ஆக்ஞா - வர்ணம் கடந்த தெளிவு
ஏழு சக்கரங்களைப் பற்றிய நமது இந்தத் தொடரில், ஆக்ஞா சக்கரம் பற்றி விவரிக்கும் சத்குரு, அதன் தன்மைகள், வைராக்கிய நிலையுடன் அது எப்படி தொடர்புடையதாக இருக்கிறது மற்றும் ஈஷா யோக மையத்துடன் அது எந்த வகையில் சம்மந்தப்பட்டிருக்கிறது என்பதைப் பற்றியும் நமக்கு விளக்குகிறார்.
ஆக்ஞா மற்றும் வைராக்யா
சத்குரு: ஆக்ஞா, ஞானத்திற்கு மூலமாக இருக்கிறது; மிக உயரிய பகுத்துணர்வு நிலை என்பது இதுதான். இதற்கு உவமை குறிப்பிட வேண்டுமானால், ஏழு அடிப்படை நிறங்களை தன்னில் உள்ளடக்கியுள்ள வெண்ணிற ஒளியை எடுத்துக்கொள்ளலாம். ஒருவேளை ஒளியானது ஒரேயொரு நிறம் மட்டும் கொண்டதாக இருந்தால் - ஊதா நிறத்தில் ஒளிர்வதாக எடுத்துக்கொள்வோம், அது குறிப்பிட்ட நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படும். அதுவே நிறமற்ற ஒளி, எல்லாவற்றுக்குமே பயன்படும். பொதுவாக நாம் அதை வெண்ணிற ஒளி என்று அழைக்கிறோம், ஆனால் உண்மையில் அது நிறமற்றது - அதை நீங்கள் பார்ப்பதில்லை. ஒளியின் பிறப்பிடத்தை நீங்கள் பார்க்கமுடியும், அதேவிதமாக, ஒளியை பிரதிபலிக்கும் பொருளையும் நீங்கள் பார்க்கமுடியும், ஆனால் உள்ளபடியே ஒளி என்ற ஒன்றை உங்களால் பார்க்கமுடியாது. ஏதோ ஒன்று ஒளியை தடுக்கும்போது மட்டுமே அதை நீங்கள் பார்க்க முடிகிறது. உண்மையில், ஒளி நிறமற்றது. இந்த நிறமற்ற ஒளியை ஒளி விலகல் மூலமாக ஏழு நிறங்களாகப் பிரிக்கமுடியும்.சக்கரங்கள் ஏழும், ஏழு வண்ணங்களுடன் தொடர்புடையதாக இருக்கிறது. ஆனால் ஆக்ஞா நிறமற்றது. இதனால்தான் ஆக்ஞா சக்கரம் வர்ணமற்ற நிலை அல்லது நிறம் கடந்த நிலையாகிய வைராக்யாவுடன் தொடர்புடையதாகிறது. எந்த ஒரு நிறமாக இருந்தாலும், அதன் சாயல் துளியும் உங்கள் மீது பதியாதபடி செயல்படுவதற்கு வைராக்கிய நிலை உங்களை அனுமதிக்கிறது. உதாரணத்திற்கு, நாம் சிவப்பு, நீலம் அல்லது மஞ்சள் நிற விளக்கை ஒளிர வைத்தால், எல்லாமே வித்தியாசமாக தோற்றமளிக்கும். நிறமற்ற ஒளியை தரும் விளக்கானது, நீங்கள் எல்லாவற்றையும் தெளிவாகப் பார்ப்பதற்கு, எது எப்படி இருக்கிறதோ, அதை அப்படியே பார்ப்பதற்கு அனுமதிக்கிறது. அதேபோன்று, நீங்கள் ஆக்ஞாவில் நிலைத்து நின்றால், எல்லாவற்றையும் அவை உள்ளபடியே நீங்கள் பார்ப்பீர்கள். எல்லாவற்றையும், அவை எப்படி இருக்கிறதோ, அப்படியே நீங்கள் பார்க்கும்போது, எல்லாவற்றின்மீதும் நீங்கள் முற்றிலுமாக ஆர்வத்தை இழந்துவிடலாம். நான் மிகவும் இளவயதில் இருந்தபோது எனக்கு இது நிகழ்ந்தது. நான் எப்போதும் எதையாவது உற்றுப்பார்த்தவாறு அது என்னவென்பதை பார்க்க விரும்பினேன்.
நிர்வாண உண்மை
மக்கள், எப்போதுமே ஏதோ ஒரு அவசர வேலையாக அங்குமிங்கும் சென்றுகொண்டே இருப்பதை பார்க்கவே எனக்கு ஏதோ மர்மமாகவே தெரிந்தது. எப்படி ஒவ்வொருவரும் எங்கேயோ சென்றுகொண்டே இருக்கிறார்கள் என்பதைப் பற்றி பின்னாளில் நாம் ஒரு கவிதை எழுதினோம் - அவர்கள் எங்கு செல்கின்றனர் என்பது உண்மையிலேயே அவர்களுக்குத் தெரியுமா?; எனக்கு எதைப் பற்றியும் எதுவுமே தெரியவில்லை; நான் எங்கே சென்று கொண்டிருந்தேன் என்பதைப் பற்றியும் எனக்கு எந்த துப்பும் துலங்கவில்லை. வீட்டில், “பள்ளிக்கூடம் செல்" என்றார்கள். நான் ஏன் பள்ளிக்குச் செல்லவேண்டும் என்பது எனக்குத் தெரியவில்லை. நான் சற்று தாமதமாக வீட்டுக்கு வந்தால், “நீ ஏன் விரைவாக வீடு திரும்பவில்லை?” என்று கேட்டனர். நான் ஏன் விரைவாக வீடு திரும்பவேண்டும் என்பதும் எனக்குத் தெரியவில்லை. நான் ஏன் அதையெல்லாம் செய்யவேண்டும்?
Subscribe
அதுவரையிலும் ஒரு விஷயத்தைக்கூட என்னால் புரிந்துகொள்ள முடியாமல் இருந்ததால், நான் ஒவ்வொன்றுக்கும் அளவில்லா கவனம் செலுத்தினேன். இந்த விதமாக, நான் எத்தனையோ பல விஷயங்களைக் கண்டேன். அந்த வயதில் மிகப் பெரிய விஷயமாக இருந்திருக்கவேண்டிய பலவும் எனக்கு ஒரு பொருட்டாகவே இல்லை. நான் ஒரு குறிப்பிட்ட விதமாக அமர்ந்தால், என் முன் நடமாடிக்கொண்டு இருக்கும் அனைவருமே முற்றிலும் நிர்வாணமாக தெரிவது என்பது சாதாரணமாக நிகழ்ந்தது - என் தாய், தந்தை மற்றும் என் சகோதரிகளும் உட்பட. இது குறித்து நான் கிளர்ச்சியடையவோ அல்லது அருவெறுப்படையவோ இல்லை. எல்லாவற்றையும் எது எப்படி இருக்கிறதோ அப்படியே நான் பார்த்தேன். பல வருடங்களுக்குப் பிறகு, எனது நண்பர்களின் மனதில் ஹார்மோன்கள் புகுந்ததால், அவர்கள் ஒருவிதமான அதீத உணர்வுக்குத் தள்ளப்பட்டனர். அந்த பதினான்கு-பதினைந்து வயது பையன்கள் எதையாவது சிறிது பார்த்தாலும் ஆரவாரம் கொண்டனர். இது எதுவும் என்னை சிறிதும் அசைக்கவில்லை - என் குழந்தைப் பருவம் முழுவதும் நான் நிர்வாணமான ஆண், பெண்களைப் பார்த்திருந்தேன்.
உள்நிலையில் விடுதலை
உங்களுக்குள் என்ன நிகழ்கிறது என்பதை வெளிவிஷயங்கள் முடிவு செய்ய முடியாதபோது உங்களுக்கு கிடைக்கும் சுதந்திரம் அளவிடமுடியாதது. உங்களுக்குள் முக்கியத்துவம் பெறும் விஷயங்களில் நீங்கள் முதலீடு செய்யவேண்டிய சக்தியின் அளவு பிரம்மாண்டமானது. வெளிவிஷயங்கள் உங்களுக்கு முக்கியமானதாக இருப்பதில்லை, ஏனென்றால் அதை உள்ளபடியே நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். ஒரு ஆண் அல்லது ஒரு பெண்ணை எல்லா உறுப்புகளுடனும், குடல்கள், கல்லீரல், மற்றும் பலவாறாகவும் நீங்கள் பார்ப்பதாக கற்பனை செய்து பாருங்கள். மருத்துவம் பயின்ற பலரும், உடற்கூறியல் மற்றும் கூறாய்வு செய்த பிறகு, திருமணம் செய்ய தங்களுக்கு விருப்பமின்றி போனதைப்பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டுள்ளனர்; எந்த உடலுடனும் அவர்களுக்கு எதுவும் செய்ய தேவையற்றுப்போனது, ஏனென்றால் உள்ளே என்ன இருக்கிறது என்பதை அவர்கள் பார்த்துவிட்டனர். குறைந்தபட்சம், ஆரம்பத்தில் அவர்கள் அப்படித்தான் உணர்ந்தனர்; ஒருவேளை, பிற்பாடு உடலின் தேவைகளுக்கு அவர்கள் வீழ்ந்திருக்கக்கூடும்.
புலனறிவின் சாதாரண வரையறைகளைக் கடந்து, எல்லாவற்றையும் அது எப்படி இருக்கிறதோ அப்படியே நீங்கள் பார்க்கத் துவங்கினால், உணர்ச்சி நிலையின் இனிமையை கொண்டு இந்த தெளிவை சமன்படுத்தவில்லை என்றால், அதற்குப் பிறகு உலகத்தோடு ஈடுபாடு கொள்ள நீங்கள் விரும்பமாட்டீர்கள். எல்லாவற்றையும் நீங்கள் வெறுமனே பார்க்கிறீர்கள் என்பதுடன் உங்களுக்கு எதுவும் பொருட்டாக இருப்பதில்லை. ஆனால் வைராக்யா என்றால் ஈடுபாடின்மை என்று அர்த்தப்படுத்துவது தவறானதொரு புரிதலாக இருக்கும். உணர்ச்சியின் இனிமை இல்லாமல், விஷயங்களை உள்ளபடியே நீங்கள் பார்க்கத் துவங்கும்போது ஈடுபாடின்மை நிகழ்கிறது. அப்போது நீங்கள் அருவெறுப்பாகவோ, ஏமாற்றமாகவோ, அல்லது ஈடுபாடில்லாமலோ ஆகிறீர்கள் - நீங்கள் தனிமைப்படுகிறீர்கள்..
தெளிவுக்கு ஏன் இனிமை தேவைப்படுகிறது?
ஒருவித பரவச உணர்வு இல்லாமல், கூர்மையான காரண அறிவு வந்துவிட்டால் உங்களால் உங்களை வாழ்வில் ஈடுபடுத்திக்கொள்ள முடியாது. நீங்கள் ஒவ்வொன்றையும் ஊடுருவிப் பார்க்கிறீர்கள். கௌதமர் கூறியதைப் போல, “வாழ்க்கை துன்பமயமானது. முதுமை, நோய் அல்லது மரணம் - இதுதான் முடிவில் உங்களுக்காக காத்திருக்கிறது.” நாமும் மக்களிடம், “உங்களுக்கு நிகழவிருக்கும் ஒரே விஷயம், நீங்கள் கல்லறையில் சென்று முடிந்துவிடுவீர்கள்” என்றே தொடர்ந்து கூறி வருகிறோம். கல்லறையின் கடுமை மக்களை உறுத்தாதவாறு அதை நாம் கூறுகிறோம். நான் கல்லறையைப் பற்றிப் பேசும்போது, மக்கள் சிரிக்கின்றனர்; அவர்கள் குதூகலமாகிவிடுகின்றனர் - அது ஒரு நல்ல அறிகுறி. நீங்கள் செய்வது என்னவாக இருந்தாலும், முடிவில், அவர்கள் உங்களை எரிப்பார்கள் அல்லது புதைப்பார்கள் என்பதை நீங்கள் நிதர்சனமாகக் கண்டால், அது பயங்கரமாகவும், அழுத்தம் ஏற்படுத்துவதாகவும் இருக்கக்கூடும்.
எல்லாவற்றையும் இருக்கிறபடியே பார்ப்பது என்பது, உணர்ச்சியின் இனிமையுடன் கைகோர்த்து வருவது மிகவும் முக்கியமானது. அதனால் “ஈஷா யோகா - உன்னை அறியும் விஞ்ஞானம்” - இதுவே உச்சபட்சம் அல்ல; இதுதான் முதல் படி. நீங்கள் ஆக்ஞாவைத் தொடவேண்டுமென்றால், தெளிவும், உணர்ச்சியின் இனிமையும் சமநிலையில் இருக்கத் தேவைப்படுகிறது. ஈஷா யோக மையத்தின் சின்னமாக, ஒரு முழு வட்டத்திற்குள் இருக்கும் ஒரு முக்கோண உருவம் சித்தரிக்கப்பட்டுள்ளது - இதுதான் ஆக்ஞாவின் சின்னம். நீங்கள் யாரையாவது சந்தித்தால், அவர்களுக்கு முதலில் உங்கள் முகத்தையே காட்டுகிறீர்கள். பொதுவாக, மக்கள் உங்கள் முகத்தைக்கொண்டே உங்களை அடையாளம் காண்கின்றனர். இதனால் எல்லாமே உங்கள் முகத்தில்தான் இருக்கிறது என்பது பொருளல்ல - இந்த வாழ்வை செயல்படுத்தும் உண்மையான விஷயங்கள் உங்களுக்கு உள்ளே இருக்கின்றன.
ஆக்ஞாவும் ஈஷாவும்
ஈஷா யோக மையத்தில்கூட, மக்களுக்கு நாம் முதலாவதாக ஆக்ஞாவையே காட்டுகிறோம். ஏனென்றால், உலகில் அதுதான் அதிகம் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஆக்ஞாவின் மீது சாதனா செய்யும் மக்கள் எப்போதும் மதிக்கப்படுவார்கள். நாம் விஷுத்தியை முன்னிறுத்தினால், அமானுஷ்யமானவர்களாக நாம் முத்திரையிடப்படுவோம். அனாகதாவை நாம் முன்னிலைப்படுத்தினால், நாம் ஏதோ குழப்பத்தில் இருப்பவர்கள் என்று மக்கள் நினைப்பார்கள். ஆனால் ஆக்ஞாவை நாம் முன்னிறுத்தும்போது, மக்கள் அதை சிறந்ததாகவும், உண்மையிலேயே அதுதான் ஆன்மீகம் என்றும் கருதுகின்றனர். முகம் எப்போதுமே ஆக்ஞாதான், ஏனென்றால் ஆக்ஞா என்பது தெளிவு. இந்த உலகத்தில் எனது தெளிவுக்காகவே நான் மதிக்கப்படுகிறேன். நான் யார் என்பதன் மற்ற பல அம்சங்களைப் பற்றி மக்களுக்கு எதுவுமே தெரியாது. தெளிவு முக்கியமில்லை என்று நான் கூறவில்லை, ஆனால் அதுதான் எல்லாமே என்பதும் இல்லை. முழுமையான தெளிவு என்பது, ஆர்வமின்மை, தனித்திருத்தல் மற்றும் வாழ்விலிருந்து விலகுதல் போன்றவற்றை உருவாக்கும்.
எல்லாவற்றையும் நீங்கள் உள்ளபடியே பார்த்தால், உணர்ச்சியின் இனிமை உங்களிடம் இருந்தால்தவிர, இந்த விளையாட்டை ஆடுவதற்கு நீங்கள் விரும்பமாட்டீர்கள்; உங்களுக்குள் நீங்கள் பரவசத்தில் நனைந்து கொண்டிருக்கவேண்டும். நீங்கள் இப்படி இருந்தால், அர்த்தமே இல்லையென்றாலும், நீங்கள் அப்போதும் தொடர்ந்து விளையாடுவீர்கள்.