உண்மையான சாகசம் எது? (Adventure in Tamil)
சாகசமான ஒரு வாழ்க்கையை வாழ்வது எப்படி என்று ஆச்சரியப்படுகிறீர்களா? இந்தக் கட்டுரையில், சத்குரு சாகசத்தின் பொருளை விளக்குவதுடன், வாழ்வை ஒரு பெரிய சாகசமாக உருவாக்குவதற்கான ஒரு எளிமையான கருவியை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார்.
சாகசம் என்பதன் உண்மையான பொருள் என்ன?
சத்குரு: உங்கள் வாழ்க்கையில் நீங்கள் துணிச்சலான செயல்கள் செய்யலாம் அல்லது சாகசம் செய்யலாம். சாகசம் (Adventure Meaning in Tamil) என்றால் உங்கள் அடுத்த அடி எங்கே இருக்கப்போகிறது என்பது உங்களுக்குத் தெரியாது. அதாவது அங்கே ஆபத்து இருக்கிறது. ஆபத்து இல்லாமலும், அனைத்தும் பாதுகாப்பாகவும் இருந்தால், அங்கே சாகசம் இல்லை. சாகசம் என்றால், உங்களுக்குத் தெரியாத ஏதோ ஒன்றுக்குள் நீங்கள் அடி எடுத்து வைக்க விரும்புவது. கணிக்கக்கூடிய ஒன்றுக்குள் நீங்கள் அடி எடுத்து வைத்தால், அது ஒரு சாகசம் அல்ல; அது ஒரு செயல்பாடு மட்டுமே.மகத்தான சாகசம்
சாகசம் என்றால், நீங்கள் வெளியில் சென்று, உலகத்தை வெல்லவேண்டும் என்று அவசியமல்ல. உண்மையில் சாகசம் என்றால், உங்களுக்கு விருப்பமானது மற்றும் விருப்பமில்லாதது, “என்னுடையது” மற்றும் “என்னுடையது அல்ல” என்ற பாகுபாடுகளை சரணாகதி செய்துவிட்டீர்கள் என்பது பொருள். சாகசம் என்றால், நம்மைக் கடந்திருக்கும் அம்சங்களிடம் ஒருவர் தன்னையே சரணாகதி செய்வது. எவரெஸ்ட் மலை மீது ஏறுவது ஒரு மகத்தான சாகசம் போலத் தோன்றலாம், ஆனால் உங்கள் விழிப்புணர்வின் உச்சத்தில் இருப்பது என்பது மிக மிகப் பெரிய சாகசம். இந்த மாபெரும் சாகசத்தை உங்கள் கண்களை மூடியவாறே நீங்கள் செய்யமுடியும். நீங்கள் யார் என்பதை நிரூபிக்கும் ஏதோ ஒரு விநோதமான குறிக்கோள் சாகசம் அல்ல.
மலை ஏறுவதோ, மோட்டார் பைக் ஓட்டுவதோ அல்லது மலையின் மேல் இருந்து குதிப்பதோ உங்கள் வாழ்க்கையின் மிகப் பெரிய சாகசம் அல்ல. வாழ்க்கையின் மாபெரும் சாகசம் என்பது, உங்களுக்குள் இருக்கும் குறைந்தபட்சம் ஒரு தடையை, ஒவ்வொரு நாளும் நீங்கள் உடைத்து எறியவேண்டும். நீங்கள் பறந்துகொண்டிருந்தாலும், வண்டி ஓட்டினாலும் அல்லது வேறு எந்த செயல் செய்துகொண்டிருந்தாலும், உங்களுடைய எல்லைகளைக் கடந்து நீட்டிப்பதில்தான் சாகசம் இருக்கிறது. மேலும், உங்களுக்கு இதை வேறு எவராலும் மறுக்க முடியாது. நீங்கள் 9 மணியிலிருந்து 5 மணி வரை அலுவலகத்தில் வேலை செய்பவரோ அல்லது வேறு ஏதோ ஒன்றைச் செய்துகொண்டிருப்பவரோ, இதை உங்களுக்கு வேறு யாரும் மறுக்க முடியாது. எல்லைகளின் குவியல் உங்களுக்கு எத்தனை உள்ளது என்பதைப் பொறுத்து, தினமும் ஒரு தடையை நீங்கள் உடைத்து எறிந்தால், என்றோ ஒருநாள் நீங்கள் முற்றிலும் விடுபட்டவராக இருக்கவேண்டும். நிச்சயமாக அது நிகழும்.
சாகசமான ஒரு வாழ்க்கையை எப்படி வாழ்வது?
கேள்வி: நமஸ்காரம் சத்குரு. என் பெயர் அபிமன்யு. நான் இரண்டாம் வகுப்பில் படிக்கிறேன். அமெரிக்காவில் உங்களுடைய பைக் ஓட்டும் வீடியோவைப் பார்த்தேன். நீங்கள் மிகவும் கூலாக இருக்கிறீர்கள் மற்றும் அதிவேகமாகவும் ஓட்டுகிறீர்கள். எனக்கு அது பிடிக்கிறது. எனக்கும் உங்களுடன் பயணம் செய்ய ஆசையாக உள்ளது. என்னுடைய கேள்வி என்னவென்றால், ஒரு சிறுவன் உங்களுடன் பின் இருக்கையில் உட்கார்ந்து பயணம் செய்வது உங்களுக்கு சரிதானா?
சத்குரு: அபிமன்யு... உனக்கு தெரியுமா, அர்ஜுனனுக்கும் உன்னுடைய பெயரில் ஒரு மகன் இருந்தான். அவன் மிக புத்திசாலியான, தைரியமும் துணிவும் உள்ள ஒரு சிறுவன். துரதிருஷ்டவசமாக, அவன் வாழ்க்கை மிக விரைவிலேயே முடிந்து போனது, ஏனென்றால் அவன் சற்று அவசரப்பட்டுவிட்டான். யுத்தகளத்தில் ஒரு குறிப்பிட்ட வியூகத்தை எப்படி உடைத்துக்கொண்டு உள்ளே செல்வது என்பதை உள்வாங்கினான். ஆனால் எப்படி அதிலிருந்து வெளியேறுவது என்பதை புரிந்துகொள்ளப் போதுமான பொறுமை அவனிடம் இல்லை. ஆகையால் சிறு வயதிலேயே கொல்லப்பட்டான் – வீரம் பொருந்திய ஒரு இளைஞன், இன்றைக்கும் கொண்டாடப்படுகிறான் – ஆனால் துரதிருஷ்டவசமாக, அந்த சாகசம் சாதகமாக அமையவில்லை.
உனக்கு எது உற்சாகமூட்டுகிறது என்று நீ புரிந்துகொள்ள வேண்டும் என்பது என் ஆசை. நான் வண்டி ஓட்டுவது உனக்கு உற்சாகமாக இருக்கிறது, ஆனால் சாகசம் என்பது மோட்டார் சைக்கிள் மீதானது மட்டுமே அல்ல. உன்னுடைய உடல், மனம், உணர்ச்சி மற்றும் புரிதலின் எல்லைகளை உடைப்பதற்கு எப்பொழுது நீ நீட்டிக்கத் தொடங்குகிறாயோ, அப்பொழுது நீ சாகசத்தின் தன்மையில் இருக்கிறாய். சாகசம் என்று நீ அழைக்கக்கூடிய ஒரு குறிப்பிட்ட செயல் எதுவும் இல்லை. ஒரு செயலை எந்த முறையில் நீ நடத்துகிறாய் என்பதுதான் சாகசம்.
Subscribe
பலரும் ஒரு புதிய வேலை கிடைத்தவுடன் மிகுந்த உற்சாகம் கொள்கின்றனர். ஆனால் சிறிது காலத்துக்குப் பிறகு, அதே வேலையினால் பாதிப்பு அடைகிறார்கள். ஒரு புதிய இடத்திற்கு போகும்பொழுது மக்கள் மிகுந்த உற்சாகமடைகின்றனர். ஆனால், ஒரு காலகட்டத்திற்குமேல், திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான நிகழ்வுகளால், அது சலிப்படைந்து விடுகிறது. புதிது புதிதாக, உற்சாகமூட்டும் செயல்களைத் தேடிக் கொண்டிருக்காதீர்கள். எந்தச் செயலையும் உற்சாகமான ஒன்றாக்குவதற்கு, ஒரு வழி இருக்கிறது; அது என்ன என்பதைத்தான் நீங்கள் பார்க்க வேண்டும். உங்கள் வாழ்வில் மிக மிகச் சிறிய விஷயங்களைக்கூட நீங்கள் உற்சாகமானதாக்க முடியும். இதற்குத் தேவையானது என்னவென்றால், ஒவ்வொரு எளிமையான செயலிலும், உங்களது உடலும், மனமும், உணர்ச்சியும் மற்றும் புரிதலும் உங்கள் மீது திணித்திருக்கும் குறிப்பிட்ட தடைகளைக் கடந்து செல்வது எப்படி என்பதை நீங்கள் பார்க்கவேண்டும்.
அபிமன்யு, நான் உன் வயதில் இருந்த பொழுது எனக்கு ஆர்வம் எழுப்பிய விஷயங்கள் எவையென்றால், நான் ஒரு மரத்தைப் பார்த்தால், “அதற்குப் பின்னால் இருப்பதை ஏன் என்னால் பார்க்க இயலவில்லை?” அல்லது எனது விரலை நான் பார்த்தால், “அதன் மறுபக்கத்தை ஏன் என்னால் பார்க்க முடியவில்லை?” என்பதைப் போன்ற விஷயங்கள் எனக்கு ஆச்சரியமூட்டின. அப்போது எனக்கு ஒளியின் இயல்புகள் குறித்தும், மற்றும் அது எப்படி பிரதிபலிக்கிறதோ அப்படித்தான் நீங்கள் பார்க்கிறீர்கள் என்கிற விஷயங்கள் எனக்கு தெரியாது. ஆனால் எப்படியாவது என் கண்களை வளைத்து பார்க்க விரும்பினேன். எனது கருவிழி வெளியே சென்று அதைச் செய்யமுடியாது, ஆனால் இந்த முயற்சியில் எனக்கு என்ன புரிந்தது என்றால், நாம் பார்ப்பதில் ஐம்பது சதவிகிதத்துக்கும் அதிகமாக நமது மனதில் இருப்பதைத்தான் பார்க்கிறோம். உனது மனம்தான் பார்க்கிறது, கண்கள் அல்ல. உனது கண்கள் அந்த பிம்பத்தை உள்ளே எடுத்துக் கொள்கிறது. ஆனால் அந்த செயல்முறை மனதில் நிகழ்கிறது. உன் செயல்முறையை நீ கூர்தீட்டினால், உன் கண்களால் பார்க்க முடியாதவற்றில் குறைந்தபட்சம் ஐம்பது சதவிகிதத்தைப் பார்க்கமுடியும். நான் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்த பிறகு, அதுவே எனக்கு ஒரு மிகப் பெரிய சாகசமாக மாறியது. ஓரிடத்தில் அமர்ந்து, மிகக் கவனமாக ஒரே பொருளை உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது பெரிய சாதனையாக மாறியது. வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு, நான் ஏதோ மிகவும் மந்தமாகச் செய்துகொண்டிருப்பதாக எண்ணியிருக்கலாம், ஆனால் அது மாபெரும் சாகசமாக இருந்தது, ஏனென்றால் நான் என்னையே நீட்டித்துக் கொண்டிருந்தேன்.
ஒரு விதத்தில் இதுதான் யோகா என்பது. ஒவ்வொரு நாள் காலையிலும் மக்கள் உடலை நீட்டி வளைக்கின்றனர். சற்றே கூடுதலாக வளைக்க முடிந்தால், அது ஒரு பெரிய சாகசமாக இருக்கிறது, ஏனென்றால் அந்த செயல்முறையில், உற்சாகமான, பிரம்மாண்டமான ஏதோ ஒன்று நிகழ்கிறது.
இந்த எளிய செயல்முறையுடன் இப்போதே உன் சாகசத்தைத் துவங்கு
இந்த சாகசத்தை இப்பொழுதே நீ தொடங்குவதை நான் விரும்புகிறேன். இன்றைக்கு இதை மட்டும் முயற்சி செய். வீதியில் நடந்து செல்லும் ஒவ்வொருவரையும் உன் தாயைப் பார்க்கும் அதே பாசத்துடன் ஏறெடுத்து பார். நீ இப்பொழுது எங்கே இருக்கிறாயோ, அதைத் தாண்டிச் செல்வதற்கு இடையறாமல் வழிதேடும் நிலையை நீ அடைந்துவிட்டால், தடைகள் விலகிவிடும் - பாலங்களே இல்லாமல் ஆறுகளைக் கடப்பாய், கப்பல்கள் இல்லாமல் கடல்களைத் தாண்டுவாய். எல்லாவற்றுக்கும் மேலாக, உனக்கு உறவுகளைத் தாண்டி நட்புகள் அமையும். துரதிருஷ்டவசமாக, பெரும்பாலான மனிதர்களுக்கு, தங்களால் தொடர்புபடுத்திக்கொள்ளக் கூடியவர்களுடன் மட்டும்தான், ஒரு நட்புறவை உருவாக்கிக்கொள்ள முடிகிறது. வேறொன்றுடன் ஏன் தொடர்புபடுத்திக்கொள்ள முடியவில்லை என்று அவர்கள் பார்ப்பதே இல்லை. ஒன்றுடன் தொடர்பு கொள்ளவும், மற்றொன்றுடன் தொடர்பு கொள்ளாமல் இருக்கவும் செய்வது எது? உனது உடல்ரீதியான, மனரீதியான, உணர்ச்சிரீதியான மற்றும் புரிதலின் எல்லைகளை எப்படி நீட்டிப்பது என்று இடையறாமல் முயன்றுகொண்டே இருந்தால், உனது வாழ்க்கை பெரும் சாகசமாக மாறுகிறது.
சாகசத்தில் ஆர்வமிக்க ஜேன் குடால்!
நான் சிறிது காலத்துக்கு முன் ஜேன் கூடாலை சந்தித்தேன். அவர் சிறுமியாக இருந்த பொழுது, சாகசம் செய்யும் உணர்வில், கோழிகள் எப்படி முட்டை இடுகிறது, எப்படி குஞ்சு பொரிக்கிறது என்று பார்க்கும் விருப்பத்தில், ஒரு கோழிக் கூடாரத்துக்குள் சென்று படுத்துக்கொண்டாராம். கோழிக் கூடாரத்துக்குள் படுத்துக்கொள்வது என்பது ஒரு பைத்தியக்காரத் தனமான செயலாக இருக்கலாம், ஆனால் தற்பொழுது நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ, அதன் எல்லைகளைக் கடந்து, உங்கள் புரிதலை நீட்டித்து, ஏதோ ஒரு நிலையை எட்டுவதற்குத் தேவையான எதையும் எதிர்கொள்வதற்கான விருப்பம்தான், சாகசத்தின் அடித்தளமாக இருக்கிறது
நீங்கள் ஏதோ ஒன்றின் மீது மிக ஆழமான காதலை ஏற்படுத்திக் கொண்டால், நீங்கள் இயல்பாகவே எல்லா எல்லைகளையும் கடந்து உங்களையே நீட்டித்துக்கொள்வீர்கள். ஜேன் கூடால் பின்னாளில் விலங்குகளின் - முக்கியமாக பாலூட்டும் குரங்குகளின் இயல்புகளை அதிகாரபூர்வமாக உரைப்பவர்களுள் முதன்மையான நிபுணர் ஆனார். பாலூட்டும் உயிரினங்கள் குறித்த நமது புரிதல், அவற்றின் செயல்திறன்கள், அவைகள் எப்படி வாழ்கின்றன என்பதன் பல்வேறு அம்சங்கள், அவைகள் என்ன உண்கின்றன, அவை எப்படி ஒன்றுக்கொன்று தொடர்பு கொண்டு, பதிலாற்றிக்கொள்கின்றன போன்ற குறிப்புகள் அவருடைய ஆராய்ச்சியின் காரணமாகவே நமக்கு கிடைத்துள்ளது..
சாகச விளையாட்டுகளைப் பற்றி சத்குரு - அபாயகரமான துணிச்சலுக்கு அது தகுதியானதா?
வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் சாகசத்துக்கு இடமுண்டு. சாகசம் என்பது, உங்கள் திறமை மற்றும் தகுதியைத் தெளிவாக அறிந்துகொண்டு, அதைவிட அதிகமாக ஒரு படி எடுத்துவைப்பது. அதில் ஆபத்து இருப்பது உண்மைதான். ஆபத்து இல்லாமல் சாகசம் இல்லை. துரதிருஷ்டவசமாக, சில தருணங்களில் இளைஞர்களின் உயிர் போய்விடுகிறது. எனக்கு 35 வயது முடிவதற்குள் குறைந்தது 12-13 நண்பர்கள் இறந்து விட்டார்கள் - சிலர் மோட்டர் சைக்கிள் விபத்தில், சிலர் ஹாங்-கிளைடரிலிருந்து, வேறு சிலர், நாங்கள் இணைந்து செய்துகொண்டிருந்த மற்ற விஷயங்களின் காரணமாக மரணித்தனர். இந்த விஷயங்கள் என்னைக் கொல்லவில்லை. ஆனால் அவற்றையெல்லாம் செய்திருக்காமல் என்னால் வாழ்ந்திருக்க முடியாது. அந்த சூழல்களில் ஒன்று என்னை முடித்துவிட்டிருக்கும் என்றாலும், நான் அதைச் செய்திருப்பேன். இது, மற்றவர்களால் செய்யமுடியாத ஏதோ ஒன்றை நான் செய்வேன் என்ற அகங்காரத்தின் வெளிப்பாடு என்பதல்ல. உங்கள் எல்லைகளைத் தாண்டி உங்களையே நீட்டித்துக்கொள்வதைப் பற்றியது இது.
அது 100% பாதுகாப்பானதா? இல்லை, எதிலுமே 100% பாதுகாப்பு கிடையாது. ஏனென்றால் நாம் எல்லோருமே அழியக்கூடியவர்கள், இல்லையா? அபாயம் இல்லாத சாகசம் என்று எதுவுமே இல்லை. ஆனால் சாகச உணர்வு இல்லாத இளைஞர்கள் இளைஞர்களே அல்ல. வயதானவர்களாக அவர்களை முன்னரே புதைத்துவிடலாம். அவர்கள் ஏதாவது செய்ய வேண்டும். அதற்காக வீதியில் மூர்க்கத்தனமான விஷயங்களைச் செய்யவேண்டும் என்று அர்த்தமல்ல. அவர்கள் இதைச் செய்யக்கூடிய பாதுகாப்பான இடங்களையும், சூழ்நிலைகளையும் நாம் உருவாக்கலாம், ஆனால் முழுமையான பாதுகாப்பு என்பதே கிடையாது. சில பெற்றோர்கள் இதை அனுமதிக்க மாட்டார்கள், மற்றபடி உங்களால் பார்க்கமுடியாத ஏதோ ஒரு இடத்தில் இதை அவர்கள் செய்வார்கள்.
அமெரிக்காவில் நான் கவனித்த ஒரு விஷயம் இது. ஒரு மோட்டார் சைக்கிள் கடைக்கு சென்றிருந்தேன். அங்கே 3-வயதினருக்கான மோட்டார் சைக்கிள் செய்வதை நான் கண்டேன். 3 வயதினர் ஹெல்மெட், ஜாக்கெட் எல்லாம் போட்டுக் கொண்டு மோட்டார் சைக்கிள் ஓட்டுகிறார்கள், பெற்றோர்கள் நின்றுகொண்டு, அதைக் கவனிக்கிறார்கள். இது மகத்தானது. இல்லையென்றால் அவர்கள் 16 வயதாகும் பொழுது, எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல், ஒரு பயிற்சியும் இல்லாமல், தன்னை தயார் செய்து கொள்ளாமல், பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் ஏதாவது செய்வார்கள். அப்போது அது எப்படி முடியும் என்பது நமக்குத் தெரியாது.
சாகசம் குறித்த சத்குருவின் கவிதை
சிலர் கூறுகின்றனர், “சத்குரு, நீங்கள் சாகசத்துக்கு போதையானவர்!” நான் எதற்கும் போதை கொள்வதில்லை. போதைத்தனம் என்றால் மீண்டும் மீண்டும் செய்வது. மீண்டும் மீண்டும் நிகழுமிடத்தில், சாகசம் எங்கிருக்கிறது?
“சாகசம்” என்று அழைக்கப்படும் ஒரு கவிதை
சாகசம்
பேரார்வம் உச்சம் தொடும்பொழுது
தான் என்பதைத் தாண்டிய பரிமாணம் தேட
வாழ்வின் சாகசம் எழுகிறது
வாழ்க்கையை பண்டமாற்றும் வியாபாரமாக்குவதற்கு நீ
எப்படிப்பட்ட கிணற்றுத்தவளையாக இருக்கவேண்டும்?
சாகசம் வெற்றிகொள்ளல் அல்ல
முதலீட்டின் மீதான பலன் இல்லாத ஏதோ ஒன்றிடம்
தன்னை சரணாகதி செய்தல்
பிரபஞ்சத்தில் நிகழ்ந்துகொண்டிருக்கும் அதிசயிக்கத்தக்க விஷயங்கள் அனைத்திலும், உயிர்தன்மை என்பது மிக நுட்பமானது, நவீனமானது மற்றும் அற்புதமான நிகழ்வு. அதுவே உங்களுக்கு ஒரு பரிசாக அளிக்கப்பட்டிருக்கும் பொழுது, உங்களுக்கு முதலீட்டின் மீதான வேறு என்ன பலன் வேண்டும்?