ஸ்வாமி சுயக்னா - 1998 ஆம் ஆண்டில் பிரம்மச்சரியம் தீட்சை பெற்று, 1999 ஆம் ஆண்டு ஈஷா யோகா ஆசிரியராக ஆனவர். சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியலில் இளங்கலைப் பட்டமும், இதழியலில் முதுநிலைப் பட்டமும் பெற்றவர்.

தன்னுடைய பணிக்கு இடையே அறிவுசார் செயல்களில் நாட்டம் கொண்டவராய் விளங்கிய ஸ்வாமி, கருத்துக்களங்களில், கருத்தரங்குகளில் தலைவராகவும், ஆல் இந்தியா ரேடியோவில் பகுதிநேர பணியாளராகவும், பார்வையற்றோருக்கான பள்ளியில் தன்னார்வத் தொண்டராகவும் இருந்திருக்கிறார். Physics Society யிலும் சமஸ்கிருத அகாடமியிலும் அங்கம் வகித்தவர். சில சமயங்களில், “In-house Scholar” என சத்குரு இவரை கிண்டலாய் அழைத்ததில் வியப்பொன்றும் இல்லை

வெகு இயல்பாய் தன்னார்வத் தொண்டர்களுக்கு ஊக்கமளித்திடும் ஸ்வாமி, ஈஷா அமைப்பு சென்னையில் தன் காலடித் தடங்களை ஆழமாய் பதித்திட, பரப்பிட மிக முக்கியப் பங்காற்றியவர். ஹைத்ராபாத், பெங்களூரூ, சிங்கப்பூர் போன்ற இடங்களுக்கும் வகுப்புகளை எடுத்துச்சென்ற பெருமை ஸ்வாமிக்கு உண்டு. சத்குருவை பலருக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் எனும் நோக்கத்தில், கடந்த பல ஆண்டுகளாகவே அச்சுப் பணியிலும், சமீப காலங்களில் டிஜிட்டல் பணியிலும் முழு ஊக்கத்துடன் உற்சாகத்துடன் பணியாற்றிக் கொண்டிருப்பவர்.

ஒரு ஆசிரியர் சந்திப்பின்போது, ஸ்வாமி சுயக்னாவின் மனஉறுதியையும் நிலைத்துநிற்கும் தன்மையையும் சத்குரு பாராட்டினார் என்று ஸ்வாமி லவித்ரா பகிர்ந்துகொள்கிறார். அவர் வாலிபால் விளையாடுவதைப் பார்த்து, “அவரது தவறுகளுக்காக கண்டிக்கப்பட்டாலும், சரியாக வரும்வரை ஸ்வாமி விளையாடுவதை விட்டுக் கொடுப்பதில்லை,” என்று சத்குரு கூறியதாக நினைவுகூர்கிறார் ஸ்வாமி லவித்ரா.

“என்னால் மக்களுடன் மிகச் சுலபமாக கலந்துவிட முடியும். இருந்தும், நான் ஒருபோதும் உணர்வுநிலையில் நெருக்கமாய் உணர்ந்தது இல்லை, என் பெற்றோர் உட்பட. சத்குருவுடன் விவரிக்க இயலா ஒரு பந்தம் எனக்கிருக்கிறது, இருந்தும் அது உணர்வுரீதியான தொடர்பும் அல்ல. அடிப்படையில், நான் தனித்திருக்கிறேன்,” என்கிறார் ஸ்வாமி சுயக்னா. சத்குருகூட ஒருமுறை, “ஸ்வாமி பிறப்பால் ஒரு பிரம்மச்சாரி,” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஈஷாவில் சிக்க வைத்த இமயம்

ஸ்வாமி சுயக்னா : 1996ஆம் ஆண்டு நடந்த சம்பவம் இது. எங்கள் அலுவலக கான்டீனில் என் சகாக்களுடன் அமர்ந்து நான் மதிய உணவு உண்டு கொண்டிருந்தேன். ஒரு சந்தர்ப்பத்தில், “சத்குரு ஜகி வாசுதேவ் என்பவர் நடத்தும் யோக வகுப்பு நம் ஊரில் நடக்கிறது, நீ try பண்ணுகிறாயா?” என்று என் நண்பர் கேட்டார்.

இந்த யோகா நிகழ்ச்சிகளை எல்லாம் தூக்கி குப்பையில் போடு, நிறைய செய்துவிட்டேன்,” என்றேன் நான். ஏற்கனவே விபாசனா, வேதாத்திரி குண்டலினி, விவேகானந்தா யோகா, இதுபோல் இன்னும் சில யோக வகுப்புகள் செய்திருந்தேன். இந்த ஆன்மீக சாகசப் பயணம் எனக்கு சற்று சலிப்பை கொடுத்திருந்தது. ஆனாலும், என் சகா, சத்குரு எடுக்கவிருந்த இந்த 13 நாள் வகுப்பினைச் செய்ய முடிவுசெய்திருந்தார்.

வகுப்பு துவங்கிய முதல் 3, 4 நாட்களுக்கு அனைத்தையும் பற்றிய கேள்விகளும், சந்தேகங்களும் அவரைச் சூழ்ந்திருந்தன. தினமும் காலை, யோகா வகுப்பிற்கு செல்வது குறித்து புலம்பிக் கொண்டிருந்தார். நாட்கள் செல்லச் செல்ல, அவர் அமைதியாகிக் கொண்டே இருந்தார். ஒரு வாரத்திற்கு பிறகு, “நண்பர் புலம்பவில்லையே,” என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. நிகழ்ச்சி முடிந்தபின் அவருக்குள் நடந்த மாற்றத்தையும் நான் கவனித்திருந்தேன்.

“நீயும் இந்த வகுப்பை செய்யவேண்டும்,” என்று பின்னாட்களில் அவர் என்னிடம் சொல்லத் துவங்கினார். குற்றம் கண்டுபிடிப்பதில் அவர் வல்லவர். எதைப் பார்த்தாலும் அவருக்குள் கேள்விகள் எழும். ஒருவேளை இந்த குணம்தான் எங்கள் இருவரையும் நண்பர்கள் ஆக்கியதோ என்னவோ! அவர் ஈஷா யோகா வகுப்பை புகழ்ந்தது, நிச்சயம் எனக்குள் ஆர்வத்தை தூண்டியது. ஆனாலும், அது போதவில்லை. கொஞ்சம் நாட்களிலேயே, என்னை வகுப்பு செய்யத் தூண்ட வேறொரு வழியை அவர் கண்டுபிடித்திருந்தார்.

“ஈஷா, இமாலயத்திற்கு ஒரு டூர் ஏற்பாடு செய்கிறது, ஆனால் ஈஷா தியான அன்பர்கள் மட்டுமே அதில் பங்கேற்க முடியும்,” என்று மே மாத துவக்கத்தில் என்னிடம் கூறியிருந்தார். இமாலய மலைகள் எனக்கு எப்போதும் வியப்பூட்டுவதாய் அமைந்திருந்தன. அதனால், இமாலயத்தை நோக்கி நான் செல்வதற்கு இந்த “தியான யாத்திரை” நல்ல காரணமாய் அமைந்தது. 1996 ஆம் ஆண்டு, ஜுன் மாதம், 13 நாள் வகுப்பில் போய் அமர்ந்தேன். எனக்கு வகுப்பு பிடித்திருந்தது, இருந்தும் அதைப்பற்றி நான் பெரிதும் யோசிக்கவில்லை. என் நண்பர் மீண்டும் ஒருமுறை வற்புறுத்தியதால், தியான யாத்திரைக்கு நாங்கள் கிளம்பும்முன், செப்டம்பர் மாதம் ஆசிரமத்திற்கு பிஎஸ்பி செய்யக் கிளம்பினேன். என்னால் புரிந்துகொள்ள இயலுவதை விடவும் வாழ்வில் பெரிதாக ஏதோ இருக்கிறது என்பதை நான் முதன்முதலில் உணர்ந்த சமயம் அது.

என் தர்க்க அறிவை கழட்டி எறிந்த அந்த செடி

அது பிஎஸ்பி வகுப்பின் நான்காவது நாள். கடந்த மூன்று நாட்களாக என்ன நடந்து கொண்டிருந்ததோ அது அன்று காலையும் நடந்தது - பலர் கண்களில் நீருடன், சிலர் கூக்குரலிட்டவாறு, சிலர் பிறரை அணைத்தவாறு... நிகழ்ச்சி துவங்கியதிலிருந்தே இவற்றின் மீது ஒருவிதமான அருவருப்புடனேயே நான் இருந்தேன். “அவர்களது உணர்வுகளை இங்கு வந்து, இப்படி வெளிப்படுத்திக்கொள்ள காரணமென்ன?” என்று எனக்குள் கேள்விகள் எழுந்தன. என் நண்பர்கள் கண்ணீர் விட்டபோது அவர்களை கேலிசெய்து கொண்டிருந்தேன். அந்த மதிய வேளையில், சத்குரு இயற்கையுடன் இருக்கச் சொல்லி வெளியே அனுப்பினார். அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் நான் ஒரு செடிக்கு அருகே அமர்ந்தேன். சுற்றும்முற்றும் பார்த்துவிட்டு, மக்களை வேடிக்கை பார்த்துவிட்டு, சத்குரு சொல்லியபடி, அந்த செடியின் மீது சற்றே கவனம் செலுத்தத் துவங்கினேன்.

5 நிமிடங்கள் கடந்தபின்னர், பிரம்மிக்கத்தக்க ஒன்று எனக்குள் நிகழ்ந்தது. மெல்ல கண்ணீர் பெருக்கெடுத்தது. எனக்குள் நான் ஆழமாய் வேரூன்றி இருந்தேன், தன்னிறைவு அடைந்த ஒரு மனிதனாய் இருந்தேன். கடந்த 12 ஆண்டுகளில் நான் ஒருமுறைகூட அழுததில்லை. இப்போது எதற்காக அழுகிறேன்? அந்த பிராசஸ் நடந்துகொண்டிருந்தபோது, மிக விழிப்பாக என்னிடம் நானே கேட்டுக் கொண்டேன். என்னால் காரணத்தை அறிய இயலவில்லை. விரும்பத்தகாத அனுபவங்களின் நினைவில்லை, வலியில்லை, அச்சமயத்தில் வேதனைகளும் இல்லை - என் மனதில் எதிர்மறை சிந்தனைகளும் இல்லை. ஆனால், நான் அழுதுகொண்டே இருந்தேன். கிட்டத்தட்ட 3 மணி நேரங்களுக்கு அழுதேன். நான் ஹாலுக்குள் சென்றபோது, நான் சத்குருவை கட்டியணைக்கவும் செய்தேன். முதல்முறையாக, என் தர்க்க அறிவு சுக்குநூறாக உடைத்தெறியப்பட்டது அப்போதுதான்.

நெஞ்சைவிட்டு அகலா அந்த நமஸ்காரம்...

அடுத்த 10 நாட்களில் சத்குருவுடன் தியான யாத்திரைக்கு நாங்கள் சென்றோம். கோவையிலிருந்து தில்லிக்கு இரண்டாம் வகுப்பில், 216 பேர் இரயில் பயணம் மேற்கொண்டோம். சத்குரு மற்றும் விஜி அம்மாவுடன் சில பிரம்மச்சாரிகள் இருந்த கம்ப்பார்ட்மென்டில் எனக்கு இடம் ஒதுக்கப்பட்டது. எல்லோருடனும் சத்குரு நட்பாக பழகினார். குறிப்பிட்ட நேர இடைவெளிகளில் எல்லா கம்ப்பார்ட்மென்டிற்கும் சென்று அனைத்து பங்கேற்பாளர்களையும் சத்குரு பார்ப்பார். பின்னர் பஸ்சில் பயணித்தபோதும்கூட, ஒவ்வொரு பஸ்சாக மாறி, வெவ்வேறு பங்கேற்பாளர்களுடன் இருப்பார்.

இரயில் பயணத்தின்போது, ஒருமுறை சத்குருவிற்கு தண்ணீர் பரிமாறும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. என்னிடம் தண்ணீர் பெறுவதற்கு முன்பும், வெறும் டம்பளரை திருப்பிக் கொடுத்தபோதும், மிக மென்மையாக சத்குரு “நமஸ்காரம்” செய்ததை நான் கவனித்தேன். அவரது அந்தத் தன்மை எனக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியது. “தண்ணீர் தானே கொடுத்தோம், அதற்குபோய் ஒருவர் இவ்வளவு நன்றியுணர்வை வெளிப்படுத்த வேண்டுமா?” என்று எண்ணினேன். அவரது செய்கை என்னை மிக ஆழமாய் தொட்டது.

“இனிப்புடன்” வழியனுப்பிய என் தாய்

தியான யாத்திரையில் இருந்து திரும்பி வந்தபின், இயல்பு வாழ்க்கை தொடர்ந்தது. ஆசிரமத்திற்கு முழுநேரமாக வரவேண்டும் எனும் தீயோ, ஏக்கமோ என்னுள் எழவில்லை.

ஒரே மகன் என்பதால் நான் ஈஷாவிற்கு முழுநேரம் செல்லப்போவது குறித்த அவர்களுடைய எதிர்வினை எப்படி இருக்கும் என்று திகைத்துப் போனேன்.

அதே வருடம் நவம்பரில் நடந்த இந்திய ஹாக்கி அணிக்கான நிகழ்ச்சிக்கு தன்னார்வத் தொண்டு செய்ய, 3 வாரங்களுக்கு நான் ஆசிரமத்திற்கு வந்திருந்தேன். அந்த நிகழ்ச்சியின்போது நாங்கள் மிக சக்திவாய்ந்த பிராசஸ்சுகளை உணர்ந்தோம். இந்த நிகழ்ச்சிக்கு பின்தான், எந்தவொரு காரணமும் இல்லாமல், எதற்கென்றே தெரியாமல், ஈஷா மற்றும் சத்குரு மீது ஈர்க்கப்படுகிறேன் என்பதை உணர்ந்தேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஜே. கிருஷ்ணமூர்த்தி அவர்களால் நான் ஆழமாகத் தொடப்பட்டு இருந்தேன், அதனால் ஒரு குருவை தேடுவதையோ ஒரு பூர்வாங்க முறையில் சேருவதையோ பற்றி நான் நினைத்துப் பார்த்திருக்கவில்லை. ஆனால், திடீரென என் எண்ணவோட்டம் மாறியது. ஈஷாவில் முழுநேரம் இருந்து, இந்தப் பாதையில் நடக்க வேண்டும் என்று விரும்பினேன். அதனால், ஆசிரமத்திற்கு முழுநேரம் வரலாமா என்று சத்குருவிடம் கேட்டேன். “உன் பெற்றோரின் சம்மதத்தை பெறு, அவர்கள் இதற்கு ஒப்புக்கொண்டால், ஏப்ரல் மாதம் இங்கு வா,” என்றார் சத்குரு.

என் பெற்றோரை தயார்செய்யும் பொருட்டு, என் சகோதரிகளையும் பெற்றோரையும் வகுப்பு செய்ய வைத்தேன். அவர்கள் அனைவரும் வகுப்பினால் தொடப்பட்டனர். அவர்களுக்கு ஒரே மகன் என்பதால் நான் ஈஷாவிற்கு முழுநேரம் செல்லப்போவது குறித்த அவர்களுடைய எதிர்வினை எப்படி இருக்கும் என்று திகைத்துப் போனேன். என்னைப் புரிந்துகொண்ட பெற்றோர் அமைந்தது ஒரு ஆசிர்வாதம்தான். மிகச் சுலபமாக அனைத்தும் நிகழ்ந்தது. என் முடிவை அவர்களிடம் சொன்னபோது, என் தாய் அதற்கு சம்மதம் கொடுத்தார். உண்மையில் சொல்லப் போனால், நான் ஆசிரமத்திற்கு கிளம்பும்முன் இனிப்புகளை கொடுத்து ஆசிரமவாசிகளுக்கு கொடுக்கச் சொல்லி அனுப்பினார். என் தந்தையோ, “வாழ்வில் செய்யக்கூடிய மிக உயர்ந்த விஷயம் இது என்பதை நான் அறிவுநிலையில் புரிந்துகொண்டாலும், உணர்வளவில் உன் முடிவை ஏற்றுக்கொள்வது அத்தனை சுலபமல்ல. இருந்தும் உன்னை தடுக்கும் இதயமும் எனக்கு இல்லை,” என்று சற்றே சோர்வாய் என்னிடம் பகிர்ந்துகொண்டார்.

அவ்வருடம், மே மாதம், என்னுடைய முதல் சம்யமாவினை நான் செய்தேன். மிக அற்புதமான ஓர் அனுபவமாக அது இருந்தது. கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டே இருந்தது. என் முன் தோன்றிய எறும்பிலிருந்து புல் வரை அனைத்தையும் நான் வணங்கியநிலையில் இருந்தேன். என் முதல் சம்யமாவை விவரிக்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. 1998ஆம் ஆண்டு பிரம்மச்சரிய தீட்சை எனக்கு கிடைத்தது.

விஜி அம்மாவின் மஹாசமாதியிலிருந்து தியானலிங்க பிரதிஷ்டை வரை, சத்குருவுடன் இருந்த அந்த சில வருடங்களில் பல சக்திவாய்ந்த விஷயங்கள் நடந்தன. எப்படியோ, விஜி அம்மாவை குழந்தைத்தனமும் தீவிரமும் கலந்த ஒரு மனிதராகவே நான் பார்த்தேன். சத்குருவுடன் மிக மிக அதிகமான பற்றுதலுடன் அவர் இருந்தார். சத்குருவுடைய மனைவி எவ்வாறு இப்படி இருக்கலாம் என்றுகூட நான் சிந்தித்தது உண்டு. தியான யாத்திரையின்போது, ஒருமுறை குழந்தையைப் போலவும், மற்றொரு முறை தீவிரமான பக்திநிலையிலும் - பல பரிமாணங்களில் அவர் ஆழ்ந்திருந்ததை நான் கண்டேன். ஆன்மீக முன்னேற்றம் பற்றிய என்னுடைய அத்தனை கருத்துக்களையும் அவருடைய மஹாசமாதி சிதைத்துப் போட்டது.

அவர் உடலை விட்டதும், பிரதிஷ்டை செயல்முறை சத்குருவிற்கு சற்று போராட்டமாய் இருந்ததை நாங்கள் பார்த்தோம். “நம் கைகளில் இருப்பதை வைத்துப் பார்க்கும்போது, லிங்கம் நிகழ அதனுடன் ஒன்றிக் கலந்துவிடுவது ஒன்றே வழி என எனக்குத் தெரிகிறது. ஆனால், வயதானவனாய்தான் நான் இறப்பேன் என்று என் இதயம் சொல்கிறது,” என்று ஒருநாள் சத்குரு எங்களிடம் சொன்னது நினைவிற்கு வருகிறது. பிரதிஷ்டை முடிந்தபின், சத்குரு என் முன்னே விழுந்தபோது, அவரது இதயத்தின் குரலை நான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். ஏதோ ஒருவிதத்தில் அவர் நம்முடன் நீண்டகாலத்திற்கு வாழ்வார் என்று உணர்ந்தேன். நம் அளப்பரிய பாக்கியம் - இன்று அவர் நம்முடன்.

தியானலிங்கம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்ட நாளினை நான் மறக்கவே முடியாது. சத்குருவின் கனவு நினைவானதை காண்பது அத்தனை நெக்குருகும் அனுபவமாய் இருந்தது. காலையில் சத்குருவின் உரையில் துவங்கி, இசை நிகழ்ச்சிகள், அன்னதானம் என பலவும் நிகழ்ந்தன. முன்னெப்போதும் அத்தனை பேர் ஆசிரமத்தில் கூடுவதை நாங்கள் கண்டிருக்கவில்லை. அந்நாளன்று, 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தியானலிங்கத்திற்கு வந்திருந்தனர்.

நாள் முழுவதும் நான் ஏதோ ஒரு செயலில் பிஸியாக இருந்தேன். இரவு 9 மணிக்குத்தான் என்னால் கோவிலுக்குச் செல்ல முடிந்தது. நான் கோவிலுக்குள் அமர்ந்தபோது - அந்த லிங்கம், வளைகூரை, உள்சுற்றுப் பிரகாரம் - இவையாவும் சொர்க்கம்போல் தெரிந்தது. தூண்களும் கற்சிற்பங்களும் எத்தனை அழகாக செதுக்கப்பட்டிருக்கிறது என்பதை முதல்முறையாக அப்போதுதான் கவனித்தேன். அந்த சமயத்தில், சத்குருவும் உள்ளே வந்தார். சத்குரு உள்ளே காலடி எடுத்து வைத்த கணத்திலிருந்து, வளைகூரைக்குள் செல்லும் வரையில் அந்த சில கணங்களுக்கு ஒரு “தெய்வீக” மழைச்சாரல் வீசியதைக் காண அத்தனை அற்புதமாய் இருந்தது. தெய்வீகம் கீழிறங்கி வந்து அவரை வரவேற்றதுபோல் இருந்தது அக்காட்சி.

குருவிடம் நான் பெற்ற Grammy Award

1996ஆம் ஆண்டு, என்னுடைய முதல் தியான யாத்திரையிலிருந்து நாங்கள் திரும்பிய இரயில் பயணத்தின் முடிவில் நான் சென்னையில் இறங்கவிருக்கையில், திடீரென சத்குரு என்னிடம், “புல்லாங்குழலை நன்றாகப் பழகிக்கொள்!” எனச் சொன்னார். அதற்கு என்ன அர்த்தம் என்று வியப்பாய் இருந்தது, ஆனால் அதுகுறித்து நான் எதுவும் செய்யவில்லை. நான் ஆசிரமத்திற்கு வந்தபோது, என்னுடைய இந்தச் சிறு திறமை சிறப்பான பயன்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டது. அவருடனான சத்சங்கங்களின்போது என்னை புல்லாங்குழல் வாசிக்கச் சொல்வார்.

ஸ்பந்தா ஹாலில் நடைபெற்ற முதல் சம்யமாவிற்கு சில நாட்களுக்கு முன், எங்களில் சிலரைச் சந்தித்து, சத்சங்கங்களின்போது அவருக்கு என்ன மாதிரியான இசை தேவை என்பதை விவரித்தார். அந்த சந்திப்பில், புல்லாங்குழலில் சில கானங்களை என்னை வாசிக்கச் சொன்னார். நான் முயற்சித்துப் பார்த்தேன், என்னிடம் இருந்த சிறிய புல்லாங்குழலில் அதனை வாசிக்கும் திறன் எனக்கு இருக்கவில்லை. அந்த இசையைப் போலவே இருந்த மற்றொரு இசைக் கேசட்டை என்னிடம் கொடுத்து, பழகச் சொன்னார். இருந்தும் என்னால் முடியவில்லை. அவர் கொடுத்த ஆலோசனைகளின் அடிப்படையில் பயிற்சி செய்து, அவர் கூறியதற்கு நெருக்கமாகக்கூட இல்லையே என்கிற உணர்விலேயே மேடையில் போய் அமர்ந்தேன். நான் வாசிக்கத் துவங்கிய சிறிது நேரத்திலேயே சத்குரு மேடையில் இருந்தவாறே, பாராட்டும் வகையில் தன் கைகளில் “தம்ஸ்அப்” காட்டினார். அந்த வகுப்பு நிறைவுபெற்ற பின், அவ்விடம் விட்டு போகையில் மீண்டும் ஒருமுறை இசை நன்றாக இருந்ததை சுட்டிக் காட்டினார். அதை கேட்டு நான் சிலிர்த்துப் போனேன் - கிராமி (Grammy) விருது பெற்றதைப் போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது! ஒரு முறையேனும், என் குருவின் விருப்பத்திற்கு ஏற்ப என்னால் இசைக்க முடிந்ததே!

ஈஷாவில் நிர்வாண ஷடகம் பிறந்த கதை

2004 அல்லது 2005ஆம் ஆண்டு வாக்கில்... ஒரு பிரம்மச்சாரிகள் சந்திப்பின்போது, சத்குரு என்னிடம் ஒரு கேசட்டை கொடுத்து, அதிலிருந்து சில எளிமையான chant களை, அந்த சந்திப்பின் வெவ்வேறு நாட்களில் பிற பிரம்மச்சாரிகளுக்கு கற்றுக்கொடுக்கச் சொன்னார். ஒரு சில chant களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு சொல்லிக் கொடுத்தேன், சிறப்பாக நடந்தது. பெரும்பாலான பிரம்மச்சாரிகள் அவற்றை சில நாட்களிலேயே கற்றுக்கொண்டனர். மூன்றாவது நான்காவது நாளில், வேறு எளிமையான chant கள் எதுவும் அந்த கேசட்டில் இல்லாததால், அடுத்து என்ன செய்வதென்ற வியப்பில், நான் ஏற்கனவே கேட்டறிந்து இருந்த நிர்வாண ஷடகத்திலிருந்து ஒரு பதிகத்தை சொல்லிக் கொடுத்தேன். நான் கேட்ட அந்த ராகம் மிக மென்மையாகவும், கடினமானதாகவும் இருந்ததால், எளிமையான ட்யூனை வடிவமைத்து, “ந புண்யம், ந பாபம்...” என்ற பதிகத்தை மட்டும் பிரம்மச்சாரிகளுக்கு சொல்லிக் கொடுத்தேன். நாங்கள் பயிற்சி செய்து கொண்டிருந்த வேளையில் சத்குரு உள்ளே வந்தார். ஏதோ ஒருவிதத்தில் அவருக்கு அந்த வார்த்தைகளும் இசையும் பிடித்திருந்தன.

“யார் எழுதியது?” என்று கேட்டார். “ஆதிசங்கரர்,” என்று பதிலளித்தேன். எல்லா பதிகங்களையும் என்னைப் பாடச் சொன்னார். 6 பதிகங்களையும் கேட்டவர், ஆதிசங்கரரின் எழுத்தினால் கவரப்பட்டார். அனைத்தையும் பிரம்மச்சாரிகளுக்கு கற்றுக்கொடுக்கச் சொன்னார். இன்று ஈஷாவின் “கீதம்” போல் இது ஆகிவிட்டதைப் பார்ப்பது சுவாரஸ்யமாய் இருக்கிறது.

ஆசிரியர் பயிற்சி - எங்களை புரட்டிப்போட்ட கேள்விக் கணைகள்

isha-blog-article-on-the-path-of-the-divine-swami-suyagna-with-ashram-inmates

1997 ஆம் ஆண்டு மே மாதம், ஆசிரியர் பயிற்சி மேற்கொண்டேன். பிற ஈஷா ஆசிரியர்களுக்கு காணக் கிடைத்தது போலவே எனக்கும் பல்வேறு மக்களது வாழ்க்கை என் கண்முன்னே மாற்றமடைவதைப் பார்க்கும் பேறு கிடைத்தது. 2000 ஆம் வருட வாக்கில், ஈரோட்டில் நடந்த ஒரு வகுப்பில், என் வகுப்பில் ஒரு வாரத்திற்கு முன் தன் கணவரை இழந்த ஓர் இளம் விதவைப் பெண் இருந்தார். மிகுந்த மனஅழுத்தத்துடன் வாட்டத்துடன் காணப்பட்டார். வகுப்பு துவங்கிய 3, 4 நாட்களில் அவருக்குள் மாற்றங்கள் நிகழத் துவங்கின. 13 நாட்களின் முடிவில் அவர் முகத்தில் பிரகாசத்தையும் ஆனந்தத்தையும் காண முடிந்தது. கரடுமுரடான சிறைக் கைதிகள் முகத்திலும் இதுபோன்ற மாற்றங்களை நான் கண்டிருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால், துவக்கத்தில், சிறைக்கைதிகள் யோக வகுப்புகளில் நாட்டம் காண்பிக்கவில்லை. ஆனால், ஈடுபாடு ஏற்பட்ட பின், அவர்களிடம் வெகு இயல்பாக மாற்றங்கள் நிகழ்ந்தன.

ஆசிரியர் பயிற்சி காலங்கள் மிக சக்திவாய்ந்த களமாய் அமைந்தது. நான் என்பதை இல்லாமல் செய்து, சூழ்நிலைக்கு என்ன தேவையோ அவ்வாறு என்னை ஆகச் செய்தது ஆசிரியர் பயிற்சி.

செயலைப் பொருத்தமட்டில், 13 நாள் ஈஷா யோக வகுப்புகள்தான் என் வாழ்வின் சிறந்த காலகட்டங்கள். என் 10 வருட ஆசிரியப் பணியில், ஆரோக்கிய குறைப்பாட்டினாலோ வேறெதோ காரணத்தினாலோ நான் ஒருபோதும் வகுப்பினை தவறவிட்டதே இல்லை. அதில் ஆனந்தமும், நிறைவும், எனக்குள் அனைத்துமே பரந்துவிரியும் தன்மையையும் நான் கண்டேன்.

13 நாள் வகுப்புகள் அத்தனை தீவிரமாய் இருக்கும். சத்குரு வகுப்பினை 7 நாட்களாக மாற்றியமைப்பது குறித்து அறிவித்தபோது எங்களில் பலர் அந்த மாற்றத்தினை எதிர்த்தோம். மிகுந்த நாட்டத்துடன், 13 நாள் வகுப்புகளில் எங்களுக்கு ஏற்பட்ட அனுபவங்களை சொல்லி, இந்த புது வகுப்பிற்கு எதிராக வாதங்கள் புரிந்தோம். பொறுமையாகவும் கருணையோடும் எங்களுடைய அத்தனை கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார். அவரது முடிவோடு எங்களையும் பொருந்திப் போகச் செய்தார். 13 நாள் வகுப்புகள் போலவே 7 நாள் வகுப்புகளும் உயிர்துடிப்புடன் இருந்ததை கண்டபின், அவரது முடிவில் இருந்த பிரம்மாண்டத்தை இன்னும் துல்லியமாக எங்களால் காண முடிந்தது.

சத்குரு, ஈஷா யோகா வகுப்புகளை வடிவமைத்திருக்கும் விதம் என்னை எப்போதுமே ஆச்சரியத்தில் ஆழ்த்தும் - அது அசாதாரணமானது, அற்புதமானது. நாங்கள் ஆசிரியர் பயிற்சிபெற்ற அக்காலங்களில், பெரும்பாலான சமயம் சத்குரு எங்களுடன் இருந்தது நாங்கள் செய்த பாக்கியம். அவர் நடத்திய “மாதிரி வகுப்புகளை” எங்கள் எவராலும் மறக்கவே இயலாது. கடுமையும் கூர்மையும் எளிமையும் ஒருசேர்ந்த அவரது கேள்விகளாலும் விவாதங்களாலும் அவர் எங்களைப் புரட்டிப் போட்டது, நாங்கள் புரிந்துகொண்டதை விடவும் எதிர்ப்பார்த்ததை விடவும் ஆழமாய் வகுப்புகளுக்கு எங்களைத் தயார்செய்தது. ஆசிரியர் பயிற்சி காலங்கள் மிக சக்திவாய்ந்த களமாய் அமைந்தது. நான் என்பதை இல்லாமல் செய்து, சூழ்நிலைக்கு என்ன தேவையோ அவ்வாறு என்னை ஆகச் செய்தது ஆசிரியர் பயிற்சி.

சத்குருவுடன் இணை ஆசிரியராய் பணியாற்றுவது எப்போதுமே சவாலாகத்தான் இருந்தது. ஆரம்ப காலங்களில் நடந்த ஒரு ஷாம்பவி பயிற்சி வகுப்பின்போது, அவர் என் அருகே அமர்ந்திருக்கும் வேளையில், நாடிவிபாஜன் மற்றும் சூரிய நமஸ்காரம் பயிற்சிகளை நான் சொல்லிக் கொடுக்க வேண்டியிருந்தது. பங்கேற்பாளர்களுக்கு குறிப்புகள் கொடுத்துக் கொண்டிருக்கையில் நான் வார்த்தைகளுக்கு தடுமாறுவதை அவர் கவனித்தார். என் போராட்டத்தை கண்டவர், தனது கருணையால் மெல்ல வகுப்பை விட்டு வெளியே சென்றார். நிம்மதிப் பெருமூச்சு விட்டேன், வார்த்தைகள் மெல்ல சரளமாக வரத் துவங்கின.

அசோகனை தேடிய வேளை

2000 ஆம் ஆண்டு வாக்கில், ஒரு ஆசிரியர் சந்திப்பின்போது, “உங்களுக்கும் கௌதம புத்தருக்கும் என்ன வித்தியாசம்?” என்று நான் சத்குருவிடம் கேட்டேன்.

“எனக்கும் அவருக்கும் இடையே நிறைய வித்தியாசங்கள் உள்ளன. ஆனால், எனக்கும் அவருக்கும் இடையே ஒரு பெரிய வேறுபாடு இருக்கிறது,” என்றார்.

“அது என்ன, சத்குரு?” என்று நான் ஆவலோடு இடைமறித்தேன்.

“அசோகன்,” என்றார் அவர். “அவரிடம் அசோகர் இருந்தார், என்னிடம்...” என்று முடித்தார். சத்குரு எனும் இந்தச் சாத்தியம் பல கோடி மக்களைச் சென்றடைவதற்கான அந்த ஒரு பிரம்மாண்ட ஆற்றலைத்தான், சக்தியைத்தான் சத்குரு அவ்வாறு குறிப்பிட்டுச் சொல்கிறார் என்பதை நான் புரிந்துகொண்டேன்.

சத்குருவிடமிருந்து வெளிப்பட்ட மிக வலுவான அந்த வார்த்தைகள் என்னை குடைந்தெடுத்தது, தீவிரப்படுத்தியது, அவரையும் அவரது பணியையும் அனைவருக்கும் கொண்டுச் செல்லவேண்டும் என்கிற ஏக்கத்தினை ஆழப்படுத்தியது. அந்த சந்திப்பிற்கு பிறகு, அவரை உலகிற்கு கொண்டு செல்லக்கூடிய அந்த “அசோகர்” யார்? எனச் சிந்திக்க துவங்கினேன். இந்த காலத்தில், அவரது செய்தியை கொண்டு சேர்க்கும் ஆற்றல் ஊடகங்களுக்குத்தான் உண்டு என்பதை உணர்ந்தேன். அதுகுறித்து பணிசெய்ய ஆரம்பித்தேன். பலவிதங்களில், சத்குருவின் அந்தவொரு வாக்கியம் எனது முயற்சிகளுக்கும், தமிழ்நாட்டு ஊடகங்களுக்குள் ஊடுருவுவதற்கும், ஆற்றல் மிகுந்த மனிதர்களை சந்திப்பதற்குமான வழிகளை கண்டறியவும் எனக்குள் பெருந்தீயை மூட்டியது.

முக்கிய மனிதரைப் போல் அவர் நடந்து கொண்டதில்லை

isha-blog-article-on-the-path-of-the-divine-swami-suyagna-with-sadhguru

தீவிரமான உறுதியுடன் சத்குரு பணிசெய்வது நம்பமுடியாத வகையில் அமைந்திருக்கிறது. எந்த மீட்டிங்கிற்கும் அவர் தாமதமாக வருவதில்லை. உடல்நல குறைப்பாட்டாலோ அல்லது சொந்த காரணங்களுக்காகவோ அவர் எந்த சந்திப்பையும் ரத்து செய்ததில்லை. கோவாவில் நடைபெற்ற ஒரு மாநாட்டிற்கு சத்குருவுடன் நான் பயணம் செய்ய நேர்ந்தது, அவர் முந்தைய நாளும் உணவு உண்ணவில்லை என்பதை நான் அறிந்துகொண்டேன். அவர் பேச வேண்டிய நேரம் குறித்த அறிவிப்பு அதுவரை வெளியாகாததால், அரங்கத்தை அடைந்தவுடன் அவர் உண்ண வேண்டும் என்று நான் நினைத்திருந்தேன். நான் வற்புறுத்தியதால் அவர் உணவுண்ண அமர்ந்தார். உண்ண அமர்ந்த 10 நிமிடத்தில் அவரை மேடையில் எதிர்ப்பார்ப்பதாக அறிவித்தனர். இதைக் கேட்ட மாத்திரத்தில் உடனடியாக எழுந்த சத்குரு, பாதியிலேயே கைகளை கழுவிவிட்டு, அரங்கத்திற்குள் கிட்டத்தட்ட ஓடித்தான் சென்றார் என்று சொல்லலாம். அவரிடம் ஒரு கணப்பொழுது தாமதமோ தயக்கமோ இருக்கவில்லை.

முக்கிய மனிதரைப் போல் அவர் நடந்துகொள்வதை நான் ஒருபோதும் பார்த்ததில்லை. இந்தவொரு சம்பவத்தை என்னால் மறக்க முடியாது. 1998 ஆம் ஆண்டு வாக்கில், முக்கோண கட்டிடத்தில், எங்களுடன் அமர்ந்து சத்குரு இரவு உணவு உண்டு கொண்டிருந்தார். உண்டு முடித்தவுடன், தன் தட்டினை கழுவ கழுவுமிடத்திற்கு சென்றார். அங்கு தண்ணீர் தேங்கி இருந்தது, உணவு குப்பைகள் அடைத்திருந்ததால் தண்ணீர் செல்லவில்லை. அடுத்து நான் கண்டது... சத்குரு தன் கைகளை உள்ளே விட்டு, அடைத்திருந்த உணவு கழிவுகளை எல்லாம் தன் கைகளில் அள்ளினார், மெல்ல அவ்விடத்தை விட்டு நகர்ந்தார். சத்குருவைப் போன்ற ஒரு குரு இதுபோன்ற சாதாரணமான வேலைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வது எனக்கு மலைப்பை ஏற்படுத்தியது. என்றுமே வணங்கிய நிலையில் இருந்து, நமக்கு முன்னுதாரணமாய் அவர் இருந்து வருகிறார். விருந்தினர்கள் ஆசிரமத்திற்கு வருகையில், அவர்களுடைய வாகன ஓட்டுநர்களும் உணவு உண்ணுமாறு பார்த்துக்கொள்ளச் சொல்வார். ஆசிரமத்திற்குள் அவர் நடந்து செல்கையில், காய்ந்துபோன செடிகளைப் பார்க்கையில், நின்று அவற்றிற்கு அவர் தண்ணீர் விடுவதைக்கூட நான் பார்த்திருக்கிறேன். சிறு சிறு விஷயங்களில் அவர் செலுத்தும் கவனம், அவரது கருணை, அனைவரையும் இணைத்துக் கொள்ளும் அவரது தயாள குணம் இவை யாவும் என்னை திக்குமுக்காடச் செய்திருக்கின்றன.

நிர்வாகப் பணியில் ஏற்றங்களும் தாழ்வுகளும்

2007ஆம் ஆண்டு, ஆசிரமத்து நிர்வாகத்தை பார்த்துக்கொள்ள எனை சத்குரு அழைத்தார். மக்களை வல்லமையுடையவர்களாய் ஆக்குவதில் சத்குருவிற்கு நிகரில்லை. அவர் மக்களை வல்லமைப்படுத்துவது அசாதாரணமானது. அடுத்த 4 ஆண்டுகளில் நான் பல மடங்கு உயர்த்தப்பட்டேன். அவரது ஆதரவாலும், ஊக்கத்தினாலும் பலப் பல நல்ல விஷயங்கள் நடந்தன. சமயங்களில், நான் சில தவறுகளையும் இழைத்தேன்.

ஆசிரியர் பணியில் எனக்கிருந்த ஈடுபாடு அளவிற்கு நான் நிர்வாகப் பணியில் ஈடுபாடு காட்டவில்லை. என்னுடைய 100 சதவிகிதத்தை நான் கொடுக்கத் தவறியதால் அனைத்துமே சவாலாகத்தான் இருந்தது. என்னுடைய சிறந்த செயலை நான் வழங்க எத்தனித்தாலும், ஏதோ ஒருவிதத்தில் நான் அதில் வெற்றி பெறவில்லை. இந்த பணிக்கிடையே சிலமுறை நான் சத்குருவை கீழ்விட்டது என்னுடைய தாங்க இயலா வலிகளில் ஒன்றாக இருக்கிறது.

சத்குரு சம்ஸ்கிருதியை துவங்கியபோது, எனக்குள் பல கேள்விகள் எழும்பின. அதன் அடிப்படைகள், தாத்பரியங்கள் குறித்தும் எனக்குள் பலப்பல கேள்விகள் வந்துபோயின. “12 வருட கல்விக்குப் பிறகு இந்தக் குழந்தைகளுக்கு என்னாகும்?” என்று எனக்குள் நான் பலமுறை வாதிட்டு இருக்கிறேன். இன்று இந்தக் குழந்தைகள் இத்தனை பிரகாசமாய், புத்திசாலித்தனமாய், திறமையாய் இருப்பதை பார்க்கையில் சத்குரு போன்ற ஒருவரது விவேகத்தை கேள்வி எழுப்பக்கூடாது என்பதை உணர்ந்திருக்கிறேன். அவர் தெரிந்தவர், அறிந்தவர்.

நிர்வாகப் பணியில் எனக்கு கிடைத்த ஆசிகளில் ஒன்று, அவருடன் நெருங்கிப் பழகியது. அச்சமயத்தில், அவருடைய பன்முகத் தன்மையையும் பார்க்க முடிந்தது. அவரது தீவிரம், அசைவில்லா நோக்கம், விடாப்பிடியான குணம், பல சூழ்நிலைகளில், கட்டுண்டிருக்கும் விஷயங்களை தாண்டி சிந்திப்பது - இவை யாவும் என்னை பிரம்மிப்படையச் செய்திருக்கின்றன.

இருந்தாலும், அந்த 4 ஆண்டுகளில் அவருடைய ஆளுமையால் அதிகம் ஆட்கொள்ளப்பட்ட நான், அவருள் இருந்த குருவை காணாமல் போனேன். ஆனால், விரைவிலேயே அவருக்குள் இருந்த குருவை காண்பதற்கான வாய்ப்பு எனக்கு கிட்டியது. குரு-சிஷ்ய உறவை மறுமுறை பலப்படுத்திக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது.

தெளிவும் சுதந்திரமும் உணர்ந்த நாட்கள்

ஈஷாவுடன் இருந்த இத்தனை வருடங்களில், எனக்குள் என்ன நடக்கிறது, என் சாதனா எப்படி இருக்கிறது என்று நான் அக்கறை கொண்டதும் இல்லை, பார்த்ததும் இல்லை. ஈஷாவின் செயல்கள் சிறப்பாய் நடத்துவது எப்படி என்பதில் மட்டுமே கண்ணும் கருத்துமாய் இருந்தேன். இதனால், 2011ஆம் ஆண்டில், ஒன்றரை வருடங்களுக்கு சத்குரு என்னை பணியில் இருந்தவாறே மௌனத்தில் இருக்கச் சொன்னார். எனக்கு வாய்த்த பெருவரமாய் இதனை நான் பார்த்தேன். எனக்குள் பார்க்கவும், தெளிவு ஏற்படுத்திக் கொள்ளவும், நான் எதற்காக இங்கு இருக்கிறேன் என்பதை உணரவும் தகுந்த சூழ்நிலையாய் அது இருந்தது. நான் சில சமயங்களில் அறியாமையிலும் முட்டாள்தனத்திலும் உழன்றிருக்கிறேன் என்பதை உணர்ந்து கொண்டேன். இந்த அறிதலும் சுயபரிசோதனையும், பல ஆண்டுகளாக நான் கட்டுண்டு இருந்த அனைத்து சச்சரவுகளையும் குழப்பங்களையும் விட்டு வெளியேற உதவின.

மெல்ல மெல்ல, சத்குரு நமக்கு என்ன வழங்குகிறாரோ அதனை ஏற்றுக்கொள்ளும் விதத்திலும் அதனை போற்றும் பக்குவமுடையவனாகவும் மாறினேன். ஒரு சிறு உதாரணம், “நீங்கள் விரும்புவதைப்போல் வாழ்க்கை நடக்காததால்தான் நீங்கள் சந்தோஷம் அற்றவராய் இருக்கிறீர்கள்,” என்று சத்குரு தொடர்ந்து சொல்லிக்கொண்டே இருக்கிறார். இது எனக்குள் வாழ்வனுபவமாய் மாறியது. மௌனத்தில் சென்ற சில நாட்களிலேயே எனக்குள் ஒருவித உராய்வுகள் அற்ற ஆயாசமான நிலையை உணர்ந்தேன். எனக்குள் புதுவிதமான சுதந்திரம் குடிகொள்வதை கண்டறிந்தேன். இந்த சாதனா என் வாழ்விற்கு புது அர்த்தம் கற்பித்தது, என் தீவிரத்தை இன்னும் உறுதிப்படுத்தியது, பாதையில் என் நோக்கத்தை தெளிவாக்கியது. “...இப்போது யோகா,” - பதஞ்சலியின் இந்த முதல் யோக சூத்திரம் எனக்குள் உயிருள்ள அனுபவமாய் மாறியது.

அந்த நாள், அந்தக் கணம்...

சில நாட்களுக்கு முன்புதான் நான் 50 வயதை தொட்டிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். வயதானதைப் போல் நான் உணர்வது கிடையாது. என் கல்லூரி நாட்களைவிட இப்போது உயிரோட்டமாகவும் துடிப்பாகவும் இருப்பதாய் உணர்கிறேன். ஈஷாவுடனும் சத்குருவுடனுமான என் பயணம் பரிபூரணமானதாகவும் செறிவூட்டுவதாகவும் அமைந்துள்ளது. சத்குரு அவர்கள் சாதனா, பிரம்மச்சரியம் என்று நமக்கு கொடுத்திருப்பவற்றை விட்டுக்கொடுத்து, அதற்கு மாற்றாக உலகிலுள்ள எதையுமே நான் பெறமாட்டேன்.

கடைசியாக, நான் முழுநேரமாக இங்கு வந்தபோது சத்குரு என்னிடம் கூறியது நினைவிற்கு வருகிறது: “நீ கல்லைப் போல இருக்கவேண்டும். எமக்கு எங்கு வேண்டுமோ அங்கு உன்னை தூக்கி எறிவோம். இதற்கு உனக்கு சம்மதமா?” என்றார். இத்தனை வருடங்களாக இதுதான் என்னை வழிநடத்தும் சக்தியாக இருந்து வந்திருக்கிறது - எங்கு வீசப்பட்டாலும், எதற்காக வீசப்பட்டாலும் அதற்கு முழு விருப்பமாய் இருத்தல், அதில் முழு ஈடுபாட்டுடன் இருத்தல்.

என்னுடைய ஒரே ஏக்கம்... செயல்செய்ய எந்தத் தேவையும் இல்லாத ஒரு நிலை - ஒரு சுதந்திர நிலையில் இருப்பது - இந்தவொரு கணத்திற்காக, நாளிற்காக காத்திருக்கிறேன். அதுவரை, எங்கும், எப்போதும் எத்தனை பிறப்பெடுத்தாலும் தூக்கி எறியப்பட முழு விருப்பமாய் இருக்கிறேன்.