்சத்திற்கு ஒரு வேற்று கிரகவாசியா என்ன?
ரகுல் ப்ரீத் சிங்: இந்த பிரபஞ்சத்தின் ஓர் அங்கம்.
சத்குரு: நீங்கள் இந்த பிரபஞ்சத்தில் ஓர் அங்கம் என்றால், இதில் ஈர்க்கப்பட என்ன இருக்கிறது?
நம் விதியை நாம் நிர்ணயிக்க...
ரகுல் ப்ரீத் சிங்: நல்லது… அப்படியானால், ஏன் உங்களது விதியை நீங்கள் நிர்ணயிக்க முடியும் என்று சொல்கிறார்கள்?
சத்குரு: உங்களால் முடியும். உங்கள் விதியை நிர்ணயிக்க உங்களால் முடியும். நீங்கள் நிர்ணயிக்க வேண்டும். அதுதான் மனிதனாக இருப்பதன் அர்த்தம்.
பாருங்கள், இந்த பூமிக்கு நீங்களும் மற்ற உயிரினங்களைப் போலவே வந்திருந்தால், அவைகளுக்கு சில நிர்ப்பந்த சுழற்சிகள் உள்ளன. அதன்படியே அவை வாழ்கின்றன. அவர்களைப் பொறுத்தவரை அது சரிதான். ஏனெனில் அவர்களால் அவ்வளவுதான் செய்ய இயலும். உங்கள் வாழ்க்கையை நீங்கள் சற்று கவனித்துப் பார்த்தால், உண்மையில் மற்ற உயிரினங்கள் செய்வதிலிருந்து வேறுபட்டு நீங்கள் அவ்வளவு சிறப்பான ஒன்றும் செய்துவிடவில்லை. அவர்கள் பிறந்தார்கள், நீங்களும் பிறந்துள்ளீர்கள். நீங்கள் வளர்கிறீர்கள், அவர்களும் வளர்கிறார்கள். அவர்கள் இனப்பெருக்கம் செய்கிறார்கள், நீங்களும் செய்கிறீர்கள். அவர்கள் இறந்துபோவார்கள், நீங்களும் இறந்துபோவீர்கள். பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஆனால் இந்த எளிமையான விஷயங்களை நம்மால் மிகவும் விழிப்புணர்வோடு செய்ய இயலும். மனிதனாய் வாழ்வதன் முக்கியத்துவம் அதுதான்.
அதை நீங்கள் நடத்தும் அந்தக் கணத்தில், உதாரணமாக நீங்கள் உங்களது கையை மிகவும் விழிப்புணர்வோடு நடத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம், இப்போது இந்தக் கை நீங்கள் விரும்புவதைச் செய்யும் இல்லையா? அப்படி இல்லாமல், நீங்கள் இங்கு அமர்ந்துகொண்டு இப்படிச் சுரண்டிக்கொண்டு இருக்கமாட்டீர்கள். இப்போது இந்த கரம் நீங்கள் விரும்புவதை செய்யும். நீங்கள் உங்களது எண்ணங்களை விழிப்புணர்வோடு நடத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது உங்களது எண்ணங்கள் நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதைச் செய்யும். உங்களது எண்ணங்கள் நீங்கள் விரும்புவதைச் செய்யும் நிலையில் இருந்திருந்தால், நீங்கள் உங்களை எப்படி வைத்துக்கொள்வீர்கள்? ஆனந்தமாகவா அல்லது துயரமாகவா?
Subscribe
ரகுல் ப்ரீத் சிங்: ஆனந்தமாக.
சத்குரு: ஆனந்தமாக. நீங்கள் ஆனந்தமாக இருந்தால், நீங்கள் உங்களது மகிழ்ச்சியைத் தேடிப் போவீர்களா? அதனால், நீங்கள் ஆனந்தமாய் இருந்தால், மக்கள் தங்கள் வாழ்வில் மிகப் பெரிய விஷயங்களாக எண்ணிக் கொண்டிருக்கும், அமைதியாக இருப்பது, மகிழ்ச்சியாக இருப்பது, இந்த முட்டாள்தனங்கள் எல்லாம் உங்களுக்கு ஒரு பொருட்டாக இருக்காது. ஆனால் இதனை நீங்கள் அவர்களிடம் சொல்ல முடியாது, அவர்கள் அவமானப்படுத்தப்படுவதாக உணர்வார்கள்.
ரகுல் ப்ரீத் சிங்: அவர்களோடு ஒத்திசைந்து செல்ல வேண்டும் (இருவரும் சிரிக்கிறார்கள்)
சத்குரு: ஆனால் முக்கியமாக, உங்களது எண்ணங்களும் உணர்வுகளும் உங்களின் சொல்படி நடக்கின்றன என்றால், நீங்கள் உங்களை இனிமையின் உச்சநிலையில் வைத்துக்கொள்வீர்கள், இல்லையா?
ஆம். அது நிகழ்ந்தால் உங்களது ஒட்டுமொத்த வாழ்வியல் செயல்முறையும் ஒரு தளர்வுநிலைக்கு - ஒட்டுமொத்த தளர்வுநிலைக்கு வந்துவிடும். ஆனால் இது இப்போது ஏன் இப்படி இருக்கிறது என்றால், நீங்கள் ஒரு பாயும் புலி போல, எப்போதும் ஏதோ ஒன்றை அடையும் ஆர்வத்தில் இருக்கிறீர்கள். அடைவதற்கு வாழ்வில் ஒன்றும் இல்லை, இங்கே நீங்கள் வெறுமனே அமர்ந்தாலே உங்கள் வாழ்க்கை முழுமையாக இருக்கிறது. இப்போது இது தளர்வாக, முழுவதும் தளர்வடைந்த நிலையில் இருக்கிறது. இப்படி ஒரு தளர்வான நிலையில் இது இருக்கும்போது, இது ஒரு புரிதலுக்கு வருகிறது. இப்போது வெறுமனே ஒரு தொழிலில் ஈடுபடுவதோ, பொருள் ஈட்டுவதோ அல்லது மகிழ்ச்சியாக இருப்பதோ அல்லது அன்பாக இருப்பதோ அல்லது காதலில் விழுவதோ, எதுவும் உங்களுக்கு ஒரு பொருட்டாக இருக்காது. ஏனெனில் வெறுமனே இங்கு அமர்ந்திருக்கும்போதே, இனிமையின் உச்சநிலைகள் உங்களுக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இப்போது அந்த வாழ்வைக் கொண்டு நீங்கள் என்ன செய்வீர்கள்? இயல்பாகவே இப்போது எது உங்கள் அனுபவத்தில் இல்லையோ அதைத் தேடிச் செல்வீர்கள். இப்படித்தான் ஆன்மீக செயல்முறை துவங்குகிறது. இப்படித்தான் நீங்கள் உங்கள் வாழ்க்கையை உங்களது கைகளில் எடுத்துக்கொள்கிறீர்கள்.
எது நிகழ்ந்தாலும் ஆனந்தமாக இருக்க முடியுமா?
இப்போது நீங்கள் ஏதோ ஒன்றுக்காக ஆசைப்படுகிறீர்கள், அது நிகழ்ந்துவிட்டது. நீங்கள் இதனை அறிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பெரும்பாலான மக்களுக்கு அவர்கள் விரும்புவதில் குறைந்தபட்சம் 50 சதவீதம் நிகழ்ந்துவிடுகிறது. ஆனால் அவர்கள் என்னவோ நிகழாத அந்த சில விஷயங்களில் தான் கவனம் கொள்கிறார்கள். நீங்கள் நேர்மையாகப் பார்த்தால், சமூகத்தில், ஓரளவு நல்ல நிலையில் வாழும் சமூகங்களில், 90 சதவிகிதம் அவர்கள் விரும்புவது நிகழ்கிறது. அவர்களின் புலம்பல்கள் எல்லாம் மீதி உள்ள 10% பற்றித் தான். ஹலோ, இது உண்மைதானே?
90 சதவிகிதம் உங்களது வாழ்க்கை நீங்கள் விரும்பும் வழியிலேயே நிகழ்கிறது. 10 சதவிகிதம் பற்றித்தான் நீங்கள் ஆதங்கப்படுகிறீர்கள். இந்த 10 சதவிகிதம் நீங்கள் விரும்பிய வழியில் நிகழாததால் நீங்கள் அந்த 90 சதவிகிதத்தை எப்போதும் கொண்டாடி மகிழ்வதே இல்லை.
அதனால், நீங்கள் ஏற்கனவே ஒரு பெரும் அளவிற்கு உங்கள் விதியை உங்கள் கட்டுப்பாட்டில் தான் வைத்துள்ளீர்கள். ஒரு சிறிதளவு தான் தடம் மாறிவிடுகிறது. ஆனால் அந்த சிறிதளவினாலும் உங்களை அவதிப்பட வைக்க முடிகிறது. நீங்கள் ஒரு 100 கிலோமீட்டர் பயணிக்க வேண்டும் என்று வைத்துக்கொள்வோம். அதில் நீங்கள் செல்ல விரும்பிய இடத்திற்கு, 90 கிலோ மீட்டர் வரை நன்றாகக் கடந்துவிட்டீர்கள். 91வது கிலோ மீட்டரில் விபத்துக்கு உள்ளாகிவிட்டது. இருப்பினும் அது நல்லது இல்லை, இல்லையா?
அதனால்தான் அவர்கள் முறையிடுகிறார்கள். அவர்கள் ஏதோ வெறுமனே குறைபட்டுக் கொள்வதாக நான் கூறவில்லை, ஏனெனில் 90 கிலோ மீட்டர் வரை எல்லாமே நன்றாக சென்றது, ஆனால் இலக்கை அடைவதற்கு சற்று முன் விபத்துக்குள்ளானது. அதனால் அவர்கள் அதற்காக துன்பப்படுகிறார்கள். இப்போது இது ஏன் இப்படி என்றால், நம்மை சுற்றிலும் சூழ்நிலைகள் நிகழ்கின்றன. எல்லா சூழ்நிலைகளும் எப்போதும் நாம் விரும்புவதுபோல் நிகழ்வதில்லை. ஏனெனில் சூழ்நிலைகள் என்பது நான் மட்டுமல்ல. ஒரு சூழ்நிலை என்பதில் பல மனிதர்கள் ஈடுபட்டுள்ளார்கள். பல்வேறு விசைகளும் இதில் பங்கேற்கின்றன. அவை அனைத்தும் என்னுடைய வழியில் நிகழ வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், நான் விரும்பும் வழியில் என்னை நிகழ்த்திக்கொண்டால் நான் ஆனந்தமாக இருக்கிறேன், சரியா? கோல்ஃப் பந்து நேராக குழிக்குச் சென்றாலும் அல்லது மலைக்குள் சென்றுவிட்டாலும், நான் ஆனந்தமாகத்தான் இருக்கிறேன்.
ரகுல் பிரீத் சிங்: சரி, இப்படிப் பார்க்கும்போது, இப்போது எல்லா விஷயங்களும் நீங்கள் விரும்பும் விதத்தில் நடக்கும் வரை, நீங்கள் உங்களுக்கான வழியில் சென்று கொண்டிருக்கும் வரை, நீங்கள் ஆனந்தமாக இருக்கிறீர்கள், அப்படித்தானே?
சத்குரு: இல்லை, இல்லை, இல்லை, அப்படி இல்லை! எல்லா விஷயங்களும் நீங்கள் விரும்பும் விதத்தில் நடக்கும் வரை நீங்கள் ஆனந்தமாக இருப்பீர்கள் என்று நான் சொல்லவில்லை. நீங்கள் ஆனந்தமாக இருந்தால், அது எப்படி நிகழ்ந்தாலும் அதைப்பற்றி உங்களுக்கு கவலையில்லை. அது எந்தவிதமாக நிகழ்ந்தாலும், நீங்கள் ஆனந்தமாக இருப்பீர்கள்.
பாருங்கள், இது முக்கியமாக என்னவென்றால், உலகத்தில் மக்கள் குதிரைக்கு முன்னால் வண்டியைப் பூட்டப் பார்க்கிறார்கள். நீங்கள் எனக்கு சொல்லுங்கள், எது உங்களுக்கு சுலபமானது? உங்களை உங்களின் ஆளுமைக்குள் எடுத்துக்கொள்வதா? அல்லது இங்கிருக்கும் இத்தனை மக்களையும் உங்களின் ஆளுமைக்குள் எடுத்துக்கொள்வதா? எது சுலபமானது?
இப்போது நீங்கள் இங்கே அமர்ந்திருக்கிறீர்கள், இப்போது உங்களுக்கு எது சுலபமானது? உங்களை உங்கள் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொள்வதா, அல்லது இந்த மக்கள் அனைவரையும் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் எடுத்துக்கொள்வதா?
ரகுல் ப்ரீத் சிங்: என்னை.
சத்குரு: உங்களை. நீங்கள் முதலில் அதைத்தான் செய்ய வேண்டும், இல்லையா? எது எளிமையாகவும் சுலபமாகவும் உள்ளது? உங்களுக்கு நீங்கள் பொறுப்பேற்றுக் கொண்டால், இப்போது இந்த மனிதர்களிடம் இருந்து எந்த அளவிற்கு ஒத்துழைப்பைப் பெறமுடியும் என்று பார்க்கலாம். இப்போது நீங்கள் மகிழ்ச்சித் தேடலில் இருப்பதாகக் கூறும்போது, இதற்கு அர்த்தம் என்னவென்றால், அவர்கள் அனைவரும் நீங்கள் விரும்பும் விதமாக நடக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்கள். எப்போது நீங்கள் இது நடந்தால்தான் நான் மகிழ்ச்சியாக இருப்பேன், அது நடந்தால்தான் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று சொல்கிறீர்களோ, அதன் பொருள் என்னவென்றால் இந்த உலகமும், இந்த பிரபஞ்சமும் நீங்கள் விரும்பியபடி பதில் செயலாற்ற வேண்டும் என்பதுதான்.
உங்களுக்கு நீங்கள் பொறுப்பேற்கும்போது…
ரகுல் ப்ரீத் சிங்: நான் அதைச் சொல்லவில்லை. நான் அதை நம்புவதில்லை. ஏனெனில் அது அனைத்திலும் கட்டுப்பாடுகள் விதிப்பதாக இருக்கிறது. ஆனால் நான் கூறியது என்னவென்றால், சரி, ஒரு எளிய உதாரணம் சொல்கிறேன். ஒருவர் தான் ஒரு நடிகராக விரும்புகிறார். அல்லது ஒருவர் தான் ஒரு கிரிக்கெட் வீரராக விரும்புகிறார். இப்படி நீங்கள் உங்கள் வாழ்வில் என்னவாக விரும்புகிறீர்கள் எனும் எளிய உதாரணத்தை எடுத்துக்கொள்கிறேன்.
சத்குரு: அப்படி நீங்கள் விரும்பியது நடக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். அப்படி அது நடக்கவில்லை என்றால் அதற்கு என்ன பொருள்? மக்களுக்கு உங்களின் நடிப்பு பிடிக்கவில்லை அல்லது தேர்வுக் குழுவிற்கு உங்களின் கிரிக்கெட் பிடிக்கவில்லை, அப்படி ஏதோ ஒன்று நிகழ்ந்து நீங்கள் விரும்பியது நடக்கவில்லை என்று வைத்துக்கொள்வோம். அப்படி இருந்தாலும் நீங்கள் இங்கே ஆனந்தமாக அமர முடியுமா? அதுதான் கேள்வி.
ரகுல் ப்ரீத் சிங்: பெரும்பாலான மனிதர்களுக்கு அது சாத்தியமில்லை.
சத்குரு: அதனால்தான் நான் சொல்கிறேன், நீங்கள் செய்ய முயல்வது என்னவென்றால், “நான் செய்வதை அனைவரும் விரும்ப வேண்டும்” என்று நீங்கள் சொல்லும்போது, நீங்கள் ஏதோ ஒருவிதத்தில் அவர்களின் மனங்களை உங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நினைக்கிறீர்கள். அதைத்தான் நீங்கள் செய்கிறீர்கள். ஏதோ ஒரு வழியில், திரைப்படங்கள் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் ஒரு விதத்திலோ அவர்கள் விரும்புவதைச் செய்து அவர்களின் மனங்களை உங்களின் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்கிறீர்கள். அதனால்தான் அது வேலை செய்கிறது, இல்லையா? இல்லையென்றால் அது அப்படி வேலை செய்யாது.
ரகுல் ப்ரீத் சிங்: சரிதான்.
சத்குரு: அப்படியானால் எது சுலபமானது. இதற்கு (தன்னை சுட்டிக்காட்டுகிறார்) பொறுப்பேற்றுக் கொள்வதா? அல்லது அவர்களைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்வதா? இதனைத்தான். (தன்னை சுட்டிக்காட்டுகிறார்) இதற்கு நீங்கள் பொறுப்பேற்றுக் கொண்டீர்களானால், இப்போது நீங்கள் உங்களின் மகிழ்ச்சியை தேடிச் செல்லமாட்டீர்கள், நீங்கள் எதைப் பற்றியும் பதற்றம் கொள்ளமாட்டீர்கள், உங்களின் தலைக்கு மேலே எந்தக் கத்தியும் தொங்கிக் கொண்டிருக்காது. அனைத்து செயல்களையும் முழுமையாக அதன் உச்சத்திற்கு செய்வீர்கள். ஏனெனில், என்ன நிகழுமோ என்ற எந்தக் கவலையும் உங்களுக்கு இல்லை. எது நிகழ்ந்தாலும் நீங்கள் நலமாகவே இருப்பீர்கள் என்பது வரை உங்களுக்கு தெளிவாகத் தெரியும். இப்போது நீங்கள் இயல்பாகவே எல்லாவற்றையும் அற்புதமாக செய்வீர்கள். ஏனென்றால் அதற்காக நீங்கள் எள்ளளவும் கவலைப்படப் போவதில்லை, ஏனென்றால், நீங்கள் எது தேவையோ அதை எந்த சிரமமும் இல்லாமல் செய்துவிடுவீர்கள். எனவே, ஒரு பெரிய சர்க்கஸ் என்று, ஒரு சாதனை என்று பிறர் நினைப்பதை, நீங்கள் மகிழ்ச்சியுடனும் விளையாட்டுத்தனமாகவும் செய்வீர்கள்.
காலமும் இடமும் ஒன்றாகும் நிலை
ரகுல் ப்ரீத் சிங்: சரி சரி, ஆக நீங்கள் ஈர்ப்பு விதி என்பதை ஒட்டுமொத்தமாக நிராகரித்துவிட்டீர்கள். அப்படி ஒன்று இல்லவே இல்லை, அப்படித்தானே?
சத்குரு: அது இருக்கிறது, நிச்சயமாக உங்களை நோக்கி நிறையப் பேர் ஈர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.
ரகுல் ப்ரீத் சிங்: இல்லை, அந்த ஈர்ப்பு விதி இல்லை. நான் கேட்பது, இந்த பிரபஞ்சம் நீங்கள் விரும்புவதைக் கொடுப்பதைப் பற்றியது.
சத்குரு: இல்லை, நான் கேட்கிறேன், இந்தப் பிரபஞ்சம் என்று சொல்கிறீர்களே அது எங்கே இருக்கிறது?
ரகுல் ப்ரீத் சிங்: சரி, நாம் இந்தப் பிரபஞ்சத்தின் அங்கமாக இருக்கிறோம்.
சத்குரு: சப்த ரிஷிகள் என இன்று அறியப்படும் அந்த ஏழு முனிவர்கள் ஆதியோகியிடம், “இந்தப் பிரபஞ்சம் எங்கே துவங்குகிறது? எங்கே முடிகிறது? எவ்வளவு பெரியது இது? இது என்ன?” என்று அவர்கள் கேட்டபோது, “உங்களின் மொத்தப் பிரபஞ்சத்தையும் ஒரு கடுகுக்குள் என்னால் அடக்கிவிட முடியும்” என்று அவர் சிரித்துக்கொண்டே சொன்னார். இது மிகத் திறமையாக பொட்டலம் கட்டும் விதம்தான், இல்லையா?
எதனை நீங்கள் காலம் மற்றும் இடம் என்று நினைக்கிறீர்களோ அது உங்களது மனத்தின் இயல்பான தன்மையினால்தான், உங்களது காரண அறிவு மனத்தின் எல்லைகளைக் கடந்து சென்றீர்கள் என்றால், எது அங்கே உள்ளதோ அது இங்கே உள்ளது, எது இங்கே உள்ளதோ அது அங்கே உள்ளது, முன்பு என்பது எதுவோ அது இப்போதாக இருக்கிறது, இப்போது என்பது முன்பு என்பதாக இருக்கிறது, உங்களின் புரிதலில் காலம் மற்றும் இடம் எல்லாம் ஒன்றோடு ஒன்று கலந்து போய்விடுகின்றன.