குழந்தைகள்... சில உண்மைகள்! பகுதி 9

நிமிடத்திற்கு நூறு சேனல்கள் மாற்றி மாற்றி டிவி பார்க்கும் இன்றைய இளைய தலைமுறை, நேரம்காலம் தெரியாமல் வீடியோ கேம்ஸ்களிலும் மூழ்கிக்கிடக்கிறார்கள். இதன் பின்விளைவுகள் என்ன? இதிலிருந்து வெளிவர பெற்றோர்கள் அவர்களை எப்படி வழிநடத்த வேண்டும்? சத்குரு இதுகுறித்து பேசியபோது...

Question: ‘‘சத்குரு... தொலைக்காட்சி எங்கள் நேரத்தை அதிகமாக ஆக்கிரமிக்கிறது. நாங்களே அதை விரும்பிப் பார்ப்பதால், எங்கள் குழந்தைகளையும் அதிகமாகத் தடுக்க முடியவில்லை. இதைப்பற்றி தங்கள் கருத்தை அறிய விரும்புகிறோம்!’’

சத்குரு:

‘‘நீங்கள் விரும்பும்படி வாழ்வதற்கான தைரியம் உங்களுக்கு இல்லை. எனவேதான் சினிமாவையோ, டி.வி-யையோ மிகவும் விரும்பிப் பார்க்கிறீர்கள். சினிமா அல்லது டி.வி-யில் நீங்களாக உங்கள் வாழ்க்கையில் எதுவும் செய்யத் தேவை இருக்கவில்லை. ஏனெனில், உங்களுக்காக உங்கள் கதாநாயகன், கதாநாயகி காதலிக்கிறார்கள். சண்டை போடுகிறார்கள். குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள், எல்லாமே அவர்கள் செய்கிறார்கள். நீங்கள் எதுவும் செய்யத் தேவை இருக்கவில்லை. எனவேதான் அனைவரும் டி.வி-யை விரும்புகிறார்கள். மற்றவர்கள் மூலமாகத் தாங்கள் வாழ நினைக்கிறார்கள். நீங்கள் சென்று யாரையாவது காதலிக்க வேண்டுமென்றால், ஏகப்பட்ட பிரச்சனைகள் வரும்... இல்லையா? நீங்கள் சென்று யாருடனாவது சண்டையிட வேண்டுமென்றால், எத்தனையோ பிரச்சனைகள் வரும். ஆனால், உங்கள் கதாநாயகன் உங்களுக்காகக் காதலிக்கும்போதோ, சண்டையிடும்போதோ உங்களுக்கு ஒரு பிரச்சனையும் இல்லை, வீட்டிலேயே உட்கார்ந்து எல்லா அனுபவங்களையும் பெற்றுக் கொள்ளலாம். எங்கும் போகத் தேவை இல்லை, எதுவும் செய்யத் தேவை இல்லை.

நீங்கள் விரும்பும்படி வாழ்வதற்கான தைரியம் உங்களுக்கு இல்லை. எனவேதான் சினிமாவையோ, டி.வி-யையோ மிகவும் விரும்பிப் பார்க்கிறீர்கள்.

நீங்கள் யாரையெல்லாம் வீட்டுக்குள் விடமாட்டீர்களோ, அவர்கள் டி.வி மூலமாக உங்கள் வீட்டுக்குள் புகுந்துவிட்டார்கள். குடிகாரர்கள், கொலைகாரர்கள், பேய், பிசாசு எல்லோரும் புகுந்து நடனமாடிக்கொண்டு இருக்கிறார்கள். எந்த அளவுக்கு அவர்களை உங்கள் வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டும் என்பதை நீங்கள்தான் முடிவெடுக்க வேண்டும். இல்லையென்றால், வீட்டையும், உங்கள் மனதையும், குழந்தைகள் மனதையும் முழுமையாக ஆக்கிரமித்துக் கொள்வார்கள். நவீன விஞ்ஞானத்தால் ஏற்பட்ட மன முதிர்ச்சியற்ற விளைவுகளில் இதுவும் ஒன்று. எதையாவது புதிதாகக் கண்டுபிடித்துவிட்டால், அதை உடனே உலகம் முழுக்கப் பரப்பிவிடத் துடிக்கிறார்கள். ஏனெனில், அதில் பணம் புழங்குகிறது. மற்றொரு காரணம், சிறிது தாமதம் செய்துவிட்டாலும், வேறு யாராவது அதே போல் கண்டுபிடித்துப் பணம் பண்ணிவிடுவார்கள்.

புதிய கண்டுபிடிப்புகளில் நன்மை இல்லாமல் இல்லை. ஆனால், எந்த ஒரு கண்டுபிடிப்பையும் எந்த அளவுக்குப் பயன்படுத்துவது என்று நாமும் பார்க்க வேண்டும். இப்போது 24 மணி நேரமும் டி.வி ஓடுகிறது. 200 சேனல்களுக்கு மேல் இருக்கின்றன. எனவே, எல்லா சேனல்களும் உங்களை எப்படிக் கவர்வது என்று 24 மணிநேரமும் போட்டி போடுகின்றன. எனவேதான் பேயும் பிசாசும் உங்கள் டி.வியில் உலவுகின்றன. குழந்தைகள் அந்தக் காட்சிகளைப் பார்க்கும்போது பயப்படுபவர்களாகவும் மனக் கோளாறுடனும் வளர்வார்கள். எதையாவது புதிதாகக் கண்டுபிடித்தால், 10 வருடங்கள் கழித்து அந்தக் கண்டுபிடிப்பால் என்னென்னப் பிரச்னைகள் ஏற்பட்டன என்று விரிவாகச் சொல்கிறார்கள். உடனே வேறொன்றை புதிதாக அறிமுகப் படுத்துகிறார்கள். அடுத்து 10 வருடங்கள் கழித்து அந்தக் கண்டுபிடிப்பில் ஏற்பட்ட பிரச்சனைகள் என்னென்ன என்று அடுக்குகிறார்கள். இப்படித்தான் போய்க்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், வாழ்க்கை எப்போதும் உங்களைத் தொடர்ந்து மன்னித்துக்கொண்டே இருக்காது. நமக்கு ஏதாவது ஒன்றில்கூட முழுமையாகப் புரிதல் இல்லை. மருத்துவத்தில்கூட ஒவ்வொன்றுக்கும் சிறப்பு மருத்துவரை வைத்திருக்கிறோம். கண்ணுக்கு ஒரு மருத்துவர், மூக்குக்கு ஒரு மருத்துவர், காதுக்கு ஒரு மருத்துவர், விஞ்ஞானம் இப்படித்தான் ஒவ்வொன்றையும் பகுத்துக்கொண்டே போகிறது. மனிதனின் தேவைகள் குறித்து முழுமையாகச் சிந்திப்பவர் யாரும் இல்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அமெரிக்காவில் டி.வி, வீடியோ போன்ற ஒளி ஊடகங்களில் மக்கள் அதிக நேரம் செலவழிக்கிறார்கள். சிறுவர்களைவிட இளைஞர்கள் அதிக நேரத்தைச் செலவழிக்கிறார்கள். சிறுவர்களைவிட இளைஞர்கள் அதிகம் வீடியோ கேம்ஸ் விளையாடுகிறார்கள். 26-லிருந்து 30 வயது வரை உள்ள இளைஞர்கள்தான் அதிகம் வீடியோ கேம்ஸில் உட்கார்ந்துகொண்டு ‘டிஷ்யூம் டிஷ்யூம்’ என்று சுட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் இன்னமும் சிறுவர்களாகவே இருக்கிறார்கள். வளர்ச்சி பெறவே இல்லை. அந்த வயது வாலிபர்களில் சுமார் 34 சதவீதம் பேர் இப்படி 1 நாளில் சுமார் 6 மணி நேரம் விளையாடுகிறார்கள். இது தேசத்தின் வளர்ச்சிக்கே அழிவைக் கொடுக்கும்.

நீங்கள் யாரையெல்லாம் வீட்டுக்குள் விடமாட்டீர்களோ, அவர்கள் டி.வி மூலமாக உங்கள் வீட்டுக்குள் புகுந்துவிட்டார்கள். குடிகாரர்கள், கொலைகாரர்கள், பேய், பிசாசு எல்லோரும் புகுந்து நடனமாடிக்கொண்டு இருக்கிறார்கள்.

இப்போது அமெரிக்காவில், ஒரு வருடத்தில் சுமார் 5,000 பொறியாளர்கள்தான் உருவாகிறார்கள். ஆனால், சீனாவில் 6,20,000 பொறியாளர்கள் உருவாகிறார்கள். இளைஞர்கள் இது போன்று டி.வி, வீடியோ கேம்ஸில் தீவிரமாக ஈடுபடும்போது இதுபோன்ற சரிவு தவிர்க்க முடியாதது. 11, 12 வயது சிறுவர்கள் இது போன்ற விளையாட்டுகளில் ஈடுபட்டால், அது வேறு. ஆனால், 25 வயது இளைஞர்கள் வாழ்க்கையில் உத்வேகத்துடன் ஈடுபட வேண்டிய நேரத்தில், இது போன்ற மனதைக் கெடுக்கும் செயல்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இது நிச்சயமாக தேசத்தைச் சேதத்துக்கு இட்டுச் செல்லும். இந்தச் சேதம் பொருளாதாரம் பற்றியதாக மட்டும் இருக்காது.

10 வருடங்களுக்கு முன்பு டி.வியைத் திறந்தால் காட்சிகள் மெதுவாக நகரும். இப்போது காட்சிகள் மின்னல் வேகத்தில் இருக்கின்றன. இது அனைவருக்கும் குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் கெடுதல். அந்தக் காட்சிகளைப் பார்ப்பவர்கள் டி.வி-க்கு முன்பு நிறைய நேரம் உட்கார்ந்திருக்கும்போது கண்களைக்கூட இமைக்காமல், அசையாமல் உட்கார்ந்து பார்க்கிறார்கள். இவை அவர்களுக்கு சிறிது காலம் கழித்துத் துன்பம் தரும். ஏனெனில், நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு காட்சியும், கேட்கும் ஒவ்வொரு சப்தமும் மூளையில் ஒரு குறிப்பிட்ட விதத்தில் விளைவை உண்டாக்குகிறது. அவை அவர்கள் மனதுக்குள்ளேயே இருந்து நீண்ட காலத்துக்கு வினையாற்றும். குழந்தைகள் வீட்டில் இன்டர்நெட் பார்க்கிறார்கள். தெருவில் வீடியோ கேம் விளையாடுகிறார்கள். விளையாட்டிலேயே குண்டு எறிகிறார்கள், துப்பாக்கியால் சுடுகிறார்கள். உலகத்தின் உண்மை நிலையை சிறுவர்களும் அறிவதில் தவறில்லை என நாம் நினைத்துக் கொள்கிறோம். ஆனால், விளைவு சாதாரணமாக இருப்பதில்லை.

யாரோ ஒருவர் இது போன்ற விளையாடடுக் கருவிகளை வைத்துக்கொண்டு பணம் பண்ண முயற்சித்தால், நாம் அதை அனுமதிக்கக் கூடாது. இது குழந்தைகளின் மனநிலையை மாற்றும். சில காலம் கழித்து அவர்கள் தங்கள் மனதையே கையாள முடியாமல் போய்விடும். பிம்பங்கள் திரையில் வரும் தற்போதைய வேகம் அவர்களுக்கு கெடுதலைத் தரும். இது போன்ற காட்சிகளைத் தொடர்ந்து பார்க்கும் சிறுவர்களுக்குப் பின்னாளில் தியானம்கூட சொல்லித்தர முடியாது. ஏனெனில், அவர்களால் ஓர் இடத்தில் நிலையாக உட்கார முடியாது, அப்படி மாறிவிடுவார்கள். இப்போது நம் நாட்டில் பள்ளிச் சிறுவர்களை வைத்துப் பார்த்தால்கூட, கிராமத்துச் சிறுவர்கள் எந்த சிரமமும் இல்லாமல் ஒரே இடத்தில் நிலையாக உட்கார முடிகிறது. ஆனால், நகரத்துச் சிறுவர்களால் அப்படி உட்கார முடிவதில்லை.

மனிதனுடைய பெரிய நோயே எதிலும் நிலையாக, உறுதியாக இருக்க முடியாததுதான். உடலளவில், மன அளவில் எதிலும் உறுதியாக இருக்க முடியாததுதான் அவனுக்கு நோயாக மாறுகிறது. தாங்கள் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காகப் பலர், மனிதர்களை இந்த நிலைக்கு ஆளாக்கிவிடுகிறார்கள். மனிதர்களின் வாழ்வில் சிறிது நேரம்கூட அமைதி இருப்பதில்லை. நான்கு பேர் சேர்ந்து உலாவச் சென்றால்கூட, அந்த நால்வருமே தனித்தனியாக வேறு யாரோ ஒருவருடன் செல்போனில் பேசிக்கொண்டே நடக்கிறார்கள்.

நீங்கள் எங்காவது மலைப் பகுதிக்கோ, ஏரி - சமுத்திரப் பகுதிக்கோ சென்று 2, 3 நாட்கள் தங்கியிருந்தால், திடீரென்று அவை உங்களுக்குள் ஓர் இனிமையான தாக்கம் ஏற்படுத்துவதை உணர முடியும். ஏனெனில், உங்களுக்குள் இயற்கையான விஷயங்கள் அதிகம் நுழையும்போது அனைத்தும் இனிமையாகிறது.

நமது மனிதநேயம்கூடத் தற்போது இத்தனைக் குழந்தைத்தனமாகத்தான் இருக்கிறது. நாம் எதிலாவது ஆர்வப்பட்டு விட்டால், எந்த இடத்தில் நிறுத்திக்கொள்வது என்பது தெரியவில்லை. விளைவுபற்றிக் கவனமில்லாமல் செயல்படுகிறோம்.

எப்போதையும்விட தற்போதைய மனித சமுதாயம் மிகவும் வலிமை இழந்து இருக்கிறது. தொழில்நுட்பம் என்று பார்த்தால் மிகவும் அற்புதமானவை சாதிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், உடல், மன அளவில் பெரும்பாலான மக்கள் வலுவிழந்து இருக்கிறார்கள். ஒலி&-ஒளிச் சாதனங்களின் பயன்பாட்டை மக்கள் மிகவும் குறைத்துக்கொள்ள வேண்டும். இந்த சாதனங்கள் இல்லாதிருந்தால், நீங்கள் அவற்றைப் பார்த்துக்கொண்டு இருக்கும் நேரத்தில் உலாவச் சென்றிருப்பீர்கள், விளையாடச் சென்றிருப்பீர்கள்.

ஆனால், அதை விடுத்து இந்தச் சாதனங்கள் முன் மணிக்கணக்காக உட்காரும்போது, உங்களுக்குப் பதிலாக அந்தத் திரைக்குள் வேறு யாரோ உலாவச் செல்கிறார்கள். உங்களுக்காக விளையாடுகிறார்கள். உங்களுக்காக மலையேறுகிறார்கள். நீங்கள் வாழ்க்கையில் எதுவும் செய்யத் தேவை இல்லை. அந்தத் திரையோடு சேர்த்து உங்களுக்காக ஒரு சவப் பெட்டியையும் இணைத்துவிடலாம் போலிருக்கிறது.

நகரத்தில் இருப்பவர்களுக்கு டி.வி பார்ப்பது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே இருக்கிறது. அவர்கள் ஆசிரமத்துக்கு வந்தால் இங்கே இருப்பவர்களைப் பார்த்து, ‘ஓ... நீங்கள் டி.வி கூடப் பார்ப்பதில்லையா..?’ என்று பரிதாபமாகக் கேட்கிறார்கள். ஆசிரமத்து மக்கள் வாழ்க்கையில் ஏதோ தவறவிடுவதைப் போல முடிவெடுக்கிறார்கள். ஆசிரமத்து மக்கள் டி.வி பார்க்காததால் எதையும் இழந்துவிடவில்லை. நீங்கள் ஏதாவது கிணற்றுக்குள் விழுந்து சிக்கிக் கொண்டால், கிணற்றில் நடப்பது மட்டுமே வாழ்க்கை என்று நினைக்கிறீர்கள்.

நீங்கள் எங்காவது மலைப் பகுதிக்கோ, ஏரி - சமுத்திரப் பகுதிக்கோ சென்று 2, 3 நாட்கள் தங்கியிருந்தால், திடீரென்று அவை உங்களுக்குள் ஓர் இனிமையான தாக்கம் ஏற்படுத்துவதை உணர முடியும். ஏனெனில், உங்களுக்குள் இயற்கையான விஷயங்கள் அதிகம் நுழையும்போது அனைத்தும் இனிமையாகிறது. வாழ்க்கை என்றால் எப்படி இருக்க வேண்டும் என நமக்கு அவை நினைவூட்டுகின்றன.

சூரியன் உதிக்கிறான், பறவைகள் கூவுகின்றன, வண்ணத்துப் பூச்சிகள் பறக்கின்றன, மலர்கள் மலர்ந்திருக்கின்றன, காலையில் எழுந்து பார்த்தால், உங்கள் இதயம் இன்னமும் துடித்துக்கொண்டு இருக்கிறது. இந்த அற்புதங்களை எல்லாம் எப்போதாவது ரசித்திருக்கிறீர்களா? நீங்கள் இப்போது உங்களைச் சுற்றி எப்போதும் ஒரு பரபரப்பான உலகை உருவாக்கிக்கொண்டு இருக்கிறீர்கள்.

ஆனால், சில காலம் கழித்து அவை உங்களை வேறு பாதையில் செலுத்திவிடலாம். எனவே, உங்கள் குழந்தைகள் வழி தவறிப் போகாமல் இருக்க நீங்களும் கவனம் செலுத்த முடியும். உங்கள் குழந்தையின் மேல் நீங்கள் உங்களைத் திணிக்காமல், நட்பாய் பழகினால், அவர்கள் வழி தவறிப் போவது மிகவும் குறைவாக இருக்கும். ஆனால், அதை உறுதியாகக் கூற முடியாது.

எப்போது நீங்கள் ஒரு குழந்தையைப் பெற்றீர்களோ, அப்போதே நீங்கள் ரிஸ்க் எடுக்கத் தயாராகிவிட்டீர்கள் என்று அர்த்தம். ஏனெனில், நீங்கள் மட்டும் அவனைப் பாதிப்பதில்லை. அவன் வசிக்கும் தெரு, பார்க்கும் டி.வி நிகழ்ச்சிகள், நண்பர்கள், ஆசிரியர்கள் அனைவரும் தாக்கத்தை உண்டு செய்கிறார்கள். யார், எது அவனை அதிகமாகக் கவர்கிறதோ, அதன் வழி நடக்கத் தொடங்குகிறான். அவனது கவனத்தைப் பெரும்பாலும் கவர்வது நீங்களாக இருக்கும்படி பார்த்துக்கொண்டால், உங்களுடன் சேர்ந்திருப்பதையே விரும்புவான்.

எனவே, நீங்கள் உங்களை ஆனந்தமானவராகவும், அறிவுள்ளவராகவும், அற்புதமானவராகவும் மாற்றிக் கொண்டால், அவன் வேறு யாரையும் நாட மாட்டான். எதற்கும் அவன் உங்களையே தேடி வருவான். நீங்கள் அந்த நிலையில் இல்லாவிட்டால், வேறு யார் அவன் ஆர்வத்தைத் தூண்டுகிறார்களோ, அவர்கள் பக்கம்தான் போவான். 100 சதம் இதில் உறுதி சொல்ல முடியாவிட்டாலும் இப்படிப்பட்ட நிலைக்கு நீங்கள் மாறும்போது, அவன் உங்களைப் பின்பற்றும் வாய்ப்பு அதிகமாக இருக்கும்!’’

(முற்றும்)

குழந்தைகள்... சில உண்மைகள்! தொடரின் பிற பதிவுகள்