குறட்டை விடுபவர்களா நீங்கள் ? - உங்களுக்காக 5 டிப்ஸ்
உங்களால் குறட்டைவிடுவதை நிறுத்த முடியவில்லை என்றாலோ அல்லது உங்களது நாசித்துவாரங்கள் எப்போதும் அடைத்துக்கொண்டாலோ, சத்குரு வழங்கும் இந்தக் குறிப்புகள் நீங்கள் தடையின்றி சுவாசிக்கவும், நல்ல உறக்கத்தை அனுபவிக்கவும் உதவி செய்யும்.
#1 நீங்கள் உறங்கும் நிலையை கவனத்தில் கொள்ளவும்
சத்குரு: நீங்கள் படுத்திருக்கும் நிலையை கவனிக்கவேண்டும். குறட்டைவிடுபவர்கள் மல்லாந்து படுத்து உறங்கும் பழக்கம் கொண்டிருக்கின்றனர். நீங்கள் ஒருக்களித்துப் படுத்து உறங்கினால், குறட்டை நின்றுவிடக்கூடும். உங்கள் வயிற்றைக் குறைப்பதற்கான பயிற்சிகளை நீங்கள் செய்தாலும்கூட, குறட்டை நின்றுவிட முடியும்.
#2 உறங்கச் செல்வதற்கு முன்பு சிறிதளவு தேன் சாப்பிடுங்கள்
நீங்கள் உறங்குவதற்குச் சற்று முன்பாக, சில தேன் துளிகளை உங்கள் வாயிலிட்ட பிறகு உறங்கினால், குறட்டை வராமலிருக்கக்கூடும்.
#3 அடைபட்ட நாசித்துவாரங்களைச் சரிசெய்வதற்கு நெய் பயன்படுத்துங்கள்
நீங்கள் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு, மூக்கைச் சிந்திவிட்டு முடிந்த அளவுக்கு அடைப்பை நீக்கிவிடுவதால் குறைந்தபட்சம் பின்னிரவில் குறட்டை ஏற்படுகிறது. இல்லையென்றால், கடினமான அடைப்பாக இருந்தால், நீங்கள் நெய் பயன்படுத்த முடியும். வெண்ணெய்யை ஒரு அளவுக்கு மேல் சூடுபடுத்தினால், அது குளிர்ந்த பிறகு மறுபடியும் வெண்ணெய் ஆகாது- அது நெய் அல்லது சுத்தீகரிக்கப்பட்ட வெண்ணெயாக மாறும்.
Subscribe
இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு, மிதமாகச் சூடேற்றிய நெய்யை மூக்கில் சொட்டு மருந்துபோல் பயன்படுத்தினால், அது உங்கள் மீது ஒருவிதமான தாக்கத்தை ஏற்படுத்துவதுடன், சுவாசப்பாதையை வழவழப்பாக்குகிறது. அதனால் காலையில் சளித்திரவத்தை மிக எளிதாக உங்களால் வெளியேற்ற முடியும். பிறகு நாசித்துவாரங்கள் உங்களுக்கு அடைபடாமல் இருக்கும்.
இல்லையென்றால் ஒரு எளிமையான விஷயம், இன்றைக்கு மருந்துக்கடைகளில் சுத்தமான சலைன் நீர் நிரம்பிய ஸ்ப்ரே கிடைக்கிறது. அதைகொண்டு நீங்கள் ஸ்ப்ரே செய்துகொள்ள முடியும். இதுவும்கூட சுவாசப்பாதையை ஓரளவுக்குத் தெளிவாக்கும்.
உங்களுடைய நாசித்துவாரங்கள் எப்போதும் அடைபட்டிருந்தால், அது வெறும் சுவாசம் குறித்தது மட்டுமல்ல – உங்களது ஒட்டுமொத்த அமைப்பையும் பல்வேறு வழிகளில் அது பாதிக்கிறது. ஆகவே எப்போதும் சுவாசத்தின் பாதை தடையில்லாமல் இருப்பது முக்கியமானது. உங்களுடைய சைனஸ் எவ்வளவு தெளிவாக இருக்கிறது மற்றும் திரவங்கள் – குறிப்பாகத் தலைப் பகுதியில் – எந்த அளவுக்கு நன்முறையில் சமனிலையில் இருக்கின்றன என்பது உங்களது மூளையின் செயல்பாடு, வாழ்வை நன்முறையில் உணர்வது, சமநிலையான உணர்வு, உங்களது காரண அறிவின் கூர்மை மற்றும் ஐம்புலன்களின் கூர் உணர்வு போன்ற பல்வேறு விஷயங்களை முடிவு செய்கிறது.
மூக்கடைப்பு தினசரி அடிப்படையில் உங்களை வருத்தும் நாள்பட்ட பிரச்சனையாக இருந்தால், நீங்கள் முயற்சித்துப் பார்க்கக்கூடிய சில விஷயங்கள் உண்டு.
#4 ஒரு துரித ஓட்டம் எடுக்கலாம்
தினமும் குறைந்தபட்சம் ஐந்திலிருந்து பத்து நிமிடங்களுக்கு ஜாகிங் தொடங்குங்கள். இறுக வாய் மூடியபடி, நின்ற இடத்திலிருந்தேகூட நீங்கள் ஜாகிங் செய்தாலும், அது மூக்கடைப்பைத் தெளிவாக்கக்கூடும்.
#5 ஜல நேத்தி
மேற்கூறிய வழிகள் எதுவும் பலனளிக்காத அளவுக்கு உங்களது மூக்கடைப்பு மிகவும் கடுமையாக இருந்தால், ஜல நேத்தி என்று அழைக்கப்படும் கிரியா உள்ளது. அதற்கு ஒரு குறிப்பிட்ட அளவு முன்னேற்பாடு தேவை. தேவையான முன்னேற்பாடு இல்லாமல் இத்தகைய விஷயங்கள் பல இடங்களில் கற்றுத்தரப்பட்டாலும், உங்கள் மூக்கில் வெறுமனே நீரை ஊற்றுவது அறிவானதல்ல. இந்தப் பயிற்சியானது சரியான முறையில் வழங்கப்பட வேண்டும். தேவையானால் எங்களது ஹடயோகா ஆசிரியர்களால் உங்களுக்கு கற்றுத்தர முடியும்.