தற்கொலை எண்ணம், மனச்சோர்வு மற்றும் யோகா
மனச்சோர்வு மற்றும் மன ரீதியான பிரச்சனைகள் மக்களை தற்கொலை என்னும் தீவிரமான நிலைக்குக் கொண்டு செல்கிறது. தற்கொலைக்கான காரணங்களை ஆழமாக ஆராய்ந்து, மேலும் வெளிச்சூழ்நிலைகள் எவ்வாறு இருந்தாலும் ஒருவர் தன் இயல்பால் ஆனந்தமாக இருக்க யோகா எவ்வாறு உதவுகிறது என்பதைப் பற்றி சத்குரு விளக்குகிறார்
தற்கொலை எண்ணம் எவ்வாறு உருவாகிறது?
ஒரு மனித உயிரை தானே மாய்த்துக்கொள்ள ஏன் விரும்புகிறார்? தங்களின் வாழ்க்கை சூழ்நிலை காரணமாக சிலர் தற்கொலை செய்துகொள்ளலாம். ஆனால் பெரும்பாலானோர் தங்களின் மன ரீதியான பிரச்சனை காரணமாகத்தான் தற்கொலை செய்துகொள்கிறார்கள்.
Subscribe
நம் உடலியல் மற்றும் உளவியல் அமைப்புகளை எவ்வாறு கையாள்வது என்று நமக்கு பாடம் சொல்லிக் கொடுக்கும் வகையில் நம் பள்ளிக்கல்வி அமைப்புகளில் எந்தவித கற்பித்தலும் இல்லை. பெரும்பாலான மனிதர்களுக்கு அவர்களின் அறிவுத் திறனை எவ்வாறு கையாள்வது என்றே சொல்லிக் கொடுக்கப்படவில்லை. உங்களுக்கு தற்போது இருக்கும் அளவில் பாதி அளவு மூளை இருந்தால் எந்த மனநோயும் உங்களுக்கு வராது. தற்போது உங்களுக்கு ஒரு குறிப்பிட்ட நிலையில் அறிவுத்திறன் உள்ளது, ஆனால் உங்கள் அறிவை உங்கள் நல்வாழ்விற்கு எவ்வாறு உபயோகிப்பது என்பது பற்றி சொல்லிக்கொடுக்கும் எந்தவித பயிற்சியோ, சமூக சூழலோ உங்களுக்கு இல்லை. இதனால் உங்கள் அறிவே உங்களுக்கு எதிராக செயல்படுகிறது. மிகவும் நம்பிக்கையற்றவிதமாக, இதிலிருந்து தப்பித்து வெளியேறும் வழியே இல்லை எனும் வகையில் இருக்கிறது. மக்கள் தற்கொலை செய்துகொள்ள இதுதான் வழி வகுக்கிறது.
முறையான ஒரு சமூக அமைப்பு உருவாக்கப்பட்டு, சிறுவயதிலிருந்தே ஒவ்வொருவரும் சில யோகப் பயிற்சிகளை கற்றுக்கொண்டால், தற்கொலை நிகழாமல் தடுக்க முடியும். அதன்மூலம் தங்களின் சொந்த இயல்பில் தாங்களே ஆனந்தமாக இருப்பதால், அவர்களின் வாழ்க்கை அனுபவம் இயல்பாகவே இனிமையானதாக இருக்கும். அவர்கள் தங்களின் சொந்த இயல்பில் அவர்களாகவே ஆனந்தமாக இருந்தால், ஒருவர் ஏன் தன் உயிரை தானே மாய்த்துக்கொள்ளப் போகிறார்? ஏன் ஒருவர் மனச்சோர்வோடு இருக்கப் போகிறார்?
மனச்சோர்வில் இருந்து வெளியேறும் வழி
“மனச்சோர்வு“ என்ற வார்த்தைக்கு மருத்துவரீதியான மனச்சோர்வு என்று மட்டும் பொருள் அல்ல. உங்கள் வாழ்க்கையில் இன்று ஏதோ இரண்டு விஷயங்கள் தவறாக நிகழ்ந்தால், நீங்கள் லேசான மனச்சோர்வை அடையலாம். பெரும்பாலான மக்கள் ஏதோ ஒரு வாழ்க்கை சூழல் காரணமாக ஒருசில நேரங்களில் மனச்சோர்வு அடைகின்றனர். ஆனால் சில மணி நேரங்களிலேயே அதிலிருந்து வெளியேற அவர்களால் முடிகிறது. அவர்கள் ஒருவித உத்வேகத்தை உபயோகிக்கின்றனர் - யார் மேலாவது கொண்ட அன்பு, தேசம் அல்லது அவர்கள் வாழ்க்கையில் அவருக்கு முக்கியமான ஏதோ ஒன்று - என ஏதேனும் ஒன்றை உபயோகித்து மனச்சோர்வில் இருந்து வெளியேறுகிறார்கள். உங்களுடன் நீங்களே உரையாடிக் கொள்ளலாம் அல்லது உங்கள் நண்பருடன், குடும்பத்தாருடன் உரையாடலாம். அவர்கள் அந்த உரையாடலின் மூலம் உங்களை அதிலிருந்து வெளிக்கொணர்வார்கள். இல்லையெனில், நீங்கள் ஒரு தொழில்முறை வல்லுனரின் உதவியை நாடலாம்.
மனச்சோர்வை விட்டு வெளியேற வழியே இல்லை என்றால், ஒரு உளவியலாளர் எதற்காக உங்களோடு அமர்ந்து மணிக்கணக்கில் உரையாடுகிறார்? உங்களோடு உரையாடுவதன் மூலம் உங்களை அதில் இருந்து வெளிக்கொண்டுவர முடியும் என்று வெளிப்படையாக அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. இல்லையெனில் அதற்கு மருத்துவ ரீதியான இரசாயன உதவியும் உண்டு. வேதியியலைப் பற்றி கூறும்போது, இந்த மனித அமைப்புதான் உலகத்திலேயே முதன்மையான மிக அதிநவீன இரசாயனத் தொழிற்சாலை. உங்கள் முன்னால் இருக்கும் ஒரே ஒரு கேள்வி நீங்கள் ஒரு திறமையான மேலாளரா அல்லது திறமையற்ற மேலாளரா என்பது மட்டும்தான். யோகா என்பதற்கான அர்த்தம் உங்களின் சொந்த இரசாயனத் தொழிற்சாலைக்கு நீங்கள் ஒரு திறமையான மேலாளராக மாறுவதுதான்.
யோகாவின் மூலம் தற்கொலையை தவிர்த்தல்
பல லட்சக்கணக்கான மக்கள் யோகாவின் மூலம் பயனடைந்துள்ளனர் என்பதைப் பற்றி எந்த சந்தேகமும் இல்லை. அது நன்றாக வேலை செய்கிறது என்பதைப் பற்றி நமக்கு தேவைப்படும் அளவு அனுபவபூர்வமான தகவல்கள் உள்ளன. ஆனால் இப்போது இரத்த மாதிரிகள் ஆராயப்படுகின்றன. மரபணுக்களின் தன்மைகூட யோகப் பயிற்சிகள் மூலமாக மாறுகிறது என்று இதன் மூலம் நமக்குத் தெளிவாக தெரிகிறது.
இவை தெளிவாக எடுத்துக் காட்டுவது யாதெனில், முறையான பயிற்சிகளை சரியாகச் செய்வதன் மூலம், நீங்கள் மனநோயைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், அதில் இருந்து வெளியேறவும் முடியும். ஒரே ஒரு பிரச்சனை என்னவென்றால், மனச்சோர்வு நிலையில் இருக்கும் ஒருவரை பயிற்சி செய்ய வைப்பது என்பது பெரும் சவாலாக இருக்கிறது. எல்லா வகையிலும் அவர்களை ஆதரித்து, ஒவ்வொரு நாளும் அவர்கள் யோகப் பயிற்சி மேற்கொள்ள ஊக்குவிக்கும் அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய மனிதர்கள் அவர்களைச் சுற்றி இருந்தாலொழிய இது நடவாது. இதை செய்வதன் மூலம் பல ஆயிரக்கணக்கான மக்கள் பல்வேறு மனரீதியான பிரச்சனைகளிலிருந்து வெளியே வந்துள்ளதை நான் உங்களுக்கு காண்பிக்க முடியும். ஏனெனில், அதற்கு ஆதரவான சூழலை நாங்கள் உருவாக்குகின்றோம். இதை ஒவ்வொரு இல்லத்திலும் உருவாக்குவது என்பது சாத்தியப்படாமல் இருக்கலாம். இதை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பதுதான் கேள்வி. இருப்பினும், நோய்வாய்ப்பட்டவர்கள் சிலரைக் குணப்படுத்துவது மிகக் கடுமையானதாக இருக்கலாம். அத்தகைய நோயாளிகளையும் நாங்கள் கவனித்துள்ளோம். மேலும் குறிப்பிடத்தக்க வகையில் அவர்களின் மருந்து அளவை நாங்கள் குறைத்துள்ளோம்.
ஆசிரியர் குறிப்பு: மனச்சோர்வு மற்றும் எதிர்மறை எண்ணங்களுக்கு விடை கொடுங்கள். மேலும் ஈஷா யோகா ஆன்லைன் மூலம் ஆனந்தமான, உற்சாகமான, நிறைவான வாழ்க்கையை வாழ பழகிக்கொள்ளுங்கள். கொரோனா செயல் வீரர்களுக்கு இலவசமாகவும், மற்ற அனைவருக்கும் பாதிக் கட்டணத்திலும் வழங்கப்படுகிறது. இப்பொழுதே பதிவு செய்யுங்கள்!