வாழ்வின் அர்த்தம்
வாழ்வின் அர்த்தம் என்ன? இந்தக் கேள்வி சிந்திக்கும் மனதில் என்றைக்காவது ஒருநாள் நிச்சயம் எழும். வாழ்வின் அர்த்தம் என்ன என்ற தேடலுக்கான அடிப்படை தன்மைகளைக் குறித்து சத்குரு விரிவாக விளக்குகிறார்
கேள்வியாளர்: சத்குரு, வாழ்வின் பொருள் என்ன?
சத்குரு: வாழ்வு உங்களுக்கு வெளியில் இருப்பதைப் போன்றதொரு பாவனையில் நீங்கள் அதைப்பற்றிப் பேசுகிறீர்கள். நீங்கள்தான் வாழ்வு. ஆனால், எண்ணங்கள் உணர்ச்சிகள், கருத்துக்கள், சித்தாந்தங்கள், தத்துவங்கள், மதங்கள், அபிப்பிராயங்கள் என பலவற்றால் நீங்கள் மூடப்பட்டு இருக்கும் காரணத்தால், இந்த உளவியல் நாடகம் வாழ்வின் செயல்முறையை ஏறக்குறைய முழுமையாக மறைத்துவிட்டிருக்கிறது. மேலும் இன்றைக்கு, பெரும்பாலான மக்கள் "எனது வாழ்க்கை" என்று கூறும்போது, அவர்கள் தங்களின் வேலை, தங்களது தொழில், தமது குடும்பம், அவர்களது கார், அவர்களுடைய சொத்து, அவர்களது கட்சி போன்றவற்றைப் பற்றித்தான் கூறுகிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும்; அவர்களே ஒரு உயிராக அல்லது வாழ்வாக இருப்பதைப் பற்றிக் கூறுவதில்லை.நீங்கள் இப்போது ஒரு உயிராக இருக்கும் காரணத்தினாலும், மற்றும் உயிரோட்டத்துடன் இருப்பதனாலும்தான், இத்தனை கூடுதலான விஷயங்களுக்கும் ஏதோ ஒரு அர்த்தம் உள்ளது. நீங்கள் உயிரோடு இருப்பதால்தான் உங்கள் வேலை, உங்கள் வாகனம், உங்களது வீடு, உங்களுடைய உறவுகளுக்கு, ஏதோ ஒரு அர்த்தம் உள்ளது. நீங்கள் உயிருடன் இருக்கும் காரணத்தினால்தான், நீங்கள் என்ன உடுத்துகிறீர்கள், நீங்கள் என்ன பேசுகிறீர்கள், எதனோடு தொடர்பு கொண்டுள்ளீர்கள் என்பது போன்ற அனைத்துக்கும் ஏதோ ஒரு அர்த்தம் இருக்கிறது. நீங்கள் ஒரு உயிர் என்பதுதான் மிக அடிப்படையான தன்மையாக இருக்கிறது. ஆனால் உங்களது உளவியல் நாடகங்கள் வாழ்வின் செயல்முறையைக் காட்டிலும் பெரிதாகிவிட்டன. ஐரோப்பா செய்த இந்தப் பெரிய தவறை, ஒட்டுமொத்த உலகமும் தொடர்ந்துகொண்டு வருகிறது. "நான் சிந்திக்கிறேன், அதனால் வாழ்கிறேன்" என்று ஒருவர் சொல்லத் துணியும் அளவுக்கு, நாம் உயிரைக் காட்டிலும் எண்ணங்களைக் கொண்டாடத் துவங்கிவிட்டோம்.
Subscribe
உங்கள் எண்ணம் என்பது ஒரு மென்பொருளைப் போன்றது. உங்களுக்கு எந்த விதமான எண்ணங்கள் எழுகின்றன என்பது நீங்கள் எந்தவகையான தகவல்களை உங்களுக்குள் சேமித்துள்ளீர்கள் என்பதைப் பொறுத்து இருக்கிறது. நீங்கள் அந்த மென்பொருளைச் சுமக்கும் உயிராக இருக்கிறீர்களே தவிர, அந்த மென்பொருளின் தயாரிப்பாக நீங்கள் இல்லை. ஆனால் இன்றைக்கு, உங்கள் எண்ணம் அனைத்தையும்விடப் பெரியதாகிவிட்டது. அதனால்தான் "வாழ்வு என்பது என்ன?" என்று நீங்கள் என்னைக் கேட்க, வாழ்வென்பதே நீங்கள்தான் என்று நான் உங்களுக்கு நினைவுபடுத்துகிறேன். உயிரைப்பற்றி என்னிடம் ஏன் நீங்கள் கேட்கவேண்டும்? இந்தியாவின் வானிலை குறித்து நீங்கள் என்னிடம் கேட்பதற்கு விரும்பினால், நாம் அதுகுறித்து கலந்துரையாட முடியும், அது பொறுத்தமானதொரு உரையாடல். ஆனால், நீங்களே உயிராக இருக்கும்போது, என்னிடம் "வாழ்வின் பொருள் என்ன?" என்று நீங்கள் கேட்டால், அப்போது நான் உங்களுக்கு ஒரு கதைதான் சொல்லவேண்டும். அதை நான் கதையென்று கூறுவதன் காரணம், உங்கள் அனுபவத்தில் இல்லாத ஒன்றைப் பற்றி நான் எது கூறினாலும் உங்களைப் பொறுத்தவரை அது கதைதான். உங்களுக்கு அந்தக் கதை பிடித்திருந்தால் அதை நம்புவீர்கள். உங்களுக்கு அந்தக் கதைபிடிக்கவில்லை என்றால் நம்பாமல் இருப்பீர்கள். ஆனால், அதை நீங்கள் நம்பினால் அது உண்மையாகிவிடுமா? நீங்கள் அதை நம்பாமல் இருந்தால் உண்மையாகிவிடுமா? இரண்டு வழியிலும் நீங்கள் உண்மையை அறிவதில்லை.
ஏன் தீர்மானங்கள் செய்கிறீர்கள்?
நான் அறிந்திருப்பது எனக்குத் தெரியும்; நான் அறியாதது எனக்குத் தெரியாது", என்று குறைந்தபட்ச நேர்மையாகக்கூட ஏன் உங்களால் இருக்க முடியவில்லை? நமக்கு தெரியாதது என்னவாக இருந்தாலும், அதை நாம் ஒருவிதமாக உருவாக்கிக்கொள்ள விரும்புகிறோம். ஏனெனில் "எனக்கு தெரியாது" என்பதன் மிகப் பிரமாண்டமான இயல்பை நாம் உணராமல் இருக்கிறோம். "எனக்கு தெரியாது" என்ற நிலைப்பாட்டில் ஆனந்தமாகவும் விழிப்புணர்வுடனும் இருந்தால், அறிதல் வெகு தொலைவில் இல்லை. மனித புத்திசாலித்தனத்தின் இயல்பிலேயே இருப்பது என்னவென்றால், "எனக்கு தெரியாது" என்பதுடன் நீங்கள் வாழமுடியாது. தெரிந்துகொள்வதற்கான ஏக்கமும், தேடலும் உங்களுக்குள் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருக்கும். உங்களால் இயன்ற அளவுக்கு அறிந்துகொள்வதற்கு, உங்களது புத்திசாலித்தனம் ஒரு வழி கண்டுபிடிப்பதை நீங்கள் காண்பீர்கள்.
எனவே, "எனக்கு தெரியாது" என்று பார்ப்பதில் என்ன பிரச்சனை இருக்கிறது? இதற்கான காரணம் என்னவென்றால், நீங்கள் வாழும் சமூகத்தில் அறிவு மதிக்கப்படுகிறது, ஆனால் தேடல் மதிக்கப்படுவதில்லை. அறிவு என்பதே ஒரு சில விஷயங்களின் சேகரிப்பாகவும், பெருமளவு நீங்கள் உருவாக்கியுள்ள தீர்மானங்களாகவும்தான் இருக்கிறது. அறிவியல் என்று அழைக்கப்படுவது கூட எல்லாவற்றைப் பற்றிய அதன் கருத்தையும் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மாற்றிக்கொண்டே இருக்கிறது. இது ஏனென்றால் நீங்கள் ஒரு தீர்மானத்திலிருந்து மற்றொரு தீர்மானத்துக்கு முடிவில்லாமல் மாறிக்கொண்டே இருக்கின்றீர்கள். மதச்சார்புடைய மக்கள் ஒரு முடிவுடன் நின்றுவிடுகிறார்கள். விஞ்ஞானிகள் ஒரு முடிவில் இருந்து மற்றொன்றுக்கு மாறிக்கொண்டே இருக்கிறார்கள். இது பரிமாணம் போல் தோன்றுவதுடன், ஓரளவுக்கு அது அப்படித்தான் இருக்கிறது.
அடிப்படையில் ஒவ்வொன்றைப் பற்றியும் தீர்மானம் செய்வதற்கு பெரிதாக அப்படி என்ன தேவை இருக்கிறது? "வாழ்வின் பொருள் என்ன?" என்று நீங்கள் கேட்கும்போது வாழ்க்கை என்பது என்ன என்பதைப் பற்றி நீங்கள் முடிவெடுக்க விரும்புகிறீர்கள். உங்கள் வாழ்வின் முடிவு, உங்கள் வாழ்வின் கடைசிக் காட்சி ஒன்றுதான் – உங்களுக்கும் மற்றும் எனக்கும். நீங்கள் முடிவுகளைத் தேடும் கணத்திலேயே உங்களை அறியாமல் நீங்கள் இறப்பைத் தேடுகிறீர்கள். உங்களது குழந்தைப் பருவம் முதல் இப்போது வரை உங்களுக்கு நிகழ்ந்து வந்திருப்பதெல்லாம் இதுதான். உங்களுக்குத் தீர்மானங்கள் இல்லாதபோது, நீங்கள் ஒவ்வொன்றையும் பெரும்வியப்போடும் ஈடுபாட்டோடும் பார்த்தீர்கள். ஆனால் இன்றைக்கு நீங்கள் தீர்மானங்களைக் கொண்டிருப்பதால், "ஓ, அது ஒருமரம், இது ஒரு பட்டாம்பூச்சி, இது இது, அது அது" என்று தீர்மானத்துக்குப் பின் தீர்மானத்துடன், அனைத்தும் விலக்கப்படுகிறது.
வாழ்வின் அனுபவம்
நீங்கள் வாழ்வின் பொருள் குறித்து கேட்கும்போது, நீங்கள் ஒரு தீர்மானம் மேற்கொள்ளவே அதைக் கேட்கின்றீர்கள் என்று புரிந்துகொள்ளுங்கள். அப்போதுதான் உங்களால் இன்றிரவு உறங்க முடியும். ஏனெனில் ஒரு தீர்மானம் இல்லாத நிலையில், உங்கள் புத்திசாலித்தனம் உங்களைத் தொந்தரவு செய்கிறது. ஆனந்தமான குழப்பத்தில் எப்படி இருப்பது என்பதை நீங்கள் அறிந்தால், அது மிகவும் நல்லது, ஏனெனில் உங்களுடைய புத்திசாலித்தனம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. நீங்கள் தீர்மானம் செய்யும் அந்தக் கணமே, நீங்கள் நம்பும் அந்தக் கணமே, உங்களுடைய புத்திசாலித்தனம் உறங்கச் சென்றுவிடுகிறது. ஆனால் உங்களுக்கு தெரியாதபோது, நீங்கள் அனைத்தையும் முழு ஈடுபாட்டோடு பார்க்கிறீர்கள்.
நீங்கள் வாழ்வில் ஈடுபாடு கொள்வது முக்கியம் இல்லையா? வாழ்வை அறிந்துகொள்ள வேறு ஏதேனும் வழி உள்ளதா? நீங்கள் உண்ணும் உணவோடு ஈடுபாடு இல்லாமல் இருந்தால், அந்த உணவு எப்படி இருக்கிறது என்பதை உண்மையாக நீங்கள் உணர்வீர்களா? பெரும்பாலானவர்களுக்கு, அந்த முதல் கவளத்தில் மட்டும்தான் அவர்கள் ஈடுபாடு கொள்கின்றனர். அதற்கு பிறகு அவர்கள் எதையும் சுவைத்துக்கூடப் பாராமல், வெறுமனே விழுங்கிக் கொண்டுதான் இருக்கின்றனர். எனவே, பெரும்பாலான மக்களும், ஆரம்பகால குழந்தைப் பருவத்தில்தான் வாழ்வை உணர்கின்றனர். அதற்கு பிறகு ஒவ்வொரு விஷயத்திற்கும் அவர்கள் ஒரு விளக்கத்தையும், ஒரு தீர்மானத்தையும் வைத்திருக்கின்றனர்.
நீங்கள் தீர்மானிப்பது அதிகரிக்க அதிகரிக்க, நீங்கள் உணரக்கூடியது குறைந்துபோகிறது. நாம் ஒவ்வொன்றையும் அறிந்திருக்கிறோம், ஆனால் எதையும் நாம் உணர்வதில்லை. நீங்கள் யாராக இருக்கிறீர்கள் என்கிற உளவியல் கட்டமைப்புக்குத்தான், பொருள் என்பது அர்த்தம் நிறைந்ததாகிறது. உங்கள் மனம் அர்த்தத்தை விரும்புகிறது. இந்த உயிரின் இயல்பு என்னவென்றால், நீங்கள் இங்கு பல லட்சம் வருடங்கள் வாழ்ந்தாலும் அது உங்களை ஆச்சர்யப்படுத்திக்கொண்டே இருக்கும் என்பதுடன், அப்போதும்கூட நீங்கள் ஈடுபாட்டோடு இருக்கமுடியும். நீங்கள் அதை உற்று நோக்க நோக்க உங்களை அது அதிகமாக பிரமிக்க வைத்துக்கொண்டேதான் இருக்கும். உங்களுக்குள் இருக்கும் உயிர் அர்த்தத்தை தேடவில்லை; அதற்கு உணர்தலின் அளப்பரிய தன்மை தேவைப்படுகிறது. முதலில் நீங்கள் அதை உருவாக்கிக்கொள்ளுங்கள், பின்பு இந்த கேள்விகள் அனைத்தும் மறைந்துவிடும். அது இல்லாத நிலையில், நீங்கள் கேள்விகளைக் கேட்டுக்கொண்டே இருக்க முடியும். ஏனெனில், அர்த்தத்தின் தேடுதலில் இருக்கும் மனதின் தளத்தில் நீங்கள் நின்றுகொண்டிருக்கிறீர்கள்.
ஆசிரியர் குறிப்பு: ஆன்மீகப் பாதையில் தனிப்பட்ட முறையில் சத்குருவின் பயணம் குறித்து More Than A Life என்ற புத்தகத்தில் படித்து அறியுங்கள்.