கரண் ஜோஹர்: குடும்பத்தைப் பற்றி நாம் பேசும்போது, சத்குரு, நான் எப்போதும் அறிந்துகொள்ளத் துடிக்கின்ற சில விஷயங்கள் உள்ளன. அதற்கான பதிலை, உங்களைப் போன்ற ஒரு உயர் சக்தியிடம் இருந்து பெற்றுக்கொள்ளவோ அல்லது கேட்டு சரிபார்த்துக்கொள்ளவோ விழைகிறேன். எனக்கு எப்போதும் வரும் அந்தக் கேள்வி என்னவென்றால், ஏன் எப்போதும் ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையே இயற்கையாகவே ஒரு தொலைவு வந்துவிடுகிறது? ஏன் அந்த உறவில் எப்போதுமே அந்த ஒரு பதற்றம் நிலவுகிறது? இங்கே உள்ளவர்களில் பலரும் தங்கள் சொந்த வீட்டு சூழலிலும் இதே உணர்வை அனுபவித்திருப்பார்கள் என்று நான் நிச்சயமாக நினைக்கிறேன். அவர்களுக்கிடையிலான அந்தத் தொலைவின் துவக்கப்புள்ளி எதுவென்று நீங்கள் எண்ணுகிறீர்கள்?

சத்குரு:

ஏனெனில் ஒவ்வொரு தலைமுறையினரும் அதே தவறைச் செய்கின்றனர், அப்படியானால் அவர்கள் கற்றுக்கொள்ளவே இல்லை என்று அர்த்தம். நாம் ஒரு குடும்பம் என்று சொல்லும்போது, உங்களுக்குத் தெரியுமா, இத்தாலியில், குடும்பம் என்றால் குற்றம் என்று பொருள். ஆமாம், குற்றம் இழைக்கும் குழுவினரை எப்போதும் ‘குடும்பத்தினர்’ என்று குறிப்பிடுவார்கள். எனவே ஒருவிதத்தில் இது ஒருவகையான குற்றம்.

குடும்பம் எப்போது குற்றமாகிறது?

ஒரு சமூக உருவாக்கத்தில், குடும்பம் என்பது மிக அடிப்படையான ஒரு அமைப்பாகும், ஆனால் அதற்காக நீங்கள் அடிப்படை நிலையிலேயே இருக்க வேண்டும் என்று அர்த்தமல்ல. ஏனெனில், இது நாம் கொண்டுள்ள உயிரியல் அடையாளம். உயிரியல் என்பது ஒரு நிதர்சனம், அதை நாம் மறுக்க இயலாது. நாம் அனைவரும் அறிந்தது போல், இது ஏதோ ஒருவிதத்தில், ஒரு குறிப்பிட்ட அளவு வரையிலேனும், (தன்னைக் குறிப்பிட்டுக் காட்டி) குறைந்தது இதன் ஒரு பாகமேனும், நம் பெற்றோரால் நமக்குக் கொடுக்கப்பட்டது. இன்று இது இப்படி இருப்பது, தோற்றத்தில் இது இப்படி இருப்பது முக்கியமாக அவர்களால் தான்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நீங்கள் ஒரு எட்டு, பத்து வயதில் இருக்கும்போது, உங்கள் தந்தை உங்களுக்குக் கடவுள் போலத் தெரிந்தார். பிரச்சனை ஆரம்பித்தது உங்களின் பதினைந்து, பதினாறு வயதுக்குப் பின்பு தான்.

அவர்களுக்கு அது வேறு யாரோ ஒருவரால் கொடுக்கப்பட்டது என்பது மற்றொரு விஷயம். ஆனால் நமக்கு இது அவர்களால் கொடுக்கப்பட்டது. அதனால் இது ஒரு உயிரியல் அடையாளம். ஒரு தனி உயிரை இப்படி அதன் உயிரியல் அடையாளத்தால் வரையறுப்பது, ஒரு மொத்த ஆயுட் காலத்திற்குமான அடையாளமாக்குவது குற்றம் தான்.

ஏனெனில் இது பல விஷயங்களை உருவாக்குகிறது. இந்த நாட்டில்… இந்த நாடு நீண்ட காலமாக அதிக துன்பங்களுக்கு உள்ளாகி இருக்கின்றது. இப்பொழுதுதான் நீங்கள் அந்த மகாபாரதம் வீடியோவை வெளியிட்டீர்கள். மொத்த மகாபாரதமும் ஒரு குடும்பப் பிரச்சனை தான். அது ஒரு திருதராஷ்டிர குறைபாடு. இதனால் இன்னமும் நாம் துன்பப்படுகிறோம். “என்ன ஆனாலும் சரி, என் மகன் தான் சிறந்தவன்”, இன்று கூட இதே விஷயத்தால் நாம் அவதிப்படுகின்றோம். "என் மகன் தான் சிறந்தவன். என்ன ஆனாலும் சரி, அவன் தான் அரசனாக வேண்டும்".

குடும்ப அமைப்பின் முக்கியத்துவம்

அதனால் குடும்பம் என்பது நாம் பிறக்கும்போது உடன் வந்த ஓர் அடிப்படை அடையாளம். நாம் குழந்தையாய் இருக்கும்போது அது ஓர் அற்புதமான தன்மை, ஏனெனில் அந்தக் குடும்பத்தின் உதவி இல்லாமல் இன்று நீங்கள் யாராக இருக்கிறீர்களோ, பல விதங்களில் அப்படி இருந்திருக்க வாய்ப்பில்லை, இல்லையா?

குடும்ப அமைப்பு குறித்து அதற்குரிய மிகுந்த மரியாதையுடன் நான் சொல்கிறேன், உங்கள் தாயின் கருவறையில் இருந்து நீங்கள் வெளியில் விழுந்தவுடனே உங்கள் சொந்த கால்களில் எழுந்து நின்று மற்ற விலங்குகளைப் போல் எதையும் செய்யும் நிலையில் நீங்கள் இல்லாததால், ஒரு ஆண் ஆணாகவோ அல்லது ஒரு பெண் பெண்ணாகவோ முழு வளர்ச்சி அடையும் வரை, நீண்ட காலம் அடைகாக்கத் தேவை இருக்கிறது.

குடும்ப அடையாளம் தாண்டி வளருங்கள்

ஒரு நீண்ட காலத்திற்கு குடும்பத்தின் இந்த அடைகாப்பு மிகவும் முக்கியமானதாகவும் அவசியமானதாகவும் இருக்கின்றது, அது குறித்து எந்தக் கேள்வியும் இல்லை. நீங்கள் அந்த அடையாளத்தைத் தாண்டி வளரத் தேவை இருக்கிறது. ஆனால் நிறைய மனிதர்கள் அந்த அடையாளத்தைத் தாண்டி எப்பொழுதும் வளர்வது இல்லை. இதனால் அவர்கள் துன்பத்திற்கு உள்ளாவதோடு, அவர்கள் குறிப்பிட்ட சில இடங்களில் பிறந்தவர்களாய் இருந்தால், அவர்கள் மொத்த தேசத்தையுமே அவதிப்பட வைக்கிறார்கள்.

நீங்கள் அதைக் கடந்து வளர வேண்டும். ஒரு குழந்தையாக உங்களின் குடும்பத்தோடு நீங்கள் அடையாளம் கொண்டிருப்பது மிகவும் அவசியம். ஆனால் ஒரு வளர்ந்த மனிதனாக, நீங்கள் உங்களின் உயிரியல் அடையாளம் தாண்டி வளர வேண்டும். ஏனெனில் உயிரியல் தன்மை மிகவும் அடிப்படையான அடையாளம் ஆகும். ஒரு மனிதன் நிச்சயம் அதனைத் தாண்டி வளர வேண்டும்.

தந்தை - மகன் உரசலின் உளவியல்

அப்படிப் பார்க்கும்போது, ஒவ்வொரு தந்தைக்கும் ஒவ்வொரு மகனுக்கும் இடையிலான உறவில் அந்த ஒரு பதற்ற நிலை நிலவுவது அவசியம் தானா? இது தந்தையையும் மகனையும் பற்றியது அல்ல, இது இரு ஆண்கள் ஒரே வீட்டில் இருப்பதனால் உருவானது. நீங்கள் ஒரு எட்டு, பத்து வயதில் இருக்கும்போது, உங்கள் தந்தை உங்களுக்குக் கடவுள் போலத் தெரிந்தார். பிரச்சனை ஆரம்பித்தது உங்களின் பதினைந்து, பதினாறு வயதுக்குப் பின்பு தான்.

நீங்கள் ஒரு ஆடவனாக இருக்க விரும்பும்போது அங்கே போதுமான இடம் இல்லை. இந்தப் பெரிய மனிதர் இவ்வளவு இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறாரே என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அந்த மனிதர் நினைக்கிறார், “இது என்னுடைய இடம், இவன் யார் இங்கே?” அவர்களால் ஒருவருக்கொருவர் தந்தை என்றும் மகன் என்றும் அங்கீகரித்துக்கொள்ள இயலாது. ஏனெனில் இப்போது அங்கே தந்தையும் மகனும் இல்லை, இருப்பது இரு ஆண்கள், ஒரே வீட்டில், போதுமான இடமில்லாமல்.

இது ஏதோ மனிதக் குடும்பங்களில் மட்டும் நிகழ்வதில்லை, ஒவ்வொரு உயிரினங்களிலும், அது ஒரு யானையோ அல்லது எருமையோ அல்லது வேறு எதுவாயினும், ஒவ்வொரு உயிரினத்தின் வாழ்விலும் இது நிகழ்கிறது. ஏதேனும் ஒரு உரசல் நிகழ்ந்து அதனால் ஒன்று இளையது வெளியேறிவிடும் அல்லது மூத்தது வெளியேறிவிடும். இது எல்லா இடங்களிலும் நிகழ்கிறது. ஏனெனில் இது தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான பிரச்சனை அல்ல. இது இரு ஆண்கள் ஒரே இடத்தையும் மற்றும் ஒரே பெண்ணை ஒருவர் தாயாகவும் மற்றொருவர் மனைவியாகவும் பகிர்ந்துகொள்ள முயல்வதால் வரும் பிரச்சனை ஆகும்.

கரண் ஜோஹர்: இது நிச்சயமாக இந்த நாடு இதுவரை கொண்டிருந்த ஒரு வலுவான கட்டுக்கதையை உடைக்கிறது, ஏனென்றால் பிரச்சனை எப்போதும் ஒரே வீட்டில் இருக்கும் இரண்டு பெண்கள் தான் என்று நினைத்தோம். நீங்கள் அதைத் தலையில் தட்டி மாற்றிவிட்டீர்கள், இது உண்மை என்றுதான் நான் நம்புகிறேன், ஏனெனில் இரு ஆண்கள் ஒரே இடத்தில் இடம்பெற முடியாது என்பதில்தான் சிக்கல் உள்ளது.

சத்குரு: இல்லை, பெண்களிடையேயும் இது வேறுவிதமாக நிகழ்கிறது. ஆனால் பெண்கள் தங்களிடையேயான இந்த உரசல்களை ஒருவிதமாக மூடி மறைக்கத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் அதை ஒரு குறிப்பிட்ட வழியில், பெண்மைக்கே உரித்தான ஒரு வழியில் செய்கிறார்கள். ஆண்கள் அதை அதிகமாக தலைக்கு… தலை மோதிக்கொண்டு செய்வார்கள். தலையால் முட்டிக்கொள்வது ஆணின் வழி. பெண்ணின் வழி வேறு, அவள் அதை வித்தியாசமாக செய்வாள், ஆனால் உராய்வு நிகழ்கிறது தான்.