சத்குரு:

உலகில் பல பாரம்பரியங்கள் உள்ளன. அவற்றின் மூலத்தை நீங்கள் தேடிப் போவீர்களே ஆனால், யாரோ ஒரு தனிமனிதரோ அல்லது ஒரு குழுவினரோ பெற்ற உள்நிலை அனுபவத்தின் வெளிப்பாடாகவே அந்த பாரம்பரியம் அமைவதை உணர்வீர்கள். கூடுதல் எண்ணிக்கையில் ஆனவர்களுக்கு அந்த அனுபவத்தை வழங்க மனிதர்கள் முற்படும்போது, அது ஒரு செயல்முறை ஆகிறது. பின்னர் ஒரு பாரம்பரியம் இருக்கிறது. அதன்பின் அந்த பாரம்பரியமே ஒரு மதம் ஆகிறது. இன்னும் வெவ்வேறு சூழல்களில் வெவ்வேறு விதமாக வெளிப்படுகிறது.

இவை அனைத்துமே ஒரு உள்நிலை அனுபவம் ஒழுங்குபடுத்தப்படாத ஓட்டத்திலோ, ஒழுங்குபடுத்தப்பட்ட முறையிலோ வடிவமைக்கப்படுவதினுடைய விளைவு. அது ஒழுங்குபடுத்தப்படாத ஓட்டத்தில் இருந்தால், அதை ஒரு பாரம்பரியம் என்கிறீர்கள். ஏனென்றால், அதற்கென்று கடுமையான சட்டதிட்டங்கள் இல்லை. அது, அந்த வெளிப்பாடு மேலும் முறைப்படுத்தப்படுமேயானால், அது ஒரு மதமாக ஒழுங்கமைக்கப்படுகிறது. ஆனால், அதன் மூலம் என்னவோ ஒரு தனிமனிதர் அல்லது ஒரு குழுவினருடைய உள்நிலை அனுபவத்தில் இருந்துதான் தொடங்குகிறது.

காலத்தோடு பாரம்பரியம் திரிபு அடைவது எப்படி?

நூறாண்டுகளுக்கு முன்னரோ, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரோ, பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரோ, யாருக்கு என்ன உள்நிலை அனுபவம் ஏற்பட்டிருந்தாலும், அவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு நாம் தலைவணங்குகிறோம். ஆனாலும் கூட, அவர்களின் அனுபவம் என்பது உங்களுக்கு ஊக்கம் தருகின்ற ஒரு கதையாக இருக்குமே தவிர, உங்கள் அனுபவத்தில் அது உண்மை இல்லை. அந்த மனிதருடைய அனுபவமும், அவருடைய வாழ்க்கைக் கதையும் உங்களுக்கு உற்சாகம் தரலாம், ஊக்கம் தரலாம், ஆனால் அதுவே ஒரு பாதை ஆகாது. மாறாக, அந்த அனுபவத்தைப் பெறுவதுதான் உங்களுக்கான வழி. அந்த வழிமுறை, அந்தப் பாதையில் உங்களை கொண்டு செலுத்தலாம். ஆனால், இத்தனை ஆண்டுகள் கடந்து அது உங்களை வந்து சேர்வதற்கு முன் அதனுடைய வடிவமும், உள்ளடக்கமும் சிதைந்திருக்கக்கூடும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

பாரத தேசத்தில், இதனை அடுத்த மனிதருக்கு அளிப்பதனை ஒரு தூய்மைமிக்க மரபாக நாம் உருவாக்கினோம். அதற்கு குரு-சிஷ்ய பாரம்பரியம் என்று பெயர்.

உதாரணமாக, ஏதோ ஒன்றை இன்றைக்கு காண்கிறீர்கள். அதைப் பற்றி வேறு யாரிடமோ சொல்கிறீர்கள். இன்னும் 24 மணி நேரத்திற்குள் அது 20, 30 பேர்களைக் கடந்து திரும்பவும் உங்களுக்கே வந்து சேர்கிறபோது, அந்தக் கதை நீங்கள் சொன்னதுதான் என்று கூட உங்களால் அடையாளம் காண முடியாது. அந்தளவுக்கு அது முழுக்க மாற்றப்பட்டிருக்கும். எனவே, ஒரு தலைமுறையில் இருந்து தலைமுறைக்கு மாற்றிக்கொண்டே போகிறபோது, மனித மனம் அதை வெவ்வேறு விதமாக திசை திருப்ப வாய்ப்பு இருக்கிறது. இதுதான் மனித மனதின் இயல்பாக இருக்கிறது. தன் மனதை சீரமைப்பதற்கு பெரும்பாலானவர்கள் எதும் செய்யவும் கிடையாது.

பெரும்பாலானவர்களுக்கு மனம் என்பது ஞாபக சக்தியினுடைய ஆதிக்கம் இல்லாமல் தனியாக செயல்படுவது இல்லை. எனவே, உங்கள் மனதில் என்னவெல்லாம் ஞாபகம் இருக்கிறதோ, அதற்கேற்றாற்போல நீங்கள் சொல்லவருகிற செய்தி திசை மாறக்கூடும். அதனால்தான் ஒரு செய்தியை அதன் தூய்மை கெடாமல் அடுத்தவர்களுக்கு அளிப்பதற்கு என்று ஒரு தூய்மையான விஞ்ஞானமுறை வடிவமைக்கப்பட்டது. அதற்கு குரு-சிஷ்ய பாரம்பரியம் என்று பெயர்.

 

மரபுவழியாக, வாய்வழி சொல் மூலம் பரிமாற்றம்

குரு-சிஷ்ய பாரம்பரியத்தின்படி உள்நிலை அனுபவமாக இருக்கின்ற ஒன்றை எழுதக்கூடாது. அது எழுதாக் கிளவியாக வாய் வழியே சொல்லப்படுவதாக மட்டுமே இருக்க வேண்டும். அதில் ஒரு எழுத்தைக் கூட யாரும் மாற்றக்கூடாது. அது எப்படி இருக்கிறதோ அப்படியே சொல்ல வேண்டும். அதற்கு பொருள் விளக்கவுரை சொல்ல முற்படக் கூடாது. அதைப் பற்றிய பொழிப்புரைகள் கூடாது.

பல்லாயிரம் ஆண்டுகளாக இப்படியே நாம் கொண்டு செலுத்தியிருக்கிறோம். இன்று யாருக்கு தரப்பட்டதென்றால், இந்த அற்புதமான விஷயத்தை தன் வாழ்வில் பல்வேறு அம்சங்களில் ஒன்றாக கருதாமல், தன் வாழ்வைவிட மிக முக்கியமானது என்று யார் கருதுகிறார்களோ, அவர்களுக்கு அளிக்கப்பட்டது. அவருக்கு இது ஒரு பொழுதுபோக்கோ, தொழிலோகூட அல்ல. தன் உயிரை விட பெரிதாக அவர் அதைக் கருத வேண்டும். அத்தகையவர்தான் அதை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வார். அவர் அதை உள்நிலையில் உணராவிட்டாலும்கூட, உள்ளது உள்ளபடியே அடுத்த தலைமுறைக்கு அவர் அதை தரமுடியும். இந்த அற்புதமான முறையின் காரணமாக பல அரிய விஷயங்கள் தலைமுறைகளைத் தாண்டி வந்திருக்கின்றன. இப்பொழுது அது பெருமளவு திசை திருப்பப்பட்டுள்ளது என்பது துரதிர்ஷ்டவசமானது.

பாரம்பரியம் என்ற பெயர் மட்டும் போதாது...

பாரம்பரியம் என்பது அடிப்படையில் முக்கியமானது என்று சொல்லிவிட இயலாது. ஆனால் கடந்த ஒரு மரபினுடைய துவக்கமாக, ஆதியாக இருந்த அற்புதமான விஷயத்தை இன்று வருபவர்களும் உணர்வதற்கு வழியமைப்பதனால் பாரம்பரியத்திற்கு இவ்வளவு முக்கியத்துவம் தரப்படுகிறது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இன்றைக்கு நிலைமை எப்படி இருக்கிறதென்றால், எதோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என்பதனாலேயே அது மிகவும் உயர்ந்த விஷயம் என்று கருதக்கூடிய மனப்பான்மைக்கு வந்துவிட்டோம்.

அப்படியல்ல, ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும்கூட எளிய மனிதர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்களுக்கு போராட்டங்கள் இருந்திருக்கின்றன. அபத்தங்கள் இருந்திருக்கின்றன, எல்லா குறைபாடுகளும் இருந்திருக்கின்றன. ஆனால், ஒருசில மனிதர்களின் மகத்தான வாழ்வு குறித்த நினைவுகளை சிலர் கொண்டிருப்பதினாலேயே அந்தக் காலத்தில் வாழ்ந்த எல்லோரும் அப்படியே வாழ்ந்தார்கள் என்று கருதுகிறார்கள். இல்லை, அப்போதும் அப்படி சில அற்புதமான மனிதர்கள் இருந்தார்கள். இப்போதும் அப்படி சில அற்புதமான மனிதர்கள் இருக்கிறார்கள். அந்த பாரம்பரியம்தான் ஒரு தனிமனித அனுபவத்திற்குள்ளே வரவேண்டும். அப்போதுதான் தனிமனித அனுபவத்துக்குள் வந்தால்தான் அந்த பாரம்பரியம் என்பது இன்றும் உயிர்ப்போடு இருக்கின்ற ஒரு வாழ்க்கை முறையாக மாறும். இல்லையென்றால், அது வெறுமனே திணிக்கப்பட்டதாக ஆகும். ஏதோ ஒரு தலைமுறை அதை விட்டுவிட்டு போகும்.

பாரம்பரியத்தை காப்பது அவசியமா?


நமஸ்காரம் அல்லது வணக்கம் - நம் நாட்டின் பாரம்பரிய வரவேற்பு வழக்கு

கைகளை குவித்து நமஸ்காரம் என்று ஒருவரை வணங்குவது இந்திய பாரம்பரியத்தை சார்ந்தது. பயன்படாத பாரம்பரியங்கள் தானாகவே அற்றுப்போகும். ஒருவருக்கு ஒன்று பயன் தரவில்லை என்றால், அதை உங்களால் திணிக்க முடியாது. அது எவ்வளவு புனிதமானது என்று நீங்கள் நினைத்தாலும் உங்களால் திணிக்க இயலாது. எனவே, உங்கள் பாரம்பரியத்தை பின்னோக்கிப் பார்த்து, அதன் மூலம் என்னவென்று கண்டு, அது உருவான அதே உள்நிலை அனுபவத்தை உங்கள் முன் இருப்பவர்களுக்கு தரமுடியுமேயானால், அது மிக அற்புதமானதாக இருக்கும். அப்படி ஒரு சூழ்நிலை உருவாகிவிட்டால், இந்தப் பாரம்பரியத்தை காப்பாற்றுங்கள் என்று நீங்கள் சொல்லத் தேவையில்லை. அவர்களே அதனை உயிர்ப்புடன் வைத்திருப்பார்கள்.

ஆசிரியர் குறிப்பு : சத்குருவின் கருத்தாழமிக்க செய்தியை குருவாசகமாக உங்கள் மொபைலில் பெற்று, தினசரி உங்கள் நாளினை புதுத் தெளிவுடன் துவங்க சத்குரு செயலியை டவுன்லோட் செய்யுங்கள்.

sg-tam-app-image