உலக புத்தக தினம் : சிறுவயதில் சத்குரு எந்தெந்த புத்தகங்களைப் படித்தார்?
புத்தகங்கள் மற்றும் அவற்றை எழுதிய ஆசிரியர்களுக்கு மதிப்பூட்டும் விதமாக யுனெஸ்கோவால் உலக புத்தக தினம் துவங்கப்பட்டது. ஒவ்வொரு ஏப்ரல் 23 அன்றும் உலக மக்கள் அனைவரும் கல்வித்திறன் மற்றும் படிப்பாற்றலை கொண்டாடுகிறார்கள். இந்த தினத்தை குறிக்கும் விதமாக சத்குரு தன்னை நடுக்கடலில் தொலைந்து போக வைத்த புத்தகங்கள் மற்றும் ரஷ்ய கட்டுமானம் பற்றிய புத்தகங்கள் குறித்து தன் அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.
கடலில் தொலைந்த குழந்தைபருவம்
நான் மூன்றாவது படிக்கும்போது என்னுடைய முதல் புத்தகத்தை வாசித்தேன் என்று நினைக்கிறேன். அது ஜோல்ஸ் வெர்னெ அவர்கள் இயற்றிய 20000 லீக்ஸ் அண்டர் தி சீ (20000 leagues under the sea) என்ற புத்தகம். அதில் அவர் எல்லாவற்றையும் மிகைப்படுத்தி இருந்தார். ஒரு பெரிய ஆக்டோபஸ் வந்து, அவர்களின் நீர்மூழ்கிக் கப்பலை தாக்கும். உண்மையில் உலகில் இத்தகைய ஆக்டோபஸ் எங்கும் இல்லை. ஆனால் அது என் கற்பனையை பன்மடங்கு தூண்டிவிட்டது. நான் கடலுக்குச் சென்று இந்த ஆக்டோபஸ்களை பார்க்க விரும்பினேன். கிட்டத்தட்ட ஆறு முதல் எட்டு மாதங்களுக்கு என் மூளைக்குள் இந்த ஆக்டோபஸ்கள் தவழ்ந்து கொண்டு இருந்தன. என் கற்பனையைத் தட்டி விட்ட அடுத்த பெரிய புத்தகம் கில்லீவர்ஸ் டிராவல்ஸ் (Gulliver's Travels). உங்களுக்கு ஏழு அல்லது எட்டு வயது இருக்கும்போது, இந்த உலகில் நீங்கள் ஒரு குள்ள மனிதன். எல்லோரும் என்னை விட உயரமானவர்கள்தான். ஆனால் நான் அவர்களை போல யோசிக்கிறேன், அவர்களை போல் உணர்கிறேன். ஆனாலும் அவர்கள் என்னை ஒரு குள்ளமனிதனாகதான் பார்க்கிறார்கள். அதனால் நான் அந்த குள்ளர்கள் வாழும் தீவுக்குச் சென்று அவர்களை சந்திக்க விரும்பினேன்.
இந்த கடல் பயணங்கள் பற்றிய புத்தகங்கள், ராபின்ஸன் க்ரூஸோவை கவர்ந்தது போல என்னையும் கவர்ந்தன. நான் ஒன்பதாம் வகுப்பு படித்து கொண்டிருக்கும்போது, நானும் என் நண்பர்களும் சேர்ந்து ஒரு படகை தயாரித்து ஒரு தீவுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்தோம். அதற்காகவே கடல் நீரோட்டங்களைப் படித்தோம் - எப்படி செல்ல வேண்டும், எந்த வானிலையில் பயணத்தை தொடங்க வேண்டும் என்று கூட தீர்மானித்தோம். ஆனால் நாங்கள் அங்கு கடைசி வரை போகவேயில்லை. உயர்நிலைப்பள்ளியில், நான் வாசித்த ஒரு புத்தகம் ரிச்சர்டு பாக் எழுதிய ஜோனதன் லிவிங்ஸ்டன் சீகல். நான் அவரது மாயைகளை பல முறை படித்தேன். ஹேர்மன் மெல்வில்லின் மோபி-டிக் கதை ஒரு திமிங்கலத்தை பற்றியது. இதிலும் கடல்தான்.
ரஷ்ய கட்டுமானம்
சில புத்தகங்கள் உங்கள் வாழ்க்கையின் போக்கையே மாற்றக்கூடியவை. அநேகருக்கு, புத்தகங்கள் ஒரு திருப்புமுனையாக இருந்திருக்கின்றன. டால்ஸ்டாயின் அனைத்து புத்தகங்களையும் நான் வாசித்திருக்கிறேன், அண்ணா கரேனினாவை என்னால் முடிக்க முடியவில்லை; அது முடிவில்லாமல் போய்க்கொண்டே இருந்தது. அதேபோல தாஸ்தோவஸ்கி, காம்யூ மற்றும் காஃப்கா (Dostoevsky, Camus and Kafka) வாசித்திருக்கிறேன். இந்த புத்தகங்களை எழுதியவர்களின் அறிவாற்றல் என்னை மிகவும் கவர்ந்தது. ஆனால் ஒரு கட்டத்தில், இந்த மனிதர்கள் புத்திசாலிகளாக இருந்தாலும், இதில் ஒரு தேவையற்ற உளவியல் காரணி இருந்தது – துன்பத்தை பல வகைகளில் கொண்டாடும் ஒரு நோயுற்ற மனநிலை.
Subscribe
அந்த நாட்களில் "நவ கர்நாடகா" என அழைக்கப்படும் புத்தகக்கடைகள் இருந்தது. அவர்கள் முக்கியமாக ரஷ்ய புத்தகங்களை விற்பார்கள். லியோ டால்ஸ்டாயின் போர் மற்றும் அமைதி போன்ற பெரிய இலக்கிய நூல்கள் இரண்டு ரூபாய்க்கும், பொறியியல் நூல்கள் ஒன்று அல்லது இரண்டு ரூபாய்க்கும் கிடைக்கும். எல்லாம் கடினமான புத்தகங்கள். நான் ஒரு கட்டு ரஷ்ய பொறியியல் புத்தகங்களை வாங்கினேன். நீர் சுத்திகரிப்பு பற்றிய புத்தகங்களை வாங்கினேன். என் பண்ணையில் உட்கார்ந்து இரவு பகலாக அதைப் படித்து அதைப்பற்றி தெரிந்துகொண்டேன். இரண்டு மூன்று மாதங்கள் இதற்காக செலவிட்டேன். அதன்பின் கட்டுமான பணிகளிலும் நான் ஈடுபட நினைத்தேன். நான் ஒரு நீர் சுத்திகரிப்பு தேவைப்படும் குறிப்பிட்ட தொழிற்சாலைக்கு சென்று அதை நிறுவித் தர அவர்களிடம் ஒப்பந்தம் கேட்டேன். இதை கேட்ட உரிமையாளர் "நீங்கள் வேடிக்கையானவர். நீங்கள் இதை செய்யப் போவதில்லை. நீங்கள் அதை செய்யவும் முடியாது. டெண்டர் குறைந்தபட்சம் எடுத்துக்கொண்டாலே முப்பத்தி இரண்டு லட்சம் ஆகும். நீங்கள் என்னவென்றால் ஒரு லட்சத்தி ஏழு அல்லது ஆறு ஆயிரத்தில் முடிக்கிறேன் என்று சொல்கிறீர்கள். இது எப்படி உங்களால் முடியும்" என்றார்.
அதற்கு நான் எனக்கு இன்னும் ஒரு நாள் அவகாசம் கொடுங்கள் என்று கூறி, மறுபடியும் அந்த புத்தகத்தை ஆழமாக படித்து, அவரிடம் வந்து, "என்னால் இதைச் செய்ய முடியும் என்றேன்."
அதற்கு அவர் "உனக்கு தொன்னூறு நாட்கள் தருகிறேன்." குறிப்பிட்ட கேடுவுக்குள் அதை முடித்து, இயக்கி காண்பிக்க வேண்டும். ஒருவேளை அது வேலை செய்யவில்லை என்றால், அதை முழுவதும் பிரித்து, இடத்தை சுத்தம் செய்து தரவேண்டும். முன்பணமாக ஒரு ரூபாய் கூட தர மாட்டேன் என்றார்.
அதை நான் வெறும் தொன்னூறு ஆயிரத்தில், எழுபது நாட்களில் முடித்து இயக்கியும் காண்பித்தேன். மிகச்சாதாரணமாக எண்பதாயிரம் ரூபாய் அதன் மூலம் சம்பாதித்தேன். என் கட்டுமான தொழில் நிறுவனமும் நகரில் முக்கியமான நிறுவனமாக வளர்ந்தது. பின்னர் நான் ஞானோதயம் அடைந்து விட்டேன். அதனால் அனைத்தையும் விட்டுவிட்டேன்!
ஆசிரியர் குறிப்பு: ஆங்கிலத்தில் அதிகமாக விற்பனையாகி மக்களால் பெரிதும் விரும்பப்பட்ட இப்புத்தகம், தமிழில் மிக நேர்த்தியாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதோடு, உள்நிலை தொழிற்நுட்பங்களை விஞ்ஞானப் பூர்வமாக விளக்குகிறது. இந்த புத்தகத்தை டவுண்லோடு செய்து படித்து பயன்பெறுங்கள்!