மஹாபாரதம் பகுதி 63: ஏகலைவன் கட்டை விரலை இழந்ததிலிருந்து நாம் கற்க வேண்டிய பாடம்
மஹாபாரதம் நிகழ்வின்போது பங்கேற்பாளர்களின் கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கையில், ஏகலைவனின் கட்டை விரலை குரு தட்சணையாக கேட்டதன் மூலம் ஒரு மிகச்சிறந்த வில்லாளியை குரூரமான முறையில் துரோணாச்சாரியார் முடக்கியதன் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்துகிறார் சத்குரு.
இந்த கேள்வி எழுந்ததன் பின்னணியை நாம் அறிந்திருப்போம்: தன்னைவிட வில்வித்தையில் சிறந்தவனாக ஏகலைவன் எனும் வேடுவ இளைஞன் ஒருவன் இருக்கிறான், அதுவும், துரோணரை மானசீக குருவாகக் கொண்டு வில்வித்தையைக் கற்றிருக்கிறான் என்பதை அறியும் அர்ஜுனன் பதற்றமடைகிறான். தன் பெருமைக்கு ஏற்பட்டிருக்கும் போட்டியைப் பற்றி துரோணரிடம் சென்று முறையிட, துரோணர் ஏகலைவனிடம் அவனது கட்டை விரலை குரு தட்சணையாக கேட்கிறார். கட்டைவிரல் இல்லாமல் தன்னால் சிறந்த வில்லாளியாக முடியாது என்பதை அறிந்திருந்தும், சிறிதும் தயங்காமல் தன் கட்டை விரலை வெட்டி காணிக்கை செலுத்துகிறான் ஏகலைவன்.
கேள்வியாளர்: சத்குரு, ஏகலைவனின் கதையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ள முடியும்? அர்ஜுனனை விட மிகச்சிறந்த வில்லாளியாக இருந்தும் தோற்றுப் போகிறானே?
Subscribe
மக்களின் தலையில் தட்டுவதை நாம் தொடர்ந்து செய்தே வந்திருக்கிறோம். மக்கள் என் மீது வைத்துள்ள பிரியத்தை குறைக்க கிடைக்கும் எந்த ஒரு வாய்ப்பையும் நான் தவற விடுவதேயில்லை. மற்றவர்கள் விரும்பும்படி நடந்து கொள்வது மிக எளிது. நம்மை மற்றவர்கள் விரும்பவேண்டும் என்பதற்காக செயல்படுவதே ஊழலுக்கு வழிவகுக்கிறது. இந்த ஊழல் குணமானது துரோணரிடமும், பிறகு அவரது வழித்தோன்றலின் செயலிலும் பிரதிபலிக்கிறது. இந்த ஊழல் குணத்தினாலேயே திரௌபதியின் ஐந்து புதல்வர்களைக் கொல்லும் கீழ்மையை செய்வதில் அஸ்வத்தாமன் ஈடுபடுகிறான். மொத்த குருஷேத்திர யுத்தத்திலும், தந்தையும் மகனுமாக இவர்கள் இருவருமே கொடூரமாக நடந்து கொண்டவர்கள். மற்ற வீரர்களுக்கு இந்தப் போரின் முடிவு ஒரு பெரும் ராஜ்ஜியத்தை தீர்மானிக்க இருந்ததோடு அவர்கள் ரத்தமும் கொதித்துக் கொண்டிருந்தது. ஆனாலும் அவர்கள் ஓரளவு கட்டுப்பாடாக நடந்து கொண்டார்கள். ஆனால் ஆரம்பம் முதலே துரோணர் ஊழல்வாதியாக இருந்தார்.
துரோணரின் பால்ய பருவ நண்பனான துருபதன், தங்கள் வாழ்வில் எதை ஈட்டினாலும், அதை இருவரும் சமமாக பங்கிட்டுக் கொள்வோம் என்ற வாக்குறுதியை அளித்திருந்தான். ஆனால் அரசனான பிறகு தனது வாக்குறுதியில் இருந்து பின்வாங்கிவிட்டான். நீங்கள் சிறுவனாக இருக்கும்போது என்ன வேண்டுமானாலும் பேசியிருப்பீர்கள், ஆனால் பெரியவர்களான பிறகு அதையே காரணமாக காட்டி, ராஜ்ஜியத்தில் பாதியைத் தரவேண்டும் என்று துரோணர் கேட்பது சிறுபிள்ளைத்தனத்தின் உச்சம் மட்டுமல்ல, நட்பை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் ஆகிறது. துருபதனின் அரசவையில் துரோணர் மிக எளிதாக இணைந்திருக்க முடியும், நல்ல ஒரு சன்மானத்தோடு மிகுந்த மரியாதையுடனும் நடத்தப்பட்டிருப்பார். ஆனால் துரோணர், "நான் இங்கே பிச்சை கேட்டு வரவில்லை, நண்பனாகவே வந்தேன். உனது ராஜ்ஜியத்தில் பாதியைக் கொடு!" என்று துருபதனை கேட்டார். துரோணர் மிகவும் திறமைசாலியாக இருந்தாலும் அவரது சிறுபிள்ளைத்தனமும் ஊழல் மனமும் ஏகலைவனுக்கு பெருந்துன்பமாக முடிந்தது.
இதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் இதுதான்: நீங்கள் யாருக்காவது எதையாவது கற்றுக்கொடுக்க நேர்ந்தால், அதற்கு எந்த விலையும் இருக்கக்கூடாது. உங்களிடமிருந்து ஏதோவொன்றை பெற்றுக்கொள்ள ஒருவர் விரும்புகிறார் என்பது உங்களின் அதிர்ஷ்டம். நீங்கள் யாருக்கு எதை வழங்கும்போதும் எந்த விலையும் வைக்காதீர்கள். விலையை நிர்ணயிக்கும் அந்த கணத்திலேயே நீங்கள் ஊழலின் உருவம் ஆகிறீர்கள்.
தொடரும்…
மஹாபாரதம் தொடரின் பிற பகுதிகள்
ஆசிரியர் குறிப்பு: கோவை ஈஷா யோக மையத்தில் கடந்த 2012ம் ஆண்டு மஹாசிவராத்திரியின் போது, சத்குரு விவரிக்க, நடன நாட்டிய நிகழ்ச்சி வடிவில் நடைபெற்ற மஹாபாரதம் பெருங்கதையின் கட்டுரை வடிவமாக இந்த தொடர் மலர்கிறது. காலத்தை வென்ற இந்த பெருங்காவியத்தின் பல்வேறு கதாப்பாத்திரங்கள் மற்றும் கதைகளின் ஊடே நம்மை மறைஞானத் தேடலுக்கு அழைத்துச் செல்கிறார் சத்குரு.