மைக்கேல் ஜாக்சன் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன? (Michael Jackson in Tamil)
நடனம் பற்றி பேசினால், மைக்கேல் ஜாக்சனை விட்டுவிட்டு பேச இயலாது என்ற அளவுக்கு புகழின் உச்சத்தை அடைந்த அவர், வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களையும் குழப்பங்களையும் சந்தித்து வீழ்ச்சியடைந்தார். மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன என்பதை சத்குரு விளக்குகிறார்.
கேள்வியாளர்: உலகப் புகழ் பெற்ற, நர்த்தக சிகர மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை, அவருடைய கலை மற்றும் அவருடைய திடீர் மரணம்… இவை எல்லாவற்றிலும் இருந்து நாம் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன? அவர் என்ன மாதிரி ஒரு உதாரணம்...
சத்குரு:
ஒரு தனிமனிதனுடைய ஏதோ ஒரு திறமையினால் சமூகத்தில் ஒரு அங்கீகாரம் வரலாம். ஒவ்வொருவருக்கு சிறிய அளவில் வரலாம், ஒவ்வொருவருக்கு பெரிய அளவில் வரலாம். ஆனால் இந்த வெளியில் இருந்து வருகிற புகழினாலேயே நம் தன்மையை உருவாக்கிக்கொள்கிற ஒரு சூழ்நிலை ஆகிவிட்டது மக்களுக்கு. 10 பேர் என்ன சொல்கிறார்களோ அப்படி ஆகிவிடுவார்கள்.
இப்போது நீங்கள் டான்ஸ் பண்ணுகிறீர்கள். உங்கள் டான்ஸினால் உங்களுக்கு ஆனந்தமாக இருந்தால், நீங்களாகப் பண்ணிக்கொள்ள வேண்டும். அந்த நடனம் நமக்கு பார்ப்பதற்கு நன்றாக இருந்தால், நாம் பார்ப்போம், இல்லையென்றால் நாம் பார்க்கமாட்டோம். அதனால் உங்கள் தன்மை உருவாக்கப்படக்கூடாது. நான் உங்களைப் பார்க்கிறேனா இல்லையா என்பது உங்கள் தன்மையை நிர்ணயிக்கக்கூடாது. நீங்கள் ஆடிக்கொள்கிறீர்கள், அதனால் உங்கள் தன்மை நிர்ணயிக்கப்பட வேண்டும். அல்லது, உங்கள் தன்மை நிர்ணயிக்கப்பட்டு இருப்பதனால் நீங்கள் ஆடுகிறீர்கள்.
Subscribe
ஆனால், இப்போது உள்நிலையை நிர்ணயித்து உறுதிப்படுத்த முடியவில்லை. வெளியே 10 பேர் சொல்வதனால் நாம் பெரியவர்கள் ஆகிவிட்டோம். இல்லை, வெளியே 10 பேர் சொல்வதனால் நாம் சிறியவர் ஆகிவிட்டோம். இதுபோல இருக்கும்போது, புகழ் வந்தபோது மேலே போவோம், யாராவது கொஞ்சம் புஷ் பண்ணினார்கள் என்றால், புஸ் ஆகிவிடும்.
மைக்கேல் ஜாக்சனின் வாழ்க்கை
இப்போது நீங்கள் மைக்கேல் ஜாக்சனை உதாரணமாக எடுத்தீர்கள். அவன் என்னவாகவோ இருக்கட்டும்; ஒரு தலைமுறையில் மகத்தான ஒரு உத்வேகம். அவனுக்கே புரியவில்லை எப்படி என்று. ஆனால் ஏதோ ஒரு திறமையினால் அப்படி வளர்ந்துவிட்டது. ஆனால் மனிதன் வளரவில்லை. புகழ் வளர்ந்துவிட்டது, மனிதன் வளரவில்லை. ஒரு பிச்சைக்காரனுக்கும் கூட வேண்டாம், அதுபோன்ற கஷ்டம் அவனுக்கு, அதுபோன்ற அசிங்கமான வாழ்க்கை. ஒரு நிமிடம் சமாதானமாக அவன் வாழ்ந்ததில்லை என்று நினைக்கிறேன்.
அவன் ஏதோ, அந்த டான்ஸ் பண்ணும்போது மட்டும்தான் ஓரளவுக்கு அவன் ஏதோ உணர்ந்திருக்கலாம், மற்ற நேரங்களில் அவன் வாழ்க்கை பாடு யாருக்கும் வேண்டாம், அதுபோன்ற பாடு அவனுக்கு. அதுபோன்ற மனிதன் ஆனந்தமாக இருக்க முடியாது.
கையை மாற்றிக்கொள்வது, மூக்கு மாற்றிக்கொள்வது, தலை மாற்றிக்கொள்வது எல்லாம் வந்துவிட்டது. எதற்கென்றால், என்ன செய்வது என்று தெரியவில்லை. வெளிசூழ்நிலை இவ்வளவு வளர்ந்துவிட்டது, உள்ளம் வளராமல் போய்விட்டது.
தியானம் சொல்லிக்கொடுத்திருந்தால்…
இது நடந்தபோது நான் அமெரிக்காவில் இருந்தேன். இதைப் பற்றியெல்லாம் பெரிய பேச்சு நடந்தது. நான் சொன்னேன், "அவனுக்கு யாரும் தியானம் சொல்லிக் கொடுக்காமல் போய்விட்டார்கள்."
அவன் வளரும்போது தியானம், ஒரு ஆன்மீகத் தன்மையிலான ஒரு பயிற்சி… மதத்திற்கு சம்பந்தப்பட்ட தன்மை அல்ல, ஆன்மீகத்திற்கு சம்பந்தப்பட்ட தன்மை அவன் வாழ்க்கையில் ஏதாவது கொண்டு வந்திருந்தால், அவன் உலகத்தில் பெரிய மதிப்பான மனிதனாக வாழ்ந்திருக்க முடியும்.
இப்போது மைக்கேல் ஜாக்சனாக இருப்பது உலகத்தில் என்ன முக்கியமான தன்மை என்றால், அவன் டான்ஸ் ஆடிவிட்டான், பாப்புலர் ஆகிவிட்டான், அது வேறு விஷயம். முக்கியமாக என்னவென்றால், இப்போது மைக்கேல் ஜாக்சன் என்ன செய்தானோ, அதை 10 கோடி மக்கள் செய்கிறார்கள், ஒரு கோடி மக்களாவது பண்ணுவார்கள். மனிதனுக்கு இதுபோன்ற ஒரு சக்தி இருக்கும்போது, அதை பொறுப்பாக நடத்திக்கொள்கிற ஒரு திறமை இல்லாமல் போய்விட்டது. இப்போது மைக்கேல் ஜாக்சன் தியானம் செய்திருந்தால், ஒரு கோடி மக்கள் தியானம் செய்திருப்பார்கள். மைக்கேல் ஜாக்சன் drugs எடுத்தால், கோடி மக்கள் drugs எடுப்பார்கள். மைக்கேல் ஜாக்சனுக்கு பைத்தியம் பிடித்தால், கோடி மக்களுக்கு பைத்தியம் பிடிக்கும்.
புகழ் வரும்போது புரிந்துகொள்ள வேண்டியது?
இந்த புகழ் என்பது நம்மைப் பற்றி அல்ல, மக்களுடைய அன்பு பற்றியது. அந்த அன்பை நாம் பொறுப்பாக நடத்திக்கொள்ள வேண்டும், இது மிக மிக தேவையானது, ஒவ்வொரு கலைஞனுக்கும் இது தேவையானது. இது மக்கள் நம்மை பாராட்டுகிறார்கள் என்றால், யாரோ ஒருவர் நம்மைப் பற்றி நல்லது சொல்வார் என்றால், இது நம்மைப் பற்றியது அல்ல, அவருடைய அன்பு பற்றியது. இப்போது நீங்கள் என்னைப் பார்த்து ஏதோ ஒரு நல்லது சொன்னீர்கள் என்றால், இது உங்கள் உணர்வுதானே? நான் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். உங்கள் உணர்வு அப்படி இருக்கிறது, அதனால்தானே அப்படி வெளிப்படுத்துகிறீர்கள்.
நாம் இதை புரிந்துகொள்ளவில்லை. மனிதன் இதை புரிந்துகொள்ளவில்லை. 10 பேர் நம்மைப் பற்றி ஏதோவொரு நல்லது சொல்கிறார்கள் என்றால், அவருடைய இதயம் கரைந்து இருப்பதனால் அவர்கள் சொல்கிறார்கள். இதில் நம் செயல் அதற்கு தூண்டுதலாக இருந்திருக்கலாம். ஆனால் அடிப்படையாக அவருடைய இதயம் கரைந்ததனால், அவருக்குள் ஒரு அன்பு நடந்ததனால், அவர் ஏதோ நன்றாக பேசுகிறார்கள். அவர் நன்மையாக பேசினால், இது அவருடைய அன்பு என்று நாம் புரிந்துகொள்ளவில்லை, இது நம்முடைய பெருமை என்று நினைத்துவிட்டோம்.
இதுதான் அவன் கீழே விழுவதற்கு காரணம். இதுதான் எல்லா கலைஞர்களுடைய, நிறைய கலைஞர்களுடைய பாடு, எவ்வளவோ திறமை இருக்கிறது, பிரமாதமாக ஏதோ ஒன்று செய்வார்கள், ஆனால் அதன் பிறகு ஒரே பாதிப்பு அவருக்கு. எதற்கென்றால், இந்த புகழ் வார்த்தை என்பது மக்கள் சம்பந்தப்பட்டது, நமக்கு சம்பந்தப்பட்டது இல்லை. அவருடைய இனிப்பு அவர் வெளிப்படுத்துகிறார், நாம் கொஞ்சம் தூண்டி இருக்கலாம்.