கேள்வி: வணக்கம் சத்குரு,

என்னுடைய ஊர் மேற்கு வங்காளம். என் பெயர் ஷொரொப்ரட்டும் முகர்ஜி. நான் கடந்த சில மாதங்களாக உங்களை ஃபாலோ செய்கிறேன். நான் உங்கள் வீடியோக்கள் எல்லாம் பார்க்கிறேன்.

சொல்லப்போனால், நான் உங்கள் ஃபேன் ஆகிவிட்டேன். எனக்கு கேள்வி என்னவென்றால், நீங்கள் சொல்லி இருக்கிறீர்கள், எதை நாம் வாழ்க்கையில் சேகரிக்கிறோமோ…

அதாவது, சம்பளம், நம் செல்வாக்கு, நம் சொத்து, உடல் தசை எல்லாமே, இதெல்லாம் என்னுடையது எனலாம், ஆனால் இது நான் இல்லை என்று சொல்வீர்கள், இதை நான் கவனித்தேன், இது மிகவும் சரியான லாஜிக்தான். நான் சொல்லலாம், இந்த வீடு என்னுடையது, ஆனால் அது நான் இல்லை. நான் சொல்லலாம், உடல் என்னுடையது, ஆனால் நான் இல்லை என்று. அப்போது எதுதான் நான்? அப்போது நான் யார்? நான் சேர்த்ததை எல்லாம் கழித்துவிட்டால், அப்போது நான் என்பது என்ன? நான் என்பது யார்? அதை தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

சத்குரு:

என்னை ஏன் கேட்கிறீர்கள்? (சிரிப்பலை).

நீங்கள் என்பது எது? இப்போது எதை ‘நான்' என்று நினைக்கிறீர்களோ, அது வெறும் எண்ணங்கள், உணர்ச்சிகள், அபிப்ராயங்கள், முன்முடிவுகள், தத்துவங்கள், கொள்கைகள், இப்படி ஏதேதோ கலந்திருக்கிற ஒரு குவியல். நீங்கள் ஒரு Scrapbook தான். அது பிடிக்கவில்லையா? சரி, நீங்கள் ஒரு Cocktail. சரி, இவரை அப்கிரேட் கொஞ்சம் பண்ணுவோமா? நீங்கள் ஒரு பூங்கொத்து போல.

‘நான் யார்?’ இது இன்னொருவரைக் கேட்கிற கேள்வி இல்லை!

நான் என்பது என்ன? அமெரிக்காவில் Ohio - Cincinnati airport-ல் இது நடந்தது. எல்லோரும் வரிசையில் நின்று கொண்டிருந்தார்கள். விமானத்திற்கான டிக்கெட் கவுண்டர் அது.

ஒருவர் வரிசையில் நிற்காமல் நேராக முன்னால் வந்து டிக்கெட்டை நீட்டினார். கவுண்டரில் இருந்த பெண்மணி, "ஐயா, இங்கே ஒரு லைன் இருக்கிறது" என்றார். அதற்கு அவர், "நான் அவசரத்தில் இருக்கிறேன்" என்றார்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அதற்கு அந்த பெண்மணி, "எல்லோருக்கும் தான் அவசரம். நீங்களும் அதே விமானம்தானே, போய் வரிசையில் நில்லுங்கள்" என்றார். உடனே அவர், "நான் யார் என்று தெரியுமா?" என்றார். அந்த பெண்மணி அவரைப் பார்த்தார். டக் என்று மைக்கை கையில் எடுத்து, "இங்கே அவர் யார் என்று தெரியாத ஒருவர் இருக்கிறார், யாராவது அவருக்கு உதவி பண்ணுங்கள்" என்றார்.

இப்போது இருத்தலுக்கே அடிப்படையான கேள்வி இது, இது சின்ன கேள்வி இல்லை. நீங்கள் யார் என்றே உங்களுக்கு தெரியவில்லை, இது சாதாரண பிரச்சனையா?

நான் யார்? இது இன்னொருவரைக் கேட்கிற கேள்வி கிடையாது. இந்த கேள்வியை உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டும். அதை இன்னும் இன்னும் ஆழமாக்க வேண்டும். இப்போது நீங்கள் கேட்கிற விதம், காலையில் பிரார்த்தனை செய்வது போல இருக்கிறது. எப்படி வழிபாடு செய்வார்கள் என்று உங்களுக்கே தெரியும்.

ஏதோ மந்திரம் கற்றுக்கொண்டீர்கள், “நம் நம் நம்...” குழந்தை ஏதோ பண்ணுகிறது. “ஏய் ச்சூ…” அப்படியே நடுவில் போன் கால் கூட எடுக்கலாம். இப்போதெல்லாம், ஏன் கோவிலில் கூட பூசாரி நடுவில் போன் எடுத்து பேசுகிறார், எல்லாம் நடக்கிறது.

இப்படியே ஒரு சமயம் கிறிஸ்துமஸ் நேரத்தில் ஒரு பெண்மணி பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார். அது பக்கத்து வீட்டுக்காரருக்கு கேட்டது. அவர் பிரார்த்தனையில், “அன்பான கடவுளே! ப்ளீஸ் இந்த தடவையாவது... போன தடவைதான், அந்த முட்டாள் தாத்தா சாண்டா கிளாஸ் என் பிரார்த்தனையை தவறாக புரிந்துகொண்டாரே. எனக்கு உடம்பு குறைய வேண்டும், பேங்க் பேலன்ஸ் கனமாக வேண்டும் என்று கேட்டேன். போன தடவை அவர் தவறாக புரிந்துகொண்டார்.”

ஏன் இதை சொல்கிறேன் என்றால், உலகத்தில் இருக்கிற பிரார்த்தனைகள் எல்லாவற்றையும் பாருங்கள். அன்பான கடவுளே! இதைக் கொடுப்பா, அதை கொடுப்பா, காப்பாத்துப்பா, இது தெய்வீகம் போல தெரிகிறதா? இல்லை, வெறும் பிழைப்பு போல தெரிகிறதா? பிழைப்பிற்கு ஆள் போடுகிறார்கள்.

உலகத்தில் பிழைத்திருக்க உங்களுக்கு கை கால்கள் வேண்டும், மூளையில் கொஞ்சம் செல்கள் இயங்க வேண்டும், அவ்வளவுதான்.

'நான் யார்?' என்ற கேள்வியும் ரமண மகரிஷியும்

ரமண மகரிஷி, Ramana Maharishi

உடனே நீங்கள், "சத்குரு அதெல்லாம் சரிதான், நான் யார் என்று எனக்கு தெரிய வேண்டும்."

இந்த நான் யார் என்கிற சமாச்சாரம் மிகப் பிரபலமாவதற்கு காரணம் ரமண மகரிஷி. கேள்விப்பட்டிருக்கிறீர்களா ரமண மகரிஷி? அவர் பெங்காலி இல்லை. ரமணர், "நான் யார்?" என்று கேட்டு அப்படியே உட்கார்ந்துவிட்டார்.

மக்கள் இன்றைக்கு எதுவும் செய்யத் தேவையில்லை, அவ்வப்போது யாரையாவது பார்த்து, நான் யார், நான் யார் என்று கேட்டால் அதையே ஆன்மீகம் என்று நினைக்கிறார்கள்.

நான் லாஸ் ஏஞ்சல்ஸில் ஒரு கிளாஸ் எடுத்துக் கொண்டிருந்தேன். அங்கே நிறைய பேர் இருந்தார்கள். தோராயமாக 150 பேர் இருப்பார்கள், எல்லோருமே முக்கியமானவர்கள். நிறைய ஹாலிவுட் ஆட்கள். அதில் பல இளம்பெண்கள், பார்ப்பதற்கு ஒன்றுபோல இருந்தார்கள். அவர்கள் சகோதரிகள் இல்லை, எல்லோருக்கும் ஒரே டாக்டர். (சிரிப்பலை)

நான் அவர்களுக்கு எளிய 21 நிமிட பயிற்சி சொல்லித் தருகிறேன். எதற்கு? உள்முகமாக திரும்ப வைப்பதற்கு. ஏனென்றால், இந்த கேள்வியை வெளியே கேட்டால், எதுவும் உணரமாட்டீர்கள். நான் உங்களுக்கு, “நீங்கள் ஆத்மா, நீங்கள் பரமாத்மா…” அந்த குப்பையை எல்லாம் சொன்னால், அது உங்களை எங்கே கொண்டு சேர்க்கும்? சும்மா அதிக வார்த்தைகள் தான். நான் உங்களிடம், "நீங்கள் ஆன்மா, நீங்கள் ஒரு தெய்வாம்சம், நீங்கள் ஆத்மா, நீங்கள் பரமாத்மா" என்று சொன்னால், எதையும் அடைய மாட்டீர்கள். உங்களுக்கு அதிக அர்த்தமில்லாத வார்த்தைகள் கிடைக்கும், அவ்வளவுதான் கிடைக்கும்.

நான் சொன்னேன், "நாங்கள் கற்றுக் கொடுப்பது எளிய 21 நிமிட பயிற்சி. எப்படி உள்முகமாகப் போவது?"

அப்போது அதில் ஒருவர் சொன்னார், "சத்குரு... ஆனால் நீங்கள் 21 நிமிடம் நாங்கள் இதை எல்லாம் செய்ய வேண்டும் என்று சொல்கிறீர்கள். ஆனால், ரமண மகரிஷி ஒன்றுமே செய்யத் தேவையில்லை என்றாரே?”

ரமணர் லாஸ் ஏஞ்சல்ஸ்க்கே வந்துவிட்டாரா? ஆனால், ரமணர் ஒன்றும் செய்யவில்லை, அது உண்மைதான். அவர் சும்மா அப்படியே உட்கார்ந்தார். கால் மடித்து உட்கார்ந்தார். சும்மா ஒன்றும் செய்யாமல், ஒன்றுமே செய்யாமல் உட்கார்ந்தார். எலி எல்லாம் வந்து அவருடைய தசையைக் கடித்து சாப்பிட்டது, புண் ஆனது, அது புழு பிடித்தது, அது சீழ் பிடித்து புண் ஆனது, அப்படியும் சும்மாவே உட்கார்ந்து இருந்தார்.

நீங்கள் அதுபோல ஒன்றும் செய்யாமல் இருக்க முடிந்தால், உடனே பதில் கிடைக்கும், சரியா?

கேள்வி எப்படிப்பட்ட தன்மையில் கேட்கப்பட வேண்டும்?

ஆனால் இப்போது கலிஃபோர்னியாவில் இப்படி ஆகிவிட்டீர்கள். ஒரு கொசு கடித்தால் 911 அழைக்கிறார்கள். இந்த நிலையில் இருந்துகொண்டு இந்த கேள்வியைக் கேட்காதீர்கள்.

இப்போது இருத்தலுக்கே அடிப்படையான கேள்வி இது, இது சின்ன கேள்வி இல்லை. நீங்கள் யார் என்றே உங்களுக்கு தெரியவில்லை, இது சாதாரண பிரச்சனையா? இது அடிப்படையான பிரச்சனை, இல்லையா? அதோடு நீங்கள் நின்று உங்களை அறிமுகப்படுத்துகிறீர்கள். பெங்காலில் இருந்து வருகிறேன் என்று எல்லாம் சொல்கிறீர்கள். பிறகு இந்த கேள்வியைக் கேட்கிறீர்கள்.

கேள்வி பக்குவம் அடையவில்லை. நீங்கள் நின்றால், கேள்வியே கேட்க முடியாதது போல கண்ணீர் கொட்டினால், இந்த கேள்விக்கு முற்றிலும் மாறுபட்ட விதத்தில் பதில் கொடுத்திருப்பேன். ஆனால் இப்போது இது ஒரு ஜோக், அதனால் நானும் ஜோக் பண்ணுகிறேன், பரவாயில்லையா?

கேள்வி இருக்கிறது. கேள்வி இருப்பது நல்லதுதான். ஆனால் கேள்வி ஆழமாக ஊடுருவுவதற்கு கூர்மையாக இருக்க வேண்டும். இதற்கு இன்னும் தீவிரம் போதவில்லை, அது ஏதோவொன்றை ஊடுருவும் படியாக இல்லை. இப்போது இது சும்மா கேட்கிற கேள்வியாக இருக்கிறது.

இப்போது நான் உங்களுக்கு ஏதோ சொல்லலாம். நீங்கள் யார் என்று சொல்லலாம். ஆனால் அது உங்கள் அனுபவத்தில் இல்லையே? உங்கள் அனுபவத்தில் இல்லாத ஒன்றை உங்களுக்கு சொன்னேன் என்றால், நீங்கள் என்ன பண்ண முடியும், ஒன்று நீங்கள் நம்பலாம், இல்லை நம்பாமல் இருக்கலாம். அதை நீங்கள் நம்பினாலும் பதிலை நெருங்கமாட்டீர்கள், நம்பாமல் இருந்தாலும் பதிலை நெருங்கமாட்டீர்கள். நான் சொல்வதை நம்பினால், நீங்கள் ஒரு நல்ல கற்பனை கதை சொல்லிக்கொள்ளலாம். நம்பாமல் இருந்தால், என்னைப் பற்றி ஏதோ கெட்ட கதை சொல்லிக்கொள்ளலாம். ஆனால் நீங்கள் இருந்த இடத்தில் இருந்து ஒரு அங்குலம் கூட முன்னேறவில்லை தானே?

அதனால் உண்மையாகவே உங்களுக்குள் இந்த கேள்வி நெருப்பாக எரிந்தால், இன்றைக்கு இரவு இந்த கேள்வி உங்களைத் துளைத்து எடுப்பதால் உங்களால் தூங்க முடியவில்லை; உட்கார முடியவில்லை; நிற்க முடியவில்லை, அந்த அளவிற்கு அது உங்களை வாட்டினால், அப்போது நீங்கள் வாருங்கள், உங்களுக்கு வேறு ஒன்றைத் தருவேன், முற்றிலும் மாறுபட்ட ஒன்றைத் தருவேன்.

Ramana Maharishi image by G.G. Welling from Wikimedia