சனாதன தர்மம் என்றால் என்ன? (Sanatana Dharma Meaning in Tamil)

கேள்வி கேட்பவர்: இந்து சனாதன தர்மத்தின் உண்மையான அர்த்தம் என்ன? அது இன்று நீர்த்துப் போய்விட்டதா?

சத்குரு: இந்து சனாதன தர்மம் என்று எதுவும் இல்லை. அது வெறுமனே சனாதன தர்மம். சனாதனம் என்றால் மாறாதது. மாறாத ஒன்று எப்போதும் உண்மையானது.

சனாதன தர்மம் என்பது வாழ்வின் மாறாத பரிமாணமாக, நமது இருப்பின் அல்லது உயிரின் அடித்தளமாக இருக்கிறது. அது புழுவாக இருந்தாலும், பூச்சியாக இருந்தாலும், பறவையாக இருந்தாலும், விலங்காக இருந்தாலும், தாவரமாக இருந்தாலும், அவை அனைத்தும், அதனதன் இருப்பை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகளான சனாதன தர்மத்தால் ஆளப்படுகின்றன. இது சமூகத்தின் கட்டுப்பாடு மற்றும் ஆரோக்கியமான ஒற்றுமைக்காக, ஒருவருக்கொருவர் மனிதர்களால் விதிக்கப்பட்ட தண்டனைச் சட்டம் அல்ல. பரிவர்த்தனைச் சட்டங்கள் தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு மாற வேண்டும். அது வேறொரு விஷயம். சனாதன தர்மம் ஒரு பரிவர்த்தனை தர்மம் அல்ல - இது ஒரு உயிரின் தர்மம்.

நீங்கள் இந்தியராக இருந்தாலும், இந்துவாக இருந்தாலும், இந்து அல்லாதவராக இருந்தாலும் , என்னவாக இருந்தாலும், சனாதன தர்மம் அனைவருக்கும் பொருந்துகிறது.

தர்மம் என்றால் என்ன? (Dharma Meaning in Tamil)

"தர்மம்" என்ற வார்த்தையைப் புரிந்துகொள்வோம். தர்மம் என்றால் “விதிமுறைகள்” என்பது பொருள். தர்மம் என்றால் மதம் அல்ல. இந்தக் கலாச்சாரத்தில், மதம் என்றால் என்ன என்று நமக்குத் தெரியாது. உங்கள் வாழ்க்கை சிறந்த முறையில் நிகழ்வதற்கான அடிப்படை விதிமுறைகள் என்ன என்பதை மட்டுமே நாம் பார்க்கிறோம். நீங்கள் இந்த விதிமுறைகளைக் கடைபிடிக்காவிட்டால், உங்கள் வாழ்க்கை நல்லபடியாக நிகழமுடியாது என்பதை நாம் புரிந்துகொள்கிறோம். இந்த விதிமுறைகள் ஒரு திணிப்பாக இல்லாமல், இருப்பின் அடித்தளமாக இருக்கின்றன. நீங்கள் விதிமுறைகளை அறிந்துகொண்டு, அவற்றுடன் ஒத்துப்போகிறீர்கள் என்றால், உங்கள் வாழ்க்கை சிரமமின்றி நிகழ்கிறது. நீங்கள் அறிந்துகொள்ளாவிட்டால், எந்த காரணமும் இல்லாமல் துன்பமடைய நேரிடும்.

ஒரு இந்து அல்லது ஒரு இந்திய நபர் அல்லது வேறெந்த நபருக்காவது சனாதன தர்மம் உரிமையானதா என்பது முக்கியமல்ல. நீங்கள் எங்கிருந்தாலும், இந்தியராக இருந்தாலும், இந்து மற்றும் இந்து அல்லாதவர் என்று நீங்கள் என்னவாக இருந்தாலும், சனாதன தர்மம் அனைவருக்கும் பொருந்துகிறது, ஏனென்றால் இவை வாழ்வின் அல்லது உயிரின் அடிப்படையான செயல்முறைக்கு வழிகாட்டும் விதிமுறைகள். வேறு எந்த கலாச்சாரமும் இதை இவ்வளவு ஆழமாகப் பார்க்கவில்லை. அந்தப் பெருமிதத்தின் காரணமாக, "இது இந்து சனாதன தர்மம்" என்று நாம் கூறலாம். ஆனால் "இந்து" என்ற வார்த்தையைச் சேர்ப்பதன் மூலம் சனாதன தர்மத்தின் சாத்தியத்தை நாம் குறைத்துவிடுகிறோம். இந்து என்பது ஒரு புவியியல் அடையாளம். இந்து என்பது இமயமலைக்கும், இந்து மகா சமுத்திரத்துக்கும் இடையில் உள்ள நிலப்பரப்பு. சனாதன தர்மம் ஒவ்வொருவரின் வாழ்வுக்கும் பொருந்துகிறது. இது இன்னமும் பிறந்திராதவர்கள், பிறந்துவிட்டவர்கள், பெரியவர்கள், இறந்துவிட்டவர்கள், வாழ்வின் வெவ்வேறு கட்டங்கள் மற்றும் வாழ்வின் அனைத்து பரிமாணங்கள் அனைத்தையும் எவ்வாறு கையாள்வது என்பது பற்றிப் பேசுகிறது. இது வாழ்வை மிகவும் ஆழமாக உற்று நோக்குவதற்கான ஒரு வழியாக இருக்கிறது.

ஸ்மிருதி மற்றும் ஸ்ருதி

நீங்கள் நூறு ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்திருந்தால், வித்தியாசமாக உடையணிந்துகொண்டு, வேறெதையாவது செய்துகொண்டு இருந்திருப்பீர்கள். நீங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வந்திருந்தால், மறுபடியும் வேறு ஏதாவது வித்தியாசமாகச் செய்துகொண்டு இருந்திருப்பீர்கள் - ஒருவேளை நீங்கள் ஒரு விவசாயியாக அல்லது ஒரு மீனவராக இருந்திருக்கலாம்.

கால மாற்றத்தினால் மாறக்கூடியவை

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

கால மாற்றத்தினால் மாறக்கூடியவை

நாம் என்ன செய்கிறோம், எப்படி ஆடை அணிந்திருக்கிறோம், எப்படி பேசுகிறோம், எப்படிச் செயல்படுகிறோம் என்பது காலத்தின்பாற்பட்டது; அது மாறிக்கொண்டே இருக்கிறது. அடுத்த தலைமுறையினர் எப்படி நடந்துகொள்வார்கள், அவர்கள் எப்படி ஆடை அணிவார்கள், என்ன செய்வார்கள் என்பது தற்போது நாம் செய்யும் விதத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். இது வாழ்வின் ஒரு பரிமாணம் – இதனை நாம் ஸ்மிருதி என்று அழைக்கிறோம். ஸ்மிருதி என்ற சொல்லுக்கு "ஞாபகங்களிலிருந்து" என்ற மொழிபெயர்ப்பு உள்ளது. ஸ்மிருதி என்பது, ஞாபகத்திலிருந்து நீங்கள் கற்றுக்கொண்டது.

நம் பெற்றோரும், நமது கலாச்சாரமும் செய்த அதே செயலை நாம் செய்கிறோம், அல்லது எதிர்வினையாக, நாம் நேரெதிரான விஷயத்தைச் செய்கிறோம். ஆனால் இது இடையறாமல் மாறிக்கொண்டிருக்கும் ஒரு செயல்முறையாக இருக்கிறது. தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு மட்டுமல்ல, நம் சொந்த வாழ்க்கையிலேயே, ஒவ்வொரு சில வருடங்களுக்கும், நமது ஸ்மிரிதிகள் மாறிக்கொண்டே இருக்கிறது. நமது தற்போதைய ஞாபகத்திலிருந்தே, நம் வாழ்வின் பல அம்சங்களை நாம் மாற்றிக்கொண்டிருக்கிறோம்.

ஸ்மிருதி என்பது, ஒவ்வொரு தலைமுறையும் மறுகண்டுபிடிப்பு அல்லது மறுதிருத்தம் செய்யவேண்டிய ஒன்று.
 

ஸ்மிருதி என்பது, ஒவ்வொரு தலைமுறையும் மறுகண்டுபிடிப்பு அல்லது மறுதிருத்தம் செய்யவேண்டிய ஒன்று. பரிணாமம் என்றால், முந்தைய தலைமுறையை விட சிறப்பாக ஏதாவது செய்ய வேண்டும் என்று அர்த்தமல்ல. அது என்னவென்றால், சூழ்நிலைகள் மாறிக்கொண்டே இருப்பதால், அந்தந்தச் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு நாம் பரிணமிக்கிறோம். சூழ்நிலை சார்ந்த பரிவர்த்தனைகள் எப்போதும் மாற்றமும், பரிணாமமும் அடையவேண்டும். நூறு ஆண்டுகளுக்கு முன்பு மக்கள் எப்படி சாப்பிட்டார்களோ, அந்த விதமாக இன்று நாம் சாப்பிட விரும்புவதில்லை, ஏனென்றால் நம் தொழில் வழக்கங்கள் மாறிவிட்டன. நீங்கள் நிலத்தை உழுதுகொண்டிருந்தபோது, என்ன சாப்பிட்டீர்கள், எவ்வளவு சாப்பிட்டீர்கள் என்பதிலேயே பெருத்த வித்தியாசம் இருந்தது. நீங்கள் பலவற்றையும் எப்படிச் செய்கிறீர்கள் என்பது தொடர்ந்து திருத்தப்பட வேண்டும். அரசியலமைப்பில் கூட, முற்றிலும் கேள்விக்கு அப்பாற்பட்ட அடிப்படை உரிமைகள் உள்ளன - நீங்கள் அவற்றைத் தொட முடியாது. மற்ற அனைத்தையும் திருத்தங்களுக்கும், விரிவாக்கங்களுக்கும், அகற்றுதலுக்கும் உட்படுத்த முடியும்.

உங்கள் ஸ்மிருதியும், என் ஸ்மிருதியும் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் ஸ்ருதி என்ற ஒன்று உள்ளது. இதைப் பல்வேறு வழிகளில் விளக்கலாம்; அதனுடைய ஒரு பரிமாணம் என்னவென்றால், அது உயிரின் அல்லது வாழ்வின் ராகமாக இருக்கிறது, இந்த ராகம் உங்களால் உருவாக்கப்படவில்லை - இது படைப்பின் ராகம்.

வாழ்வின் ஸ்ருதியை நீங்கள் புரிந்து கொண்டால் மட்டுமே, அதன் தாளத்தைக் கண்டுபிடிக்க முடியும். பாரத என்பதற்கான பொருள் இதுதான். பா என்றால் பாவ அல்லது வாழ்வின் அனுபவம். ரா என்றால் ராகம், அதாவது வாழ்வின் ஸ்ருதி. த என்றால் தாளம். பாவ என்பது உங்களுக்கு நிகழ்வது – இது ஒரு அனுபவம். ஆனால் ராகம் அல்லது ஸ்ருதி ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. இப்போது உங்கள் அனுபவத்துக்கான சரியான தாளத்தை நீங்கள் கண்டுபிடிப்பதால் ஒரு அற்புதமான இசை போல வாழ்க்கை அழகாக நிகழ்கிறது. நீங்கள் தாளத்தைக் கண்டுபிடிக்கவில்லை என்றால், வாழ்வை எளிதாக நிகழ்த்தும் அதே ஸ்ருதி, உங்களை நசுக்கிவிடும்.

ஸ்ருதி மாற்றமடைவதில்லை, ஏனென்றால் அது உங்களால் அமைக்கப்படவில்லை - அது படைப்பால் அமைக்கப்பட்டது. எனவே, உங்கள் வாழ்க்கையை நிர்வகிப்பது எது என்று புரிந்துகொண்டு, அதனால் நீங்கள் ஆழமான மற்றும் அழகான வாழ்க்கையை வாழ்வதே, சனாதன தர்மம் எனப்படுகிறது.

விதிமுறைகளுக்கு ஒத்திசைவாக இருத்தல்

ஒத்திசைவாக இருத்தல்

தனிமனித ஒழுக்கவிதிகள், கட்டளைகள், நீங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது, “இதைச் செய்தால் நீங்கள் சொர்க்கத்துக்குச் செல்வீர்கள். அதைச் செய்தால் நீங்கள் நரகத்திற்குச் செல்வீர்கள்” , என்று இந்தக் கலாச்சாரத்தில் யாரும் பேசுவதில்லை. நீங்கள் விதிமுறைகளுக்கு இசைவாக இருந்தால், உங்களுக்குத் தண்டனையும் தேவையில்லை, வெகுமதியும் தேவையில்லை என்ற இந்தப் பரிமாணத்தைமட்டும் மக்களுக்கு நாம் புகட்டிய காரணத்தினால், நன்னெறிக் கட்டளைகள் எதுவும் இல்லை. அதாவது, நீங்கள் போக்குவரத்து விதிகளைப் புரிந்துகொண்டு, அதற்கேற்ப வாகனம் ஓட்டினால், உங்களுக்கு ஒரு போலீஸ்காரர் தேவையில்லை என்பதைப் போன்றதுதான் இது.

தற்போது, இந்த பூமிக்கிரகத்தில் கோடானுகோடி உயிர் வடிவங்கள் இருப்பதாகக் கூறப்படுகிறது, ஆனால் நீங்கள் இன்னமும் பார்க்காத பல கோடி உயிர் வடிவங்கள் உள்ளன என்றே நான் நினைக்கிறேன். ஒரு நுண்ணுயிரில் இருந்து ஒரு மனிதன் வரைக்கும் மற்றும் இரண்டுக்கும் இடைப்பட்ட அனைத்து உயிரினங்களும்கூட, ஒரே மண்ணிலிருந்துதான் வந்துள்ளனர். ஒரே மண்ணிலிருந்துதான், ஒரு மரம் அல்லது ஒரு கொடி வளர்கிறது. அதே மண்ணிலிருந்து, நீங்கள் சாப்பிட்டதன் விளைவாக, இந்த விதமான உடல் உங்களுக்கு வாய்த்திருக்கிறது. அதே மண்ணிலிருந்து நான் சாப்பிட்டிருக்கிறேன், எனக்கு வேறு விதமான உடல் இருக்கிறது.

சனாதன தர்மம் உங்களுக்கோ எனக்கோ சொந்தமில்லை – அது படைப்பால் வகுக்கப்பட்டது.

நீங்கள் என்னதான் செய்தாலும் உங்களால் ஒரு மரமாக,ஒரு நாயாக, ஒரு பூனையாக, மாடு, யானை அல்லது புலியாக முடியாது. மூலம் ஒன்றுதான், ஆனால் அதன் பன்முக வெளிப்பாட்டைப் பாருங்கள். ஆகவே, அது என்னவாக இருந்தாலும், அதை நிர்வகிக்கக்கூடிய ஒரு விதிமுறை உள்ளது. அது ஒரு ரயில் பாதை போல நிர்ணயிக்கப்பட்டுள்ளது, நீங்கள் அதன் மீது செல்கிறீர்கள். நீங்கள் எவ்வளவு வேகமாக, எவ்வளவு தூரம் செல்வீர்கள்?. நாம் விதிமுறையை எவ்வளவு ஆழமாகப் புரிந்து உணர்கிறோம் என்பது மட்டுமல்லாமல் அதனுடன் நாம் எவ்வளவு ஒத்துப்போகிறோம்? என்பதுதான் நமக்கான ஒரே கேள்வி.

உங்கள் வாழ்க்கையில் தவறாகப் போகக்கூடிய ஒரே விஷயம்

முழுத்திறனுக்கு வளராத மரம், முமுமையாக வளர்ந்த மரம்

அடிப்படையில், ஒட்டுமொத்த யோக அறிவியலும் மற்ற உயிர்களுடன் முழுமையான ஒத்திசைவில் இருப்பதைப் பற்றியே இருக்கிறது. இதனால் உங்கள் வாழ்க்கை ஆனந்தமாகவும், உற்சாகமாகவும், அதன் முழுத் திறனுடனும் நிகழ்கிறது.. உங்கள் வாழ்க்கையில் தவறாகப் போகக்கூடிய ஒரே விஷயம் இதுதான்: உங்கள் உயிரின் முழு வெளிப்பாட்டையும் நீங்கள் காண்கிறீர்களா? இல்லையா? ஒரு மரத்தில் என்ன தவறு இருக்கலாம்? அது அதன் முழுத் திறனுக்கு வளருமா, அல்லது பாதியளவு வளர்ந்த மரமாகவே அது இறந்துபோகுமா? என்பதுதான் ஒரே கேள்வி. மனிதனுக்கும் இதே கேள்வி பொருந்துகிறது. நீங்கள் இயற்கையின் அல்லது பிரபஞ்சத்தின் அல்லது உயிரின் விதிமுறைகளுக்கு இசைவாக இருந்தால், உங்கள் முழு சாத்தியத்துக்கு வளருவீர்கள். இல்லையென்றால், ஏதோ ஒரு விதத்தில் நீங்கள் வளர்ச்சி குன்றியவர்களாகி விடுவீர்கள். மக்கள் இது குறித்த விழிப்புணர்வில் இல்லையென்றாலும்,. அடிப்படையில், இதில் மட்டும்தான் நாம் கவனம் செலுத்துகிறோம். அவர்களின் ஆசைகள், லட்சியங்கள் மற்றும் ஏக்கங்கள் அனைத்தும், ஒரு பூரணத்துவம் அடைந்த உயிராக அல்லது வாழ்க்கையாக மலரும் நோக்கத்தில்தான் இருக்கிறது. நீங்கள் ஒரு முழுமையான உயிராக மாற விரும்பினால், இந்த வாழ்க்கை யாருடைய அடிப்படையில் நிகழ்கிறதோ, அந்த விதிமுறைகளைப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது.

சனாதன தர்மம் இன்று நீர்த்துப் போய்விட்டதா?

சனாதன தர்மம் உங்களுக்கோ எனக்கோ சொந்தமில்லை – அது படைப்பு வகுத்தது. அதனுடன் ஒத்திசைவில் இருப்பதுதான் உங்களுக்கும், எனக்கும் உரியது. இங்கே இந்தியாவில், நாம் அதைப் புரிந்துகொண்டு,சட்டங்களாக்கி, ஒரு குறிப்பிட்ட விதமாகத் தொகுத்தோம்.. உலகின் மற்ற பகுதிகளில், இதைப் பற்றி ஒருவரும் அறிந்திருக்கவில்லை என்று இதற்கு அர்த்தமல்ல.. பல தனிப்பட்ட மக்கள் இது பற்றி அறிந்திருந்தனர். அவர்கள் அதை ஸ்ருதி மற்றும் ஸ்மிருதி என்று தொகுத்து எழுதாமல் இருந்திருக்கலாம். ஆனால் உலகெங்கிலும் உள்ள எண்ணற்ற மனிதர்கள் அதனுடன் ஒத்திசைவில் இருந்துள்ளனர், ஏனென்றால் எல்லா இடங்களிலும், மனிதர்கள் மலர்ந்து சிறப்பாக வாழ்ந்திருக்கிறார்கள்.

எனவே சனாதன தர்மம் இன்று நீர்த்துப் போய்விட்டதா? என்றால், அதை நீர்த்துப்போகச் செய்வது கூட நம் கைகளில் இல்லை. தனிப்பட்ட புரிதல் நீர்த்துப் போயிருக்கலாம். நபருக்கு நபர், புரிதலின் பரிமாணங்கள் வெவ்வேறாக இருக்கலாம். ஆனால் நீங்கள் சனாதன தர்மத்தை நீர்த்துப்போகச் செய்ய முடியாது, ஏனென்றால் அது உயிரின் அடித்தளமாக இருக்கிறது. நீங்கள் அதை நீர்த்துப்போகச் செய்ய முடியாது, ஏனென்றால் அதனை நீங்கள் உருவாக்கவில்லை.

___________________________________________________________________________________________________________

ஆசிரியரின் குறிப்பு: "பாரதம் – மறைக்கப்பட்ட உன்னத வரலாறு" ஒளிப்பேழையை டவுன்லோடு செய்யுங்கள்! நம் பாரத நாட்டில் எத்தனை எத்தனையோ மகத்தான விஷயங்கள் நடந்திருந்தாலும் அவற்றை பள்ளிக்கூடத்தில் என்றாவது நாம் படித்திருக்கிறோமா? இந்தியர்கள் மறந்தது சில, நம்மிடமிருந்து மறைக்கப்பட்டது பல. இந்த மண்ணில் பிறந்ததற்காக பெருமைப்படும் பல அம்சங்களை சத்குரு அவர்கள் இந்த ஒளிப்பேழையில் அழுத்தம் திருத்தமாக பதிந்திருக்கிறார். ஒவ்வொரு பள்ளியிலும் கல்லூரியிலும் இருக்க வேண்டிய, உத்வேகமளிக்கும் ஒளிப்பேழை இது. ஒவ்வொரு இந்தியனும் பார்க்க வேண்டிய அற்புத தொகுப்பு இது.