பெற்றோர் ஏற்பாடு செய்யும் திருமணம் – நல்லதா, கெட்டதா?
நவீன காலத்துடன் பொருந்தாத பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம், வழக்கொழிந்துவிட்ட ஒரு பாரம்பரியமாக இருக்கிறதா, அல்லது நமக்கு இன்றைக்கு நன்மை தரக்கூடிய பழமையான நடைமுறையில் ஏதேனும் விவேகம் இருக்கிறதா? சத்குருவிடமிருந்து அறிந்துகொள்வோம்.
பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம், ஒருவிதமான அடிமைத்தனம் என்கிற கருத்து, அங்கே சுரண்டல் இருக்கிறதா என்பதைப் பொறுத்த விஷயம். எல்லா இடங்களிலும் சுரண்டக்கூடிய மக்கள் இருக்கின்றனர். சில தருணங்களில், உங்களது பெற்றோர்கள்கூட சுரண்டலாம் – அவர்களுக்கே உரிய கௌரவம், செல்வ வளம், அவர்களது முட்டாள்தனங்கள் போன்ற காரணங்களுக்காக அவர்கள் ஏதோ செய்யலாம்.
சமீபத்தில், ஒரு பெற்றோர் அவர்களது மகனுக்கு பெண் தேர்வு செய்வது குறித்து என்னிடம் கேட்டனர். ஒரு பெண் நல்ல கல்வியுடன் மற்றும் அழகுடனும் இருக்க, மற்றொரு பெண் வளம்கொழிக்கும் தந்தையைக் கொண்டிருந்தாள். எந்த பெண்ணைத் தேர்ந்தெடுப்பது என்று அவர்கள் என்னை கேட்டனர். நான் ஒரு எளிமையான கேள்வி கேட்டேன், “நீங்கள் திருமணம் செய்ய விரும்புவது பெண்ணையா அல்லது யாரோ ஒருவரது பணத்தையா?” உங்கள் முன்னுரிமை என்னவாக இருக்கிறது என்பதையே அது சார்ந்திருக்கிறது. திருமணத்தின் மூலம் யாரோ ஒருவரது செல்வம் உங்களுடையதாக இருப்பது முன்னுரிமையாக இருந்தால், உங்களுக்கு முக்கியமானதெல்லாம் அதுதான் என்றால், மிக நன்று. நல்லது, அந்தவிதமான வாழ்க்கையைத்தான் நீங்கள் தேர்வு செய்துள்ளீர்கள்.
பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணம் மற்றும் விவாகரத்து விகிதங்கள்
ஒரு செயலின் வெற்றி, அதன் முடிவில் உள்ளது. பொருளாதாரரீதியாக செழிப்பானவைகளுள் மிக முன்னணியில் நிற்பதும், சுதந்திரமான சமூகமாகவும் இருக்கின்ற ஒரு சிறிய நாடாகிய லக்ஸம்பர்க், எண்பத்தி ஏழு சதவிகித விவாகரத்தை சந்திக்கிறது. ஸ்பெயினில், விவாகரத்து விகிதம் அறுபத்தி ஐந்து சதவிகிதம்; ரஷ்யா ஐம்பத்தி ஒன்றில் இருக்கிறது; அமெரிக்காவில் நாற்பத்தி ஆறு சதவிகிதம்; இந்தியாவில் 1.5 சதவிகிதம். எது சிறப்பாக செயல்படுகிறது என்று நீங்கள் முடிவு செய்யுங்கள்.
விவாகரத்துடன் தொடர்புடைய சமூக எதிர்ப்பின் காரணமாக இங்கு விவாகரத்து விகிதம் குறைவாக இருக்கிறது என்று மக்கள் கூறலாம். ஆனால் அது எப்படி ஏற்பாடு செய்யப்படுகிறது என்பதும் நிச்சயமாக ஒரு முக்கிய அம்சமாக இருக்கிறது.
Subscribe
திருமண ஏற்பாட்டின் அடித்தளமாக பெற்றோர் இருக்கும்போது, அவர்கள் நீண்டகால சூழலைச் சிந்திக்கும் காரணத்தால், வெற்றி விகிதம் சிறிது கூடுதலாக இருக்கிறது. ஒரு பெண் ஆடை உடுத்திய விதம் மட்டும் உங்களுக்கு விருப்பமாக இருந்த நிலையில், இன்றைக்கு அவளை நீங்கள் மணம் முடிக்க விரும்புகிறீர்கள். நல்லது, நாளைக்குக் காலையில், உங்களுக்கு அவளுடன் எதுவும் செய்வதற்கில்லை என்பதை நீங்கள் உணரமுடியும்! நீங்கள் இருபது வயதாக இருக்கும்போது, பல்வேறு நிர்ப்பந்தங்கள் அல்லது அழுத்தம் காரணமாக, ஒரு ஆயுட்காலத்துக்கு நிலைக்காத முடிவுகளை நீங்கள் எடுக்கக்கூடும். ஆனால், சில நேரங்களில் உண்மையிலேயே நீங்கள் யாரோ ஒருவருடன் சிறப்பான உறவில் இருந்து, அது நன்றாக செயல்படலாம் - அது வேறு விஷயம்.
எல்லாமே ஒரு ஏற்பாடுதான். அதைப்பற்றி நீங்கள் எத்தனையோ விஷயங்களை நினைத்துக்கொள்ளலாம், ஆனால் அது உங்கள் உணர்ச்சியினாலோ அல்லது உங்களது பேராசையினாலோ அல்லது வேறொருவராலோ ஏற்பாடு செய்யப்படுகிறது. அது ஒரு ஏற்பாடு, அவ்வளவுதான். பொறுப்பான, அறிவான, உங்கள் நல்வாழ்க்கை குறித்து அதிக அக்கறைகொண்ட, பரந்த அனுபவ வீச்சு உடையவர்களால் அது ஏற்பாடு செய்யப்படுவது சாலச்சிறந்தது. உலகத்திலேயே சிறந்த ஆண்மகன் அல்லது பெண்மணியை உங்களால் கண்டுபிடிக்க முடியாது, ஏனென்றால் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பது நமக்குத் தெரியாது! நமக்கு இருக்கும் எல்லைக்குட்பட்ட தொடர்புகளுடன், நியாயமாகச் சிறந்த ஏதோ ஒன்றை நாம் ஏற்பாடு செய்துகொள்ள முடியும், அவ்வளவுதான்.
ஒரு இளைஞன் அல்லது இளம்பெண் திருமணம் செய்துகொள்ள விரும்பினால், யாரை அவர்கள் மணம் செய்வார்கள்? அவர்களது தொடர்புகள் மிகவும் குறுகியவை. அவர்கள் வாழ்வில் அவர்களுக்கு அறிமுகமான அந்த பத்து நபர்களுக்குள், ஒரு ஆணை அல்லது பெண்ணை மணக்கிறார்கள். மூன்று மாதங்களுக்குள், உண்மையில் அது என்ன என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள். ஆனால் பெரும்பாலான தேசங்களில், ஒரு சட்டம் இருக்கிறது: நீங்கள் தவறு செய்தால், விவாகரத்து செய்துகொள்வதற்கு முன், குறைந்தபட்சம் இரண்டு வருடங்கள் நீங்கள் துன்பப்பட வேண்டும். அது ஒரு சிறைவாசம் போன்றது. நீங்கள் விவாகரத்து செய்துகொள்ள முடியாது என்று பல மதங்கள் முடிவு செய்து வைத்திருக்கின்றன. அது முற்றிலும் தவறானது. ஆனால் அப்படிப்பட்ட மதங்கள் வழக்கத்தில் இருக்கும் இடங்களில், விவாகரத்து விகிதம் மிக அதிகமாக உள்ளது! கடவுளின் கட்டளைகளோ அல்லது சட்டங்களோ மணமானோர் பிரிந்துசெல்வதை நிறுத்த முடியவில்லை.
ஒரு திருமணத்தை, பெற்றோர் ஏற்று நடத்தும்போது, அவர்களது கருத்துக்கள் மிகவும் சிறப்பானதாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் பொதுவாக அவர்கள் மனதில், உங்களது நலன் மீது கவனம் கொண்டுள்ளனர். உங்கள் பெற்றோரின் நியாயங்கள் அல்லது முன்முடிவுகளைத் தாண்டி நீங்கள் முதிர்ச்சியாக இருக்கிறீர்கள் என்றால், அது வேறு விஷயம் – அப்போது நீங்களே உங்களுக்கான முடிவுகளை எடுக்கமுடியும்.
உங்கள் திருமண வாழ்வை பொறுப்புடன் நடத்திச்செல்வது
நான் திருமணம் செய்துகொண்டபோது, என் மனைவியின் முழுப்பெயர் எனக்கு தெரியாது. அவரது தந்தை பெயர் தெரியாது. அவரது சாதி எனக்கு தெரியாது. நான் அவரை மணந்துகொள்ள விரும்புவதை எனது தந்தையிடம் நான் கூறியபோது, அவர் அதிர்ந்தவராக, “என்ன? உனக்கு அவளின் தந்தையார் பெயர் தெரியவில்லை? அவர்கள் யார், அவர்கள் என்னவாக இருக்கிறார்கள் என்பதும் தெரியவில்லை? நீ எப்படி அவளை மணந்துகொள்ள முடியும்?” என்று கேட்டார்.
நான் கூறினேன், “நான் அவளைத்தான் மணந்துகொள்கிறேன். அவளுடன் வருகின்ற மற்ற விஷயங்கள் எதையும் மணந்துகொள்ள நான் திட்டமிடவில்லை. அவள் மட்டும்தான். எனக்கு அது சரியானதுதான்.” அவள் எப்படிப்பட்டவள் என்பதிலும், அவள் என்னிடம் எவ்விதம் இருப்பாள் என்பதிலும் நான் முற்றிலும் தெளிவாக இருந்தேன். அவள் முதல் கணத்திலிருந்தே கட்டுக்கடங்காத அன்பில் இருந்தாள். என் வாழ்வில் ஒருபோதும் நான் யாருடைய அறிவுரையையும் எடுத்துக்கொண்டது கிடையாது என்றாலும், எப்போதும் தானாகவே முன்வந்து அறிவுரை வழங்கும் சிலர் என்னிடம், “உன் வாழ்வில் மிகப்பெரிய தவறு செய்கிறாய். இது ஒரு பெரும் கேடு விளைவிக்கப்போகிறது,” என்றனர். “என்ன நிகழ்ந்தாலும், எந்த விதத்தில் இது நிகழ்ந்தாலும், அதை நாசப்படுத்துவதா அல்லது வெற்றிகரமாக்குவதா என்பது என்னைப் பொறுத்தது,” என்று நான் கூறினேன். இந்த அளவுக்கு நான் அறிந்திருந்தேன்.
ஏனென்றால், நீங்கள் யாரை மணந்துகொள்கிறீர்கள், எப்படி மணந்துகொள்கிறீர்கள், எந்த விதமாக அது ஏற்பாடு செய்யப்பட்டது அல்லது யாரால் அது ஏற்பாடு செய்யப்பட்டது என்பது முக்கியமல்ல. இதில் இருப்பதெல்லாம் எவ்வளவு பொறுப்பாக நீங்கள் வாழ்கிறீர்கள் என்பதுதான். திருமணத்தை நீங்கள் எப்படி ஏற்பாடு செய்கிறீர்கள் என்பது உங்கள் விருப்பத்தைப் பொறுத்தது. அதை நீங்கள் எந்த விதத்தில் செய்தாலும், தயவுசெய்து பொறுப்புடனும், ஆனந்தத்துடனும் அதனை நடத்திச் செல்லுங்கள். உங்கள் உடலளவிலான, மனதளவிலான, உணர்ச்சியளவிலான, சமூக அளவிலான மற்றும் பல்வேறு மற்ற தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக நீங்கள் இணைகிறீர்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்வது அவசியம். “எனது தேவைகளை நிறைவு செய்வதற்காக, நான் உன்னுடன் இருக்கிறேன்,” என்பதை நீங்கள் எப்போதும் நினைவில் வைத்திருந்தால், நிச்சயம் இதை பொறுப்பாக நீங்கள் நடத்திக்கொள்வீர்கள்.
ஆரம்பத்தில் நீங்கள் அதைப்போல் இருந்துவிட்டு, ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு, “அவளுக்கு நான் தேவை” அல்லது “அவனுக்கு நான் தேவை”, என்று நீங்கள் நினைத்தால், அப்போது நீங்கள் வேண்டுமென்றே பண்பற்ற முறையில் செயல்படத் தொடங்குவீர்கள். பிறகு, அசிங்கங்கள் பல்வேறு வழிகளில் ஆரம்பிக்கும்.
இது ஒருமுறை நிகழ்ந்தது. ஒரு இளைஞனும், இளம்பெண்ணும் திருமணத்திற்கு நிச்சயம் செய்யப்பட்டனர். அவளது விரலில் மோதிரம் அணிவிக்கப்பட்டதும், அந்த இளம்பெண் அவனிடம் கூறினாள், “என் மீது சாய்ந்துகொண்டு, உன்னுடைய வலிகள் மற்றும் உன் போராட்டங்களைப் பகிர்ந்துகொள்ளலாம். நீ அனுபவிக்கும் துன்பங்கள் என்னவாக இருந்தாலும், எப்போதும் நீ என்னுடன் அவைகளைப் பகிர்ந்துகொள்ளலாம்.”
இளைஞன் கூறினான், “நல்லது, ஆனால் எனக்கு எந்தப் போராட்டங்களும், வலிகளும் அல்லது பிரச்சனைகளும் இல்லை.”
அவள், “சரிதான், நமக்குத்தான் இன்னமும் திருமணமாகவில்லையே,” என்றாள்.
நீங்கள் வலியும், போராட்டங்களும் மற்றும் பிரச்சனைகளும் நிறைந்தவராக இருந்துகொண்டு, சாய்ந்துகொள்ள யாரோ ஒருவர் தேவை என்று நீங்கள் நினைத்தால், பிரச்சனைதான் ஏற்படும். திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று கூறியவாறு உள்ளனர். ஆனால் நீங்கள் உங்களுக்குள் நரகத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள். வேறொருவர் வந்து உங்கள் பிரச்சனையைத் தீர்க்கப்போகிறார் என்று நீங்கள் நினைத்தால், அப்போது உங்களுக்குப் பிரச்சனையும், நிச்சயமாக மற்றொரு நபருக்கு துரதிருஷ்டவசமான விளைவுகளும் ஏற்படும். உங்களையே நீங்கள் ஆனந்தமயமான, அற்புதமான ஒரு மனிதராக உருவாக்கிக்கொண்டால், அதன்பிறகு உங்கள் வேலை, வீடு மற்றும் திருமணம் எல்லாமே அற்புதமாக இருப்பதை நீங்கள் பார்ப்பீர்கள். ஏனென்றால் நீங்கள் அற்புதமானவர்!
ஆசிரியர் குறிப்பு: உங்களையே ஒரு அற்புதமான மனிதராக உருவாக்கிக்கொள்ள விரும்புகிறீர்களா? ஆனால், அது எப்படி என்று உங்களுக்குத் தெரியவில்லையா? ஈஷா யோகா ஆன்லைன் வகுப்பு, கோவிட் வீரர்களுக்கு இலவசமாகவும், மற்ற அனைவருக்கும் 50% சலுகையிலும் வழங்கப்படுகிறது.