சத்குரு:

பித்தாகோரஸ்

பித்தாகோரஸ் (Pythagoras) தான் கண்டறிந்த வடிவியலால் பெரிதும் அறியப்படுகிறார். ஆனால், அது அவரது வாழ்வில் மிகச் சிறிய பகுதியே. அவரது வாழ்வின் பெரும்பான்மையான பகுதி ஆன்மீகப் பணி செய்வதில்தான் இருந்தது. 2500 வருடங்களுக்கு முன் இந்தியாவிற்கு பயணம் மேற்கொண்ட அவர், இந்திய யோகிகளால் பெரிதும் கவரப்பட்டார். பித்தாகோரஸ் மந்திரங்களை பயிற்சி செய்தார் என்றும், சைவ உணவு உண்பதை பரப்பினார் என்றும், மறுபிறப்பின் மீது அவருக்கு நம்பிக்கை இருந்ததால், மக்களை பல ஆண்டுகள் மௌனத்தில் வைத்திருந்தார் என்று சொல்லப்படுகிறது. உலகின் அந்தப் பகுதிகளில் முதல்முறையாக ஒருவர், வாய்மூடி மௌனத்தில் இருப்பதால் ஏற்படும் பலன்கள் குறித்து பேசியிருக்கிறார்.

டையனாவைச் சேர்ந்த அப்பல்லோனியோஸ்

அப்பல்லோனியோஸ் கிரேக்க நாட்டிற்கு திரும்பி வந்தபோது, தன் குருவை பெருமைப்படுத்தி ஒரு கவிதை வடித்தார். அதில், "நான் கால்நடைப் பயணமாக வந்தேன், நீங்களோ எனக்குள் சமுத்திரத்தை ஊற்றினீர்கள்," என எழுதியிருக்கிறார்.

முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த கிரேக்க தத்துவ ஞானியான அப்பல்லோனியோஸ் (Apollonius), பித்தாகோரஸை பின்தொடர்ந்தார். அவரால் பெரிதும் ஊக்கமடைந்த அப்பல்லோனியோஸ், இந்தியாவிற்கு வந்து, இங்கு ஒரு யோகியுடன் பல ஆண்டுகள் கழித்திருக்கிறார். அந்த யோகியை, ஆயர்சாஸ் என இவர் அழைக்கிறார். ஆயர்சாஸ் (Ayarchas) என்றொரு இந்தியப் பெயர் கிடையாது, கிரேக்கர்கள் அதனை தவறாய் உச்சரித்திருக்கக் கூடும். அவருடைய உண்மையான பெயர் என்ன என்பதை நாம் அறியவில்லை.

பின்னர், கிரேக்க நாட்டிற்கு திரும்பி வந்தபோது, தன் குருவை பெருமைப்படுத்தி ஒரு கவிதை வடித்தார். அதில், "நான் கால்நடைப் பயணமாக வந்தேன், நீங்களோ எனக்குள் சமுத்திரத்தை ஊற்றினீர்கள்," என எழுதியிருக்கிறார். தன் நாடு திரும்பியபோது, துருக்கி, வடக்கு அமெரிக்கா, எகிப்து நாடுகள் வழியே சென்றார். இந்தியாவின் தாக்கத்தால், எகிப்திய கலாச்சாரம் எவ்வாறு மேன்மை அடைந்துள்ளது என்பதைப் பற்றி எழுதியிருக்கும் அவர், அவர்களை சூழ்ந்திருக்கும் அறியாமையின் அளவுகளைப் பார்த்து, வருந்தியும் இருக்கிறார். வெறும் குருட்டு நம்பிக்கைகளும் சடங்குகளும் மட்டுமே அங்கு வழக்கத்தில் இருந்தன. எகிப்தை சேர்ந்த பூசாரி, "இதுபோன்ற மூர்க்க குணம் உனக்கு எங்கிருந்து வந்தது? இவ்வளவு அதிகாரத்துடன் நீ எப்படி பேச முடியும்?" என அப்பல்லோனியோஸிடம் கேட்டார். அதற்கு அப்பல்லோனியோஸ், "நான் ஒரு தேசத்திற்கு சென்றேன், அங்கு காலடி எடுத்து வைத்தாலே, இப்படிப்பட்ட அதிகாரத்துடன் பேச முடியும்," என்று பதிலளித்திருக்கிறார்.

ரோமபுரியின் அரசியர்களில் ஒருவரான ஜூலியா டாம்னா (Julia Domna) இவரால் பெரிதும் கவரப்பட்டார். அப்பல்லோனியோஸ் மீது ஒரு புத்தகம் எழுதப்பட வேண்டும் என்று கட்டளையிட்டார். அதனை பைலோஸ்ரேடஸ் (Philostratus) எழுதினார். ஐரோப்பாவை சேர்ந்த பல முக்கிய மையங்களை இது சென்றடைந்தது. அந்த முக்கிய நகரங்களில் அது பாதுகாக்கப்பட்டது.

பிஃரோ

மகத்தான தத்துவவியலாளர், கணித மேதை, விஞ்ஞானி என அறியப்பட்ட பிஃரோ (Pyrrho), அலக்ஸாண்டருடன் இந்தியாவிற்கு பயணப்பட்டார். இங்கு சில காலம் தங்கியிருந்த அவர், கிரேக்கத்திற்கு திரும்பியபின், அங்கு தத்துவமும், உள்நிலையில் அமைதியும், சஞ்சலமின்மையை பற்றியும் மக்களுக்கு சொல்லிக் கொடுத்தார். பொதுவாக, அவ்விடங்களில், அமைதி என்பது அண்டை வீட்டுக்காரர்கள் இறந்தால் மட்டுமே கிடைக்கும் பொருளாக இருந்தது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

61 பெண்கள்

3000 திலிருந்து 3500 ஆண்டுகளுக்கு முன், 61 பெண்கள் இந்தியாவிற்கு வந்து மந்திர, யந்திர, தந்திர வித்தைகளை கற்றுச் சென்றதாகவும், அவர்கள் வட இந்தியாவில் உள்ள சில ஆசிரியர்களிடம் கற்றதாகவும் சில ஆவணங்கள் சொல்கின்றன. பிற்காலத்தில், மத்திய ஆசியா, ஐரோப்பா, துருக்கி, அரேபிய தேசங்களில் அவற்றை அவர்கள் பரப்பி இருக்கின்றனர். அவர்களைப் பற்றி பெரிதாக எங்கும் சொல்லப்படாவிட்டாலும், பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னர், உலகின் அப்பகுதிகளில் அவர்கள் பிரம்மாண்டமான இயக்கங்களை உருவாக்கி இருக்கிறார்கள். அரேபியா, ஐரோப்பா, பினீசியா, இன்னும் பல இடங்களில், ஆக்ரோஷமான வேற்று நம்பிக்கை முறைகள் தோன்றி பெண்தெய்வ வழிபாட்டினை துடைத்தழிக்கும் வரை, அங்கு பெண்தெய்வ வழிபாடுதான் பிரதானமாய் இருந்திருக்கிறது.

மன்சூர் அல்-ஹலாஜ்

சூஃபி வாழ்க்கை முறையைச் சேர்ந்த மிக முக்கியமான ஒரு நபர் மன்சூர் அல்-ஹலாஜ் (Mansur Al-Hallaj). அவர் பாஸ்ராவிலிருந்து வந்தவர். பாஸ்ரா (Basra) தற்போதைய ஈராக்கில் இருக்கிறது. 10ம் நூற்றாண்டில், தனது பயணத்தின்போது குஜராத்திற்கு வந்த இவர், அங்கு பல வருடங்கள் தனது ஆசிரியருடன் கழித்தார். ஈராக்கிற்கு திரும்பிபோது, வெறும் கோவணத்தை மட்டுமே ஆடையாய் தரித்தார். இது முழுக்க முழுக்க யோகியரின் உடையல்லவா! "அனா-அல்-ஹக்," (Ana al-haqq) என்றார். இதற்கு ஈடான இந்திய வாசகம், "அஹம் பிரம்மாஸ்மி - நான் கடவுள்."

அவருக்கு கிறுக்குப் பிடித்திருக்கிறது என்றே மக்கள் நினைத்தனர். ஒன்று அவர் கோவணம் தரித்திருந்தார், இன்னொன்று தான் கடவுள் என்று அவர் சொன்னார். அவர் இதனை நிறுத்தவேயில்லை. மெக்காவிற்கு சென்ற அவர், அங்கு தனக்கென்று தனிப்பட்ட கடவுற்சிலை ஒன்றை உருவாக்கிக் கொண்டார். அதனை ஒரு குறிப்பிட்ட விதத்தில் பிரதிஷ்டை செய்தும் கொண்டார். அவ்விடத்திற்கு மக்கள் கூட்டம் செல்லத் துவங்கியது. அதனை ஏற்றுக்கொள்ள முடியுமா, மன்சூர் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

உயிருடன் தோலுரித்து, நெஞ்சு வரை அவரை புதைத்தனர். அந்த வீதி வழியே செல்பவர்கள் அவர் மீது கல்லெறிந்து விட்டுச் செல்ல வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மன்சூரின் நண்பர் அவ்வழியே சென்றார், அவரும் மன்சூர் மீது கல்லெறியத்தான் வேண்டும். கல்லெறிய மனமில்லாத நண்பர், அவர் மீது ஒரு பூ வீசிச் சென்றார்.

இது நடந்தபோது, மன்சூர், கட்டுக்கடங்காத கவிதையாய் தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். "என் மீது வீசப்பட்ட எதுவும் என்னை புண்படுத்தவில்லை, ஏனெனில் அது அறியாதவர்களால் வீசப்பட்டது. நீயோ இந்த மலரை என் மீது வீசினாய். ஏனெனில், உனக்கு இதுபற்றி தெரியும், இருந்தும் என் மீது நீ எதையோ வீசிச் சென்றாயே!" எனக் கவி பாடினார்.

தென் கிழக்கு ஆசியா

இந்தியாவிலும், உலகின் பிற பகுதிகளிலும் பாதாள உலகைப் பற்றி பேசப்படுகிறது. அதனை நாக லோகம் என்பார்கள். இது, நாகர்கள் என அறியப்பட்ட மனிதர்கள் கொண்ட ஒரு சமூகம். நாகர்கள், பாம்பு குலமரபினைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இந்தியா மற்றும் பல்வேறு கலாச்சாரங்களின் "விழிப்புணர்வு நிலை"யினை உருவாக்கியவர்கள். கம்போடிய நாட்டில் இருக்கும் அங்கோர், அங்கோர் தோம், அங்கோர் வாட் போன்றவை நாகா வழிதோன்றல்களால் உருவாக்கப்பட்டவை என்பதை நாம் இன்று அறிகிறோம். நாகர்கள் இந்தியாவிலிருந்து சென்று, அந்நாட்டவர்களுடன் கலந்து, அந்த தேசத்தினை நிர்மாணித்தனர்.

சீனாவிற்கு ஜென் போன கதை

தென் இந்தியாவைச் சேர்ந்த பல்லவ இராஜ்ஜியத்து இளவரசர் போதி தர்மர். காஞ்சி நகரத்து அரசனின் புதல்வன் அவர். ஆனால், மிகச் சிறிய வயதிலேயே அரச வாழ்வை துறந்து, தன் இராஜ்ஜியத்தை விட்டு வெளியேறி துறவறம் பூண்டார். 22 வயதில் ஞானனோதயமடைந்தார். சீனாவிற்கு தூதுவராய் அனுப்பப்பட்டார்.

போதி தர்மர், சீனாவிற்கு ஜென்னை கொண்டு போனார். கௌதம புத்தர் தியானம் சொல்லிக் கொடுத்தார். பல நூறு ஆண்டுகளுக்கு பின், போதி தர்மர் தியானத்தை சீனாவிற்கு ஏற்றுமதி செய்தார், அங்கு அது சான் ஆனது. இந்த "சான்" இந்தோனேசியா, ஜப்பான், தூரத்து ஆசிய நாடுகளுக்கு சென்றபோது ஜென் ஆனது.

சப்தரிஷிகள்

யோகக் கலாச்சாரத்தில் சிவன் என்பவர் கடவுளாக அறியப்படுவதில்லை. மாறாக ஆதியோகியாக, யோகத்தை பிறப்பித்தவராக அறியப்படுகிறார்.

ஒரு குரு பௌர்ணமி தினத்தன்று ஆதியோகி தன்னை ஆதிகுருவாய் மாற்றிக் கொண்டார். அன்று முதல் குரு தோன்றினார். ஆதியோகி சப்தரிஷிகளுக்கு கற்றுக் கொடுக்க துவங்கினார். இந்த ஏழு பேரின் மீது தன் அருட்பார்வையை செலுத்தினார். அவர்களே ஆதியோகியின் முதல் ஏழு சீடர்கள் ஆயினர். இந்த ஏழு பேருக்கும், யோகத்தின் 7 அம்சங்களை வழங்கினார். யோகத்தில் இந்த 7 தனிப்பட்ட வடிவங்கள் காத்து பராமரிக்கப்பட்டு வருகின்றன. இன்றும் பொலிவுடன் விளங்குகின்றன.

குருபௌர்ணமி - மனித வாழ்க்கையில் மகத்தான ஒரு தருணத்தை குறிக்கிறது. ஒருவர், மனித இனத்திற்கு என்றே வரையறுக்கப்பட்டுள்ள கட்டுக்களில் அடைபட்டுக் கிடக்க வேண்டிய கட்டாயம் இல்லை. அதற்கு அப்பால் கடந்து செல்லவும் முடியும் என்ற வாய்ப்பை, சாத்தியத்தை முதன்முதலாக உருவாக்கியது ஆதியோகியே!

அற்புத யோக விஞ்ஞானத்தை உணர்ந்து, முழுமைபெற்ற சப்தரிஷிகள், உலகின் எல்லா பாகங்களுக்கும் வெவ்வேறு திசைகளில் அனுப்பப்பட்டனர். அவர்கள் சிவனுடைய அங்கங்களாயினர். உலகில் ஒவ்வொரு மனிதனும், படைப்பின் அடிப்படையாகவே வாழ்ந்திடச் செய்யும்படியான தொழில்நுட்பத்தையும் ஞானத்தையும் வழங்கிடும் கரங்களாயினர்.

காலச் சக்கரத்தின் சுழற்சிகளில், உலகின் பல பாகங்களிலும் இவை குலைந்து போயிருந்தாலும், அந்தந்த பகுதிகளின் நாகரீகம், கலாச்சாரம் இவற்றை சற்று கூர்ந்து கவனித்தால், இன்னமும் கூட இந்த ஏழு மாமனிதர்களின் மகத்தான பணி ஆங்காங்கே இழைந்தோடுவதை கவனிக்க முடியும். இன்னமும் உயிரோட்டமாக இருப்பதை பார்க்க முடியும். அவர்கள் பரிமாறியவை காலப்போக்கில் பல வண்ணங்களில் பல்வேறு வடிவங்களில் மாறியிருந்தாலும், அதன் அடிப்படையான சாரம் இன்னமும் அப்படியே காணப்படுகிறது.

Bharatham