அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?!
‘‘எனக்குப் பின் 2,500 வருடங்களில் தர்மச் சக்கரம் ஒரு முழு சுற்று முடித்து, மீண்டும் புதிய சுற்றைத் தொடங்கும் என கௌதம புத்தர் சொல்லியிருந்தார். இப்போது அவர் சொன்ன கெடுவுக்கு அருகில் நாம் இருக்கிறோம். இது பற்றி என்ன கருதுகிறீர்கள்?’’
Subscribe
சத்குரு:
‘‘புத்தர் சொல்லி ஏறக்குறைய 2,500 ஆண்டுகள் ஆகின்றன. நாம், இந்த நேரத்தில் இங்கே இருப்பது ஏதோ தற்செயலானது அல்ல. உலகின் அனைத்துக் கலாசாரங்களிலும், குறிப்பாக இந்தக் கலாசாரத்திலும், அடுத்த 200 வருடங்களில் ஆன்மீக நிலையில் மிகப் பெரிய முன்னேற்றங்கள் நடக்கும். அது ஒரு புரட்சியாக நிகழவிருக்கிறது. மனிதர்களால் செய்ய முடியாதவை, ஒரு மனிதர் தன் வாழ்நாளில் சாதிக்க முடியாதது எல்லாம் அடுத்த 200 வருடங்களில் நிகழும்.
பிரபஞ்சத்தில் ஒவ்வொரு கணமும், தலைமுறையும், அது வரலாற்றில் எந்த நேரமாக இருந்தாலும் சரி, அது மிக முக்கியமான தருணம்தான். ஆனால், உலகின் வரலாற்றில், வெவ்வேறு தருணங்களில், வாழ்க்கையின் வெவ்வேறு அம்சங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்திருக்கின்றன. வெற்றி பெற்றதாலோ, வளம் அடைந்ததாலோ, தோல்வி அடைந்ததாலோ, அடிமைப்பட்டதாலோ, அதைப் பொறுத்து அந்தந்தத் தருணங்கள் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன.
ஆனால், தற்போதைய உலகுக்கு இந்தத் தருணம் ஆன்மீகரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. முன்பு எப்போதும் இருந்ததைவிட, இப்போது மக்கள் வசதியாக இருக்கின்றனர். அதே நேரத்தில், முன்பு எப்போதும் இருந்ததைவிட அதிக மனஅழுத்தத்திலும் இருக்கின்றனர். இதற்கு முன்னர் மனிதன் இந்த அளவுக்கு ஆன்மீகத்தில் ஆர்வம் காட்டியதில்லை. உலகில் போராட்டங்கள் அதிகமாக அதிகமாக, உள்நிலை பற்றிய ஆர்வமும் மனிதனுக்கு அதிகரித்து வருகிறது. ஒரு வழியில், இது அற்புதமான படிக்கல். இந்த செயல்முறை தொடர்ந்தால், இந்த ஆர்வம் ஒவ்வொருவருக்குள்ளும் தீவிரமானால், மனிதகுலத்துக்குப் பல வழிகளில் அது தீர்வாக இருக்கும்.
இதுவரை மனிதன் வெளிஉலகை வெற்றிகொள்ளவே அதிக ஆர்வம் காட்டினான். இப்போது விஞ்ஞானம், தொழில்நுட்பத்தின் உதவியால் வெளிஉலகில் நிறைய சாதித்துவிட்டோம். வெளி உலகை வெற்றி பெறுவது, நம்மை எங்கும் கொண்டுசேர்க்காது என்பதைக் கடந்த 200 வருடங்களுக்குள்ளாகவே மனிதன் புரிந்துகொண்டுவிட்டான். நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் இல்லாதிருந்தால், வெளிஉலகை வெற்றி பெறுவது பயனற்றது என்பதை அறிய, இன்னமும் பல நூற்றாண்டுகள் எடுத்திருப்போம்.
ஒரு காலத்தில் கௌதம புத்தர், அலெக்ஸாண்டர், அசோகர் போன்றவர்கள் வெளிஉலகை வெற்றி பெறுவது நம்மை எங்கும் கொண்டு சேர்க்காது என்பதை அறிந்திருந்தனர். ஆனால், இன்று ஒவ்வொரு சாதாரண மனிதனும்கூட அதை உணர ஆரம்பித்துள்ளான். நிலவுக்குச் செல்லவும், வியாழன் பற்றி அறியவும் விஞ்ஞான முன்னேற்றம் நமக்கு உதவுகிறது. ஆனால், நம்முள் நாம் எதையும் அறிய முடியவில்லை. எனவே, இப்போதைய நிலைமை ஆன்மீகரீதியாக மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. கலவரங்களும் போராட்டங்களும் பல வழிகளில் உச்சத்துக்குப் போயிருப்பதால், தற்போது உலகம் ஆன்மீகத்தை நோக்கி மேலும் முன்னேறி வருகிறது!’’