யோகப் பயிற்சியின்போது ஏன் நீர் அருந்தக்கூடாது?
ஹடயோகா செய்யும்போது, சரியான உடல்தன்மையை நிர்வகிக்கவேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும், பயிற்சியின்போது நாம் ஏன் நீர் அருந்தக்கூடாது என்பதையும் சத்குரு விளக்குகிறார்.
கேள்வியாளர்: நமஸ்காரம், சத்குரு. பயிற்சிகளின்போது நாங்கள் நீர் அருந்துவதோ அல்லது கழிவறையைப் பயன்படுத்தவோ கூடாது என்று கூறினீர்கள் - இதன் காரணம் என்ன?
சத்குரு:
நீங்கள் யோகப் பயிற்சி செய்யும்போது, படிப்படியாக உடலின் உஷ்ணத்தை அதிகரிக்கிறீர்கள். அப்போது நீங்கள் குளிர்ந்த நீரை அருந்தினால், உஷ்ணமானது வேகமாகக் குறைந்து, வேறு பல எதிர்வினைகளை ஏற்படுத்தும். அதிகமான ஒவ்வாமை நிலைகளுக்கும், சளித் தொந்தரவுகள் போன்றவற்றுக்கும் நீங்கள் இலக்காகக்கூடும். நீங்கள் தீவிரமாக ஆசனங்களைச் செய்பவராக இருக்கும் நிலையில், சட்டென்று குளிர்ந்த நீரை அருந்தினால், உடனே உங்களுக்கு ஜலதோஷம் ஏற்படக்கூடும். ஆகவே, நீங்கள் ஆசனங்கள் செய்யும்போது ஒருபோதும் நீர் அருந்துதல் கூடாது. தவிர, பயிற்சியின்போது இடையில் ஒருபோதும் கழிவறை பயன்படுத்தக்கூடாது. ஏனென்றால் உடலின் நீரானது வியர்வையின் வடிவில்தான் வெளியேறவேண்டும்.
நீங்கள் தொடர்ந்து பயிற்சி செய்ய செய்ய, மெதுவாக உங்களுக்குள் யோகா மெருகேறும். அப்போது நீங்கள் எந்த ஆசனம் செய்தாலும், வியர்வை உங்கள் உச்சந்தலை வழியாக வெளியேறும், உடல் முழுக்க அல்ல. வெயில் காலத்தில் வெப்பம் பொறுத்து உங்கள் உடல் வியர்க்கலாம், ஆனால் அதிகப்படியான வியர்வை உங்கள் தலையிலிருந்துதான் நிகழவேண்டும். அப்படி நடந்தால் நீங்கள் சரியான திசையில் உங்கள் சக்தியை இயக்குகிறீர்கள் என்று அர்த்தம். இயல்பாகவே ஆசனங்கள் அப்படித்தான் செயல்படும். இறுதியில் உங்கள் தலை வழியாக வேறொன்று ஊற்றெடுக்க வேண்டும் என்பது உங்கள் விருப்பம். அதற்கு இப்போது நீங்கள் உங்கள் உடலின் கழிவுநீரை (வியர்வை) வைத்து பயிற்சி செய்கிறீர்கள்.
Subscribe
வியர்வையை நாம் உடலில் திரும்பவும் தேய்த்துவிடும்போது, அது ஒருவிதமான ஒளி உடலையும், உடலுக்கு வலிமையையும் உருவாக்குகிறது - உங்களுக்கே உரிய ஒரு கூடு - அது கவசம் என்றும் அழைக்கப்படுகிறது.
படிப்படியாக உங்கள் உடல் உஷ்ணத்தை அதிகரித்தால், இயற்கையாகவே உங்கள் கழிவுநீர் மேல்நோக்கி செலுத்தப்படும். உங்கள் உடல் உஷ்ணம் மிக அதிகமாகும்போது சிறிது நேரம் சவாசனம் செய்து அதை ஆசுவாசப்படுத்துங்கள். ஆனால் ஒருபோதும் குளிர்நீர் கொண்டு உஷ்ணத்தை குறைக்கவேண்டாம். அதேவிதமாக கழிவறை சென்று உடலின் கழிவுநீரை வெளியேற்றுவதற்குப் பதிலாக, வியர்வையாக அதை மாற்றி வெளியேற்ற முயற்சி செய்யுங்கள். ஏனெனில், உடலின் கழிவுநீர் வியர்வையாக வெளிவரும்போது துப்புரவுச்செயல் இன்னும் அதிகமாகவே நிகழும்.
பயிற்சியின்போது, வியர்வையில் நீங்கள் சொட்டச்சொட்ட நனைந்தால், வழக்கமாக உங்கள் உடைகள் அதில் நனைந்து ஊறிப்போகும். ஆனால் நீங்கள் வெற்றுடம்புடன் இருந்தால், எப்போதும் வியர்வையைத் திரும்பவும் உடலில் தேய்த்துவிடுங்கள். ஏனென்றால் வியர்வையில் இருக்கும் பிராணசக்தியின் ஒரு குறிப்பிட்ட அம்சத்தை நாம் இழந்துவிட வேண்டாம். வியர்வையை நாம் உடலில் திரும்பவும் தேய்த்துவிடும்போது, அது ஒருவிதமான ஒளி உடலையும், உடலுக்கு வலிமையையும் உருவாக்குகிறது - உங்களுக்கே உரிய ஒரு கூடு - அது கவசம் என்றும் அழைக்கப்படுகிறது.
நாம் இதனைக் கழுவி வீணாக்கிவிட வேண்டாம். யோகா என்பது உடலை அதன் அதிகபட்சமாக உபயோகிப்பது. நீங்கள் ஆசனங்களை ஒழுங்காகச் செய்து, உங்கள் வியர்வையைத் திரும்பவும் உடலில் தேய்த்தால், ஒரு குறிப்பிட்ட அளவு உஷ்ணம் மற்றும் தீவிரமான பிராணசக்தியை நீங்கள் உற்பத்தி செய்வீர்கள். வெப்பம் மற்றும் குளிர்ந்த சீதோஷ்ணம், பசி, தாகம் - இவைகளிலிருந்து நீங்கள் முழுவதுமாக விடுபடுவீர்கள் என்பதல்ல - ஆனால் இவைகள் உங்களை அதிகம் பாதிக்காது.
உயர் நிலைப் பரிமாணங்கள் உங்களை நோக்கி இறங்கி வருவதற்குக் கேட்காதீர்கள். அவைகள் இறங்கி வந்தால், அது உங்களுக்கு நன்மையாக இருக்காது. உயர்நிலைப் பரிமாணங்கள் உங்களுடன் இருக்கக்கூடிய ஒரு இடத்திற்கு நீங்கள் மேலேறிச் செல்லவேண்டும்.
மெல்ல மெல்ல உடலின் நிர்ப்பந்தங்களைக் கடந்து வளர்ச்சியடைவதுதான் இதன் நோக்கம். அது உணவு மற்றும் நீரின் தேவை அல்லது கழிவறைப் பயன்பாடு என்று என்னவாக இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட நிர்ப்பந்தத்தின் அளவு நபருக்கு நபர் வித்தியாசப்படுகிறது. ஆனால் உடல் தன்மையானது நிர்ப்பந்தங்களின் கோர்வையாகவே இருக்கிறது. நிர்ப்பந்தங்களை மெதுவாகக் குறைப்பதே நோக்கம். அதனால் ஒரு நாள் நீங்கள் இப்படி உட்கார்ந்தால், நீங்களே யோகாவாகிவிடுகிறீர்கள் - நீங்கள் யோகாவைப் பயிற்சி செய்பவராக மட்டும் இருப்பதில்லை. யோகாவாக மாறிவிடுவது என்றால், உங்களுக்கும், பிரபஞ்சத்துக்கும் வேறுபாடு இல்லாத அளவுக்கு உங்களுடைய புரிதலின் அளவு இருக்கிறது என்று பொருள். அதை உள்வாங்கிக்கொள்ளும் அளவுக்கு நீங்கள் உங்களுடைய உடலமைப்பைக் கட்டமைக்கவேண்டும். இல்லையென்றால், ஒருவரது உடலமைப்பு அதற்குத் தயாராக இல்லாத நிலையில், தற்செயலாக அவர் மிகத் தீவிரமான புரிதலின் தளத்திற்குள் செல்ல நேர்ந்தால், அவர்களது இணைப்பு வெடித்துவிடும்.
புத்தகங்கள் அல்லது முறையற்ற பயிற்சிகள் மூலம் யோகா செய்த பலரும் அவர்களது மனநிலையை இழந்துள்ளனர். உயர்நிலைத் தளங்களின் வாழ்வும், செயல்பாடுகளும் இயல்பாகவே உங்களை வந்தடையும் வகையில் உங்களுடைய உடலமைப்பை நீங்கள் கட்டமைப்பது மிகவும் முக்கியமானது. அது நிகழ்வதற்கு நீங்கள் போதிய அளவுக்கு உயரத்தை எட்டவேண்டும். இங்கே உட்கார்ந்துகொண்டு, உயர் நிலைப் பரிமாணங்கள் உங்களை நோக்கி இறங்கி வருவதற்குக் கேட்காதீர்கள். அவைகள் இறங்கி வந்தால், அது உங்களுக்கு நன்மையாக இருக்காது. உயர்நிலைப் பரிமாணங்கள் உங்களுடன் இருக்கக்கூடிய ஒரு இடத்திற்கு நீங்கள் மேலேறிச் செல்லவேண்டும்.
ஐந்தே நிமிடங்களில் எளிதாக செய்யக்கூடிய புத்துணர்வூட்டும் உப-யோகப் பயிற்சிகளை இலவசமாக கற்றுக்கொள்ள சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.