சைனஸா..? அதை இல்லாமல் செய்யலாம் வாங்க!
சைனஸ் பிரச்சினைக்காக அடிக்கடி மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் நிலையில் நீங்கள் இருக்கிறீர்களா? மாத்திரைகளின் அவசியமின்றி, வாழ்க்கைமுறையில் சில எளிய மாற்றங்கள் மற்றும் சில யோகப் பயிற்சிகளைச் செய்து இப்பிரச்சினையில் இருந்து விடுபட சத்குரு வழங்கும் வழிகள் இதோ...
சைனஸ் பிரச்சினைக்காக அடிக்கடி மாத்திரைகள் எடுத்துக்கொள்ளும் நிலையில் நீங்கள் இருக்கிறீர்களா? மாத்திரைகளின் அவசியமின்றி, வாழ்க்கைமுறையில் சில எளிய மாற்றங்கள் மற்றும் சில யோகப் பயிற்சிகளைச் செய்து இப்பிரச்சினையில் இருந்து விடுபட சத்குரு வழங்கும் வழிகள் இதோ...
Subscribe
சத்குரு:
சைனஸ் எனப்படும் உங்கள் மூச்சுக் குழாய்களின் அமைப்பு மிகவும் சிக்கலானது. அதில் அடைப்பு எங்கே உண்டாகும், அது எங்கே ஒழுகும் என்பதெல்லாம் பல விஷயங்களை சார்ந்திருக்கிறது. பொதுவாக மக்கள் படுக்கும்போதுதான் சைனஸ் அடைப்பை அதிகமாக உணர்கிறார்கள். ஆனால் இந்தப் பிரச்சினை பல விதங்களில் உருவாகலாம்.
உங்கள் சைனஸ் பகுதிகள் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பதும், உங்கள் உடற்திரவங்கள், அதிலும் குறிப்பாக தலைப் பகுதியில் இருக்கும் திரவங்கள் எந்த அளவிற்கு சீராக இருக்கிறது என்பதும் பல விஷயங்களை தீர்மானிக்கிறது. உங்கள் மூளை செயல்பாடு, நல்வாழ்வு, சமநிலை, புத்திக்கூர்மை, ஐம்புலன்களின் கூர்மை என இப்படி பல விஷயங்கள் அதைச் சார்ந்திருக்கிறது.
இதற்கான யோகப் பயிற்சிகள்:
உங்கள் சைனஸ் பகுதிகளில் இருக்கும் திரவங்கள் சமநிலையாக இருப்பதும், அவற்றின் ஓட்டம் சீராக இருப்பதும் மிகவும் முக்கியம். இதற்கு என்ன செய்யவேண்டும்? முறையாக "கபாலபாதி" தொடர்ந்து செய்துவந்தால் (சூன்ய தியான வகுப்பில் கற்றுத்தரப்படும் "சக்தி சலன க்ரியா" எனும் பயிற்சியின் ஒரு பகுதி) அது இந்தச் சமநிலையை உருவாக்கும். அதற்குமுன் "ஜல நேதி" எனும் தயார்நிலை பயிற்சியையும் சேர்த்து செய்வது உடலிலுள்ள கபத்தைக் (சளி) குறைக்கும். ஆனால் இந்த ஜலநேதி பயிற்சியை முறையாகக் கற்கவேண்டும். உங்களுக்குத் தேவைப்பட்டால், அதை எங்கள் ஹடயோகா ஆசிரியர்களிடம் நீங்கள் கற்கலாம்.
அதிகப்படியான கபம் இந்த அடைப்பை உண்டுசெய்வதால், அடைப்பில் இருந்து வெளிவர ஒரு எளிய அணுகுமுறை, இந்தக் கபத்தைக் குறைப்பது. இதன் இன்னொரு அம்சம், ஒரு குறிப்பிட்ட சைனஸ்பகுதியில் மட்டும் அடைப்பு ஏன் ஏற்படுகிறது என்று பார்ப்பது. இப்பிரச்சினைக்கு நவீன மருத்துவம், இந்த திரவங்களை இரசாயனரீதியாக வற்றவைக்கும் மாத்திரைகளை பரிந்துரைக்கிறது. இப்படிப்பட்ட "ஆன்டிஹிஸ்டமைன்" (antihistamine) மருந்துகளை உட்கொண்டால், அது உடலிலுள்ள எல்லா திரவங்களையும் பாரபட்சமின்றி வற்றவைக்கிறது. இந்தத் திரவங்கள் எல்லாம் உடலின் செயல்பாட்டிற்கு மிக அவசியம். அதிலும் குறிப்பாக, ஐம்புலன்களின் இயக்கம் இத்திரவங்களின் ஓட்டத்தை சார்ந்தே இருக்கிறது. அதனால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அலர்ஜிகள் இருந்தாலேயன்றி, இத்திரவங்களை வற்றவைப்பது நல்லதல்ல.
அலர்ஜியால் உண்டாகும் சைனஸ் பிரச்சினைக்கு:
சைனஸ்களில் ஏற்படும் இந்த அடைப்பு சிலநேரம் அலர்ஜியினாலும் இருக்கலாம். வீட்டில் தூசி, அல்லது உங்களுக்கு உறுத்தல் உண்டாக்கக்கூடிய ஏதோவொன்று இருந்தால், அதனாலும் உங்கள் சைனஸில் அடைப்பு ஏற்படலாம். அதனால் வீட்டில் தூசி இல்லாமல் பார்த்துக்கொள்வதும், அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களை எதிர்கொள்ளும் எதிர்ப்புசக்தியை உடலில் உருவாக்குவதும் அவசியம். இதற்கு ஒரு வழி, உணவருந்திய பிறகு ஒரு ஸ்பூன் தயிருடன் ஒரு ஸ்பூன் தேனைச் சேர்த்து எடுத்துக்கொண்டு, அடுத்த 1.5 முதல் 2 மணி நேரத்திற்கு தண்ணீர் குடிக்காமல் இருக்கவேண்டும். இது உடலில் உள்ள ஈசினோஃபில் (eosinophil) எனப்படும் ஒருவகை இரத்த வெள்ளையணுக்களின் எண்ணிக்கையைக் குறைத்து, உங்களின் அலர்ஜியை பெருமளவு குறைக்கிறது. ஆனால் இது ஒரே பசுமாட்டின் பாலிலிருந்து எடுத்த தயிராக இருக்கவேண்டும். கடையில் வாங்கும் 'பல மாடுகளின் பாலைச் சேர்த்து செய்யும்' தொழிற்சாலை-உற்பத்தி தயிரில் இது வேலைசெய்யாமல் போகலாம்.
பால் குடிப்பதால் ஏற்படும் பாதிப்பு:
இன்று உலகில் பலரும் தொழிற்சாலைப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் பாலைக் குடிக்கிறார்கள். அப்படிக் குடிக்கும்போது பால் குடிப்பதில் இருக்கும் பெரும்பான்மையான பலன்கள் இல்லாமற் போகிறது. பல்வேறு விலங்குகள் கொடுக்கும் பாலைக் கலந்தால், இது மிகவும் சிக்கலான மரபணுக்களின் கலவையாக மாறிவிடுகிறது. இதைப் பருகுவதால் கிடைக்கும் நன்மைகளை விட, உண்டாகும் கேடுதான் அதிகமாக இருக்கிறது. விலங்குகளிடமிருந்து மூலப்பொருள் எடுத்து, அதைக்கெண்டு நாம் உற்பத்தி செய்யும் உணவுப்பொருள் எதுவாக இருந்தாலும், குறைந்தபட்சம் அது ஒரே விலங்கிலிருந்து வந்ததாகவாவது இருக்கவேண்டும். இப்படி தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யப்படும் பால்-பொருட்கள் உட்கொள்வதை நிறுத்தினாலே, உங்கள் சளிப் பிரச்சனைகள் அடுத்த இரண்டு வாரங்களில் காணாமல் போக வாய்ப்பிருக்கிறது. கபத்தை களைக்க நீங்கள் உடனடியாக செய்யக்கூடிய இன்னொரு எளிமையான விஷயம், காலையில் எழுந்ததும் வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிப்பது.
அதாவது இப்பிரச்சினைக்கு நீங்கள் செய்யக்கூடியவை:
- தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் பால்-பொருட்களை தவிர்க்கவேண்டும்.
- வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
- தேவையான அளவு கபாலபாதி செய்யவேண்டும் (சக்தி சலன க்ரியாவிற்கு தீட்சை பெற்றிருந்தால் மட்டும்).
- சூர்ய நமஸ்காரம் அல்லது சூர்ய க்ரியா செய்யவேண்டும்.
இப்பயிற்சிகள் மூலமாக உடலில் போதுமான உஷ்ணம் அல்லது சமத்பிராணம் உருவாக்கினால், அதிகளவில் கபம் உற்பத்தியாவது குறைந்துவிடும். மாத்திரைகள் எடுத்து கபத்தை வற்றவைப்பது நல்லதல்ல.