பொருளடக்கம்

1. படைப்பாற்றல் என்றால் என்ன?
2. படைப்பு செயல்முறை – ஒரு ஞானியின் நுண்ணறிவு
3. படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ள முடியுமா அல்லது அது ஒரு உள்ளார்ந்த பண்பாக இருக்கிறதா?
4. வருத்தம், படைப்புத்திறனை அதிகரிக்க முடியுமா?
5. சத்குருவின் படைப்பாற்றலுக்குப் பின்னால் இருக்கும் தூண்டுகோல் என்ன?
6. கலை குறித்து சத்குருவின் கண்ணோட்டம்

படைப்பாற்றல் என்றால் என்ன?

சத்குரு:

ஒரு மனிதர் படைப்புத்திறனுடன் இருக்கமுடியும் என்பதை நான் நம்புவதில்லை. நம்மைச் சுற்றியிருக்கும் படைப்பை ஆழ்ந்த உள்ளுணர்வுடன் நாம் புரிந்துணர்ந்தால், அதைப் பல்வேறு வழிகளில், வரிசைகள் மற்றும் கோர்வைகளில் நாம் மறுஉருவாக்கம் செய்து சமூகத்தில் படைப்பாளியாகத் தோன்றச் செய்யமுடியும். ஆனால் உண்மையில், நாம் நிஜமான படைப்புத்திறன் கொண்டவர்கள் இல்லை. படைக்க முடிந்த அனைத்தும் ஏற்கனவே படைப்பில் செய்யப்பட்டுவிட்டது. அதிகபட்சமாக நாம் ஒரு புத்திசாலியான கைவினையாளராக இருக்கிறோம்.

நீங்கள், உங்களது ஞாபகம், கவனம், மற்றும் கற்பனையை பிரித்துப்பார்க்கும் தகுதியுடையவர்களாக இருக்கவேண்டும். இந்த அடிப்படையான தன்மையை மக்களிடம் ஏற்படுத்துவதற்காகத்தான் நான் எப்போதும் முயற்சி மேற்கொண்டுவருகிறேன்.

ஒரு விஷயத்தை உண்மையிலேயே படைக்கக்கூடிய, “படைப்புத்திறன்” என்ற சொல்லை நீங்கள் வரையறுத்தால் – நீங்கள் ஒரு திரைப்படம் உருவாக்கினால், எதையேனும் வர்ணம் தீட்டினால், ஒரு கட்டிடம் எழுப்பினால் அல்லது வேறு எந்த ஒரு செயலாக இருந்தாலும் – உண்மையில் அது எதுவும் படைப்புத்திறன் அல்ல – அது ஒரு புத்திசாலித்தனமான நகல் உருவாக்கம்தான். வாழ்வின் பல்வேறு அம்சங்களுக்கு நாம் கூர்கவனம் செலுத்திவரும் காரணத்தால், மற்றவர்களுக்கு சாத்தியப்படாத வழிகளில் நம்மால் அதற்கொரு நகல் உருவாக்கமுடிகிறது. உங்களுக்கு “நகல்” என்ற சொல் விருப்பமில்லை என்றால், நீங்கள் “பிரதிபலிப்பு” என்றும் கூறமுடியும்.

படைப்பு செயல்முறை – ஒரு ஞானியின் நுண்ணறிவு

நீங்கள் மனிதர்களைப் பார்த்தால் – யாருக்கும் கொம்புகளோ, கூடுதலாக ஒரு கையோ அல்லது மூன்று கண்களோ இல்லை – அனைத்துமே ஒரேவிதமாக உள்ளது, ஆனால் அனைத்தும் வித்தியாசமானது. இதுதான் படைப்புத்திறன். மனிதர்களின் குணாதிசயங்களை எளிமையாக நீங்கள் விவரிக்க வேண்டுமென்றால் – அனைவருக்கும் இரண்டு கால்கள், இரண்டு கைகள், ஒரு மூக்கு, இரண்டு கண்கள், மற்றும் எல்லா உறுப்புகளும் உள்ளன. ஆனால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்திலும் எவ்வளவு தனித்துவமான நிகழ்வாக இருக்கிறார்கள் என்பதை மட்டும் பாருங்கள். இதுதான் இயற்கையின் படைப்பு.

நீங்கள் உருவாக்கும் எந்த விஷயமும், அது ஒரு அணிகலனாக அல்லது ஆடையாக இருக்கலாம், ஒரு கட்டிடமாக அல்லது வேறெதுவாகவும் இருக்கலாம், அது எந்த வடிவத்தில் மற்றும் நிறத்தில் இருந்தாலும், அது ஏற்கனவே இயற்கையில் எங்கோ ஒரு இடத்தில் இருந்துகொண்டிருக்கிறது. நாம் ஒன்றை உருவாக்குகிறோம் என்று எந்த மனிதரும் எப்போதும் என்ணக்கூடாது. ஏதோ ஒருவிதத்தில், அறிந்தோ, அறியாமலோ, நாம் உள்வாங்கியுள்ள பதிவுகளிலிருந்து ஒரு சில விஷயங்களை நாம் மறுஉருவாக்கம் செய்கிறோம். யாராலும் இங்கே உண்மையிலேயே புதிதாக எதையும் உருவாக்கமுடியாது.

நீங்கள் பல பதிவுகளை உள்வாங்கியிருக்கிறீர்கள், அவைகள் அனைத்தும் விழிப்புணர்வாக உள்வாங்கப்படவில்லை. உங்கள் மனதில் இருக்கும் உருவங்கள், வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் சில விழிப்புணர்வில்லாமல் வெளிப்பாடு காணலாம். இது தொடர்பாக, ஒன்றைக் கூற விரும்புகிறேன். இந்த ஆசிரமம் அழகாக உள்ளது என்று யாரேனும் என்னிடம் கூறும்போது – இங்குள்ள மலைகளை நான் உருவாக்கவில்லை, ஏனெனில் அதுதான் ஆசிரமத்தில் மிக அழகான பகுதி. பெரும்பாலான மக்களும் அதைக் கவனிக்காமல் இருக்கலாம் என்றாலும், மலைகள்தான் அழகான ஒரு பின்புலம் அமைக்கின்றன.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஒருமுறை இது நிகழ்ந்தது, சங்கரன்பிள்ளை ஈஷா யோக மையத்துக்கு வந்திருந்தபோது, அழகான வியூ கொண்ட ஒரு அறையைக் கேட்டார். நாமும் சித்ரா பிளாக்கில் ஒரு பொருத்தமான அறையைக் கொடுத்தோம். பிறகு அவர் மீண்டும் வலியுறுத்தியவராக புகார் அளித்தார், “நான் வ்யூ உள்ள ஒரு அறையைக் கேட்டேன்.”

நாங்கள் கூறினோம், “இதுதான் சிறந்த வ்யூ உள்ள அறை.”

அவர் அங்கலாய்த்தார், “அடக்கடவுளே, மலைகள் மறைக்கின்றனவே.”

நிறைய மனிதர்களுக்கு இதுதான் நிகழ்ந்துள்ளது. அவர்கள் விஷயங்களை உள்ளபடியே பார்ப்பதில்லை. மாறாக, அவர்களுக்குப் பலவாறான கருத்துக்கள் இருக்கின்றன. நீங்கள் அழகான ஒன்றை உருவாக்க வேண்டுமென்றால், முதல் விஷயம் உங்களுக்கு எந்தக் கருத்தும் இருக்கக்கூடாது. ஒரு கருத்துக்கு, நிதர்சனத்துடன் எதுவும் செய்வதற்கில்லை. ஒரு கருத்துடன் இருப்பதற்குப் பதில், நீங்கள் புரிந்துணர்வுடன், எல்லா நேரமும் வாழ்வை கிரகித்துக்கொண்டிருந்தால், உங்களுக்கு ஏதோ ஒன்றை உருவாக்கவேண்டும் என்றாலோ அல்லது ஏதோ ஒன்றை நிகழ்த்தவேண்டும் என்றாலோ, அவை அனைத்தும் உங்களுடன் இருக்கும் – அது வடிவங்களாக, உருவங்களாக, வண்ணங்களாக, ஒலிகளாக, அல்லது வேறு எதுவாகவும் இருக்கலாம். நீங்கள் இசையை, ஆடையை அல்லது ஒரு கட்டிடத்தை உருவாக்க வேண்டுமென்றாலும், நீங்கள் போதுமான கவனம் செலுத்தினால், அவை அனைத்தும் அங்கே இருக்கும்.

படைப்பாற்றலை வளர்த்துக்கொள்ள முடியுமா அல்லது அது ஒரு உள்ளார்ந்த பண்பாக இருக்கிறதா?

கேள்வி: சத்குரு, படைப்புத்திறன் பிறப்பிலேயே இருப்பதா அல்லது அதை வளர்த்தெடுக்க முடியுமா?

சத்குரு: நாம் படைப்புத்திறன் என்று பார்ப்பதெல்லாமே, கூர்மையான கவனத்திலிருந்து வருகிறது. சில பேர் வார்த்தைகள் மற்றும் அர்த்தங்களுக்கு அதிக கவனம் அளிக்கின்றனர், அதனால் அதைச் சார்ந்த சில விஷயங்களை பிரதிபலிக்கின்றனர். சில பேர் உருவங்களுக்கும், வண்ணங்களுக்கும் அதிக கவனம் அளிக்கின்றனர்; அவர்கள் வேறொரு வழியில் வெளிப்பாடு காண்பார்கள். சிலர் ஒலிகளுக்கு அதிக கவனம் அளிக்கின்றனர்; அவர்கள் மிக எளிதாக இசையை உருவாக்கமுடிகிறது. உங்கள் கவனம் எவ்வளவு கூர்மையாகவும், ஆழமாகவும் உள்ளதோ, அது உங்களிடமிருந்து ஏதாவது ஒரு வழியில் பிரதிபலிக்கிறது.

விலங்குகளுக்கு அவைகளுக்கே உரிய போராட்டங்கள் உண்டு, ஆனால் அவைகள் தமது ஞாபகத்தினால் துன்பப்படுவதில்லை; அவைகள் வாழ்க்கையினால் துன்பப்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில் மனிதர்கள் ஞாபகத்தினால்தான் துன்பப்படுகிறார்கள்.

எந்த நோக்கமும் இல்லாமல் கவனம் செலுத்தும் மக்களை உருவாக்குவதுதான் எனது முயற்சியின் சாராம்சம். இந்த ஒரு விஷயத்தை மக்களால் செய்யமுடிந்தால், பன்முனைப்பரிமாண படைப்புத்திறன் மிக அதிகமாக சாத்தியப்படுகிறது. இதற்கு பயிற்சி செய்யவேண்டியதில்லை. மனிதர்களிடம் காணப்படாதது, கூர்கவனம்தான்.

மனித கவனத்தை விலக்கிவைப்பதே அவர்களது பெருமூளைச் செயல்பாடுதான். அவர்களது ஞாபகத்தையும், அவர்களது கவனத்தையும் தனித்தனியாக எப்படிக் கையாள்வது என்று மக்களுக்குத் தெரியவில்லை. அவர்களுடைய கவனத்துக்குள், அவர்களது ஞாபகம் எப்போதும் வெள்ளமாகப் பாய்ந்து, எல்லா நேரமும் கவனத்தை மூடிமறைக்கிறது. ஞாபகத்தின் இந்த மறைப்பை மக்கள் எண்ணம் அல்லது உணர்ச்சி என்று அழைக்கக்கூடும், ஆனால் அடிப்படையில் அது ஒருவரது கவனத்தில் குறுக்கிடும் ஞாபகக்குவியலாகவே இருக்கிறது. இல்லையென்றால், கவனமாக இருப்பது என்பது உங்களுக்கு மிக இயல்பானது. நீங்கள் விழித்திருக்கும்போது, கவனத்துடன் இருக்கிறீர்கள், இதைத்தவிர, உங்களால் வேறு எப்படி இருக்கமுடியும்? ஒவ்வொரு அம்சத்திற்குள்ளும் ஞாபகம் ஊடுறுவுவதன் காரணமாகத்தான், கவனம் இல்லாமல் போகிறது.

நீங்கள், உங்களது ஞாபகம், கவனம், மற்றும் கற்பனையை பிரித்துப்பார்க்கும் தகுதியுடையவர்களாக இருக்கவேண்டும். இந்த அடிப்படையான தன்மையை மக்களிடம் ஏற்படுத்துவதற்காகத்தான் நான் எப்போதும் முயற்சி மேற்கொண்டுவருகிறேன். கற்பனை, ஒரு பிரச்சனையல்ல, ஏனென்றால் கற்பனை என்பது பல வித்தியாசமான வழிகளில் வெளிக்கிளம்புகின்ற ஞாபகமாக உள்ளது. எல்லா விலங்குகளுக்கும் மிகக் கூர்மையான கவனம் உண்டு, ஆனால் அவைகளுக்கு நம்மைப்போல் தெளிவான ஞாபகத்திறன் இல்லை. ஆனால் இந்த ஞாபகத்தை ஒரு அற்புதமான திறனாகப் பயன்படுத்துவதற்குப் பதில், பெரும்பாலான மக்கள் தங்களுக்கே துன்பம் ஏற்படுத்திக்கொள்வதற்காக இதைப் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலான நேரங்களில் மக்கள் பத்து வருடங்களுக்கு முன்னால் நிகழ்ந்ததைக் குறித்து துன்பம் அனுபவிப்பதுடன், நாளைக்கு மறுநாள் என்ன நிகழக்கூடும் என்றும் அவர்கள் துன்பம் அனுபவிக்கலாம்.

விலங்குகளுக்கு அவைகளுக்கே உரிய போராட்டங்கள் உண்டு, ஆனால் அவைகள் தமது ஞாபகத்தினால் துன்பப்படுவதில்லை; அவைகள் வாழ்க்கையினால் துன்பப்படுகின்றன. பெரும்பாலான நேரங்களில் மனிதர்கள் ஞாபகத்தினால்தான் துன்பப்படுகிறார்கள்.

வருத்தம், படைப்புத்திறனை அதிகரிக்க முடியுமா?

கேள்வி: படைப்பாக்கக் கருத்து எங்கிருந்து பிறக்கிறது? உள்ளே இருக்கும் ஒருவிதமான பரபரப்பு அல்லது ஒருவித பதற்றத்தின் விளைவாக அது பிறக்கிறதா? இல்லையென்றால் நான் ஏன் என்னையே வெளிப்படுத்த வேண்டும்? படைப்பாக்கச் செயல், கருத்துக்கள், கவிதை, இசை போன்றவை குழப்பம் அல்லது பதற்றத்திலிருந்து வெளிப்படுவது முக்கியமா?

சத்குரு: பெரும்பாலான மனிதர்களிடத்தில் இருக்கும் பிரச்சனை என்னவென்றால், அவர்களை குண்டூசியினால் குத்தினால் தவிர, பெரும்பாலான நேரங்களில் அவர்கள் பாதி உயிரோட்டத்துடனே இருப்பார்கள். மந்தமாக இருப்பதை மக்கள் ஒரு தேர்வாக வைத்திருக்கின்றனர். செயலற்ற மந்தத்தினால், எதுவும் நிகழாமல் இருக்கலாம். அந்த நிலையிலிருக்கும் மக்கள், ஒரு போர் போன்ற அச்சுறுத்தலின்போது, அல்லது ஒரு பெருந்தொற்று, அல்லது அவர்களது வாழ்வில் ஏதாவது துயரம் நிகழ்ந்தால் மட்டுமே, அவர்கள் வாழ்க்கை குறித்த கவனம் கொள்வார்கள். அது துரதிருஷ்டவசமான வாழ்க்கைமுறை. உங்கள் வாழ்வின் ஒவ்வொரு கணமும் இந்த கவனம் உங்களுக்கு இருக்கவேண்டும். ஏதோ ஒரு சூழ்நிலையால் தூண்டப்படுவதாக இல்லாமல், ஈடுபாட்டின் காரணமாக கவனம் செலுத்தவேண்டும்.

நாம் வாழ்க்கையில் கவனம் செலுத்தும் அளவுக்குத்தான் அதனை அறிந்துகொள்கிறோம். உங்களது கவனத்தின் ஆழம் என்னவாக உள்ளதோ, அந்த அளவுக்கு மட்டுமே நீங்கள் வாழ்க்கையை உணர்கிறீர்கள். உங்களது கவனம் மிகவும் ஆழமானது என்றால், உங்கள் வாழ்வின் அனுபவம் மிகவும் ஆழமாக இருக்கிறது. வாழ்க்கையின் உங்கள் அனுபவம் மிகவும் ஆழமாக இருக்கும்போது, நீங்கள் செய்யும் எளிமையான செயலிலேயே அது வெளிப்படக்கூடும், கவிதை, இசை அல்லது வேறு எந்த செயலாக இருந்தாலும் அதில் வெளிப்பாடு காணலாம்.

நீங்கள் எந்தவிதமான வெளிப்பாடு காண்பீர்கள் என்பது, உங்களுக்கு எந்தவிதமான கவனம் உள்ளது என்பதைச் சார்ந்திருக்கிறது. உங்களது கவனம் சாதாரணமாக எல்லாவற்றுக்கும் இருக்கிறதா? அது ஒரு ஒளி விளக்கு போன்றதா – அதை நீங்கள் முடுக்கினால், ஒளி விளக்கின் வெளிச்சம் எல்லாவற்றின் மீதும் விழுகிறது – அல்லது ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் மட்டும் நீங்கள் கவனம் செலுத்துகிறீர்களா? பெரும்பாலான மக்களுக்கும், அவர்களுக்கு ஆர்வமானதாக இருக்கும் குறிப்பிட்ட விஷயத்திற்கு மட்டும்தான் கவனம் செலுத்தமுடிகிறது. உங்கள் கவனத்தைப் பெறக்கூடிய தகுதியுள்ள விஷயம் என்ன மற்றும் தகுதியில்லாதது என்ன என்று பாகுபடுத்திப் பார்ப்பது – இது தவறான முறையில் வாழ்க்கையைப் பார்ப்பதாகிறது. படைப்பின் மூலம், ஒரு மனிதரைப் படைப்பதற்கு செலுத்திய கவனத்தைக் காட்டிலும், ஒரு எறும்பைப் படைப்பதற்கு செலுத்திய கவனம் எந்தவிதத்திலும் குறைந்ததல்ல. இதுதான் படைப்பின் இயல்பு எனும்போது, கவனம் செலுத்தத் தகுதியானது எது மற்றும் தகுதியில்லாதது எது என்று தீர்மானிப்பதற்கு நீங்கள் யார்?

சத்குருவின் படைப்பாற்றலுக்குப் பின்னால் இருக்கும் தூண்டுகோல் என்ன?

கேள்வி: நீங்கள் கவிதை எழுதும்போதோ அல்லது ஓவியம் தீட்டும்போதோ, உங்களுக்கு எந்தவிதமான மனநிலை நிலவுகிறது?

சத்குரு: இது உங்களுக்கு விநோதமாக இருக்கலாம், ஆனால் நான் கவிதை எழுதும்போது, அதை நான் இரண்டாவதுமுறைகூட வாசிப்பது கிடையாது. நான் ஒரு குறிப்பிட்ட மையக்கருத்தை யோசனை செய்வதில்லை. ஏதோ ஒரு வழியில், நான் கவிதையைக் கசியவிடுகிறேன். அதே விஷயம் ஒரு ஓவியமாக, ஏதோ ஒரு வடிவத்தில் உருவாகலாம். நான் பேசினாலும், வண்டி ஓட்டினாலும், கற்றுக்கொடுத்தாலும், எழுதினாலும், அல்லது ஓவியம் தீட்டினாலும், என்னைப்பொறுத்தவரை அது ஒரே விஷயம்தான். வெளிப்பாடு காண்பது என்ற வார்த்தையே இங்கு எழவில்லை, ஏனென்றால் நீங்கள் வெளிப்படுத்த விரும்பினால், உங்களுக்கு ஏதோ ஒரு எண்ணம், கருத்து, தத்துவம் அல்லது கருத்துக்கொள்கை இருக்கவேண்டும். என்னைப் பொறுத்தவரை, அது ஒரு வெளிப்பாடு என்பதைவிட, அதிகமாக வடிகாலாகவே உள்ளது. எப்போதும் நான் விருப்பத்துடன் உள்ளேன், ஆனால் சூழ்நிலை இசைவாக இருந்தால், நான் ஒரு பெரும்பொழிவாக மாறுவேன், இல்லையென்றால் நான் கசிவேன்.

கலை குறித்து சத்குருவின் கண்ணோட்டம்

கேள்வி: சத்குரு, பிரபலமான அல்லது பெருவழக்குக்கலை மற்றும் நுண்கலைக்கு இடையில் நீங்கள் வேறுபாடு காண்கிறீர்களா? கலைக்கு படிநிலை இருப்பதாக நீங்கள் எண்ணுகிறீர்களா?

சத்குரு: இல்லை, ஒருபோதும் கிடையாது. அப்படியே வேறுபடுத்த வேண்டும் என்றாலும், விரக்தியின் ஆழமான நிலைகளிலிருந்து எழும் கலைக்கும், ஆனந்தத்திலிருந்து எழும் கலைக்கும் வேண்டுமானால் நான் வேறுபடுத்துவேன். துன்பம் மற்றும் விரக்தியின் ஆழமான நிலைகளிலிருந்து எழுந்த இந்தக் கலையானது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் ஐரோப்பிய கலையின் பாணியாக மாறியது. இப்போது ஒட்டுமொத்த உலகமும் அதைப் பிரதியெடுக்க முயற்சிக்கிறது. ஆனால் இது மிகவும் எதிர்மறையான விஷயம், ஏனென்றால் அப்படிப்பட்டவைகள் எப்போதும் உங்கள் வசிப்பிடத்தின் சுவர்களில் எதிரொலித்தால், மெல்லமெல்ல அது உங்கள் மீது ஒரு தாக்கத்தை உண்டாக்கும். அது உங்கள் மீது தாக்கம் ஏற்படுத்தமுடியாது என்றால், அதை ஒரு கலை என்று அழைக்கமுடியாது. கலை என்பது உங்கள் மீது தாக்கம் ஏற்படுத்தும் திறன் உடையது – காட்சியளவில் மட்டுமல்லாமல், பல வழிகளிலும் ஏற்படுத்தும்.

துரதிருஷ்டவசமாக, உலகத்தில் மதங்கள் துன்பத்தை அதிகம் துதிபாடியுள்ளன. யோகக் கலாச்சாரத்தில், நாம் ஆனந்தம், பரவசம், பேரானந்தம் இவற்றை எப்போதும் உயரிய இடத்தில் மதித்து வந்துள்ளோம். துன்பம் மதிப்பு வாய்ந்ததாக கருதப்படவில்லை, ஏனெனில் துன்பத்தை நாம் எப்போதும் சுய உருவாக்கமாகவே பார்த்தோம், ஆனால் ஆனந்தம் என்பது சுய உருவாக்கம் அல்ல. நீங்கள் உயிருடன் தொடர்பில் இருக்கும்போது, இயல்பாகவே நீங்கள் ஆனந்தமாக இருக்கிறீர்கள்; உயிருடன் தொடர்பில் இல்லாமல், ஒரு மனரீதியான குளறுபடியாக நீங்கள் இருக்கும்போது, உங்களுக்கு துன்பமும், விரக்தியும் ஏற்படுகிறது. ஆகவே நான் கலையை இந்த இரண்டு வழிகளில் வேறுபடுத்த விரும்புவேன் – விரக்தி மற்றும் துன்பத்தின் ஆழ்நிலைகளில் இருந்து எழும் கலை, மற்றும் வாழ்வின் ஆனந்தமான வெளிப்பாட்டில் இருந்து எழும் கலை.

குறிப்பு:

கவிஞர், எழுத்தாளர், பாடலாசிரியர், மற்றும் கொண்டாடப்படும் திரைத்துறை எழுத்தாளர் ப்ரஸூன் ஜோஷி மற்றும் சத்குருவுக்கு இடையில் ஆங்கில மொழியில் நிகழ்ந்த படைப்புத்திறன் குறித்த முழு உரையாடலைக் கண்டுகளியுங்கள்.