சத்குரு:

அரசனாக பதவியேற்றது முதலே யுதிஷ்டிரன் எப்போதும் பக்தியுடன், பண்புள்ளவனாக, நம்பிக்கைக்குரியவனாக, பெரியவர்களை மதிப்பவனாக இருக்கிறான். இதுதான் இவ்வளவு காலமும் பாண்டவர்களுக்கு பக்கபலமாக இருந்து வந்திருக்கிறது. கானகத்தில் நான்கு பாண்டவ சகோதரர்களும் யக்ஷனின் குளத்தில் நீரருந்தி மரணித்துக் கிடந்தபோது, இந்த பணிவு மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அநேகமாக யுதிஷ்டிரனும் அங்கேயே இறந்திருப்பான் அல்லது குறைந்தபட்சம் மற்ற நால்வரும் மீண்டும் உயிர் பெற்றிருக்க மாட்டார்கள். பல சூழ்நிலைகளிலும் யுதிஷ்டிரனின் இந்த பணிவான குணமானது முட்டாள்தனமாகவே தோன்றும், ஆனால் இதுதான் பாண்டவர்கள் உயிர் பிழைத்திருக்கவும் வெற்றியடையவும் அனுமதித்தது. யுதிஷ்டிரன் எப்போதுமே பாண்டவ சகோதரர்களை தன் கட்டுக்குள் வைத்திருந்தான்; இல்லையென்றால் அவர்கள் வீரத்தோடு ஏதோவொன்றை செய்ய முயற்சித்து, அதனாலேயே கொல்லப்பட்டிருப்பார்கள்.

எந்த முடிவும் கிடைக்காத ஒன்றை நீங்கள் வீரத்தோடு செய்கிறீர்கள், அதனாலேயே இறந்தும் போகிறீர்கள் என்றால் அதை முட்டாள்தனம் என்றே அழைக்கவேண்டும் - அது வீரமல்ல. உங்கள் செயலானது, நீங்கள் உயிர் பிழைத்திருப்பீர்களா இல்லையா என்பதை ஒரு பொருட்டாக கருதாமல், ஒரு சூழ்நிலையை ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அப்பால் எடுத்துச் செல்லுமேயானால் அதை நீங்கள் வீரம் என்று அழைக்கலாம். ஆனால் எதிர்செயல் செய்யும் வேகத்தோடு இருந்தால், தெருவில் இருக்கும் ஒரு சின்னஞ்சிறு நாய்க்குட்டிகூட மிகுந்த தொந்தரவுக்கு உள்ளாக்கப்படும்போது திடீரென்று வீரமாக எதிர்க்கும். இறப்பதற்கு முன் உங்களிடம் இருக்கும் சக்தி அனைத்தையும் ஒன்று திரட்டி வெறித்தனமாக மோதுகிறீர்கள், அது பலன் தரலாம், தராமலும் போகலாம். அது உண்மையான வீரம் அல்ல, அது வெறுமே மரணத்தை எதிர்த்து சண்டையிட முயற்சிப்பது. உங்களுக்கு பயமே இல்லை என்றால் அது வேறு. வீரம் என்றால், உங்கள் இதயத்தில் பயம் இருந்தாலும், அது உங்கள் கட்டுப்பாட்டை மீற நீங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

"என் வாழ்க்கை முழுவதும் நான் பல வலிகளையும் போராட்டங்களையும் சந்தித்திருந்தாலும், எத்தனை நேரம் இந்த வேதனையோடு காத்திருக்க நேரிட்டாலும், இப்போது நான் உன் தரிசனத்தைக் கண்டுவிட்டேன், அவ்வளவுதான். ஒருமுறை உன்னை முழுமையாக கண்குளிர தரிசித்தேனே, இது போதும் எனக்கு" என்றார் பீஷ்மர்.

யுதிஷ்டிரனும் பாண்டவ சகோதரர்களும் தன் வாழ்வின் இறுதிக் கட்டத்திலிருந்த பீஷ்மரை சென்று சந்தித்தார்கள். தன் உடலைத் துளைத்த அம்புகளே படுக்கையாக, போர்க்களத்திலேயே படுத்திருந்தார் பீஷ்மர். தன் மரண நேரத்தைத் தேர்ந்தெடுக்கும் வரத்தை அவர் பெற்றிருந்ததால், இறப்பதற்கு சிறந்த காலமாக கருதப்பட்ட உத்தராயண காலத்தில் உடலை விட்டு நீங்குவதற்கு அவர் முடிவு செய்திருந்தார். குருஷேத்திரப் போர் டிசம்பர் இரண்டாவது வாரத்தில், குளிர்கால சம பகலிரவு நாளுக்கு சற்று முன்னதாக முடிவுற்றிருந்தது, எனவே பீஷ்மர் இன்னும் சிறிது காலம் காத்திருக்க நேர்ந்தது. அவர் உடலை நீங்க தேர்ந்தெடுத்த நாளே இப்போது பீஷ்மாஷ்டமி என்று வழங்கப்படுகிறது. அந்த அஷ்டமி தினத்தன்று, பீஷ்மர் உடலை நீங்குவதற்கு முன்பாக பாண்டவ சகோதரர்கள் அவரைச் சுற்றி குழுமினார்கள்.

இப்போது ராஜ்ஜியம் முழுவதுமாக பாண்டவர்கள் வசம் வந்துவிட்டால், புதிய அரசனாக தன்னால் இயன்றளவு சிறப்பான ஆட்சியை மக்களுக்கு வழங்க விரும்பி பீஷ்மரின் அறிவுரையைக் கேட்டான் யுதிஷ்டிரன். ஆனால் பீஷ்மர் வேதனையில் இருந்தார். எனவே அவர் கிருஷ்ணரைப் பார்த்து, "எனக்குள் ஒரே ஒரு விருப்பம் மட்டுமே இருக்கிறது. கிருஷ்ணா, தயவுசெய்து எனக்காக அதை நிறைவேற்று. நான் உன் உண்மையான ரூபத்தைப் பார்க்க விரும்புகிறேன்! உன்னை முழுமையாக கண்குளிர தரிசிக்க வேண்டும்" என வேண்டினார். எனவே கிருஷ்ணர் பீஷ்மரின் உடலைத் தொட்டு, பீஷ்மரின் அனைத்து வலிகளிலிருந்தும் அவரை விடுவித்து யுதிஷ்டிரனிடம் பேச ஏதுவாக்கினார். பிறகு அனைவரும் அங்கேயே இருக்க, தன்னுடைய விஸ்வரூப தரிசனத்தை பீஷ்மருக்கு மட்டும் அனுபவப்பூர்வமாக நிகழ்த்தினார் கிருஷ்ணர். "என் வாழ்க்கை முழுவதும் நான் பல வலிகளையும் போராட்டங்களையும் சந்தித்திருந்தாலும், எத்தனை நேரம் இந்த வேதனையோடு காத்திருக்க நேரிட்டாலும், இப்போது நான் உன் தரிசனத்தை கண்டுவிட்டேன், அவ்வளவுதான். ஒருமுறை உன்னை முழுமையாக கண்குளிர தரிசித்தேனே, இது போதும் எனக்கு" என்ற பீஷ்மர், யுதிஷ்டிரனின் ஐயங்கள் அனைத்திற்கும் அறிவுரை வழங்க விருப்பமானார்.

யுதிஷ்டிரன் நூறு கேள்விகளைக் கேட்க, பீஷ்மரின் பதில்கள் ஒரு விரிவான பேருரையானது. "ஒரு அரசனுக்குரிய தர்மம் என்ன?" என்ற யுதிஷ்டிரனின் கேள்விக்கு பீஷ்மர், "அரசனின் முதல் தர்மம் கடவுளை வழிபடுவதும், ஒளி பொருந்தியவர்களான பிராமணர்களுக்கு மதிப்பளிப்பதுமே" என்றார். 'ஒளி பொருந்தியவர்கள்' என்றால் ஏதோ ஒரு குறிப்பிட்ட குடும்பத்தில் பிறந்தவர்கள் என்று அர்த்தமல்ல; பிராமணர் என்றால் அன்றைய காலகட்டத்தில் அப்படி புரிந்துகொள்ளப்படவில்லை. உங்கள் பிராமணத் தன்மையை நீங்கள் அடைய வேண்டியிருந்தது, பிறப்பால் உங்களுக்கு அது வழங்கப்படவில்லை. தொடர்ந்த பீஷ்மர், "ஒரு அரசன் தன் பலவீனங்களை மறைத்துக்கொள்ள வேண்டும். தனது எதிரிகளின் பலவீனத்தை அறிவதோடு, அதைத் தனக்கு சாதகமாக பயன்படுத்தவும் அறிந்திருக்க வேண்டும். ஒரு நல்ல அரசன் இரக்க குணமுள்ளவனாக இருக்க வேண்டும், ஆனால் எப்போதும் பலவீனன் ஆகக்கூடாது. தனக்குள் தோன்றும் ஆழமான எண்ணங்களை அரசன் வேறு யாரிடமும் பகிர்ந்துகொள்ளக்கூடாது, அவனுக்கு நெருக்கமான ஆலோசகர்களாகவே இருந்தாலும்."

"ஒரு அரசனின் தர்மத்தின் சாரமே, அவனது மக்களின் வளர்ச்சியையும் மகிழ்ச்சியையும் பாதுகாப்பதுதான். தன் எதிரியின் தேசத்திற்குள் குழப்பம் ஏற்படுத்துவதில் அவன் தேர்ந்தவனாக இருக்க வேண்டும். தனது எதிரிக்கு உதவியாக இருப்பவர்கள் மத்தியில் தன் ஒற்றர்களை ஊடுருவச் செய்து, அவர்களுக்குள் கருத்து வேற்றுமையை விதைக்கவும் அவன் அறிந்திருக்க வேண்டும். அரசாங்கத்தின் கஜானா எப்போதுமே நிரம்பியிருக்க வேண்டும், ஏனென்றால் செல்வ வளத்தில் இருந்துதான் அரசனின் ஆற்றல் வளரும். ஒரு அரசன் தனது மக்களையும் தனது ராஜ்ஜியத்தையும் பாதுகாக்கத் தேவையான படைபலத்தை வைத்திருக்க வேண்டும். அரசனது ஒற்றர்கள் மிகக் கடினமானவர்களாக, ஊழல் கறை படியாதவர்களாக, வலிமையானவர்களாக, நீண்ட காலத்திற்கு தனிமையில் இருக்கக்கூடியவர்களாக, வெப்பம், குளிர், வன்முறை, பசி என அனைத்தையும் தாங்கிக்கொள்ளக் கூடியவர்களாக இருக்க வேண்டும்."

"ஒரு அரசன் தர்மவனாக இருந்து மட்டும் ஆட்சி செய்தால் போதாது, அவன் அதர்ம வழியிலும் செல்லத் துணிபவனாக இருக்க வேண்டும். தங்கள் அரசனையே குடிமக்கள் முழுமையாக நம்பியிருப்பதால், தன் எதிரிகளிடம் கருணையற்றவனாக நடந்துகொள்ள ஒரு அரசன் தயங்கக்கூடாது. நம்பிக்கையற்ற வேளைகளில் தேவையான நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். ஒரு அமைச்சரைப் பயன்படுத்தி இன்னொரு அமைச்சரை அரசன் உளவு பார்க்க வேண்டும். ஒரு நல்ல அரசன் மலரிலிருந்து தேன் சேகரிக்கும் வண்டு போல வரி வசூலிக்க வேண்டும் - மென்மையாக தன் மக்களுக்கு காயம் ஏற்படுத்தாமல். ஆனால் யாரெல்லாம் அரசனுக்கு நெருக்கமாக இருக்கிறார்களோ, தனது சொந்த ரத்த பந்தங்களை தன் மரணம் போல் கருதி அஞ்ச வேண்டும். ஒரு அரசனுக்கு நெருக்கமான உறவினனாக இருப்பவன் எப்போதுமே அரசனுக்கு சமமானவனாகவோ அல்லது அரசனுக்கு மேலானவனாகவோ தன்னைக் கருதுவான், மற்ற யாரைவிடவும் பொறாமை மிக்கவனாகவும் இருப்பான்."

பெரும் உரையாக அது நீண்டது; பீஷ்மரின் மனம் எப்படிப்பட்டதாக இருந்தது என்பதை நீங்கள் அறிந்துகொள்ளவே இதைப் பார்க்கிறோம். தன் தேசத்தின் நலனுக்காக எதை செய்யவும் அவரது மனம் தயாராக இருந்தது. வேறு எதன் மீதும் அக்கறைக் காட்டாத தேசபக்தராக பீஷ்மர் இருந்தார். அப்படித்தான் தன் வாழ்க்கை முழுவதும் வாழ்ந்திருந்தார் பீஷ்மர்; அதே அறிவுரையை யுதிஷ்டிரனுக்கும் வழங்கினார். அடுத்த முப்பத்தாறு ஆண்டுகளுக்கு மிகச் சிறந்த அரசனாக விளங்கிய யுதிஷ்டிரன், நிச்சயமாக இந்த அறிவுரைகள் ஒவ்வொன்றையும் பயன்படுத்திக் கொண்டதோடு, புதிதாக இன்னும் சிலவற்றை உருவாக்கியும் இருப்பான்.

To be continued...

தொடரும்...